மோடியின் செல்லாத அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்

தலைமை அமைச்சர் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இரு வாரங்கள் ஆன பின்பும் நிலைமை சீராகாமல் சாமானியர்கள் திண்டாடி தெருவில் நிற்கும் அவலம் தொடர்கிறது. இந்த நடவடிக்கையால் சாமானியர்கள் படும்பாடு வீணாகாதாம். அவர்களது தியாகங்களுக்கு பயன் இருக்குமாம். பெரும் நிலப் பிரபுக்களும் செல்வந்தர்களும் தலைமை அமைச்சர் மீது கோபமாகஇருக்கிறார்களாம்.நாட்டின்வளர்ச்சி பெருகுமாம். கள்ளப் பணம் / கறுப்புப் பணம் ஒழிவதால் ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெறுமாம். இவை யாவும் இந்த ‘செல்லாத’ அறிவிப்பினை வெளியிட்ட தலைமை அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் முன்வைக்கும் விவாதங்கள்.

இந்த விவாதங்களில் உண்மை உள்ளதா? ஏழைகள் பயன் பெறுவார்களா? பெரும் செல்வந்தர்கள் துயரப்படுவார்களா? உண்மை நிலவரம் என்ன? இன்று வெளிவந்துள்ள ஒரு அறிக்கை இந்த வாதங்களின் அடிப்படையில்லா பொய்மையை நிறுவுகிறது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் ஒரு விழுக்காட்டினரிடம்தான் நாட்டின் 58.4% செல்வம் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு கண்டடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதி சேவை நிறுவனம் கிரெடிட் சுயிஸ் (credit suisse). இந்த நிறுவனமானது கடந்த 2010 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்குமான நாடுகளின் செல்வநிலை குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான அறிக்கையின்படி, இந்திய செல்வந்தர்களில் உச்சத்தில் இருக்கும் 1% பெரும் பணக்காரர்கள் 2010ஆம் ஆண்டில் நாட்டிலிருந்த செல்வத்தில் 40 விழுக்காடு வைத்திருந்தனர். இவர்களது செல்வம் 2016இல் 58 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அதேபோல மேல்தட்டிலுள்ள 1% பணக்காரர்களின் செல்வமானது 2010இல் 68 விழுக்காட்டில் இருந்து தற்போது 2016இல் 80 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. இது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகியிருப்பதைத்தான் காட்டுகிறது. இதற்கு நேர் எதிராக நாட்டிலுள்ள சரிபாதி மக்களிடம் இருக்கும் செல்வம் நாட்டின் மொத்த செல்வத்தில் 2 விழுக்காடு மட்டுமே! இதுதான் இன்றைய இந்தியா!

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் செல்வந் தர்களின் செல்வம் பெருகும் வேகம் மட்டும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இரண்டு அணிகளுமே பெரும் பணக்காரர்களின் ஒரே பொருளாதாரக் கொள்கைகளைத்தானே செயல்படுத்துகின்றனர். மேல்தட்டிலுள்ள 1 விழுக்காட்டினரின் செல்வமானது நாட்டின் மொத்த செல்வத்தில் 2010ஆம் ஆண்டில் 40.3% ஆகவும் 2011இல் 46.8% ஆகவும் 2012இல் 48.8% ஆகவும் 2013இல் 48.7% ஆகவும் 2014இல் 49% ஆகவும் 2015இல் 53% ஆகவும் 2016இல் 58.4% ஆகவும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆக காங்கிரஸ§ம் பாஜக-வும் சண்டை போட்டுக் கொள்வதெல்லாம் செல்வந்தர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவர்களை மேலும் செல்வந்தர்களாக்கவே இவர்கள் தொடர்ந்து பாடுபடுகிறார்கள்.

அதேபோல பணக்காரர்கள் பட்டியலில் முதன்மையான இடங்களில் உள்ள 10 சதவிகிதத் தினரின் செல்வமானது நாட்டின் மொத்த செல்வத்தில் 2010இல்68.8%ஆகவும்2011இல்72.2% ஆகவும் 2012இல் 73.8% ஆகவும் 2013இல் 73.8% ஆகவும் 2014இல் 74% ஆகவும் 2015இல் 76.3% ஆகவும் 2016இல் 80.7.% ஆகவும் அதிகரித்துள்ளது.

