தமிழர்களின் கடவுள் மறுப்பு மரபு சங்க இலக்கியத்திலிருந்து சுயமரியாதை இயக்கம் வரை முனைவர் க.நெடுஞ்செழியன்

நாத்திகம் என்பது வடசொல், இச்சொல்லிற்கு மறுப்பது என்பது பொருள். ஒருவர் கொள்கையை மற்றவர் ஏற்காத போது அல்லது அதனை மறுக்கின்ற போது அப்படி மறுக்கின்றவர் அக் கொள்கையைப் பொருத்த மட்டில் நாத்திகராவார். மாணிக்கவாசகர்.

ஆத்திகர் மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

எனக் குறிப்பதில், நாத்திகம் எனும் சொல், சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்காத தன்மையைச் சுட்டக் காணலாம். ஆயினும் நாத்திகர் எனும் சொல் கடவுள் கோட்பாட்டை – வைதிகப்பண்பாட்டைமறுத்தவர்களைகுறித்தே வழங்கப்பட்டுள்ளது. வடமொழி அறநூல்களில் நாத்திகர்களாகக் குறிக்கப் பெறுபவர்கள் பேச்சுக் கலையிலும் தருக்கவியலிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இதனை,

உலகத்துப் பொருள்களின் தோற்றக் கோடுகள், இயற்கையாக நிகழ்வனவெனவும், அவற்றிற்கு ஒரு கருத்தா வேண்டாமையின் கடவுள் இல்லை எனவும் அக்கடவுள் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறும் வேதனங்கள் (வேதங்கள்) பிரமாணமாகாவெனவும் துணிந்து, யுக்தி வன்மையைக் கடைப்பிடித்து நிகழ்வது நாத்திகமாகும். என சுக்கிர நீதி குறிக்கும்.

இந் நூற்பாவிற்கு விளக்கம் அளிக்கும் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, அறிவியல், கலைகள்ஆகியனபற்றிப்பட்டியலிடும்சுக்கிரநீதி, தருக்கவியல் புலமைமிக்கோரை நாத்திகர் எனச் சுட்டுகிறது. உலகாய்தர்களையே பெரும்பாலும் நாத்திகர் என்பர். கடவுளையும், வேதங்களின் மேலாண்மையையும் மறுப்பவர்களைச் சுக்கிர நீதி நாத்திகர் எனக் குறிக்கின்றது. ஆனால், அதே சுக்கிர நீதியே இந்த நாத்திகர்கள் தங்களுக்கென இயல்புக் கோட்பாட்டை அஃதாவது அனைத்துப் பொருள்களும் தங்களுக்கென்ற தனித்த இயல்பினை (சுபாவத்தை கொண்டுள்ள என்பதை) ஒப்புக் கொள்பவராவர். அனைத்துப் பொருள்களும் தத்தமக்குரிய இயற்கைவிதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன என்பதே இயல்புக் கோட்பாடு என்பதாகும். என விளக்குவார்.

இவரின் கூற்றுப்படி, நாத்திகர் என்போர்

  1. கடவுளை-வேத மேலாண்மையை எதிர்த்தோர்
  2. இயல்புக் கோட்பாட்டினர்
  3. உலகாய்தர்

என்போராவர்.

தருக்கவியலின் அடிப்படையில் தம் கோட் பாடுகளை நிறுவியதாலும் அதே அடிப்படையில் எதிரிகளின் கோட் பாடுகளை நிலைகுலையச் செய்ததாலும், தருக்கவியலாளர்கள் பெரும் கண்டனத்திற்கு உள்ளாயினர். இதனால் இந்தியச்  சிந்தனை மரபு, இரண்டு பிரிவுகளாகப் பிளவு பட்டது. ஒன்று நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியது; மற்றது பகுத்தறிவின் அடிப்படையாக அமைந்தது. நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிய கோட்பாட்டைக் கருத்து முதல் வாதம் எனவும், பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த நாத்திகக் கோட்பாடுகளைப் பொருள் முதல்வாதம் எனவும் அழைப்பர்.

கருத்து முதல் கோட்பாட்டை எதிர்க்கும் இவர்களைப் பொருள் முதல் கோட்பாட்டினர் எனக் குறிப்பர். கருத்துமுதல் வாதத்தின் ஒவ்வொரு கூறையும் “நகத்தின் நகம், பல்லுக்குப் பல்”எனஎதிர்த்தும்மறுத்தும்உண்மையைநிலை நாட்ட ஓயாது உழைத்தனர்.

