உலகையே கூறுபோடும் அக்ரகாரங்கள் – சுப. உதயகுமாரன்
இன ஒதுக்கல் என்ற மனித விரோதக் கொள்கையின் குறியீடுகளே ‘அக்கிரகாரங்கள்’. அந்த ‘அக்கிரகார’ சிந்தனை உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.
நாம் வாழும் உலகின் புறத்தோற்றத்தை மனக் கண்ணால் காண்பதும், அதன் உள்கட்டமைப்புக்கள், செயல்பாடுகள் பற்றி யெல்லாம் ஓர் அனுமானம் கொண்டிருப்பதும் ஒவ்வொரு சிந்திக்கும், செயல்படும் மனிதனுக்கும் அத்தியாவசியமானத் தேவையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடைபிடிக்கப்பட்ட “அபார்தைட்” எனும் இனவெறிக் கொள்கையை பயன்படுத்தி கெர்னாட் கோலர் என்கிற ஜெர்மானிய அறிஞர் 1978-ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார்.
“அபார்தைட்” என்பது தென் ஆப்பிரிக்காவின் பெரும்பான்மை கறுப்பின மக்களை., சிறுபான்மை வெள்ளையர்கள் அடக்கி ஆண்ட ஆட்சி முறை. உலக அளவிலும் வெறும் 22 விழுக்காடு மக்களாக இருக்கும் வெள்ளையர்கள் 78 விழுக்காடு பிற இனங்களைச் சார்ந்த பெரும்பான்மையினரை கட்டுக்குள் வைத்து, கசக்கிப் பிழிவதை “உலக அபார்தைட்” என்று அவர் விவரித்தார்.
வெள்ளையினத்தவரின் அடக்குமுறையையும், கறுப்பினத்தவரின் அடிமைத்தனத்தையும் உருவகப்படுத்தும் “உலக அபார்தைட்” உவமை இனவெறி அடிப்படையில் ஒரு மக்கள் குழுமம் இன்னொரு மக்கள் குழுமத்தை வேற்றுமைப் படுத்துவதைத்தான் விவரிக்கிறது. ஆனால் உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஏற்றதோர் உவமை இந்தியாவில் நிலவும் ‘அக்ரகாரம்’ அமைப்பாகவே இருக்க முடியும்.
அக்ரகாரம் என்பது சாதீய, மதவாத, இனவெறி மற்றும் சுரண்டல் நிறைந்த ஒரு பாழ் வெளி என்பது நமக்குத் தெரியும். சுத்தம் போற்றுகிறோம், புனிதம் பேணுகிறோம், வேதம் அருளிய இறைவாக்கு, ஒரு சாரார் பிறவியிலேயே மேன்மைகொண்டோர் என்றெல்லாம் புனைகதைகள் சொல்லி, அக்ரகார வெளிகளின் உதவியோடு சக்தி வாய்ந்தோர் தங்களை தள்ளிவைத்துக் கொள்கிறார்கள். சக்தியற்ற மக்களை இவர்கள் தீட்டானவர்கள், தீண்டத்தகாதவர்கள், காணத்தகாதவர்கள் என்றெல்லாம் வேறுபடுத்தி வைக்கவும் இந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது.
பல்வேறு புனைகதைகளின் துணையோடு சக்தியற்ற மக்களை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளும் அதே வேளையில், அக்ரகாரம் அவர்களை உடல் உழைப்புக்காகவும், ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கும், பாலியல் பலவந்தங்களுக்கும், பல்வேறுஅடிமைத்தனங்களுக்கும் பயன்படுத்தவும் செய்கிறது. இப்படி சக்தியுடையோர் சக்தியற்றோரை தன்னலத்துக்காக பயன்படுத்துவதும், அதிகாரம், வாய்ப்புக்கள், கொடுப்பினைகள், வளர்ச்சி போன்றவற்றிலிருந்து கவனமாக ஒதுக்கி வைப்பதும்தான் இன்று உலக அளவிலும், ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கின்றன.
இந்த ‘அக்ரகாரம்’ உருவகம் ‘அபார்தைட்’ மாதிரியைவிடச் சரியானதாக இருக்கிறது. இனம் என்னும் ஒற்றைக் கோட்பாடு மட்டுமின்றி, ஓரினத்திற்குள்ளேயே பல்வேறு வகைகளில் மக்கள் வேற்றுமைப்படுத்தப்படுவதை விளக்க “உலக அக்ரகாரம்” வடிவம் உதவுகிறது. அக்ரகாரம் சாதீய, மத,இன வேற்றுப்படுத்தலை, பொருளாதார அடக்குமுறையை, கலாச்சார, அரசியல் ஆதிக்கங்களை, ஆன்மீக சீர்கேட்டை எல்லாம் உறுதிப்படுத்துகிறது.
