புத்த தம்மம் X வர்ண தர்மம்

‘‘இந்துக்களுடைய வாழ்வியலை ராமன் பிறந்த நாள், கிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் காந்தி பிறந்த நாளைக்கொண்டாடுவதன்மூலம்தூய்மைப்படுத்திவிட முடியாது. ராமன், கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்களே. ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள். ஜனநாயகத்தை நிர்மாணிக்க புத்தர் மட்டுமே பயன்படுவார். எனவே, புத்தரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. அவரது மாமருந்தே இந்துக்களின் அரசியல், சமூக நீரோட்டத்தில் கலந்துள்ள மாசுபாடுகளைத் தூய்மையாக்கும்.’’

இந்திய மக்கள் திருவிழாக்களை விரும் புகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவை யில்லை. அவர்கள் ஆண்டின் பாதி நாட்களை திருவிழா கொண்டாட்டங்களுக்கும் மதச் சடங்குகளுக்குமே செலவிடுகின்றனர். மாமனிதர் களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதிகளவு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். கிருஷ்ண ஜென் மாஷ்டமி, ராமநவமி மற்றும் அனுமான் ஜெயந்தி ஆகிய கொண்டாட்டங்கள் இந்துக்களின் மனநிலைக்குச் சான்றாக விளங்குகின்றன. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும் புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை என்பது வெளிநாட்டினருக்கு வியப்பளிக்கக் கூடும்! இந்தியாவில் பிறந்த மாமனிதர்களிலேயே புத்தர்தான் மிகவும் உயர்ந்தவராகத் திகழ்கிறார். புத்தரை இவ்வுலகின் ஒளிவிளக்காக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் போற்றுகின்றனர்.

கிறித்துவர்கள் புத்தரிடம் பொறாமை கொண்ட போதும் புத்தரை ஆசியாவின் ஒளிவிளக்காகவே பார்க்கின்றனர். இந்துக்களும் புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகக் கருதுகின்றனர். இத்தகைய புகழ்பெற்ற மனிதர் இந்திய மக்களின் நினைவலைகளிலேயே புதைக்கப்பட்டு விட்டார். இந்திய மக்கள் அவரை நினைவு கூர்வதே இல்லை. மராத்திய பேஷ்வா மன்னர் பாஜிராவின் காதலி மஸ்தானியின் பெயரைக் கூட பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால் புத்தரைப் பற்றி தெரிந்திருப்பவர்களின் எண்ணிக்கைஅதைவிடக்குறைவாகவேஇருக்கும் என்று எண்ணுகிறேன். இத்தகைய புகழ்பெற்ற மனிதர் இந்த அளவுக்கு மறக்கடிக்கப்பட்டது பெருத்த அவமானத்திற்கும் வியப்புக்கும் உரிய செய்தியாகும். இச்சூழலில் பெங்கால் மற்றும் பிற மாநிலங்களில் புத்தர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது மிகுந்த பாராட்டுக்குரியது. ஆனால், இந்த நிகழ்வு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த புத்தரின் வாழ்வு மற்றும் தொண்டின் முக்கியத்துவத்தை மக்களிடையே அறிமுகப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

கபிலவஸ்துவை, 2500 ஆண்டுகளுக்கு முன்பு, சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்த சுத்தோதனர் என்ற அரசர் ஆண்டுகொண்டிருந்தார். கவுதமர் என்பது அக்குடும்பத்தின் பெயர். இன்று ஒருங்கிணைந்த மாகாணம் (தற்போதைய உத்திரப்பிரதேசம்) என்று அழைக்கப்படும் இடத்தில்தான் கபிலவஸ்து இருந்தது. ஷ்ரவஸ்திக்கும் அயோத்தியாவுக்கும் இடையில் பைசாபாத்திலிருந்து கிழக்கே 50 மைல் தொலைவில்தான் இவ்விடம் அமைந்திருந்தது. சுத்தோதனருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அதில் ஒருவர் மாயாதேவி; மற்றொருவர் பிரஜாபதி. சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் திருமணம் நடைபெற்ற பிறகு மாயாதேவி கருத்தரித்தார். சமூக வழக்கத்தின்படி முதல் பிரசவம் தாய் வீட்டில் தான் நடைபெற வேண்டும் என்பதால் அவருடைய தந்தை சுபுதீதா மாயாதேவியை அனுப்பி வைக்குமாறு கூறி செய்தி ஒன்றைத் தன் மருமகனுக்கு அனுப்பி இருந்தார். எனவே மாயாதேவியும் அவருடைய சகோதரி பிரஜாபதியும் பரிவாரங்களுடன் தாய்வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் அவர்கள் லும்பினி காட்டில் தங்கினர். தங்கியிருந்த இடத்தில் மாயாதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அக்காட்டிலேயே அவர் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த உடனேயே மாயாதேவி இறந்து விட்டார். இக்குழந்தை மாயாதேவியின் சகோதரி பிரஜாபதியால் வளர்க்கப்பட்டது. இக்குழந்தைக்கு சித்தார்த்தர் எனப் பெயரிட்டனர். பிற்காலத்தில் இவர்தான் கவுதம புத்தர் எனப் புகழ் பெற்றார்.