“இந்த உலகம் மாயை “, “வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்” என கருத்து முதல் வாதிகள் வற்புறுத்தினால், பொருள்முதல் வாதிகளோ இவ்வுலகம் உண்மையானது, வாழ்க்கை இனியது, வாழும் வரைமகிழ்வோடும், மறைந்த பின் புகழோடும் இருக்க வேண்டும் என வற்புறுத்தினர். இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என கருத்து முதல் கோட்பாட்டினர் கூறிய போது பொருள் முதல் கோட்பாட்டினரோ இந்த உலகம் பொருள்களால் ஆனது. பொருள்களோ அணுக்களால்ஆனவை. எனவே நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்ற ஐந்து பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம் என ஆய்ந்துரைத்தனர். இவ்வாறு ஐந்து பூதங்கள் பற்றியும்,அவற்றின்இயல்புகள்பற்றியும்ஆராய்ந்த அறிஞர்கள் – அணுக்கோட்பாட்டாளார்கள் – ஐந்திரம் நிறைந்தோராகப் போற்றப்பெற்றனர். சமூகச் சுரண்டலையும் அச்சுரண்டலுக்குத் துணையாய் அமைந்த மூடநம்பிக்கைகளையும் தகர்க்கும் வண்ணம் அறிவுக்கானவிடுதலையை முன்வைத்தனர்.

அதற்கான கருவியாகத் தருக்கவியலை முன்னெடுத்துச் சென்றனர். இந்தியச் சமூக வியலிலும் சிந்தனை முறையிலும் பெரும்பாதிப்பை உருவாக்கி மனிதமாண்புகள் சிதையக் காரணமாக இருந்த மனுமுதலானவர்களின் கருத்துக்களை உறுதியுடன் எதிர்த்து நின்றனர். இவர்களின் இவ்வியல்பினை, சங்கரர்மனுவுக்கு அடிமைப்பட்டு சிறிதும் ஒளிவு மறைவில்லாமல் அவரைப் புகழ்வதுபோல் இந்தியத்தத்துவத்தில் மனுவை இகழவும் தைரியமாய் முன் வருபவர் யார்? அவர்கள் நம்முடைய பொருள் முதல் வாதிகளான நாத்திகர்களே! அவர்களை உலகாய்தர் (லோகாயதர்) என்றும், சார்வாகர் என்றும் கூறுவர்.

அவர்கள் மனம் விட்டு உண்மையைப் பேசுகிறவர்கள் எனப் புகழ்வார் மிகச் சிறந்த இந்திய தத்துவ ஆய்வாளரான தேவிபிரசாத் சட்டோ பாத்தியாயா.

பகுத்தறிவையும், மனிதநேயத்தையும் வளர்க்கவும் மோட்சம், புரோகிதம் முதலான சுரண்டல் கருவிகளையும் மூட நம்பிக்கை களையும் எதிர்க்கவும் ஓயாது பாடுபட்ட இச்சிந்தனையாளர்களின் அரிய நூல்களை எல்லாம் எதிரிகள் அழித்துவிட்டனர்.

இருப்பினும் சில நூற்றாண்டுகளுக்கு முன் மாதவ வித்யாண்யரால் தொகுக்கப்பட்டு, இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் கோ.வடிவேலு செட்டியாரால் தமிழாக்கம் செய்யப் பெற்ற உலகாய்தக் கோட்பாடுகள் சிலவற்றை இங்கே காணலாம்.“சார்வாகதரிசனம்”எனும் பெயரில் வழங்கும் அவை வருமாறு.

1.நிலையானஞானத்திற்குஅடிப்படையாகவும் மோட்சத்திற்கு நீதியாயும் உள்ள சிவனை வணங்குகிறேன் எனக் கூறியதால் பரமேசுவரன் எங்ஙனம் மோட்சத்தைக் கொடுத்தல் கூடும்.

 

 

அனேகமாக எல்லா உயிர்களும், உயிருள்ளவரை மகிழ்வாக – நலமாக– வாழவேண்டும்.யமனுக்கு வசமாகாமல் ஒருவரும் இருக்கப் போவதில்லை. உடல் சாம்பலாய்ப் போன பின்னர் அஃது எங்ஙனம் திரும்பி வருதல் கூடும்?