அக்ரகாரம்
அக்ரகாரம் என்பது பார்ப்பனர்கள் வாழும் ஒரு இருப்பிடத்துக்கு வழங்கப்படும் பெயர். ஒரு கிராமத்தின்கோவிலை மையமாகக்கொண்டு, அதனைச் சுற்றி சாலையின் இருமருங்கிலும் அமைந்திருக்கும் வீடுகள் அந்தக் கோவிலுக்குப் போடப்பட்ட மாலை போலத் தோன்றும். எனவே அக்ரகாரம் என்பது மாலை என்று பொருள்படுகிறது.கிராமத்தின்வடக்குப்பகுதியில் சிவன் கோவிலும், தெற்குப் பகுதியில் விஷ்ணு கோவிலும் அமைந்திருக்க, சாலையின் இருபக்கங் களிலும் வீடுகள் கட்டுவதே தொன்றுதொட்டு அக்ரகாரப் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் திருவனந்த புரம் பத்மநாபசுவாமி கோவிலின் நான்கு நுழைவாயில்களைச் சுற்றி பல அடுக்குத்தெருக்கள் இருக்கின்றன.
பேரரசர் ஹர்ஷர் காலத்தில் (590-647) படையினருக்கு பணச் சம்பளமும் ஏனை யோருக்குநிலக்கொடைகளும்வழங்கப்பட்டன. சமூகத்தில் முக்கியமான இடம் பிடித்திருந்த பார்ப் பனர்களுக்கு சிறப்புச் சலுகைகளாக வரியில்லா அக்ரகாரக் கொடைகள் வழங்கப்பட்டன. அப்படி வழங்கப்பட்ட இடங்களின் மீது அவர்களின் வாரிசுகளும் உரிமைகொண்டாடினார்கள்.
துணைக்கண்டத்தின் தென் பகுதியில் பல்லவர்கள் காலத்தில் (4-வது நூற்றாண்டின் துவக்கம் முதல் 9-வது நூற்றாண்டின் இறுதி வரை) நில உடைமை அரசர்கள் கையில் இருந்தது. அவர்கள் தங்கள் அதிகாரிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் நிலக்கொடைகள் வழங்கினர். தேவதான கிராமங்களில் நிலங்களிலிருந்து பெறப்படும் வருமானம் கோவில்களுக்கு கொடுக்கப்பட்டன, கோவில்அதிகாரிகள்அதை வசூலித்தார்கள். பிரம்மதேய கிராமங்களில், மொத்த கிராமமே ஒரு பார்ப்பனருக்கோ அல்லது ஒரு கூட்டப் பார்ப்பனர்களுக்கோ வழங்கப்பட்டது. அக்ரகார நிலக்கொடைகளும் பிரம்மதேய கொடைகளைப் போல பார்ப்பனர்கள் வாழும் மொத்த கிராமத்துக்கும் சேர்த்து வழங்கப்பட்டன. அக்ரகார கிராமங்களில் வாழ்ந்தவர்கள் எந்தவிதமான வரிகளும் கட்ட வேண்டியதில்லை எனவே அவர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள்.
பார்ப்பனர்கள் பெரும் நிலச்சுவான்தார்களாக இருந்ததால், அக்ரகாரங்கள் கிராமிய வளங்களின்மீது முழு ஆதிக்கம் பெற்ற அதிகார மையங்களாகவும், பார்ப்பன கல்வி மற்றும் மத நடவடிக்கைகளின் ஆதாரங்களாகவும் மாறின. இந்த உயர்ந்த சமூகப் பொருளாதார நிலைதான்பார்ப்பனீயமும்இந்துமதமும்ஒன்றே எனும் நவீன நிலைப்பாட்டை உருவாக்கின என்கிறார் ரொமிலா தாப்பார் என்கிற வரலாற்று அறிஞர்.
