ஹோமக் குண்ட புகை உடலுக்கு நல்லதா? நக்கீரன்

ஓர் ஆங்கில நாளிதழின் நிருபர் ஒருவர் தான் அழைத்திருந்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே, “ஹோமக் குண்டத்தில் வரும் புகை நல்லதா, கெட்டதா?” என்று கேட்டார்.  புகையில் ஏது நல்ல புகை, கெட்ட புகை? இக்கேள்விக்குப் பின்னால் ஒரு நிகழ்வு இருந்தது. அந்நிருபர் புகையின் தீமைகளைப் பற்றி எழுதி ஒரு கட்டுரையை அளித்திருக்கிறார். அக்கட்டுரையில் ஹோமத்தில் எழும் புகையும் தீமை தருவதுதான் என்று எழுதியிருக்கிறார். அவருடைய உயர் அதிகாரி அழைத்து அவ்வரியை நீக்க சொல்லியிருக்கிறார். காரணம் கேட்டபோது ஹோமத்தில் வரும் புகை புனிதமானது. ஒருவேளை அதில் தீமைகள் இருந்தாலும் மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போது அத்தீமைகள் விலகி அது புனிதமடைகிறது என ஒரு புதிய அறிவியல் விளக்கத்தை அவர் அளித்திருக்கிறார்.

புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை தான். அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட அனைத்து புகைகளுக்கும் எதிராகச் சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஒருமுறை பெருங்குடியில் குப்பையை எரிக்கும்போது கிளம்பிய புகை அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதுகுறித்து ஊடகங்கள் பெரிதும் விவாதித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது எனக்கொரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. இப்படியரு போலி அறிவியல் கருத்து நாடு முழுவதுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது கணபதி ஹோமம் செய்ய ஒருவரை அழைத்தால் அதன் ஆன்மீக மேன்மையை விளக்க முற்படும்போது கூடவே ஒரு கருத்தை அறிவியல் செய்தியைப் போலவே திரித்துச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஹோமத்தில் இடப்படும் சமித்துகள் எனப்படும் சுள்ளிகளில் மருத்துவக் குணம் நிறைந்திருப்பதால் அப்புகை உடலுக்கு நன்மையைத் தரும் என்று விளக்கம் கொடுக் கப்படுகிறது.

கணபதி ஹோமம் நடைபெறும் ஒரு வீட்டின் கூடத்தில் புகை நிறையும்போது நன்மை தரும் அப்புகையைச் சுவாசிக்காமல் அது தரும் எரிச்சலால் ஏன் அவ்விடத்தை விட்டு வெளியே வருகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் பாதிப்புப் புகையால்தான் ஏற்படும். தொடக்கத்தில் பார்வை மறைக்கப்படும். கண் எரிச்சல் ஏற்பட்டுக் காட்சி புலனாகாது. தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் போடுவர். பின் மரணத்தைச் சந்திப்பர். அதன் பின்னர்தான் தீயினால் பாதிப்பு ஏற்படும். தம் போலி கருத்துக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் ஒரு வரலாற்று நிகழ்வையும் இட்டுக்கட்டுகிறார்கள். அந்நிகழ்வு ஒரு சூழலியல் நிகழ்வாகும். இதைக் கேட்கும் யோசிக்கும் திறனற்ற பக்தர்கள் பலரும் அந்தப் போலி அறிவியலை வியந்து தம் பங்குக்கு அதை நாடு முழுவதும் பரப்பி வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அது உண்மையா எனக் கேட்டபோது, அடப்பாவிகளா! புளுகுக்கு ஓர் அளவே இல்லையா என்று தோன்றியது. அந்தச் செய்தி இதுதான்.

போபால் நச்சுக்காற்றுக் கசிந்தபோது போபால் நகரத்தின் ஓரிடத்தில் அதிகாலையில் புதுமனை புகுவிழா நடந்து கொண்டிருந்ததாம். அப்போது ஹோமத்தில் இருந்து எழுந்த புகை அவ்வீடு முழுக்க நிரம்பியிருந்ததாம். அதனால் அந்த நேரத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கிளம்பிய நச்சுக் காற்று அங்கு நுழைய முடியாமல் விலகி சென்று விட்டதாம். இதனால் அவ்வீட்டில் இருந்த அனைவரும் உயிர் பிழைத்து விட்டார்களாம். இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் ஹோமம் என்பது எவ்வளவு நன்மை என்று பரப்புரை நடைப்பெறுகிறது.