  1. காம இன்பமே உண்மையான இன்பம். இதுவே உறுதிப் பொருளாகும்

3.இன்பத்திலும் முழுமையான முற்றுமையான இன்பம் என்பது எதுவும் இல்லை. துன்பமே நிலையானது. இத்துன்பங்களுக்கு இடையேதான் இன்பத்தைக் காணவேண்டும். மீனை உண்ண விரும்பும் ஒருவன் எவ்வாறு முட்களை நீக்கி விட்டு உண்ண வேண்டுமோ, அரிசியைப் பெற விரும்பும் ஒருவன் வைக்கோலிலிருந்து நெல் மணிகளையும், நெல்லிலிருந்து உமியையும் பிரிக்கவேண்டியுள்ளதோ அவ்வாறே துன்பங் களிலிருந்து இன்பத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். விலங்குகள் அழித்துவிடும் என்றெண்ணிவேளாண்மைசெய்யாமல்இருப்ப தில்லை.

  1. துறவிகள் (பிட்சுக்கள்) இருக்கின்றார்கள் என்பதற்காக யாரும் சமைக்காமல் இருப்ப தில்லை. எவனொருவன் பயத்தினால் பிரத்தியட்சமான இன்பத்தை விடுக்கின்றானோ அவன் பசுவைப்போல் (நாற்கால் விலங்கைப் போல்) மூர்க்கனாவான்.

5.சொர்க்கம் என்றும் மோட்சமென்றும் பேசுவது எல்லாம் வெறும் வீண் பேச்சு. மறு உலகத்திற்குப் போவதாகக் கற்பனை செய்துகொள்ளும் ஆத்மா, உயிர் என்று ஏதும் இல்லை.

ஜர்ப்பரி, துர்ப்பரி முதலிய பொருளற்ற சடங்குகளும், அசுவமேதயாகத்தில், யாகம் செய்வோரின் மனைவி அக் குதிரையுடன் புணர்வதும் ஆகிய கேவலமான சடங்குகளையும் கற்பித்தவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகத்தானே இருப்பார்கள்.

உலகியலான சுகம் இல்லாது போனால் தம் உடலை வருத்தியும், பெரும்பொருள்களைச் செலவிட்டும் அக்கினி ஹோத்திரம் முதலான கர்மங்களில் புரோகிதர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்?

அக்னி ஹோத்திரம் என்ற கர்மம், தீயில் ஓமம் செய்வது, மூன்று வேதங்கள், மூன்று தீக்குண்டங்கள், உடம்பில் சாம்பலைப் பூசிக் கொள்வது என்பதெல்லாம் அதைச் சொல்லிக் கொண்டு அவனவன் வயிற்றுப் பிழைப்பை நடத்துவதற்காகவே ஏற்பட்டவை.

அக்னிஹோத்திரம்,மூன்றுவேதாத்தியயனமும், சந்நியாசமும், விபூதி தாரணமுமாகிய இவை புத்தியும் புருடத் தன்மையும் அற்றவர்களின் பிழைப்புக்கான வழிகளாகும்.

6              யாகத்தில் தாங்கள் பலியாகக் கொடுக்கும் பசு நேராகச் சொர்க்கத்திற்குப் போகுமானால், யாகம் செய்வோர்தம் தந்தையைஏன்யாகத்தில் பலியாகக் கொடுக்கக் கூடாது?

7              இறந்தவனை எண்ணிச் செய்கின்ற சிரார்த்தம் அவனுக்குத் திருப்தியை உண்டு பண்ணுமாயின் இவ்வுலகத்திலேயும் பயணம் மேற்கொள்ளும் ஒருவன் ஏன் கட்டுச் சோற்றை எடுத்துப் போக வேண்டும்?

8              பூலோகத்திற்கு கொடுக்கும் உணவினால் சுவர்க்கத்தில்இருப்பவரின்பசிஅடங்குமாயின், ஒரே வீட்டின் மாடியில் இருப்போரை நினைத்துக் கீழ்வீட்டில் இருப்போர் ஏன் உணவைப் படைத்தல் இல்லை?

