தமிழ்நாடு கண்ட இந்தி எதிர்ப்புக் களங்கள் – புலவர் செந்தாழை ந கவுதமன்
தேளுக்கு அதிகாரம் சேர்ந்து விட்டால் தன் கொடுக்கால் வேளைக்கு வேளை விளையாடும் என் தமிழா! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
உரிமைத் தொடக்கம்:
மொழி உரிமைப் போராட்டத்தில் முன்னோடி யாகத் திகழ்வது தமிழ்நாடு! பிற மாநிலங்கள் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டும் நிலை இப்போது வந்துவிட்டது. பள்ளிக் கல்வியில் கூட, தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருகிறது தமிழகம். கேரளமும், மேற்குவங்கமும் பள்ளிக்கல்வியில் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக்கி விட்டன. அதற்கான சட்டத்தையும் அண்மையில் பிறப்பித்து விட்டன. இதற்கு எதிரான திசையில் இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது நடுவண் அரசு! பள்ளிகளில் இனி இந்தி கட்டாயப் பாடமாம். அரசுத்துறைச் செயல்பாடுகள் அனைத்தும் இனி இந்தியிலேயே இருக்குமாம். நாடாளுமன்ற நடை முறைகளிலும் இனி இந்திக்குத் தான் முதல் இடமாம். வெறி பிடித்ததுபோல் இந்தித் திணிப்பு அறிவிப்புகளை வீசியபடி உள்ளது நடுவண் (பா.ச.க)அரசு!ஆதிக்கம் கிடைத்து விட்ட மமதை உள்ளவர்கள் திணிப்பார்கள். உரிமையை ஒப் படைக்காத மானம் உள்ளவர்கள் எதிர்ப்பார்கள்.
திணிக்கப்படும் எதுவும் எதிர்க்கப்பட்டே தீரும் என்பது உரிமையுணர்வின் அரிச்சுவடி. தமிழகத்தின் தனித்தன்மை உரிமைக்காக தொடர்ந்து போராடிச் சாதனை முத்திரைகளைப் பதித்திருப்பது தமிழினம். தமிழ்நாட்டின் தனித் தன்மையான வரலாற்றை நினைவூட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.
திருமணத்தில் வடமொழியையும் புரோகி தரையும் சட்டப்படி வெளியேற்றியது தமிழகம்! தன்மான தமிழ்த் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்பது தமிழ்நாட்டின் தனித்தன்மை. இந்தியத் துணைக்கண்டத்தின் எந்த மாநிலத்திலும் தன்மான பகுத்தறிவுத் திருமணத்திற்கு இன்றுவரை சட்ட ஏற்பு கிடையாது தமிழ் நாட்டைத் தவிர !
வடமொழி எதிர்ப்பா? வடவர் எதிர்ப்பா? சாமியார் எதிர்ப்பா? சங்கராச்சாரி எதிர்ப்பா?இராமாயணஎதிர்ப்பா?பகவத் கீதை எதிர்ப்பா? இந்தி எதிர்ப்பா? இந்தியா திரும்பிப் பார்ப்பது தமிழ்நாட்டைத் தான்! ஒடுக்குமுறைக்கான முதல் எதிர்ப்புக் குரல் எழும் இடமாக இன்றும் இருப்பது தமிழகமே!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உரிமையைப் பறிக்கவும் கல்வித்துறையைச் சீரழிக்கவும் அண்மையில் நடுவணரசு நுழைத்ததே‘நீட்’மருத்துவநுழைவுத்தேர்வு . அதற்கான எதிர்ப்பும் போராட்டமும் முதலில் வெடித்துக் கிளம்பியது தமிழகத்தில் தான்!
‘இலவசம்’ எனும் தூண்டில் போட்டு, ‘இந்தி’ சுருக்குக் கயிறோடு அலையும் ‘நவோதயா பள்ளிகள்‘ கால் வைக்க முடியாதது தமிழகம் மட்டும்தான்! இப்போது நுழைய துடிக்கிறது.