இவர் நாட்டை ஆளும் குடும்பத்தில் போர் வீரர் வகுப்பில் பிறந்ததால் அன்றைய காலகட்டத்திற்கேற்ற வகையில் அவருக்கு கல்வி அளிக்கப்பட்டது. அவருக்குப் போரிடும் பயிற்சி மட்டும் அளிக்கப்படவில்லை. அவர் வேதங்களிலும் சிறந்து விளங்கினார். ஆனால் சித்தார்த்தர் பெரும்பாலும் தனிமையில் இருப்பதையே விரும்பினார். குறிப்பாக, அரச வாழ்க்கையை அனுபவிப்பதில் அவருக்கு ஆர்வமில்லை. சித்தார்த்தர் துறவியாகி விடுவாரோ என்ற அச்சத்தில் சுத்தோதனர் அவரை குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்த அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார். எனவே சித்தார்த்தரை தண்டபாணியின் மகளான யசோதராவிற்கு திருமணம் செய்து வைத்தார். யசோதரா, ராகுலன் என்றொருஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தன் மகனுக்கு ஆடம்பர வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்பதற்காக சுத்தோதனர் மூன்று அரண்மனைகளை கட்டினார். சித்தார்த்தர் சுகபோகமாக வாழ ஏற்றவாறு அனைத்துவித ஏற்பாடுகளையும் அவர் செய்திருந்தார்.

ஒரு நாள் கவுதமர் தன்னுடைய கிராமத்தின் சமூகச் சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து தன்னுடைய தேரில் அரண்மனையைவிட்டு வெளியே வந்தார். நகரத்திற்குள் நுழைந்ததும் அவர் நான்கு நிகழ்வுகளைக் கண்டார். முதலில் அவர் ஒரு முதியவரைக் கண்டார். அவர் கடும் வேதனையுடன், நம்பிக்கையற்றவராக, பற்களற்று, சுருக்கங்கள் நிறைந்த முகத்துடன், நரைத்த முடியுடன், ஒரு வில்லைப் போல வளைந்த முதுகுடன், கையில் ஒரு தடியை ஊன்றியபடி, உடல் முழுவதும் கட்டுப்பாடின்றி நடுங்க, யாருக்கும் கேட்காத ஒரு குரலில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு, ஓர் எறும்பின் வேகத்துடன் நகர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கடந்தவுடன் சற்றுத் தொலைவில் வேறொரு காட்சியைக்கண்டார். கடும் காய்ச்சல் கண்ட ஒரு மனிதர் நலிவுற்று, தெம்பின்றி, மயங்கி, குடியிருக்க வீடில்லாததால் சாலையில் விழுந்து கிடந்தார். மேலும் செல்கையில், இறந்து போன உடல் ஒன்றை உறவினர்களும் நண்பர்களும் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். நான்காவதாக ஒரு துறவி இன்முகத்துடனும் அமைதி நிறைந்த மனதுடனும் பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்திச் செல்வதைக் கண்டார். இந்நான்கு காட்சிகளும் கவுதமரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

இக்காட்சிகளைப் பார்த்த பிறகு இவ்வுலகில் துன்பம் இருப்பதை கவுதமர் புரிந்து கொண்டார். மனித வாழ்க்கை நிலையற்றதும் அழியக் கூடியதுமாகும். அப்படி இல்லையெனில், மனிதன் நோய்களால் துன்புறாமல், முதுமை அடையாமல், சாகாமல் இருந்திருக்க வேண்டும். தான் நான்காவதாகக் கண்ட ஒரு துறவியைப் போல வாழ்வதே வாழ்வின் இலக்கு என கவுதமர் நினைத்தார். மேலும் உலகம் நோய் களாலும் துன்பங்களாலும் சாவுகளாலும் நிறைந்திருப்பதால் உலகியல் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை என்று எண்ணினார். இச்சிந்தனைகளினூடே அவர்வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பியபோது யசோதரா ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததைத் தெரிந்து கொண்டார். இது அவரைக் கட்டுப்படுத்தும் மற்றொரு கருவியாக அவருக்குத் தோன்றியது. ஆனால் துறவறம் மேற்கொள்வது என்ற எண்ணத்தில் அவர் உறுதியாக இருந்தார். எனவே தன்னுடைய முடிவை தன் தந்தையிடம் தெரிவித்தார்.