 

உயிருள்ளவரை மகிழ்வோடு இரு கடன் வாங்கியேனும் நெய் சாப்பிடு. இந்த உடல் சாம்பலாகி விட்டால் மீண்டும் வருமா?

9.இந்தஉடலைவிட்டுப்பிரிந்தஒருவன்(உயிர்) பரலோகம் போவானேயாயின் உற்றார் உறவினர் களை எண்ணி, அவர்களை விட்டுப் பிரிந்த கவலையுடன் ஏன் திரும்பி வருதல் இல்லை. ஆகையினால் இறந்தவர்களை உத்தேசித்துச் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் பார்ப் பனர்கள் தங்கள் பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொண்டனவே ஆகும்.

  1. இருக், யசுர், சாம வேதங்கள் எனும் இம்மூன்றையும் இயற்றியோர் ஏமாற்றுக் காரர் களும், நயவஞ்சகர்களும் திருடர் களுமாவர்.

ஜர்ப்பரி, துர்ப்பரி முதலிய பொருளற்ற சடங்குகளும், அசுவமேதயாகத்தில், யாகம் செய்வோரின் மனைவி அக் குதிரையுடன் புணர்வதும்ஆகிய கேவலமானசடங்குகளையும் கற்பித்தவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகத்தானே இருப்பார்கள். இவ் உலகாய்த மெய்யியலில் கடவுள்,மோட்சம்,நரகம்பற்றியசிந்தனைகளுக்கு இடம் இல்லை.இவ்வுலகம் என்பது ஐந்து பூதங்களின் சேர்க்கையினால் உருவானதேயன்றி யாராலும் படைக்கப்படவில்லை என்று இம்மெய்யியல்வற்புறுத்தியது.அதைப்போலவே உலகமக்களைப் பாதுகாக்கும் அரசனைத் தவிரவேறு பரமேசுவரன் என்பவன் இல்லை என்றும், முள் முதலியவற்றால் உண்டாகும் துக்கமே நரகம் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிதலே மோட்சம் என்றும் வற்புறுத்தியது.

 

ஆதலால்இக்கோட்பாட்டில்கடவுள் மறுப்பு, ஆன்மா மறுப்பு, மோட்ச மறுப்பு முதலானவை இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. அத்துடன் மோட்சம் கருதியோ, அல்லது கடவுளின் அன்பைக் கருதியோ செய்யப்படும் “தானங்கள்” யாவும் பயனற்றவை என்பதுடன், பயன் கருதிச் செய்யப்படும் வணிக நோக்கினதுஎன்பதாகவும் ஆகிவிடுகின்றன. எனவே இம்மை வாழ்வை ஆணும் பெண்ணுமாய்க்கூடிநடாத்தும் இல்லற வாழ்வை இக்கோட்பாடு போற்றுவதுடன், நாட்டையாளும் வேந்தனும் செங்கோலேந்தி நல்லாட்சி புரிபவனாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றது.

நரபலிக்காகப் பலிபீடத்தில் கட்டப்பட்டிருந்த சுனச்சேபன் என்பானை விசுவாமித்திரர் மீட்கிறார். இதனால் நரபலிக்கு ஏற்பாடு செய்திருந்த வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனை, “சுனச்சேபனின் கதை, தொன்மைக்கால இந்தியாவில் மனித நலத்தின் தொடக்கநிலைபற்றிய எல்லைக் கல்லாக நின்று நமக்குச் சுவையூட்டுகிறது. புகழ்மிக்கப் புரோகிதன் தன் அரசனை மகிழ்விப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த உயிர்ப்பலிச் சடங்கு இங்கே குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக, விசுவாமித்திரன் வாயிலாக , நடந்த அரசர்-பார்ப்பனர்கட்கிடையேயானமோதலை வைதிக நெறிக்கு முற்றிலும் மாறுபட்டதும், உயிர்ப் பலிகளையும் சடங்குகளையும் எதிர்ப்பதுமாகிய வேறொரு சிந்தனைப் போக்கின் சார்பைக் காணலாம்”. என எடுத்துக்காட்டுவார், இந்திய சிந்தனையில் மனிதநேயம் பற்றி ஆராய்ந்த அ.சக்கரவர்த்தி நயினார்.

