நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனிச் சட்டம் வரவேண்டும்

பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட மக்களை உள்ளடக்கிய இந்திய உபகண்டத்தில் “தேசம்“ என்ற ஒன்றே இன்னும் முழுமையாக முகிழ்த்திடவில்லை. குவித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற அதிகாரங்கள் மக்கள் வரிப் பணத்தில் பெரும் தொகையை விழுங்கிக் கொண்டிருக்கிற ‘ராணுவக்’ கட்டமைப்புகளைக் கொண்டு “இந்தியா” என்ற நாடு – உலக அரங்கில் தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. இதுவே உண்மை. தங்களது சமூக, பண்பாடாக பார்ப்பனர்களின் பாரம்பரியப் பண்பாட்டை திணிக்கவும், அவர்கள் மேலாதிக்கத்துக்கான பொருளியல், அரசியல், கொள்கைகளை உருவாக்குவதற்கும்தான். “இந்தியா” என்ற கட்டமைக்கப்பட்ட தேசம் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மக்களின் வாழ்வுரிமை, தனித்துவம், சமூக சமத்துவங்களை அங்கீகரிப்பதற்காக அல்ல. குறிப்பாக -பார்ப்பனிய ஒடுக்கு முறை பண்பாட்டிலிருந்து முற்றிலும் முரண்பட்ட தமிழ்நாடு “சுதந்திரம்’’ பெற்றதாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது. கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் “சூத்திரர்கள்” என்ற மனுதர்மம் திணிக்கும் இழிவை அசைக்கவே முடியவில்லை.

இந்திமொழித் திணிப்பு ஒரு பக்கம். தமிழகத்தில் தனித்துவ மான சமூகநீதிக் கொள்கைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் மறுபக்கம். தமிழ்நாட்டிலிருந்து வரியாக வாரிச் சுருட்டும் நடுவண் அரசு தமிழ்நாட்டுக்கு உரிய ஒதுக்கீடுகளை வழங்க மறுப்பதுடன். உணவு உரிமைகளிலும் குறுக்கிட்டு, தமிழகத்தை ஒற்றைப் பண்பாட்டு வளையத்துக்குள் முடக்கிப் போடத் துடிக்கிறது. இந்தச் சூழலில் தான் தமிழர்கள் தமிழ்நாட்டுக்காக தனி அரசியல்சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமைப் போராட்டத்தை தொடங்கிட வேண்டும் என்ற திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஜுன் 04, 2017ல் சென்னையில்நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவோடு தமிழ்நாடு இணைந்திருக்க இதுவே நிபந்தனையாக இருக்க வேண்டும் என்பதே தீர்மானம் வலியுறுத்தும் கருத்து.

இந்தியைத் திணிக்காதே என்று நடுவண் அரசிடம் மன்றாடுவதை கைவிட்டு அதற்கு வழிவகுக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை சட்டத்திலிருந்தே நீக்கக்கோரி போராட வேண்டும் என்று மாநாட்டில் பேசிய – முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தியதையும் இந்தக் கோரிக்கையுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். மாநிலங்களுக்கு தனித்தனி சட்டங்கள். தனி நீதிமன்றங்கள், முழு இறையாண்மை கொண்ட நாடாளுமன்றம், தனித்த கொடி என்ற அடையாளங்களோடு இந்தியாவை கூட்டாட்சி அமைப்பாக மாற்றி அமைக்கும் வரலாற்றுத் தேவை உருவாகியிருக்கிறது. பெரியார் முன் வைத்த தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற இலட்சிய முழக்கம் நமக்கு முழு உடன்பாடானது என்றாலும் இன்றைய சர்வதேச அரசியல் நிலையில் அதற்கு மாற்றான ஒரு தீர்வை நாம் முன்வைக்க வேண்டியநிலையில்இருக்கிறோம். இந்தக் கோரிக்கையை “தேச விரோத” கோரிக்கை என்றோ, “பிரிவினை முழக்கம்“ என்றோ, இந்திய தேசியத்தால் பயனடையும் பார்ப்பனியமும், போலி தேசியமும் கூப்பாடு போடுவதில் பயனில்லை.

 

நாகலாந்து மாநிலத்தில் கடந்த 37 ஆண்டுகளாக தனிநாடு கேட்டு ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில் (முய்வா) உள்ளிட்ட குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தன. நடுவண் காங்கிரஸ் ஆட்சி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. கடந்த 17 ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் நடுவண் ஆட்சி “தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து” (முய்வா அமைப்பின் பிரதி-நிதிகளுடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத் திட்டுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு சூட்டியுள்ள அரசியல் பெயர் “இறையாண்மைப் பகிர்வு” (Shared sovereignty ) என்பதாகும். இதன்படி, உடன்பாட்டின் அம்சங்களைநடுவண் அரசு அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது. ஆனாலும் போராளி குழுக்கள் தெளிவுப்படுத்திவிட்டன. நாகாலாந்துக்கு தனி அரசியல்சட்டம்,தனிநாடாளுமன்றம்,தனிநீதிமன்றம், தனிக்கொடி வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு. “தனித்துவமான நாகாலாந்து மக்களின் வரலாறு மற்றும் பண்பாட்டை” இந்தியா அங்கீகரிக்கிறது என்று ஒப்பந்தம் கூறுகிறது. இந்தியாவோடு நாகாலாந்து இணைந்திருக்க இந்த நிபந்தனையை மோடி ஆட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது.

நாகாலாந்து முதல்வர் நாகாலாந்துக்கு கிடைத்துள்ள இந்த இறையாண்மையை அனைத்து போராளிக் குழுக்களுக்கும் ஏற்க அழைப்பு விடுத்துள்ளதோடு நமது தலைமுறையோடு இந்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டு நமது அடுத்த தலைமுறையினரை சர்வதேசசமூகத்தோடு இணைந்து முன்னேறுவதற்கு வழி அமைத்துத் தருவோம் என்று அறைகூவல் விடுத்துள்ளார். இந்தியாவில்ஒற்றை இறையாண்மை நீண்ட காலம் உயிர் பெற்றிருக்க முடியாது. பகிர்ந்து கொள்ளும் இறையாண்மைக் கோட்பாட்டை நாகாலாந்து பிரச்சனையில் ஏற்றுக் கொண்டுள்ள கட்டாயத்துக்குதள்ளப்பட்டமோடிஆட்சி“தமிழகத் துக்கு தனிச் சட்டம்“ என்ற கோரிக்கையை ஏற்க ஏன் முன்வரக் கூடாது என்ற கேள்வியை உரத்து எழுப்ப வேண்டும்.. இந்த திசையில் இலக்கு நோக்கிய அணி திரட்டலும்,மக்கள்இயக்கங்களுக்கும்,விவாதங்களும் தொடங்குவதற்கு இது சரியான நேரம்.

நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்

You may also like...