கவுதமர் தன்னுடைய துறவற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என சுத்தோதனர் கடும் முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு கேளிக்கைகளை அவர் முன்னிறுத்தி, அவர் வெளியேறுவதைத் தடுக்க முயன்றார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இருப்பினும் கவுதமர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால் தன்னுடைய தந்தையிடம் சொல்லாமல் போகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். தன்னுடைய மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதற்காக அவர் தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்று, “”என்னைத் தடுத்து  நிறுத்தாதீர்கள். இந்த அரசவையும் சொத்துகளும் உங்களிடமே இருக்கட்டும். தந்தையே எனக்கு எதுவும் தேவையில்லை” என்றார். அடுத்த நாள் சுத்தோதனர் தன்னுடைய அமைச்சரவையைக் கூட்டி நிலைமையை விளக்கினார். இதைக் கேட்ட அமைச்சர்கள் அவரை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்போம்; அவர் செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றனர். இச்சூழலில் வீட்டைத் துறப்பது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, அவர் வெளியேறுவதை அன்று தள்ளிப்போட்டார்.

அடுத்த நாள் நள்ளிரவு அவர் தன்னுடைய தேரோட்டிசன்னாவிடம்,‘‘நான் வெளியே செல்ல வேண்டும்; என்னுடைய குதிரையைக் கொண்டு வா’’ என்றார். அவர் இட்ட கட்டளையை ஏற்க மறுத்து கவுதமர் வெளியேறக்கூடாது என்று சன்னா கேட்டுக் கொண்டார். ஆனால் கவுதமரின் உறுதியான நியாயங்களைக் கண்டு அவர் குதிரையைக் கொண்டு வந்தார். இறுதியாக ஒருமுறை தன் மனைவி மற்றும் மகனைப் பார்த்துவிட்டு சித்தார்த்தர் குதிரையின் மீதேறி கபிலவஸ்துவை விட்டு வெளியேறினார்.

கவுதமர் துறவறம் மேற்கொண்ட பிறகு உலகத்தில் துன்பங்கள் நிலவுவதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்வதற்காக இரு ஆசிரியர்களிடம் பாடம் பயின்றார். அவர் முதலில் அலரா கலம் என்பவரிடமும் அதன் பிறகு உட்டக்க ராமபுட்டா என்பவரிடமும் கல்வி கற்றார். இவ்வகையில் அவர் ஏழு ஆண்டுகள் அவர்களிடம் பயின்றார். ஆனால் அவர்களின் கற்பித்தல் இவருக்கு நிறைவளிக்கவில்லை. எனவே அவர் அவர்களிடமிருந்து விலகி மகத நாட்டிலுள்ள உருவேலா (போத்கயா என்று தற்பொழுது அறியப்படுகிறது) சென்றார். இவரைப்போலவே அய்ந்து பேர் தங்கள் குடும்பத்தைத் துறந்து காடுகளில் அடைக்கலம் புகுந்தனர். இவர்களுடன் புத்தரும் கடுமையான தவ வாழ்வை தொடங்கினார். ஆறு ஆண்டுகளாக கடும் தவ வாழ்வை மேற்கொண்ட புத்தரின் உடல் மெலிந்து நடப்பதற்குக்கூட முடியாமல் போய்விட்டது. ஒரு நாள் அவர் பாங்கு ஆற்றில் குளித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது வழியிலேயே மயங்கி விழுந்தார். அங்கு மாடு மேய்க்கும் மனிதர் ஒருவர் இருந்தார். அவருடைய மூத்த மகள் சுஜாதா, புத்தர் மயங்கிக் கிடந்ததைக் கண்டு தன் வீட்டில் இருந்த பாலையும் சோறையும் உண்ணக் கொடுத்தார். இயல்பு நிலைக்குத் திரும்பிய புத்தர், தவ வாழ்வை மேற்கொண்டு தன்னைத் தானே வருத்திக் கொள்வதால் உலகில் உள்ள துன்பங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என்று உணர்ந்தார். கவுதமர் உணவை உட் கொள்ளத் தொடங்கியதால் அவருடன் இருந்த அய்வர், அவர் தங்கள் பாதையிலிருந்து விலகிவிட்ட மனிதராக அவரைக் கருதி அந்த புத்த கயாவிலேயே அவரைக் கைவிட்டுவிட்டு விலகிச் சென்றனர். புத்தகயாவில் புத்தர் தனித்து விடப்பட்டார். ஓரிரவு ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தபோது, உலகத்தில் துன்பம் ஏற்படக் காரணம் என்ன என்பதையும் அதை எப்படித் தீர்ப்பது என்பதையும் தெளிவாக உணர்ந்தார். மனிதர்கள் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒன்று, உலகியல் இன்பங்களுக்கு ஆட்படுகிறார்கள்; மற்றொன்று தன்னைத்தானே வருத்திக் கொள்கிறார்கள். இவ்விரு பாதைகளுமே தவறு என்றும் இரண்டுமே துன்பத்தை ஒழிக்கப் பயன்படாது என்றும் புத்தர் கண்டறிந்தார். அதனால் அறிவொளி பெற்றவர் என அழைக்கப் பெற்றார். அதற்குப் பிறகு அவர் புத்தர் என்று புகழப்பட்டார்; அவர் வீற்றிருந்த மரம் புகழ்பெற்றது. உலகமெங்கும் அது போதிமரம் என்றழைக்கப்பட்டது. இப்புத்தொளியால் புத்தர் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் பாதையைக் கைவிட்டார். குடும்ப வாழ்க்கையிலும் அவர் மீண்டும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அவர் சமூகத்தின்பால்திரும்பிச் சென்று, சமூகம் நலம் பெற, தம்மத்தைப் பரப்புரை செய்தார்.