தேநீர் பருகுவதற்குக் கூட இந்துச் சாயா, முசுலீம் சாயா என மக்களை வேறுபாட்டு நெருப்பு வளையத்தில் நிற்க வைத்திருப்பது வடநாடு! வழிபாட்டில் மத வேறுபாடு கருதாமல், வேளாங்கண்ணி, பூண்டி என கிறுத்துவக் கோவில்களுக்கும், நாகூர், ஏர்வாடி என முசுலீம் கோவில்களுக்கும் மக்கள் சென்றுவரும் மத நல்லிணக்கம் வாழுமிடம் தமிழ்நாடு.
தமிழா? தமிழரா?
தமிழ்நாட்டின் தனித்தன்மையை அழிக்கும் முயற்சியே மொழித் திணிப்பு! தமிழரைத் தாழ்த்த நினைக்கும் எவரும் முதலில் தமிழைத் தாழ்த் துவதே வழக்கம். தமிழைத் தாழ்த்துவதற்காக முதலில் வடமொழியைத் திணித்தார்கள். வட மொழியைத் திணிக்கும் முயற்சி கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது.
“தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்
அருச்சனை பாட்டே ஆகும்”
என வடமொழிக்கெதிரான தமிழ்க்குரலை எழுப்பியது பக்தி இயக்கம். வட மொழியோடு வேத, வருணாசிரம எதிர்ப்பையும் இணைத்து முழங்கியது அப்பர் குரல். அதனை வழி மொழிவோராகத் தாயுமானவர், வள்ளலார், அத்திப் பாக்கம் வேங்கடசாமி, அயோத்திதாசர் என எழுச்சித் தமிழர் வரிசை நீண்டது.
“வடமொழிப் புகுந்திடும் தமிழ்வாய்- எதிர்
வரக்காணின் காறிநீ உமிழ்வாய்!”
என திராவிடர் இயக்கத்தின் இலக்கியக் குரலாய் எழுந்த பாவேந்தர், வடமொழி எதிர்ப் பின் உச்சம் தொடுவது போல் முழங்கினார். வடமொழி எதிர்ப்பின் அனல்வீச்சுக்கு அஞ் சிய ஆதிக்க வெறியர்கள், ‘நவீன சமற்கிருத’மான இந்தியைத் திணிக்கும் புது முயற்சியை 1938 இல் தொடங்கினார்கள். இராசாசி எனும் சி.இராசகோபாலாச்சாரியார் அந்தத் ‘திருப் பணி’க்கு முதல்வர் ஆனார். இந்தித்கும், வடமொழிக் (சமஸ்கிருதத்திற்)கும் ஆதரவான மனநிலையைத்தமிழரிடம் உருவாக்கிவிட்டால், வடவர் வல்லாண்மையும் (ஆதிக்கமும்), ஆரியப் பண்பாடும் தமிழினத்தை அடிமைப் படுத்துவது எளிதாகிவிடும். அதனால்தான் தொடர்ச்சியான இந்தித் திணிப்பு முயற்சி. ஒருவொருக்கொருவர் ‘ஜீ’ என அழைத்துக் கொள்வதும், வணக்கத்தை ‘நமஸ்காரம்’ ஆக்குவதும், சோற்றைச் ‘சாதம்’ ஆக்குவதும், ‘திரு’வை ‘ஸ்ரீ’ ஆக்குவதும், வடமொழிப் பெயர்களைச் சூட்டித் தமிழர்கள் தலையைத் தடவுவதும் இந்த நோக்கத்தில்தான்!
அந்நிய மொழிக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கிக்கொண்ட இனத்தை, எளிதாக அடிமைப்படுத்தமுடியும்.அடுத்தவர்மொழியை சார்ந்து வாழப் பழகியோர், ‘என் மொழி’, ‘என் நாடு’ என்னும் அக்கறையை இழந்துவிடுவது உறுதி. மொழியைக் காப்பாற்றும் உணர்வு, எங்கே இருக்கிறதோ, அங்கே இனத்தைக் காப்பற்றும் அக்கறை இருக்கும்; இனம் வாழும் நாட்டைக்காப்பற்றும்துடிப்புஇருக்கும்.மொழித் திணிப்பை எதிர்க்கின்ற உணர்வும் உறுதியும், தொலைநோக்குள்ள சிந்தனையில் பிறந்தவை. தமிழினத்தின் வாழ்வைக் காப்பதற்காக தங்கள் வாழ்வை இழந்த தமிழர் எத்தனை எத்தனைப் பேர்! உரிமை வாழ்வைக் காப்பதற்காக உயிரை இழக்கத் துணிந்த மாவீரர்கள் வரலாற்றை மறக்கக்கூடாது.