பார்ப்பனர்களுக்கு நிலங்களை வழங்குவது சாசனம் என்று அழைக்கப்பட்டது. குறிப்பிட்ட பெரிய கோவில்களில் மத வழிபாடுகள் நடத்துவது, தேர்ந்த சில பார்ப்பன சமூகங்களை மகிழ்விப்பது, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களைத் தங்கள் நாட்டில் தங்கவைப்பது, முறைகேடாகப் பெறப்பட்ட அதிகாரத்தை நியாயப்படுத்துவதற்காக பார்ப்பனர்களைப் போற்றுவது, சமூகத்தில் புகழ் மற்றும் மதிப்பினைப் பெறுவதற்காக என பல்வேறு காரணங்களுக்காக அக்ரகார நிலக் கொடைகள் வழங்கப்பட்டன.
அக்ரகாரங்களின் மையப்பகுதி பார்ப்பனர்கள் மட்டுமே வாழ்வதற்காக ஒதுக்கப்பட்டது. வணிகர்கள், குயவர்கள், பூக்காரர்கள், கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், விவசாயத் தொழிலாளர்கள் போன்றோர் கிராமங்களின் குறிப்பிட்டப் பகுதிகளில் வாழ்ந்தவாறே தங்கள் வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்தனர்.
கிராமங்களின் எல்லைகைகளில் தோண்டப்பட்டிருந்த அகழிகளுக்கு அல்லது சாக்கடைகளுக்கு அப்பால் “தீண்டத்தகாதவர்கள்” வாழ்ந்தனர். பிற சாதியினர் உள்ளேப்புகுந்தால்,பாரம்பரியவிழுமியங்களும், பழக்க வழக்கங்களும், கலாச்சாரமும், வாழ்க்கை முறைகளும் பாதிக்கப்பட்டுவிடும் என்பதாலும், அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்பதாலும், அவர்கள் அக்ரகாரங்களுக்கு வெளியே குடி அமர்த்தப்பட்டனர். இப்படியாக அக்ரகாரங்கள் பார்ப்பனர்கள் தனித்து, சிறந்து வாழும் தனித் தீவுகள் போலாயின. அக்ரகார வீடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், குறுகிய தெருக்களால் இணைக்கப் படுபவைகளாகவும் கட்டப்பட்டன. மக்கள் கூடிப்பேசும் வசதி கொண்ட திண்ணைகள் (போயாக்கள்) அங்கே அமைந்திருந்தன. இன்ன பிறக் காரணங்களால் அக்ரகாரத்தில் வாழ்ந்த மக்களுக்குள் நெருக்கமானத் தொடர்பும், உறவும் இருந்தன. பாதுகாப்புக்காகவும், தங்கள் பாரம்பரியங்களைத் தொடர்ந்து பேணும் முகமாகவும், வழித்தோன்றல்களின் நலன் களுக்காகவும், பிற இடங்களில் வசித்த பார்ப் பனர்களும் அக்ரகாரங்களுக்குக் குடிபெயர்ந்து வந்தனர்.
பார்ப்பனர்கள் வேத விற்பன்னர்களாகவும், நிர்வாகிகளாகவும் வேலை செய்தார்கள். அவர்கள் நிலச் சுவான்தார்களாகவும், அரசு அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர். நிலங்களை உழுபவர்களாக இல்லாமலிருந்ததால், அவர்கள் பிறரின் வேலைகளை, சேவைகளைப் பெற வேண்டியிருந்தது. பிற சாதிகளுக்கு மதச் சடங்குகள் செய்பவர்கள், கோவில் பூசாரிகள், கற்றுணர்ந்த வேத விற்பன்னர்கள் எனும் மூன்று பிரிவுகளாக வாழ்ந்த பார்ப்பனர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளாமலே இருந்தனர்.
புரூஸ் கீலர் எனும் வெளிநாட்டு அறிஞர் 1971-ஆம் ஆண்டு நாகர்கோவில் நகருக்கு வெளியே அமைந்திருந்த ஓர் அக்ரகாரத்தைப் பற்றி ஆய்வு செய்துவிட்டு, அக்ரகாரங்களின் மூன்று தெளிவான அம்சங்களைக் குறிப்பிடுகிறார்:
தெளிவான எல்லை அமைப்பும், யாவருக்கும் நன்கு தெரிந்த தனித் தன்மையும் கொண்ட ஓர் அருகாமை நகர்ப்புறமாக அக்ரகாரம் இருந்தது.
பார்ப்பனர்கள் சமூகத்தில் ஓரிடத்தில் ஒதுக்கமாக வாழும் தன்மை (spatial segregation) பெற்றிருந்தனர்.