புத்தர் இந்தியா முழுவதும் சென்று எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லாருக்கும் தம்மத்தைக் கற்பித்தார். அவர்நாற்பதுஆண்டுகள் தம்மத்தை அறிவுறுத்தினார். இறுதியில் தம்மத்தைப் பரப்புரை செய்துகொண்டே வரும்போது பாவா என்ற இடத்திற்கு வந்தார். இக்கிராமத்தில் உள்ள சூடா என்பவரின் வீட்டில் தங்கினார். சூடா, புத்தரை நண்பகல் உணவிற்கு அழைத்திருந்தார். அந்த உணவுசெரிக்காமல்அவர்நோய்வாய்ப்பட்டார். நோயோடு குசினரா கிராமத்திற்குச் சென்று அங்கு இறந்தார். கி.மு. 563இல் இளவரசராகப் பிறந்த புத்தர், ஒரு மதத்தைத் தோற்றுவித்தவராக

கி.பி. 483 இல் மறைந்தார்.

புத்த தம்மத்தின் அடிப்படையான கொள்கைகள் என்ன? அவர் சாதித்தது என்ன? இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல் புத்தரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் இடப்பற்றாக்குறை காரணமாக இதை விரிவாக விளக்க இயலவில்லை. எனினும் புத்தருடைய தொண்டினை சுருக்கமாக விளக்க முடியாது என்பதில்லை. புத்தருடைய காலத்தில் பார்ப்பனியம் மூன்று தூண்களைக் கொண்டிருந்தது : வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும் என்றென்றும் மாறாததாகவும்கருதப்பட்டதுயாகம்,சதுர்வர்ண தர்மம்(நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும், அது அறிவுக்கு ஏற்புடையதாக இருப்பினும் இல்லாவிடினும், அது தவறே இல்லாதது. வேதங்கள் தவறற்றவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்கெனக் கருதினார். வேதங்களின் தவறற்ற நிலையை ஏற்பதற்குப் பதில் அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.

 

 

பார்ப்பனியத்தைப் பொருத்தவரை கடவுளை அடைவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; யாகங்களைச் செய்யாமல் கடவுளை அடைய முடியாது. எனவே, யாகங்கள் செய்வதே மதமாகக் கருதப்பட்டது. முற்காலத்தில் பார்ப்பனர்கள் மனிதர்களை யாகத்தில் எரித்தனர். மனிதர்களின் சதையை இந்த யாகத்தை ஏற்பாடு செய்பவர்கள் உண்ண வேண்டும். புத்தருடைய காலத்தில் இந்த வழக்கம் இல்லை. ஆனால் மிருகங்களை யாகத்தில் எரிக்கும் வழக்கம் இருந்தது. அந்தக் கால இலக்கியங்களைப் படிக்கின்ற எவரும் பார்ப்பனர்களின் மூதாதையர்கள் எண்ணற்ற பசுக்களை யாகங்களில் பலியிட்டதை அறிவர். இந்த இலக்கியங்களை படிக்கும் எவரும், பார்ப்பனர்கள் யாகங்களில் பலியிட்டுக் கொன்ற பசுக்களின் எண்ணிக்கை, முஸ்லிம்கள் கொன்ற பசுக்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகமானது என்ற உண்மையை புரிந்து கொள்வர்.