மனித ஆற்றலை மேம்படுத்தி, மனிதன் என்பவன் எதற்கும் அல்லது யாருக்கும் தாழ்ந்தவன்அல்லன்என்பதைநிலைநாட்டுவதால் மனிதநேயம் என்பது அதன் உள்ளடக்கத்தில் கடவுள்மறுப்பை அடிப்படையாகக் கொண்டது என்பது வெளிப்படை இதனைத் தற்காலச் சமூகவியலாளர்கள் “மனிதநேயம் மனிதனது பெருமைகளையும் உரிமையையும் மதிக்கும் வகையில் அமைந்ததொரு கோட்பாடு. மனிதனின் ஆளுமைப் பண்புகளை மதிக்கவும் அவனது நலன்களைப் பேணிவரவும் சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மனிதன் முழுமையான வளர்ச்சியைப் பெறவும் துணைபுரிவது இக்கோட்பாடு. சமயம் மற்றும் இனவெறிக் கொடுமை, சமயக் காழ்ப்பு, மாற்றுக் கோட்பாட்டை வெறுத்தல் ஆகிய அனைத்து இயல்புகளையும் களைவது இதன் நோக்கம்…. பொருள் முதலியலைச் சார்ந்த இக்கோட்பாடு மனித இனத்தின் விடுதலைக்காக உரத்து முழங்குவதுடன் சமயங்களையும் அதன் சடங்குகளையும் முற்றாக எதிர்ப்பது” என்பர்.

எனவே மனிதநேயம் என்பது பொருள் முதல்வாதத்தைச் சார்ந்தது என்பதும் கடவுள், சமயம், சடங்குகள், ஆகிய அனைத்தையும் எதிர்ப்பது என்பதும் தெளிவாகின்றது.இந்த வகையில் நாத்திகம் என்பதும் மனிதநேயம் என்பதும் ஒரு பொருள் குறித்து நிற்பதும் உறுதியாகின்றது. நாத்திக இலக்கியங்களில் மனிதநேயம் என ஆராய்கின்றபோது தமிழில் சங்க இலக்கியங்களிலும், அவற்றை அடுத்த நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருபதாம் நூற்றாண்டில் பெரியாரியலைச் சார்ந்து வந்து பாரதிதாசன் முதலான கவிஞர்களிடமும் மட்டுமே மனித நேயக் கோட்பாட்டைக் காணமுடிகிறது என்பதை நம் நினைவிற் கொள்ள வேண்டும்.

சங்கத்தமிழில் மனிதநேயம்

 

 

தமிழுக்கே உரிய திணை மரபுகள் அஃதாவது அகத்திணை -புறத்திணை மரபுகள் அகப்புற வாழ்வின்பெருமைகளைப்புகழ்வன.அகத்திணை மரபு இன்பக் கல்வியின் -காமத்துப் பாலின் தேவையை உணர்த்துகிறது. புறத் திணைகளோ சமூகவாழ்வில் இவனதுபண்புகளை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன. பாடாண்திணை, பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளை, படைமடம் படாக் கொடைத்திறத்தை -ஒப்புரவின் உயர்வை -ஈகையின் மாண்பை உயர்த்திப் பாராட்டும் அரிய இலக்கணமாகும்.

சாதிக்கு ஒரு நீதி சொன்ன வடமொழி தரும சாத்திரங்கள் வகுத்த நெறிகளுக்கு மாறான தாகத் திகழும் இப்பாடாண் திணையை, எந்த வருணத்திற்கும் உரியதாக ஆக்காமல், சமூகப் பொதுமையாக்கிய நுட்பம் எண்ணி மகிழத் தக்கதாகும். தமிழ்மரபிற்கு மட்டுமே உரிமையான இவ் அகப்புறத் திணைகளில் இம்மரபிற்கு மாறான சில கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்றபோதும் அவை மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகின்றன. ஒருவேளை பிற்கால வழக்காகவோ அன்றி இடைச் செருகலாகவோ கூட இருக்கலாம். ஆயினும் இம்மரபுகளின் உள்ளடக்கம் வைதிக மரபிற்கு எதிரானது என்பதுடன் மனித நேயத்தை -சமூக ஒத்திசைவை அடிப்படையாகக் கொண்டது என்பதும் தெளிவு.

சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் நீண்ட இடைவெளியைக் கடந்து முழுமையான நாத்திகத்தை தந்தை பெரியாரிடம்தான் காண முடிகிறது.

நாத்திக இலக்கியங்களில் பேசப்படும் மனித நேயம் என்பது மனித ஆற்றலை மதிப்பதுடன், மனிதனை மற்ற கடவுள் முதலான கற்பனை ஆற்றல்கள் முன்னே மண்டியிட்டுச் சரண்டையச் செய்யாமல் காப்பதுடன், பகுத்தறிவாளனாகவும் தலை நிமிரச் செய்கிறது. இதற்கு,

பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்

இறந்தவ ராய்உமை இவ்விடை இருத்திப்

பாவனை மந்திரம் பலபட உரைத்தே

உமக்கவர் புத்திரர் ஊட்டிய போது

அடுபசியால் குலைந்து ஆங்கவர் மீண்டு

கையேந்தி நிற்பது கண்டதார் ? புகலீர்

அருந்திய உண்டியால் யார்பசி கழிந்தது

என வினா தொடுக்கும் கபிலரகவல் சிறந்த சான்றாகும். மனிதநேயக் கோட்பாட்டின் நெடிய வரலாற்றில் சித்தர்களின் பங்களிப்பும் மிகுதி எனலாம். ஆயினும் வைதிக நெறிக்கும், அதன் வருணக் கோட்பாட்டிற்கும், வேள்விப் பண்பாட்டிற்கும் கடுமையான எதிர்ப்பைக் காட்டிய சித்தர் இலக்கியங்களை, நாம் உலகாய்தக் கோட்பாட்டோடு ஒப்பிட்டுக் காணமுடியவில்லை. எனவே சித்தர்களின் இலக் கியங்களை -பார்ப்பனியத்திற்கு எதிரான கலகக் குரலாக -மக்கள் குரலாகக் கருதலாமேயன்றி நாத்திக இலக்கியமாகக் கருதமுடியாது.

சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் நீண்ட இடைவெளியைக் கடந்து முழுமையான நாத்திகத்தை தந்தை பெரியாரிடம்தான் காண முடிகிறது.

இந்த நாத்திகம் என்ற சொல் ‘கடவுள் இல்லை’ என்ற கருத்துக்காக மாத்திரமல்லாமல் மற்றும் காட்சி, அனுபவம், ஆராய்ச்சி ஆகிய கருத்துக்களுக்கு எட்டாதவைகளாகிய கடவுள், ஆத்மா, மோட்சலோகம், பிதிர்லோகம், மறுமை, (மறுபிறப்பு), வேதம், அவதாரங்கள், ரிஷிகள் , முனிகள், மதசம்மந்தமான அதிசயத் தோற்றங்கள், இயற்கைக்கு மாறான உருவங்கள், கருத்துக்கள், செய்கைகள் என்று சொல்லப்படுவனவற்றை எல்லாம் ‘நம்பாமை’ என்ற கருத்துக்கும் ஏற்றி அவ்வாறு நம்பாதவன் ஒப்புக் கொள்ளாதவன், அவனையும் அந்தக் கருத்தையும் முறையே நாத்திகன் -நாத்திகம் என்று சொல்லி வருகிறார்கள் எனும் விளக்கம் நாத்திகம் என்பதன் உள்ளடக்கத்தை விரிவாக விளக்குகின்றது எனலாம்.

சாதிஉயர்வுதாழ்வுகளாலும்,இழிவுகளாலும், தீண்டாமைக் கொடுமைகளாலும், புரோகிதப் புடுங்கல்களினாலும், மனித சமூக ஒற்றுமை சிதைந்தும் , கல்வி அறிவற்றும் அதனால் அரசு வேலை வாய்ப்புகளில் இடம் பெறாமலும் பொட்டுப் பூச்சிகளாய் வாழ்ந்த ஒரு சமூகச் சூழலில்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நாத்திக -பகுத்தறிவுக் கோட்பாடுகளைப் பரப்பியது.

“இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப் படுத்து வதற்கும் மற்ற நாட்டவர்கள் போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல், மற்ற நாட்டார் களைப் போல விஞ்ஞான சாஸ்திரத்திலே (Science)முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், இம்மூடநம்பிக்கைகளும் சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும் இவைகளினால் ஏற்பட்ட கண்மூடிவழக்கங்களும் செலவுகளுமே தான் காரணம்.