இந்தத் திரைக்கதை வசனத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று ஊகிப்பதில் நமக்குச் சிரமம்இருக்காது. அடுத்தமுறை அணுஉலையில் கசிவு ஏற்படும்போது இந்த ஆன்மீக அறிவியல் கூட்டத்தை அனுப்பி ஹோமம் வளர்க்க சொல்லலாம். இது போபால் நச்சுக்காற்று நிகழ்வைக் குறித்துக் கொஞ்சமும் அடிப்படை அறிவற்றுப் புனையப்பட்ட கட்டுக்கதை. நச்சுக்காற்றுக் கசிந்த பின் நகரமே பீதியின் பிடியில் அகப்பட்டு அலைக்கழிந்து கொண்டிருந்தது. வீட்டு விலங்குகள் அலறுகின்றன. பறவைகள் பதறிப் பறக்கின்றன. குழந்தைகள், பெண்கள் ஆண்கள் என ஒட்டுமொத்த மனிதகுலமும் கதறிக் கண்ணீர் விட்டு திக்குத் தெரியாது ஓடினர். அப்படிப்பட்ட நேரத்தில் சாவகாசமாகத் தன் புதுமனைபுகு விழாவை நடத்திக் கொண்டிருந்த அந்த மனிதர் யார் எனத் தெரியவில்லை.

இந்த ஹோமத்தின் பெருமைக் குறித்து என்னிடமே ஒருவர் நேரடியாகப் பீற்றினார். வலிய வந்து வலையில் சிக்கியவரைச் சும்மா விடுவேனா? சில கேள்விகள் கேட்டேன். “புதுமனை குடிப்போகும் நேரம் எது?”

“பிரம்ம முகூர்த்தம்”

“அப்படியென்றால்?”

“அதிகாலை நாலரையில் இருந்து ஆறு மணி வரை”

“போபால் நச்சுக்காற்று கசிந்த நேரம் எது தெரியுமா?”

“தெரியாது”

“பரவாயில்லை. நானே சொல்கிறேன். நச்சுக் காற்று கசிந்ததை அறிவிக்கும் ஆலையின் அபாயச்சங்கு ஒலித்த நேரம் நள்ளிரவு 12:30. அதற்கு முன்னரே நச்சுக்காற்று கசிய தொடங்கிவிட்டது. ஹோமம் நடந்ததாக நீங்கள் சொல்லும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து அடங்கிவிட்ட நேரம். பின் எப்படி நீங்கள் சொல்வது பொருந்தும்?”

அவர் திணறி முழிப்பதைப் பார்க்க பரிதாப மாக இருந்தது. போபால் நச்சுக்காற்றால் அங்கு அனைவரும் இறக்கவில்லை என்பது உண்மைதான். நச்சுக்காற்று வீசிய திசையில் உடல்நலப்பாதிப்போடு உயிர்பிழைத்தவர்களும் இருந்தார்கள். சில இடங்களில் நஞ்சின் அளவு குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் ஹோமப் புகை அல்ல, புங்கை மரங்கள் தாம்.

போபாலில் மீதைல் ஐசோ சயனைட் நச்சுக் காற்று வெளியேறிய நிலையில் அப்பகுதியில் இருந்த புங்கை மரங்களும் வேப்ப மரங்களும் இந்த நச்சுக்காற்றை உண்டு, இலையுதிர்த்து மொட்டையாயின. இதே இடத்திலிருந்த மலைவேம்பு, மா, விளா, வில்வ மரங்களில் எந்த மாறுதலும் இல்லை. அதாவது நச்சுக்காற்றை உட்கொண்டு அதைக் குறைக்கும் திறன் இம்மரங் களுக்கு ஏனோ இல்லை என அறிஞர் பி.எஸ். மணி அவர்கள் ‘சர்வே ஆஃ போபால் இந்தியா’ அறிக்கையை முன் வைத்து விளக்குகிறார்.

புங்கை மரத்துக்குக் கிடைக்க வேண்டிய புகழை, சில புளுகு மூட்டைகள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கின்றனர். எனவே சூழல் பாதிப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல, இதுபோன்ற புளுகு மதவாதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் தமிழகச் சூழலியலார்களுக்கு இருக்கிறது.

இதற்காகத்தான் ஒரு அபாயகரமான தொழிற்சாலையை அமைக்கும்போது அதனைச் சுற்றிலும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிற விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மரத்துத்துக்கு ஒரு திறன் இருக்கிறது. இதுபோல் எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் வகை மரங்களுக்குக் கந்தக டை ஆக்சைடை தன் இலைகளில் படிய வைத்துக்கொள்ளும் திறன் உண்டு. ஆனாலும் பேரிடர் நிகழும்போது அது இம்மரங்களின் தாங்கு திறனையும் அவை தாண்டிவிடும் என்பதே உண்மை. இப்படிப் புங்கை மரத்துக்குக் கிடைக்க வேண்டிய புகழை, சில புளுகு மூட்டைகள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கின்றனர். எனவே சூழல் பாதிப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல, இதுபோன்ற புளுகு மதவாதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் தமிழகச் சூழலியலார்களுக்கு இருக்கிறது.

(கட்டுரையாளர் – சூழலியல் ஆய்வாளர்)

நிமிர்வோம் மே 2017 இதழ்

You may also like...