புத்தர், வேதங்களின் புனிதத் தன்மையை எந்தளவுக்குத் தாக்கினாரோ, அதே அளவுக்கு அவர் யாகங்கள் செய்வதையும் கண்டித்தார். இதில் புத்தரின் நிலைப்பாடு புரட்சிகரமானது என்றே எவரும் சொல்ல முடியும். கடவுளை அடைவதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புத்தர் அறிவுறுத்தினார். மதத்தின் நோக்கம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் எப்படிநடந்து கொள்ள வேண்டும் என்பதோடு தொடர்புடையது. இதுதான் புத்தரின்நிலைப்பாடு. கடவுளைஅடைவதுஒரு மதத்தின் நோக்கமாக இருக்க முடியாது என்று புத்தர் எண்ணினார்.

ஒருபுறம் கடவுளை அடைய முயல்வதும் மறுபுறம் தன்னுடைய சக மனிதனை இழிவாக நடத்துவதும் மதத்திற்கு எதிரானது. பார்ப் பனியத்தின் மூன்றாவது தூணான சதுர்வர்ண தர்மத்தை புத்தர் கடுமையாகத் தாக்கினார். பார்ப் பனியத்தின் சாரமேசதுர்வர்ண தர்மத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஒருவன் பிறக்கும்போதே சாதி அடிப்படையில் உயர்வானவனாகவோ, தாழ்வானவனாகவோ பிறக்கிறான் என்று நினைப் பதற்கு சதுர்வர்ணத்தில் உள்ள நம்பிக்கையே காரணம். பார்ப்பனியத்தில் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் பெண்களுக்கும் மரியாதைக்குரிய இடம் இல்லை. வாழ்வியல் உரிமைகளோ, எதையும் சொந்தம் கொண்டாடும் உரிமையோ இல்லாததால் இவ்விரு வகுப்பினரும் சுதந்திரமாக இல்லை. அவர்கள் உயிரோடு வாழும் வரை இது தான் நிலைமை. இதே நிலை அவர்கள் இறந்த பிறகும் தொடர்கிறது. பார்ப்பனியத்தில்இவ்விரு வகுப்பினருக்கும் இறந்த பிறகும் சுதந்திரம் இல்லை.

பார்ப்பனியத்தின் கொள்கைகளைப் பொருத்த வரை, துறவிகளுக்குதான் சுதந்திரம் உண்டு. ஆனால்,தாழ்த்தப்பட்டசாதியினரும்பெண்களும் துறவிகளாக மாறும் உரிமை அவர்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. இத்தகையதொரு அநீதியான நிலையை புத்தர் ஏற்க மறுத்தார். புத்தர், சமூக சமத்துவத்தை வலியுறுத்திய மாபெரும் போராளி. அவரைப் போன்ற ஒருவரை வேறு எங்கும் காண முடியாது. பார்ப்பனியத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை. புத்தர் அவர்களுடைய சுதந்திரத்திற்கான வழிகளைத் திறந்தார். தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. எனவே, புத்தர் அவர்களை சங்கத்தில் பிக்குகளாக சேர்த்துக் கொண்டார். புத்தர் சமூக சமத்துவத்தை வலியுறுத்தியதோடு, அதை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் புத்தர் தன்னுடைய அமைப்பில் சேர்த்துக் கொள்ளவில்லை; ஒடுக்கப்பட்ட பிற சாதியினரையும் தமது சங்கத்தின் உறுப்பினர் களாக்கினார்.