ஒருவருக்கொருவர் உயர்வு -தாழ்வு கற்பித்து கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப்பதற்கும் ; மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவதற்கும் ; மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் -சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரிகள் என்பவர்களும் அவரது பாடல்களும், நெறிகளுமே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்” எனக் கூறும் பெரியாரின் கூற்றில் மனித நேயத்தைச் சிதைப்பதற்கான காரணிகள் தெளிவு படுத்தப் பட்டுள்ளன எனலாம்.

இருபதாம் நூற்றாண்டில் 1925ற்குப் பின்னர் தமிழ் இலக்கியப் போக்கில் ஒருபெருந்திருப்பம் ஏற்பட்டது.தந்தைபெரியாரால்தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமே அத்திருப்பத்திற்குக் காரணங்கள் ஆயின.பொது உடைமைச் சிந்தனையாளரான ம. சிங்காரவேலனாரின் அறிவியல் கட்டுரைகளும், கைவல்யசுவாமிகளின் சமயத் திறனாய்வும், பெரியாரின் நாத்திகக் கோட்பாட்டிற்கு வலுவூட்டின. இச்சூழலில் சென்னையில் நடந்த ‘நாத்திகர் மாநாடு’ தமிழ் எழுத்தாளர்கள் -கவிஞர்களின் சிந்தனையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

31.12.1933ல் ம. சிங்காரவேலர் தலைமையில் நடத்த நாத்திகர் மாநாட்டில், ‘நான் ஒரு நிரந்தர மானநாத்திகன்’எனஎழுதிக்கையப்பமிட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தம் உள்ளத் தில் நிகழ்ந்த மாற்றத்தை,

முப்ப தாண்டு முடியும் வரைக்கும் நான்

எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்?

கடவுள் இதோ என்று மக்கட்குக் காட்டிச்

சுடச்சுட அவனருள் துய்ப்பீர்’ என்னும்

ஆயினும் கடவுளுருவம் அனைத்தையும்

தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்

எனப் பதிவார்.

சுயமரியாதை இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் விளைவித்த மாற்றம் எத்தகையது என்பதை,

குடியேறும் ஆரிய பாதகர்கள் சூழ்ச்சியால்

கொலையுண்ட தமிழர் நெஞ்சம்

குறுநெறிச் சங்கரன் புத்த நெறி மாற்றிடக்

கொல்வித்த தமிழர் நெஞ்சும்

படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்

பார்ப்பனன் சூழ்ச்சி செய்து

படுகொலை புரிந்திட்ட பல்லாயிரங் கொண்ட

பண்புசேர் தமிழர் நெஞ்சும்

கொடிதான தம் வயிற்றுக்குகை நிரப்பிடும்

கொள்கையால் வேதநூலின்

கொடுவலையிலே சிக்கி விடுகின்ற போதெல்லாம்

கொலையுண்ட தமிழர் நெஞ்சும்

துடிதுடித்துச் சிந்தும் எண்ணங்கள் யாவுமே

தூயசுய மரியாதையாய்ச்

சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்

தூய என் அன்னை நிலமே எனப்பாடுவார்.

 

 

நாத்திகச் சிந்தனையின் பிழிவாக 9-10-1932 குடியரசில் வெளிவந்த ஒரு பாடல் அமைந்துள்ளது.

உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதிகம்

உங்கள் கடவுள் உங்கள் கோவில்

உங்கள் குருக்கள் உங்கள் ஐயர்

உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்

உங்கள் யோகம் உங்கள் யாகம்

உங்கள் சடங்குகள் உங்கள் மடங்கள்

இவைகள் இதுவரை என்ன செய்தன?

ஆயிரம் ஆண்டாய் அசைத்த தென்ன?

இலக்ஷம் ஆண்டாய் அசைத்த தென்ன?

ஓர்யுக மாக உருட்டிய தென்ன?

சதுர்யக மாகச் சாய்த்த தென்ன?

பசியால் மக்கள் பறக்கின்றாரே

நோயால் மக்கள் நொடிகின் றாரே

வாணிபம் கெட்டு வதைக்கின்றாரே

கல்வி யின்றிக் கலங்கு கின்றாரே” என்பதே

அப்பாடல்.

