புத்தர் அறிவு ஆராய்ச்சிக்கு குரு
தினம் ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட புத்தர்தான் கடவுள் இல்லை என்று தைரியமாக சொன்னார். அவர் அப்படிச் சொன்னாரா இல்லையா என்று சிலர் வாதம் பேசுவதானாலும் அதை உறுதிப்படுத்தும் தன்மையில் அவர் எதற்கும் அஞ்சாமல் அடுத்த படியாக -“ஆத்மா என்பதாக ஒன்று கிடையவே கிடையாது, ஆத்மா ஒன்றுஇல்லவேஇல்லை”என்றுகூறிஇருக்கிறார். அதனால்அவருக்கு ‘அனாத்மன்’ என்றும் பெயர். ஆத்மா இல்லை என்பதை இலகுவில் யாரும் ஆதரிப்பவர்கள் இருக்க முடியாது. ஒரு கால் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுமானால் ஆதரிப்பதாய் இருந்தாலுங்கூட மற்றவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
விடுதலை : 21 – 02 -1952
புத்தர் பிரான், வருணாசிரம தர்மத்தையோ, இந்த வருணாசிரம தேவர்களையோ ஏற்றுக் கொண்டவர் அல்லர், அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து, முதல் கருத்து!
விடுதலை : 7 – 5 – 1953
சரித்திர சம்பந்தமாக எவராவது மனிதனில் கீழ்ஜாதி, மேல்ஜாதி ஏன் என்பது பற்றி கேட்டாரா என்றால், புத்தர் ஒருவர்தான் கேட்டார். அவர் ஒரு இராஜாவின் மகன் . அவர் பலவற்றைப் பற்றிக் கேட்டார். ‘அவன் ஏன் கிழவன்’ ‘இவன் ஏன் வேலைக்காரன் ‘ ‘இவனுக்கு ஏன் கண் குருடு?’ -என்று கேட்டார். அதே புத்தர் தான் கேட்டார், ‘இவன் ஏன் கீழ்ஜாதி ? ‘ என்று. ‘அது கடவுளால் பிறப்பிக்கப்பட்டது’ என்றார்கள். அப்படிக் கீழ் ஜாதியாய் பிறப்பித்த கடவுள் எங்கேயடா?’ என்றார். ஆத்மா பற்றிக் கூறினார்கள். ‘அது என்ன ? அப்படி ஒன்று இருப்பதாகக் காணோமே’ என்றார். அப்படி வேலை செய்தவரையே இந்நாட்டை விட்டுத் துரத்தினார்களே !
புத்தர் சரித்திர உண்மைக்கு இலக்கானவர் . அறிவு ஆராய்ச்சிக்குக் கட்டுப்பட்டவர் என்பது மாத்திரமல்லாமல், அறிவு ஆராய்ச்சிக்கு குருவாகவே விளங்கியவர் . அவர் தன்னைப் பற்றிக் கூறியவைகளும், மற்றவர்களுக்கு கூறியவைகளும் பெரிதும் மறுக்க முடியாததும் அறிவாளிகளால் தவிர்க்க முடியாதவைகளுமாகும். புத்தரை, புத்தர் சரித்திரத் தொகுப்பை, அதன் உண்மையை உலகம் முழுவதும் எம் மதத்தினரும் ஏற்றுக் கொள்வதோடு உலக உண்மைச் சரித்திரம் என்பவற்றில் அவை இடம் பெற்றிருக்கின்றன.
விடுதலை : 21 – 3 – 1956 பெரியார்
நிமிர்வோம் மே 2017 இதழ்