மகனைப் போலவே நானும் மனுதர்மத்துக்கு தலைவணங்க மாட்டேன் – ராதிகா வெமுலா
அய்தராபாத் பலகலைக்கழகத்தின் தலித் மாணவர் ரோகித் வெமுலா-விசுவ இந்து பரிஷத் மதவாதத்தை எதிர்த்த காரணத்தால் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தற்கொலைசெய்து கொண்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையட்டி ரோகித்தின் தாயார் ராதிகா வெமுலா அளித்த பேட்டியிலிருந்து…
‘‘ரோஹித் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு பத்துமணி அளவில் உப்பாலில் நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் வந்தார். போலீஸ் அதிகாரிகள் சிலரும் ஓரிரு பேராசிரியர்களும் ‘வி.சி.வெளியே காத்திருக்கிறார். அவர் உங்களோடு பேச விரும்புகிறார்’ என்று சொன் னார்கள். அவருக்கு எங்களுடன் ஏதாவது பேச வேண்டுமென்றால் அதைப் பொது இடத்தில் பேசட்டும் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். அவர் அதற்குப் பின்னர் இரண்டு மாதத்துக்கும் மேலே வெளிநாட்டில் இருந்தார்.
துணைவேந்தர் பதவிக்கே அருகதையில்லாதவர். ஓர் ஆசிரியராக இருக்கக் கூடத் தகுதி இல்லாதவர். அவருக்குப் பைத்தியம். தலித் மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பைத்தியம் முற்றிவிடும் அவரை நீக்க வேண்டும். தண்டிக்க வேண்டும். எல்லா அப்பாராவ்களும் தண்டிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் எட்டு லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது?
எனக்கு இனி எதற்கு எட்டு இலட்சம்? எட்டு இலட்சத்தை வைத்து இனி அவனுடைய ஃபீஸைக் கட்ட முடியுமா? பாப்ஜிக்கு ஒரு தேநீர் வாங்கிக் கொடுக்க முடியுமா? ஒரு சாக்லேட்டோ ஒரு பொட்டலம் பிஸ்கோத்தோ வாங்க முடியுமா?
என் மகனைக் கொன்றவர்களின் பணம். அது எங்களுக்கு வேண்டாம். அதை வாங்கினோம் என்றால் மனுதர்மத்துக்குத் தலை வணங்கினோம் என்பதுதான் அர்த்தம். என் மகனைப் போலவே நானும் அதற்குத் தயாரில்லை.
நிமிர் பிப்ரவரி 2017 இதழ்