தொடரும் மொழிப்போர்
இந்தித் திணிப்பை எதிர்த்து நான்கு மொழிப் போர்களைநடத்தியுள்ளதுதமிழ்நாடு.வழிகாட்டும் மொழிப்போர் வரலாறு, இளைய தலைமுறையின் நினைவில் ஏற்றப்பட வேண்டும்.
1938-1940: முதல் மொழிப்போர் 1948-1950: இரண்டாம் மொழிப்போர் 1965-இல் ஐம்பது நாள்கள் மூன்றாவது
மொழிப்போர் 1986-இல் 144 நாள்கள் நான்காவது மொழிப்போர்
முதல்மொழிப்போரின்வெற்றியாகக்கட்டாய இந்திக் கல்வி ஒழிக்கப்பட்ட நாள் (1940)பிப்ரவரி
- இன்று அந்த நாள் உலகத் தாய்மொழி நாளாக உலகம்முழுவதும்கொண்டாடப்பட்டுவருகிறது. உலகத் தாய்மொழி நாளுக்கும், இந்தி எதிர்ப்புப் போருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பை நினைவூட்டமறந்தவர்களாகநாம் இருக்கிறோம். தமிழ்நாடு கண்ட முதல் தமிழ்தேசிய போர், 1938 மொழிப்போர். ‘தமிழ்த்தேசிய தந்தை பெரியார் என்பதையும், தமிழ்த்தேசிய பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் என்பதையும், தமிழ்ப் பெரும் பேச்சாளர் அறிஞர் அண்ணா’ என்பதையும் அடையாளம் காட்டியது 1938-இல் எழுந்த முதல் மொழிப்போர்!
சூடுபட்டுச் சுருண்ட இந்தி வால், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நீண்டது. பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம் என 02.05.1950இல்மீண்டும் காங்கிரஸ் ஆட்சிஆணை யிட்டது. பெரியார்படையின்எதிர்ப்பு வெப்பம் தணியவில்லை என்று அறிந்ததும், கையை உதறி இந்தியைக் கை கழுவியது காங்கிரஸ் ஆட்சி. பெரியார் படையின் சீற்றம் தணியாதது கண்டு, இந்தியக் குடியரசுத் தலைவரும், இந்தியத் தலைமை அமைச்சரும் (பிரதமரும்) சேர்ந்து ‘இந்திதிணிக்கப்படமாட்டாது’எனஅறிவிக்கும் நிலை உருவானது. பிரிட்டிஷ் இந்தியாவில் (1938-இல்) நடந்த முதல் மொழிப்போரும், அரசியல்“விடுதலை” பெற்ற இந்தியாவில் (1950 இல்) நடந்த இரண்டாம் மொழிப்போரும் ‘இந்தியைக் கட்டாயப் பாடம்’ என்பதை எதிர்த்து நடந்த போர்கள்! வெற்றி பெற்ற போர்கள்!
1965ல் நடந்தது என்ன?
மூன்றாம் மொழிப்போராக 1965-இல் நடந்தது. இந்தி ஆட்சி மொழியாக்கத்தை எதிர்த்து நடந்த (வேறுபட்ட) போர்! இந்தியாவின் ஆட்சிமொழியாக26.01.1965ஆம்நாளிலிருந்துஇந்தி மட்டுமே இருக்கும் என்கிறது அரசியலமைப்புச் சட்டத்தின் 343-ஆவது விதி! அந்த விதியை திருத்த வலியுறுத்தி நடந்தது மூன்றாம் மொழிப் போர். அந்த மொழிப்போரில்தான் முதன்முதல் இராணுவம் நுழைந்தது. முதன்முதல் துப்பாக்கிச் சூடு நடந்தது.