மேற்கூறிய விளக்கங்கள் போதுமானவை அல்ல. இருப்பினும் புத்தர் இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள இது பயன்படும். புத்தரின் கொள்கைகள் மிகவும் பயனுள்ளவையாகவும் ஈர்ப்புடையதாகவும் இருந்ததால் புத்தரின் தம்மம் உலகெங்கும் பெருமளவுக்குப் பரவியது. தெற்கில் இலங்கை மற்றும் பசிபிக் பெருங் கடலில் உள்ள பல தீவுகளில் அது பரவியது. கிழக்கில் பர்மா, அசாம், தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பானில் பரவியது. வடக்கில் திபெத், நேபாளம் மற்றும் டார்க்ஸ்டனுக்குப் பரவியது. புத்தரின்தம்மம் ஆப்கானிஸ்தானிலும் பரவியது. எந்தமதமும்இந்தஅளவுக்குப்பரவியதுஇல்லை. மற்றொருசிறப்புத்தன்மையும் புத்ததம்மத்திற்கு இருக்கிறது. எல்லா மதங்களும் தன்னுடைய அறநெறிகள் மற்றும் கொள்கைகளால் மட்டும் பரவிவிடுவதில்லை. போரின் மூலமே இஸ்லாம் வளர்ந்தது. சட்டத்தின் மூலம் கிறித்துவம் வளர்ந்தது. பவுத்தம் மட்டுமே அதன் அறநெறிகள் மற்றும் கொள்கைகளால் வளர்ந்தது. அதற்கு வாளின் ஆதரவோ, சட்டத்தின் ஆதரவோ தேவைப்படவில்லை.

புத்தர் தனது கருத்துகளைப் பின்பற்றும்படி ஒருபோதும் மக்களை வற்புறுத்தியதில்லை. மக்களே வலிந்து அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர். இருந்த போதும் இந்திய மக்கள் ஏன் புத்த தம்மத்தை மறந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவுக்கு வெளியே பவுத்தம் இன்றளவும் வாழ்கிறது. உலகெங்கும் பவுத்தர்கள் பெருமளவில் உள்ளனர். இருப்பினும் இந்தியாவில் பவுத்தம் அழிக்கப்பட்டது. இடப்பற்றாக்குறை காரணமாக இதற்கான விரிவான பதில்களை நான் இங்கு சொல்ல இயலாது. இருப்பினும் இதுகுறித்து சுருக்கமாக விவாதிப்பது அவசியம். புத்தரை காலத்தால் மறக்க முடியாது. புத்தர் அழிவற்றவர்; எக்காலத்திற்கும் பொருந்தி வருபவர். இவ்வுலகில் இருந்து அவருடைய பெயர் எப்படி மறையும்? சீனா புத்தரை மறக்கவில்லை; ஜப்பான் மறக்கவில்லை; பர்மா மறக்கவில்லை; ஆனால் இந்தியா மறந்துவிட்டது. இதற்குக் காலம் காரணம் அல்ல என்பதும் இச்சூழலுக்கு புத்தரின் எதிரிகளே காரணம் என்பதும் தெளிவான ஒன்று.

பார்ப்பனர்களே புத்தரின் எதிரிகள். பார்ப்பனர்கள் புத்தருக்கு மட்டுமே எதிரிகள் என்பதும் உண்மை அல்ல. அவர்கள்  சமண மதத்தின் நிறுவனரான மகாவீரரையும் எதிர்த்தனர். ஆனால், புத்தர் பார்ப்பனியத்தின் மீது தொடுத்த கடுமையான தாக்குதல் அளவுக்கு மகாவீரர் தொடுக்கவில்லை. காரணம், புத்தர்தான் சதுர்வர்ண தர்மத்தின் மிகப்பெரிய எதிரியாக விளங்கினார்; மகாவீரர் அல்லர். புத்தர் வேதங்களையும் யாகங்களையும் தாக்கியதைப் பற்றிக்கூட பார்ப்பனர்கள் பெரிதும் கவலைப் படவில்லை. ஆனால், சதுர்வர்ண தர்மத்தை புத்தர் தாக்கியதை அவர்கள் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சதுர்வர்ணம் அழித்தொழிக்கப்பட்டால் பார்ப்பனியம் அடியோடு ஒழிந்துவிடும். இதைப் பார்ப்பனர்கள் நன்கு அறிந்திருந்தனர். உண்மையில் பார்ப்பனர்கள் சதுர்வர்ணத்தைத் தங்களுடைய உயிர் மூச்சாகக் கருதுகிறார்கள். எனவேசதுர்வர்ணதர்மத்தின்மீதானதாக்குதல் என்பது பார்ப்பனர்கள் மீதான தாக்குதல்தான். அந்தக் காலத்தில் இருந்த ஒரே பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாக புத்தருடைய இயக்கத்தையும் அந்த இயக்கத்தின் தலைவராக புத்தரையும் ஒருவர் கூற முடியும். எனவேதான் பார்ப்பனர்கள் புத்தரையும் அவரது தம்மத்தையும் அனைத்து வழிகளிலும் அழித்துவிட வேண்டும் என்று சதி செய்தனர்.