தமிழ்ச் சமூகத்தின் நெடிய வரலாற்றில் ஏற்பட்ட கொடுமைகளுக்கெல்லாம் ஆத்திகம். அஃதாவது பார்ப்பனியமே மூலகாரணம் என்பதை இப்பாடல் நல்ல வண்ணம் வெளிப்படுத்துகின்றது. இத்தகைய கொடுமைகளைக் களைவதே சுயமரியாதை – நாத்திகத் தத்துவம் என்பது கவிஞரின் கருத்தாகும்.

நாத்திக கோட்பாடுகளைக் தழுவி, பாடல்கள் வழியாகப் புரட்சிசெய்த புரட்சிக்கவிஞரின் அடியற்றிப்பலகவிஞர்கள்இக்கோட்பாட்டிற்கு வளம் சேர்த்தனர். அவர்களின் பாடு பொருள்களாக நாத்திகம் – மனிதநேயம் முழுமைபெற்றது. குழந்தை மணக்கொடுமை,  கைம் பெண் மறுமணம், கலப்புமணம், தீண்டாமை – சாதி ஒழிப்பு – பார்ப்பனஎதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பொது உடமைச் சமுதாயம் காணல், பகுத்தறிவு பாதையில் செல்லல் என அவர்களின் பாடுபொருள் தளங்கள் விரிந்தன. நாத்திகக் கோட்பாடுகள் கவிதைகளில் செய்த புரட்சியைப்போலவே நாடகம், சிறுகதை, புதினம் முதலான இலக்கியப் படைப்புகளிலும் உள்ளடக்கமாக அமைந்தன.

அந்த வகையில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்பு மகத்தானது. தந்தை பெரியாரின் சமூகப் புரட்சிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் அண்ணா. அடுக்குச் சொற்களைப் பயன்படுத்தி மேடைத் தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் அண்ணா, நாடகம், சிறுகதை, புதினம், புதுக்கவிதை முதலான இலக்கிய வடிவங்களிலும் தனிமுத்திரை பதித்தவர்.

அவர்தம் நாடகங்கள் எத்தன்மை கொண்டிருந்தன? அவை விளைத்த சமூகத் தாக்கங்கள் எப்படி இருந்தன? என்பது பற்றி பேராசிரியர் க. அன்பழகன், “சாதி அடியாக வளர்ந்த ஆணவம்; தீண்டாமைக் கொடுமை மடாதிபதிகளின் உல்லாச வாழ்வு; மதகுருமார் களின் ஆதிக்க வெறி; மேட்டுக் குடிகளின் சுரண்டல் முறை; தொழிலாளியின் துயரம்; சீர்திருத்த நோக்கை அயலாருக்கெனில் ஒப்புவது, தமக்கெனில் எதிர்ப்பது; பழமையான தீர்ப்புகளால் உண்மை நியாயம் உலகுக்குப் புலப்படாமை; தத்தமக்கு வரும் கேட்டிற்குப் பெண்களையே பகடைக் காயாக உருட்டுவது; சமூக அந்தஸ்து, பெரிய மனிதர் தர்பார், படா டோபம் ஆகியவற்றை காத்திடும் போலி, புரட்டு வாழ்விற்காக இழிவான செயல்களில் ஈடுபடல், முதலான பல்வேறு சமுதாய பிணிகளையும் எடுத்துக் காட்டி அவற்றின் ஊற்றுக் கண்ணாக உள்ளவர்களேதிருந்தும் சூழ்நிலைக்கு ஆளாகும் வகையைச் சித்தரிப்பன அண்ணாவின் நாடகங்கள்” என விளக்குவார்.

தன்மதிப்பு இயக்கத்தின் தொடக்ககால எழுத்தாளர்கள் மனிதநேயத்தைவளர்ப்பதிலும், பகுத்தறிவை பரப்புவதிலும், மூடநம்பிக்கையை ஒழிப்பதிலும் தங்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினர். பார்ப்பன வைதீக எதிர்ப்பு என்பதே மனித நேயத்தின் வேறொரு வடிவமே என்பதில் அவர்கள் உறுதியாக நின்றனர். தன்மதிப்பு இயக்கத்தின் மனித நேயமும் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தன.

நிமிர்வோம் மே 2017 இதழ்

You may also like...