குவியல் குவியலாய் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் முதன்முதல் நடந்தது. மொழிக்காகத் தீக்குளித்த ஆறாத் துயரத்தை, உலகம் முதன்முதலாகப் பார்த்தது 1965 மொழிப்போரில்! உலக வரலாற்றில் மொழிக்காகத் தீக்குளித்த முதல் மனிதன் எனும் அழியாப் பெயரை திருச்சி (கீழப்பழுவூர்) சின்னசாமி பெற்றார். உள்நாட்டுப் போர் என அச்சம்மேலிடும்சூழலில்தமிழ்நாடுபதினெட்டு நாள்கள் செயலிழந்து நின்றது.
முந்நூறு பேருக்கு மேல் உயிரிழந்த கொடுமை நடந்தது. பொள்ளாச்சி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் எண்ணிக்கை மிக அதிகம். ஊர், பேர், முகவரி எதுவும் அறிவிக்கப்படாமல் உடல்கள் மதுக்கரை இராணுவ மைதானத்தில் புதைக்கப் பட்ட செய்தி கோவையைக் குலுக்கியது. இந்திய ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி ஒத்தி வைக்கப்பட்டது 1965 மொழிப்போர். உயிரைஇழந்துநடத்திய போராட்டம் தந்ததோ, உயிரில்லாத ஒரு திருத்தத்தை மட்டுமே! ஆட்சிமொழிச் சட்டம் மூன்றாண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டதுமட்டுமேகண்டபலன். (இந்தி எதிர்ப்பு என்ற இலக்கு தமிழக அரசியல் மாற்றத்துக்கான இலக்காகவும் மடை மாற்ற மானது இந்த போராட்டம்-ஆர்)
தொடரும் சரிவு
‘ஆட்சிமொழி’என்னும்ஒற்றைச்சொல்விரிந்த பொருளுடையது. பயிற்றுமொழி, தேர்வுமொழி, அலுவல்மொழி, தொடர்புமொழிஇந்தநான்கும் அடங்கிய சொல் ‘ஆட்சிமொழி’ ‘இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக ஆட்சி மொழியாக நடுவணரசால் பயன்படுத்தப்படும்’ எனும் திருத்தச்சட்டம் 1968-இல் (மொழிப்போர் நடந்து 3 ஆண்டுக்குப் பின்னர்) கண்துடைப்பு வாசகமாக சேர்க்கப்பட்டது. நடுவணரசிடம் இருப்பது 97க்கு மேற்பட்ட துறைகளுக்கான அதிகாரம்.
திருத்தச்சட்டம் சொல்கிறது “இந்தியுடன் ஆங்கிலம் நடுவண் அரசின் 16 துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்” நூற்றுக்கணக் கானோர்உயிரிழந்து போராடியது, உயிரில்லாத திருத்தச்சட்டத்தை பெறுவதற்காகவா? இந்தி யாவின்ஆட்சிமொழிவிதிகளில்‘தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு ‘ தரப்பட்டது. இதனை உள்துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. “They shall extend to the whole of india, except the state of Tamilnadu ” இதே சட்டத்தில் தொடர்ந்து 1987, 2007, 2011-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டுக்கு தந்த விதி விலக்கை ஓசையில்லாமல் கடந்த 2007 ஆம் ஆண்டு நீக்கி விட்டார்கள். தமிழகம் போராடிப் பெற்ற உரிமைகள் கூட பறிக்கப்பட்டுவிட்டன. (விதிவிலக்கு நீக்கப்படவில்லை. சட்டப்படி தொடருகிறது என்ற கருத்தும்சில சட்டநிபுணர் களால் முன்வைக்கப்படுகிறது)
இப்போதுள்ள ஆட்சி மொழிச்சட்டம் இந்தியத் துணைக் கண்டத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளது.