அந்தவசதியான வாழ்விடத்தில் தனிமை, இட வசதி, உள்ளூர் விடயங்களில் தன்னிச் சையாக ஒதுங்கியோ அல்லது ஈடுபட்டோ வாழும் சுதந்திரம் கொண்டிருந்தனர்.
இம்மாதிரியானச் சூழ்நிலையில் இரண்டு சமூகக் குழுமங்கள் எழுகின்றன. ஒன்று தேர்ந்து வாழும் சமூகம், இன்னொன்று தேம்பிநிற்கும் சமூகம். தேர்ந்துவாழும் சமூகம் தனக்கான அடிப்படைத் தேவைகளுடன், ஆடம்பர வசதிகளுடன், பொருளாதாரப்பாதுகாப்புடன், உன்னதமான உடல்நலத்துடன், பெரும் மக்கள் நெருக்கமின்றி,வாழ்க்கைத்தரத்தை,நிலைமையை உயர்த்தும் சூழல்களுடன், மேன்மையான நவீனவாழ்க்கை முறையுடன், கலாச்சார வெளிப்பாடுகளுடன், வசதி வாய்ப்புக்களுடன் உண்மையிலேயே வாழ்கிறது.
ஆனால் தேம்பிநிற்கும் சமூகம் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேற்றப்படாமல், கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, அரசியல் அதிகாரம், கலாச்சார வெளிப்பாடுகள் என எதுவுமின்றி ஒரு தேக்க நிலையில் தத்தளிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகக் குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாடு, சிதைந்த குடும்பங்கள், நொறுங்கிய மனிதர்கள் என சிதிலமடைந்து சாகிறது.
இப்படியாக பொதுச்சமூகம் எதிரும், புதிருமாக பிளவுபட்டு கிடக்கும்போது, ஏற்றத்தாழ்வுகள் இன்னும்அதிகரிக்கின்றன.தேர்ந்துவாழும்சமூகம் நிலங்களை, தண்ணீரை, எரிபொருட்களை, வளங்களை, வாழ்வாதாரங்களை அதிகமாக பயன்படுத்துகிறது. சமூக அந்தஸ்து, பொருளாதார பலம், அரசியல் அதிகாரம், கலாச்சாரப் பங்களிப்புக்கள், வளர்வதற்கான வாய்ப்புக்கள் என தேர்ந்துவாழும் சமூகம் இன்னும் மேலே உயர்ந்து பரந்து விரியும்போது, தேம்பிநிற்கும் சமூகம் தேய்ந்துகொண்டே போகிறது. இவ்விரண்டு சமுகங்களுக்கு இடையேயான ஊடாடலை உற்று நோக்கும்போது, ஆதிக்கச் சமூகம் தன் நலன்களை தற்காத்துக் கொள்ள பலதந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் சில சக்தியற்றோரை தவிர்த்துவிடுவது, தள்ளிவைப்பது; கீழ்மைப்படுத்துவது, வேற்றுமைப் படுத்துவது போன்றவை.
தாமும் பிறரும்
தாம் உயர்ந்தவர், உன்னதமானவர் எனக் கொள்ளும்போது, பிறர் தாழ்ந்தவராகவும், தரங் கெட்டவராகவும் மாறிப்போவது இயல்பு. இம்மாதிரியான விழுமியங்களைக்கைக் கொண்டு பிறரை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளும் போது, அவர்களை விவசாயம், கட்டுமானம், சுகாதாரம் போன்ற பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும் எளிதாகிப் போகிறது. அது நியாயமான செயலாகவும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. தந்தை பெரியார் கேட்பது போல, “மிருகங்கள் இருக்கின்றனவே! அவற்றில் பார்ப்பாரக் கழுதை, பறைக் கழுதை என்று இருக்கின்றனவா?” (பக். 50). இம்மாதிரியான இயற்கைக்குப் புறம்பான, அஞ்ஞான சமூகப் பிரிவுகளால் எழும் ஏற்றத்தாழ்வுகள் கொடுமை யானவை:
‘‘பார்ப்பனர் கொடுமைகளைப்பற்றி இப்பொழுது உள்ள வாலிபர்களைக் கேட்டால் தெரியாது; 60 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கேட்டால் தெரியும், 15 வயது பார்ப்பனப் பையன் 60 வயதுக் கிழவனைக்கூட, ‘ஏண்டா, இராமசாமி!’ என்றுதான் கூப்பிடுவான். நம் மக்கள் பாடுபட்டாலும் வயிறாரக் கஞ்சி கிடைப்பதில்லை. பாடுபடாத பார்ப்பனர்கள் மட்டும் நான்கு வகைப் பதார்த்தங்களுடன் நெய் ஊற்றிக் கொண்டு சாப்பிடுவார்கள்; 12 முழ வேஷ்டியைக் கட்டிக்கொள்வார்கள். இந்தநிலை சமுதாய அமைப்பினால்தானே? இப்போதுதான் மக்கள் இதை உணர முடிகிறது.’’ (பக். 51)
தந்தை பெரியார் கேட்பது போல, “மிருகங்கள் இருக்கின்றனவே! அவற்றில் பார்ப்பாரக் கழுதை, பறைக் கழுதை என்று இருக்கின்றனவா?”