பார்ப்பனர்கள் தங்களுடைய வேதக் கடவுளர் களைக் கைவிட்டு போரிடும் கடவுளர்களைத் தங்களுடைய சொந்தக் கடவுளர்களாக உருவாக்கினர். இக்காலத்தில், பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தின் தலைவரான ஜெதேவை பார்ப்பனர்கள் எவ்வாறு வணங்குகிறார்களோ, அவ்வாறு அன்று பார்ப்பனர்கள் ராமனை வழிபடத் தொடங்கினர். ஒரு கடவுளோடு அவர்கள் நிறைவடையவில்லை. போர் வீரர் வகுப்பைச் சேர்ந்த இன்னொரு கடவுளான கிருஷ்ணனை அவர்கள் ஆதரிக்கத் தொடங்கினர். தற்பொழுது பார்ப்பனர்கள் நமது கடவுளர்களை வழிபடத் தொடங்கி விட்டதால் அவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வதில் பொருள் இல்லை என பார்ப்பனர் அல்லாதோர் எண்ணத் தொடங்கிவிட்டனர். இதனால் பார்ப்பனர்களுக்கு எதிரான புத்தரின் இயக்கம் நலிவடைந்தது. புத்தர் உங்களுடையவராக இருந்தாலும், நாங்கள் அவரை விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக் கொள்கிறோம் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டதும் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இனி சண்டையிடுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? ஒருபுறம் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர்களை அமைதிப்படுத்திக் கொண்டு மறுபுறம் புத்தருடைய தம்மத்தைப் போலவே எல்லாவற்றையும் செய்யத் தொடங்கினர். இதன் மூலம் பார்ப்பனியமும் பவுத்தமும் ஒன்று தான் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு மக்களுக்குத் தவறான வழிகாட்டத் தொடங்கினர்.

பவுத்தர்கள் “வியார’ங்களைக் கட்டினர். வியாரங்கள் தான் பவுத்தத்தின் ஒளியாகத் திகழ்ந்தன. பார்ப்பனர்கள் தங்களுடைய கோயில்களை பவுத்த வியாரங்களுக்கு அருகிலேயே கட்டத் தொடங்கினர். இந்த வெளிப்புற மாற்றத்தைக் கண்ட மக்கள், பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் வேறுபாடு காண மறந்தனர். இறுதியில், முஸ்லிம்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தபோது, அவர்கள் வியாரங்களை அழித்தனர். பவுத்தத் துறவிகள் வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடினர். பவுத்தத் துறவிகளும் இல்லாததைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பார்ப்பனர்கள் பவுத்தத்தை அழிக்கத் தொடங்கினர். பவுத்த குகைகளைப் பாண்டவ குகைகள் என அழைக்கத் தொடங்கினர். புத்தரின் சிலைகளை உடைத்து சிவ லிங்கங்களாக மாற்றினர். பவுத்தத்தைத் தங்கள் முக்கிய எதிரியாகக் கருதியதால்தான் பவுத்தத்தைத் பார்ப்பனர்கள் எதிர்த்தனர் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்நிலையில் புத்தரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதை அவர்கள் எப்படி ஊக்குவிப்பார்கள்?

ஆனால், பார்ப்பனர் அல்லாத மக்கள் இம் மாமனிதரை மறந்திருக்கக் கூடாது. ஏனெனில், மூட நம்பிக்கைகளிலும் மந்திரங்களின் பிடி யிலும் கட்டுண்டு கிடந்த மக்களை புத்தர்தான் விடுதலை செய்து, அவர்களை மனிதநேயப் பாதைக்குக் கொண்டு வந்து அவர்களைமனிதர் களாகவும் மாற்ற முயன்றார். இவர்களுடைய நலன்களுக்காகத் தன்னுடைய அரச வாழ்க் கையை விட்டொழித்து, இம்மக்களின் சுய மரியாதைக்காக இந்த நாட்டைத் தன்னுடைய கொள்கைகளால் செழுமைப்படுத்திய புத்தரை இவர்கள் மறந்திருக்கக் கூடாது. பார்ப்பனர் அல்லாத மக்கள் இத்தகையதொரு மாமனிதரை மறந்தது மிகுந்தவருத்தத்திற்குரிய செய்தியாகும். அவர்கள் புத்தரை தங்களின் நினைவில் உயிர்ப்புடன் வைத்திருந்திருக்க வேண்டும்.

