நான் படித்த சில பக்கங்கள் மட்டும் -சாக்கோட்டைஇளங்கோவன்.

(நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர் நிகழ்த்திய சிறப்புமிக்க பேருரையிலிருந்து சில பகுதிகள்)

 

கடவுள் என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டித் தம் வஞ்சக சூழ்ச்சிகளில் வெற்றி கண்ட ஆரியர்கள், தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டித் தாம் உயர்ந்தவர் என்றும், திராவிடர்களின் கருப்பு நிறத்தைக் காட்டி அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன் தான் ‘பார்ப்பனர்’ என்றும் கடவுளின் தோளிலிருந்து பிளந்து கொண்டு வெளிவந்தவன் தான் ‘சத்திரியன்’ என்றும் கடவுளின் வயிற்றிலிருந்து வெடித்து வெளிவந்தவன் தான் ‘வைசியன்’ என்றும் கடவுளின் காலிலிருந்து பிளந்து வெளிவந்தவன் தான் சூத்திரன் என்றும் கூறித் திராவிட அப்பாவிகள் பலரையும் நம்பவைத்தனர்.

”நான் 30 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்திலும் இங்கும் மருத்துவப் பணிசெய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியாக உடலின் பல பகுதிகளில் பிள்ளைப் பேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. (சிரிப்பு)

ஆனால் ஆரியக் கடவுளின் உடல் அமைப்பே அலாதியாகத் தான் இருக்கும் போலிருக்கிறது. (சிரிப்பு,கைதட்டல்)

இவ்வாறு கடவுளின் மேற்பகுதி உறுப்புகளிலிருந்து மகப்பேறு பெற்று வெளிவந்த ஆரியர்கள் தங்களுக்கே நாடு, வீடு, தோட்டம், துரவு, காடு, கழனி, பணம், காசு எல்லாம் சொந்தம் என்று ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். நாலாம் சாதியான சூத்திரர்களும், ஐந்தாம் சாதியான பஞ்சமர்களும் கல்வி, சொத்துரிமை போன்றவற்றில் எந்த ஒரு உரிமையும் கொண்டாட முடியாது; கொண்டாடக் கூடாது என்று ஆக்கிவிட்டனர். இவையெல்லாம் ஒவ்வொருவரின் முன்பிறப்பில் செய்த பாவ புண்ணியங் களின் அடிப்படையில் ஏற்பட்டவையாகும் என்று ஆரிய தெய்வீக சட்டதிட்டங்கள் கூறுகின்றன. இதற்குத் ‘தலைவிதி’ என்றும் அவர்கள் பெயர் வைத்துவிட்டார்கள்.

இதையெல்லாம் நம்பி நடப்பவனுக்குத்தான் இறப்பிற்குப் பின் மோட்சம் கிடைக்கும் என்றும் நம்பாதவன் இறப்பிற்குப் பின் நரகத்தில் சித்ரவதைச் செய்யப்படுவான் என்றும் சொல்லிவைத்தார்கள்.

இத்தகைய கடவுள் திட்டத்திற்கு வருணாசிரமதருமம் என்று பெயர். இவ்வாறு அந்நிய ஆரிய வஞ்சகர்கள் கூறி அப்பாவித் திராவிடர்களைப் பல்வேறு வகையிலும் அடிமைப் படுத்தி வந்தனர். ஆரிய சூழ்ச்சிகளை, விழிப்புணர்ச்சி கொண்ட திராவிடர்கள் அவ்வப்போது அய்யப்பாடு அடைந்து ஆரியக்கூட்டத்தினரை எதிர்த்துப் போராடியதும் உண்டு. ஆரியர்கள் சாம-பேத-தண்டமெனும் ஆரிய சதுர்வத (நாலு வகை) உபாயங்கள் மூலம் திராவிடரின் ஒற்றுமையைப் பல வகைகளிலும் குலைக்கச் செய்தனர்.

 

 

ஆரியர்கள், திராவிடர்களிலேயே சிலர்க்கு மட்டும் சாதி உயர்வுப் பட்டம் அளித்து மற்றவர்களை வேறுபடுத்தி தாழ்த்திவைக்க முற்பட்டனர். எடுத்துக்காட்டாக நம் தலைவர் பி.தியாகராய செட்டியார் இனமான நெசவாளத் திராவிடர்களைத் ”தேவாங்கப் பிராமணர் ” என்று சொல்லி சாதி உயர்வு பட்டம் அளித்தனர்.