பெரிய பதவியில் இருக்கும் திராவிடர்கள், தமிழர்கள் “நல்ல பேர், அந்தஸ்து, உயர்வு பெற வேண்டுமானால், பார்ப்பனர் ஆசீர்வாதம், மங்களாசாசனம், சடகோபம் பெற்றே ஆக வேண்டும்.” (பக். 42)
பிறரை தந்திரமாகத் தள்ளிவைப்பதற்கு தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிறப்பால் உயர்ந்தவர்கள், இயற்கையாகவே சிறந்தவர்கள் என்பன போன்ற பல கட்டுக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. பார்ப்பன அகிலவியலில் (cosmology) இம்மாதிரியான கதைகளுக்குக் குறைவேயில்லை. வரிகள் கட்டவேண்டியத் தேவையின்றி, அரச கெடு பிடிகள் ஏதுமின்றி சுதந்திரமாக, சபாக்கள் என்றழைக்கப்பட்ட தங்கள் சமூகங்களின்மீது முழுமேலாண்மையுடன்பார்ப்பனர்கள்வாழ்ந் தனர். பொருளாதார பலமும், தன்னாட்சி அதிகாரமும் பெற்றிருந்ததால், அக்ரகாரங்கள் செழித்து கொழித்து வளர்ந்தன. பார்ப்பனக் கலாச்சாரமும், கல்வியும் மேலோங்கி நின்றன. அதனால் வாய்ப்புக்களும் பல்கிப் பெருகின.
தந்தை பெரியார் கேட்பது போல:
‘‘இங்கு இன்று எல்லா உயர் பதவிகளும் பார்ப்பனருக்கேதானா? பிச்சை எடுக்க வந்தவன்தான் இன்று மந்திரி, பிரஸிடென்ட், ராஷ்டிரபதி, சங்கராச்சாரி-எல்லாம் அவன் தானே? அரசாங்கத்தில் உயர்ந்த பதவி, எதை எடுத்தாலும் பார்ப்பான்தானே இருக்கிறான்? எப்படி இந்த நிலை வந்தது?’’ (பக். 50)
இராஜகோபாலாச்சாரியார், நேரு, இராஜேந்திர பிரசாத் போன்றவர்களெல்லாம் பார்ப்பனர்கள், “இப்படிப்பட்டவர்களெல்லாம் தங்கள் சாதிகாரணமாகவே உயர்ந்திருக்கிறார்கள்.” ஆனால் கோயில் கட்டுவதும், கும்பாபிஷேகம் செய்வதும், ஏராளமான நிலங்களை “எழுதி வைத்தவரெல்லாம் நம்மவர்கள். அப்படிப்பட்ட நாம் ஏன்கீழ்சாதி?இப்படிப்பட்டமக்களுடைய சரித்திரம் எப்படிப்பட்டது? நாம் உயர்ந்தவர்களாக வாழ்ந்ததாகத்தானே சரித்திரம் கூறுகிறது! பார்ப்பனர் வந்தபிறகுதானே நாம் தாழ்ந்ததாக உள்ளது?” என்று வினவுகிறார் பெரியார். (பக். 49)
“பார்ப்பனர்களில் -ஓட்டலில் வேலை செய்யும் பார்ப்பானாகஇருந்தாலும், கோவிலில் வேலை செய்யும் பார்ப்பானாக இருந்தாலும், புரோகிதப் பார்ப்பானாக இருந்தாலும் -அவன் மகனெல்லாம் நன்றாகப் படித்து கலெக்டர், ஜட்ஜ், மந்திரி, இந்தியா பிரஸிடென்டாக ஆகிவிடுகிறானே! ஆனால் உழைக்கிற நாம் கீழான நிலையில்தானே இருக்கிறோம்! (பக். 49)
இன்றையதமிழகத்தைஎடுத்துக்கொண்டால் கூட பார்ப்பனர்களே பெரும் சமூக-பொருளாதார–அரசியல் அதிகாரம் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். இந்தியாவின் பெருவணிக நிறுவனமான டாட்டா நிறுவனத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள என். சந்திரசேகரன், கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, பெப்சி குளிர்பான நிறுவனத் தலைவர் இந்திரா நூயி, டி.டி.கே. நிறுவனத்தின் தலைவர் டி. டி. ஜெகநாதன், இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் என். ஸ்ரீனிவாசன் என அனைவருமே பார்ப்பனர்கள்.