புத்தர் பிறந்த நாள் விழாவை இந்திய மக்கள் கொண்டாட வேண்டும் என்று நாம் வலியுறுத்த இதுமட்டுமேகாரணம் என்றுநாம் கூறவில்லை. நமது காரணம் மேற்கூறிய காரணங்களில்இருந்து வேறுபட்டது;மிகவும் வலுவானது. இந்துக்களில் உள்ள படித்த வகுப்பினர் இந்துப் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்துக்களுக்கான அரசியல்ஜனநாயகத்தைநிறுவவிரும்புகின்றனர். இதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள். இத்தகைய அறிவுஜீவிகளின் மீது நாம் இரக்கம் கொள்கிறோம்.

இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிறுவ நினைப்பவர்கள் முட்டாள்களாகவோ, சூழ்ச்சி நிறைந்தவர்களாகவோ இருக்கலாம். ஆனால், இத்தகைய பேதமையும் சூழ்ச்சியும் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்க முடியாது. பார்ப் பனியமும் ஜனநாயகமும் எதிரெதிர் நிலை களில் நிற்பவை என்பதை அனுபவங்களின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும். ஜன நாயகத்தை நிலைநாட்ட, சதுர்வர்ண தர்மத்தை அழித்தொழிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சதுர்வர்ண கிருமிகளை அழித்தொழிப்பதற்கு புத்த தம்மத்தைவிட ஆற்றல் வாய்ந்த மருந்து இல்லை. எனவே, அரசியலின் உயிர்நாடியை தூய்மைப்படுத்தி வலுப்படுத்த அனைத்து இந்துக்களும் புத்தர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அது முக்கியமானதும் அவர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அரசியல் ரீதியாக இந்தியா ஒரு நோயாளியைப் போல உள்ளது. நாம் இந்தியாவை நினைக்கும்போது, பெருத்தவயிறும், குச்சிகுச்சியான கைகால்களும் வெளிறிப்போன முகமும் உள்ளடங்கிய கண்களும் கொண்ட எலும்புக் கூடான ஒரு மனிதனின் உருவத்தைத்தான் கற்பனை செய்யத் தோன்றுகிறது. ஜனநாயகத்தைச் செழித்தோங்கச் செய்யும் ஆற்றல் அவனிடம் இல்லை. ஆனால், அதற்கான வேட்கை இருக்கிறது. இந்த வேட்கையைத் தணிக்க அதிகாரம் மிகவும் முக்கியம். இந்த அதிகாரத்தை மருந்தின்றி கைப்பற்ற முடியாது. ஆனால், மருந்தினால் என்ன பயன்? மருந்தை உட்கொள்ள வேண்டும் எனில், வயிற்றைத் தூய்மையாக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அனைத்து வகை மாசுபாடுகளும் அகற்றப்பட வேண்டும். இதைச் செய்யாதவரை மருந்தைமட்டும்உட்கொள்வதால்எந்தப்பயனும் இல்லை.

இந்துக்களின் வயிறு தூய்மையாக இல்லை. அவர்களுடைய வயிற்றில் நீண்ட நாட்களாக பார்ப்பனியக் கழிசடைகள் அடைத்து வைக்கப் பட்டுள்ளன. இதைத் தூய்மைப்படுத்தும் மருத்து வரால்தான் இந்தியாவில் ஜனநாயகத்தை நிறுவ உதவி புரிய முடியும். இந்த மருத்துவர் சந்தேகத்திற்கிடமின்றி புத்தராகத்தான் இருக்க முடியும். இந்துக்களுடைய வாழ்வியலை ராமன் பிறந்தநாள், கிருஷ்ணன் பிறந்தநாள் மற்றும் காந்தி பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம் தூய்மைப்படுத்திவிட முடியாது. ராமன், கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப் பனியத்தை வழிபடுபவர்களே. ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள். ஜனநாயகத்தை நிர்மாணிக்க, புத்தர் மட்டுமே பயன்படுவார். எனவே, புத்தரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. அவரது மாமருந்தே இந்துக்களின் அரசியல், சமூக நீரோட்டத்தில் கலந்துள்ள மாசுபாடுகளைத் தூய்மையாக்கும்.எனவே,மக்கள்ஜனநாயகத்தை நிறுவ, இந்த மாபெரும் அறிவுரையை நாம் முழங்க வேண்டும். புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி!

‘நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்’ என்ற தலைப்பில் ‘தலித்முரசு’ டாக்டர் அம்பேத் கரின் அரிய உரைகளைத் தொகுத்து வெளி யிட்டிருக்கிறது; தாயப்பன் அழகிரிசாமியின் சிறப்பான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள நூலில் அடங்கியுள்ள ஒரு கட்டுரை.

தொடர்புக்கு : 94444 52877

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

You may also like...