ஆரியர்கள் திராவிட வேளான் பெருங்குடி மக்களை ”வன்னியர் குல சத்திரியர்” நாயுடு ரெட்டியார்மார்களை ‘ கௌரவ சத்திரியர்’ என்றும் திராவிட கோமுட்டிகளை ‘ஆரிய வைசியர்’ என்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களை ‘ தன வைசியர் ‘ என்றும் பொற் கொல்லர்களை ‘விசுவகர்ம பிராமணர்’ என்றும் வட நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களான குற்றவேல் புரிபவர்களைப் ‘பூமிஹார் பிராமணர்’ என்றும் விவசாயிகளை ‘குர்மி சத்திரியர்’ என்றும் வீரர்களை ‘இராஜபுத்திர சத்திரியர்’ என்றும் பலவாறாகப் பெயர்களை சூட்டி திராவிடர்களின் கோட்டைக்குள்ளே குத்துவெட்டு, போட்டா போட்டி,பொறாமை, பொச்சரிப்பு போன்ற குழப்பங்களை ஏற்படுத்தினர்.

திராவிடரில் பலர்க்குப் பெயரளவில் ஆரிய வர்ணாச்சிரம உயர்சாதி பட்டங்கள் கிடைக்கப் பெற்றனவேயன்றி நடைமுறையில் சங்கராச்சாரியார் பீடத்தில் அமரவோ கோவில் அர்ச்சகர்களாக ஆகவோ ஆரியச் சடங்குகள் செய்யும் புரோகிதர்களாக மாறவோ அவர்களுக்கு உரிமை அறவே வழங்கப்படவில்லை.

தேவாங்கப் பிராமணரான ‘‘நம் தலைவர் திரு .பிட்டி . தியாகராய வள்ளல் அவர்கள். அப்படிப்பட்ட இடங்களில் அமரவேண்டுமென்று ஆசைப்படுகிறவரேயானால் இராமாயணத்தில் கண்டுள்ளபடி தவம் செய்த பாவத்திற்காக இராமனால் தலையிழந்த சூத்திரனான சம்பூகன் கதிதான் இவருக்கும் ஏற்படும். (சிரிப்பு, ஆரவாரம், கைதட்டல்)

 

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு இணங்க ஆரியர்களால் எவ்வளவு புரட்டுகளும் பித்தலாட்டங்களும் நடைபெற்றாலும் இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும் உங்களை ‘திராவிடர்கள்’ என்று அழைத்து கொள்வதில் பூரிப்பும் பெருமையும் கொண்டிருக்கிறீர்கள்.

வீரத் திராவிடர்களே! (பெருத்த மகிழ்ச்சி கூச்சல்) என்னையே எடுத்து கொள்ளுங்களேன். இலண்டனிலும்,சென்னையிலும் எல்லோரும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லு கிறார்கள். நான் ஒரு எம்.டி பட்டதாரி எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. எனக்கு ஆகும் செலவு போக என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம் எனதருமை தலைவர் திரு. பிட்டி. தியாகராயர் அவர்களைப் போன்று, உங்களை போன்ற திராவிட மக்களை தட்டியெழுப்பும் நீதிகட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமையடைகிறேன்! (வாழ்த்தொலி முழக்கங்கள்) இவ்வாறெல்லாம் இருந்தும் என் பிறந்த இடமான கேரளத்தில் …நானோர் ‘சூத்திரன்’ தானே! (வெட்கம்; வெட்கம்!) இத்தகைய இந்துமத சாதி அக்கிரமங்களை, எந்தப் பார்ப்பன லோக குருவாவது அல்லது ‘லோக்கல்’ குருவாவது கண்டிக்க முன்வருகிறானா?

இந்த மூஞ்சுகளுக்குத் தான் தனி ஆட்சி நடத்த தன்னாட்சி அரசு வேண்டுமாம்! இன்னும் கேளுங்கள் ‘நசூத்ராய மதிம்தத்யா’ என்பது மற்றோர் சுலோகம் அதன் பொருள் என்னவென்றால் ” சூத்திரன் படிக்கக் கூடாது” என்பதாகும். “அப்படியானல் நீ எப்படிப் படித்தாய்? ” என்று கேட்பீர்களேயானால் , இந்தச் சண்டாளப் பூனைக் கண்ணன் , ‘செம்பட்டை மயிரன், ஆன வெள்ளைக்காரனுடைய “யூனியன் ஜாக்கொடி” அல்லவா பறக்கிறது நாட்டில். அதன் தயவால் படித்தேன்; முன்னேறினேன் (கைதட்டல்) அசல்’ ஆரிய இந்து தருமம்’ ஆட்சி நடக்குமானால் இங்குக் காவிக் கொடிதான் பறக்கும் என்ற நிலை இருக்குமானால், இராமராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்குமேயானால், அவ்வளவு தான்! ‘சூத்திர சம்பூகன்’ கதிதான் எனக்கும், என் தலைவர் திரு.பிட்டிதியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்! (இந்துமதம் ஒழிக முழக்கம்) இவ்வளவிற்கும் நீங்கள் எல்லோரும் மதிக்கும் என்னை, எங்கள் கேரள நாட்டு ‘நம்பூதிரிப் பார்ப்பான்’ “ஏடா நாயர்” என்று சர்வ சாதாரணமாகக் கேவலமாக அழைக்கக் கூடிய சாதிக் கர்வம் படைத்திருக்கிறான்!