அதே போல தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மூத்த ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பார்ப்பனர்கள். தற்போது தமிழகத்தில் நடந்துவரும் சல்லிக்கட்டுப் பிரச்சினையில் முன்னிலையில் நின்றுபோராடும் நீலச்சிலுவை அமைப்பின் துணைத்தலைவர் நந்திதா கிருஷ்ணன், அந்த அமைப்பின் தலைவர் மற்றும் நந்திதாவின் கணவர் சின்னி கிருஷ்ணன், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் கௌரவ உறுப்பினர் கௌரி மௌளிக், ராதா ராஜன்,மேனகா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், பீட்டா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோஷிபுரா அனைவருமே பார்ப்பனர்கள். இந்தியாவில் இயங்கும் அக்ரகாரத்தில் இருப்பது போன்ற நிலைமைகள், தன்மைகள், போக்குகள் உலக அரங்கிலும்நிலவுவதைப்பார்க்கலாம்.இன்றைய உலகம்வடக்கு–தெற்குஎன்றுபிரிக்கப்படுகிறது.
வடக்கு தொழில் மயமாக்கப்பட்ட, பணக்கார, வசதிவாய்ப்புக்கள் ஏராளமான, வாழ்க்கைத்தரம் உயர்ந்த தேர்ந்துவாழும் சமூகமாக இருக்கிறது. ஆனால் தெற்கு ஏழ்மை, வறுமை, வசதி வாய்ப்புக்களின்மை, தாழ்ந்த வாழ்க்கைத்தரம் கொண்ட தேம்பி நிற்கும் சமூகமாகதத்தளிக்கிறது. வடக்கே வாழ்பவர்கள் (ஜப்பான் தவிர்த்து) பெரும்பாலும் வெள்ளையர்கள், கிறித்தவர்கள், தொழில்மயமாக்கம் சார்ந்தவர்கள். தெற்கே வாழ்பவர்கள் (லத்தீன் அமெரிக்கா தவிர்த்து) பெரும்பாலும் வேற்றுநிறத்தவர்,இந்துக்கள்மற்றும் முசுலீம்கள், விவசாயம் சார்ந்தவர்கள். வடக்கில் தெற்கனைய தேம்பிநிற்கும் பகுதிகளும், தெற்கில் வடக்கனையப் தேர்ந்துவாழும் பகுதிகளும் நிறைய இருக்கின்றன. “உலக அக்ரகாரம்” விசேடப் பிறவிகள் என்று தங்களை விளித்துக்கொள்ளும் வெள்ளைக்காரர்கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. பிறர் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என் பதற்காகத்தான் டொனால்ட் ட்ரம்ப்கள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவோம் என்கிறார்கள். கடுமையான குடி யேற்றக் கட்டுப்பாடுகளை வடக்கு நாடுகள் வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!
தமிழகத்திலும், இந்தியாவிலும், தனிப்பட்ட நாடுகளிலும், உலக அளவிலும் தேர்ந்துவாழும், தேம்பிநிற்கும் சமூகங்களை உள்ளடக்கிய அக்ரகாரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் நாம் உணரவேண்டிய முதல் உண்மை.
பயன்படுத்திய நூல்கள்:
Gernot Kohler, “Global Apartheid,” New York: World Order Models Project, 1978.
RomilaThapar, “Imagined Religious Communities? Ancient History and the Modern Search for a Hindu Identity,” Modern Asian Studies 23/2 (1989).
Bruce W. Kieler, Mari VarumAgraharangal (In Tamil). Madras: Taxila Publications, 1980.
பெரியார்: இன்றும், என்றும். கோவை: விடியல் பதிப்பகம், 2016.
சுப.உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.
நிமிர் பிப்ரவரி 2017 இதழ்