முதல் (ஏ பிரிவு) மண்டலம் :
பீகார், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், உத்திர காண்டு, இராசத்தான், நேரடி ஆட்சிப் பகுதிகளான தில்லி, அந்தமான் நிகோபார் தீவுகள். (இந்தி பேசும் மாநிலங்களாக இவை வரையறுக்கப் பட்டுள்ளன)
இரண்டாம் (பி பிரிவு) மண்டலம்:
குசராத்து, மாகாராட்டிரம், பஞ்சாபு, நேரடி ஆட்சிப் பகுதிகளான தாத்திரா, சண்டிகார், நாகர்கேவலி
மூன்றாம் (சி பிரிவு) மண்டலம்:
மேற்குறித்த இரண்டு மண்டலங்களிலும் இடம்பெறாத மாநிலங்கள். சி பிரிவான மூன்றாம் பிரிவுக்கு மட்டுமே இந்தியோடு ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும் என்கிறது ஆட்சி மொழித் திருத்தச்சட்டம்.
பொதுப்பட்டியலில் கல்வி:
தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என அறிஞர் அண்ணா அறிவித்து, இருமொழிச் சட்டத்தை 1968 இல் நடைமுறைப்படுத்திய போது, தமிழக உரிமைப் பட்டியலில் கல்வி இருந்தது. நெருக்கடி கால ஆட்சியின்போது 1976இல் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தமிழக அரசு உரிமை பறிக்கப்பட்டது. அதன்பின் மெட்ரிக், சி.பி.எஸ்.இ வழியாகத் தமிழகத்திற்குள் பாயும் இந்தி வெள்ளத்தை தடை செய்ய வழி யில்லாமல் போனது.
திட்டக் குழுவிலும் ஏமாற்று:
தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவற்றின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது திட்டக்குழு. உலகில் எங்கும் இல்லாத அதிர்ச்சிச் செய்தியாக, இந்தியத் திட்டக் குழுவின் திட்டப் பொருளில் ஒன்றாக இந்திமொழியை 1983 இல் சேர்த்துள்ளது இந்திய அரசு. இந்தி வளர்ச்சிக்காக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் தடையின்றி செலவழிக்க வழிவகுத்துவிட்டது இந்தச்செயல்!
என்னதான் தீர்வு?
ஆட்சித்துறையில் எந்த மொழிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்தமொழி பேசும் இனத்திற்கே அதிகார வல்லாண்மையும், செல்வாக்கும், மதிப்பும் இருக்கும். மொழிகளுக்கு இடையே சமத்துவம் மறுக்கப்பட்டால், சமுதாயத்திலும் சமத்துவம் மறுக்கப்பட்டே தீரும்! நடுவணரசை நோக்கி நாம் எழுப்ப வேண்டிய முழக்கங்களும், வலியுறுத்த வேண்டிய செயல்களும் இவை:
இந்திய அரசிலமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் ஏற்றுக் கொண்டதும் தலைமையமைச்சர் நேரு அவர்களால் தேசிய மொழிகள் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதுமான 22 தேசிய மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும்.
மாநிலங்கள் அனைத்திலும் அந்தந்த மாநில மொழிகளே முழுமையான ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும்.
தேசியமொழி என இந்தியையும் ‘வட்டார மொழி’ எனத் தமிழையும் அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாகப் பாகுபடுத்தும் போக்கை கைவிடவேண்டும்.
திட்டக்குழுவின் திட்டப் பொருளாக இந்தி மொழியை 1983 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டது போல், 22 தேசிய மொழிகளையும் ஏற்க வேண்டும்.
இந்தித்கும், வடமொழிக்கும் ஆதரவான மனநிலையைத் தமிழரிடம் உருவாக்கி விட்டால், வடவர் வல்லாண்மையும், ஆரியப் பண்பாடும் தமிழினத்தை அடிமைப்படுத்துவது எளிதாகிவிடும்.
தமிழுக்கு முன்னுரிமை தந்து முதலில் திட்டப் பொருளாக சேர்க்க வேண்டும். இதனை ஏற்க மறுத்தால் திட்டக் குழுவின் திட்டப் பொருளில் இருந்து இந்திக்குள்ள சலுகையை நீக்கவேண்டும்.
- கல்வி உரிமை 1977-க்கு முன் இருந்தது போல, மாநிலப் பட்டியலுக்கு மாற்றி வழங்கப்பட வேண்டும்.
செல்லவேண்டிய திசை இது! செந்தமிழ் வாழும் வழி இது!
(கட்டுரையாளர் – சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் பெரியாரியலாளர்)
நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்