 

உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர். சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, ஒரு நம்பூதிரிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி “எடா சங்கரா! நீ உயர்நீதிமன்ற நீதிபதியாயிட்டியாமேடா?” என்று கேட்டானாம்.

“ஆமாம் சாமி! எல்லாம் உங்கள் கடாட்சம் தான்”, என்று கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கை கட்டி வாய் பொத்திநின்றாராம். அவர், கேரளாவில் மரியாதைகளும், அவமரியாதைகளும் எப்படிப் படாதபாடுபடுகின்றன பாரத்தீர்களா? (வெட்கம்! வெட்கம்!) இந்து மதப் புராணக் கதைகளில், காலாகாலத்தில் , பெரிய மனிதர்களாகியிருப்பதாகக் கூறப்படுகின்றதே அல்லாமல் ஒரு சூத்திரனுக்கும், ஒரு பாப்பாத்திக்கும் பிறந்த பெரிய மனிதனின் கதை ஏதாவது மருத்துக்காவது உண்டா?… ஏன் அப்படி? சூத்திரனுக்கும், பாப்பாத்திக்கும் புராணக் காலங்களில், காதலோ அல்லது திருட்டுக் காதலோ ஏற்பட்டிருக்கிறதா? இல்லையே ! (சிரிப்பு) இந்து தரும ஆட்சிகளெல்லாம், ஒருவாறு ஒழிந்து, முகமதியர், டச்சுக்காரர், போர்ச்சுக்கிசியர், பிரெஞ் சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் தான், நம்மவர்களில் ஒரு சிலர் மட்டும் படிக்க முடிந்தது; சொத்துரிமையும் பெற முடிந்தது.

இப்பொழுது பார்த்தாலும் வெள்ளை யனுக்கு அடுத்தபடி பெரிய பெரிய பதவிகளில் பார்ப்பனர்களே அமர்ந்துள்ளனர். நம்மவர் களோ அடிமட்டத்தில் எடுபிடிகளாக இருந்து, சேவகம் செய்து வருகிறார்கள். இந்நாட்டில் ஆரியர்களாக இருக்கும் பார்ப் பனர்கள், காலணா கொடுத்துப் பூணூலை வாங்கி மாட்டிக் கொண்டு, இங்குள்ள திராவிடர் களையெல்லாம் ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்களாக இருந்து வரு கின்றனர்! (சிரிப்பு ! கையலி!) எல்லா வகுப்பு மக்களுக்கும் வாழ்க்கையில் சம வாய்ப்பும் சமவசதியும், ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு வற்புறுத்தப்பட்டு வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை அரசின் அனைத்துத் துறைகளிலும் கையாள வேண்டும். என்பதைத் தான், நமது நீதிக்கட்சி உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

 

இந்தக்குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே, இங்கிலாந்திலும் கூட்டம் போட்டு பேசியும், எழுதியும் வருவதற்காகத் தான், நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்துக்குச் சென்று வருகிறேன். நான் இங்கிலாந்தில் வெள்ளையர்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது, போலித் தன்னாட்சி (home rule) இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பார்ப்பனப் பெருந்தலைவர்களின் சித்தாந்தம், வேதாந்தம் எல்லாம் எப்படிப்பட்டன என்பதை விளக்கிக் கூறினேன். அப்பொழுது ஆங்கில நாட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்த ‘லார்டு சிடன் ஹேம்’ என்பவர் குறுக்கிட்டு ஒரு கேள்வியைக் கேட்டார்.

“இந்திய வைஸ்ராய் ஆலோசனை சபையில், கல்வித்துறை உறுப்பினராக இருக்கிறாரே, சர். பி. என். சர்மா அவர்கள் ஒரு பார்ப்பனரல்லாதார்தானே?” என்று கேட்டார். நான் உடனே, ” பம்பாயத் துறைமுகத்தில் நான், கப்பல் ஏறுகின்ற வரையில், சர்.பி.என். சர்மா அவர்கள் ஒரு பார்ப்பனராகத் தான் இருந்தார்” என்றேன்.

(படித்தவைகளும் படிக்கவேண்டியவைகளும்இன்னும் இருக்கின்றன…)

(டாக்டர்.டி.எம்.நாயர் 1917-ம் ஆண்டில் பேசிய சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங்சாலை உரையின் பக்கங்கள் சில…)

 

நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்

You may also like...