இதனை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக புரிந்துகொள்ளலாம். இந்தியா என்ற ஊர் உள்ளது. அந்தஊரில் மொத்தம் 100 பேர்வசிக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள செல்வத்தின் மதிப்பு ரூ.1000 என கொள்வோம். அந்த செல்வம் இந்த 100 பேரிடம் எவ்வாறு பகிரப்பட்டுள்ளது? ஒரு நபர் மட்டும் பெரும்செல்வந்தர். அவரிடம் அவரிடம் ரூ.580மதிப்புள்ள செல்வம் குவிந்துள்ளது. சிறிய செல்வந்தர்கள் மேலும் ஒரு 9 பேர் உள்ளனர். பெருஞ்செல்வந்தர்களையும் சேர்த்து இந்த பத்து செல்வந்தர்களிடம் மட்டுமே ரூ.810 மதிப்புள்ள செல்வம் உள்ளது. அந்த கிராமத்தின் சரிபாதி மக்களிடம் உள்ள செல்வம் எல்லோருக்கும் சேர்த்து ரூ.20 மட்டுமே! இதுதான் இன்றைய இந்தியா! ஒருபுறம் ஒரே நபரிடம் ரூ.580. மறுபுறம் சரிபாதி மக்களிடம் உள்ள செல்வம் ரூ.20 மட்டுமே. இப்போது தெளிவாகிறதா, நம் நாட்டில்நிலவும் சமமின்மை!இந்தசமமின்மை தொடர்ந்து அதிவேகத்தில் அதிகமாவதுதான் மிகவும் கவலை கொள்ளத்தக்கதாகும்.

நம்நாடுஅதிவேகமாகவளர்வதாகமார்தட்டும் அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் ஒன்றை மூடி மறைக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் முழுவது மாக மேல் தட்டிலுள்ள ஒரு விழுக்காடு செல்வந்தர்களுக்குத்தான் சென்றிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. ‘கிரெடிட் சுயிஸ்’ புள்ளி விவரம் நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான விஷயம் பொருளாதாரம் சமநிலை பற்றியது. உலக அரங்கில் பொருளாதாரச் சமத்துவமற்ற நாடுகளில் இந்தியா முதன்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்பது தெளிவாக நிறுவப்படுகிறது.

பெரும் பணக்காரர்களின் மேல்தட்டு ஒரு சதவிகிதத்தினரின் செல்வ மதிப்பு இந்தியாவில் 58.4%,சீனாவில்43.8%,இந்தோனேசியாவில்49.3%, பிரேசிலில் 47.9%, தென்னாப்பிரிக்காவில் 41.9% என்று உள்ளது. பொருளாதாரச் சமத்துவமற்ற நாடுகளில் இந்தியா முதன்மையான நாடுகளில் ஒன்றாக திகழ்வதற்கு இதுவே சான்று. இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் (ஒரு விழுக்காட்டினர்) பொறாமைப்படும் நாடு ஒன்று உண்டெனில் அது ரஷ்யாவாகும். அந்நாட்டிலுள்ள மேல் தட்டிலுள்ள 1 விழுக்காடு செல்வந்தர்களிடம் அந்நாட்டின் செல்வத்தில் 75%விழுக்காடு உள்ளது. அந்நிலையைநம்நாட்டுசெல்வந்தர்கள்அடைய மோடியாயிருந்தாலும் மன்மோகன்சிங்காக இருந்தாலும் அதனை செய்து முடிப்பது என்பது திண்ணம். இப்போதைய ‘செல்லாத’ நோட்டு அறிவிப்புகள் எல்லாம் ஒரு மாபெரும் திரை. நமது நாட்டின் சாமான்யனும் பணக்காரன் பணமெல்லாம் செல்லாததாகி விட்டது என ‘வரவேற்கத்தக்க’ முடிவு என ‘செல்லாத’ அறிவிப்பை கொண்டாடுவதன் வாயிலாக மோடியின் திட்டமிட்டப் பயணத்தை உறுதி செய்கிறான். அவன் தெரிந்து தெளிய வேண்டியது ‘வளர்ச்சியால் அவனுக்கு கிடைத்தது என்ன? பெரும் செல்வந்தருக்கு கிடைத்தது என்ன?’ என்பதைத்தான். வெற்று கோஷங்களை அவன் அடையாளம் காண வேண்டும்.

-மின்னம்பலம் குழு தொடர்ச்சி அடுத்த இதழில்…

நிமிர் ஜனவரி 2017 இதழ்

You may also like...