மனிதன் ஒழுக்கத்துடன் வாழ கடவுள் தேவையா?

ஒரு மனிதன் அறிவுடையவனாகி, உண்மையுடையவனாகி, மக்களிடம் அன்பு காட்டி, மனம், வாக்கு, காயங்களால் தொண்டு செய்து அவைகளின்படி நடப்பானேயானால், அவன் கடவுள் துரோகியாகக் கருதப்படுவானா? அன்பு, அறிவு, உண்மை, இவை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலுங்கூட, அக்கடவுள் – தன்னை இல்லை என்று சொன்னதற்கும் தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனைத் தண்டிப்பாரா?

உண்மையில் யாரும் அறியமுடியாத ஒரு கடவுள் இருந்தால் – அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட, கடவுளைப்பற்றிக் கவலைப்படாமல், கடவுளுக்கு பக்தி செய்யாமல் அன்பு, அறிவு, உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கேதான் கருணை காட்டுவார். இந்த உணர்ச்சியினாலேயேதான் நான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங் கழிக்காமல், நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்துவருகிறேன்.

நான் கூறின மேற்கண்ட தத்துவங்கள் – மதத் தலைவர்கள், அதிலே நிபுணர்கள் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.

மற்றும் சித்தர்களும் வேதாந்திகளும், இந்த உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர். ஆகவே, ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி – கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும், முடிவு கொண்டாலும் அதுவும் மாயைதானேயழிய உண்மையாயிருக்க இடமில்லை.

சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல் , ‘ இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா?’ என்று கேட்கின்றனர். ஏதோ ஒரு சக்தி இருக்கட்டும்! இருக்க வேண்டியவைகளையெல்லாம் கண்டுவிட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்துவிட்டோமா? அதைப்பற்றிய விவாதம் ஏன் நமக்கு?

மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ, சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா என்று கேட்கிறார்கள். வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால், அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம், சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறதோ – வாழ்க்கையில் நீதி, அன்பு நிலவமேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதோ – அந்தக் கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணரச்சிகொண்ட மனிதனின் நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்துவிட்டனர்.

(பெரியார் – ‘குடி அரசு’ 30-1-1930 )

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

You may also like...