இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி
இலங்கையில் கிறித்துவர்களைக் குறி வைத்து அவர்களின் வழிபாட்டு இடங்களிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்து 310க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர். 500 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்னர். மட்டக் களப்பில் ஈஸ்டர் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த தமிழர்களும் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவைச் சார்ந்த 5 பேர் உயிர்ப் பலியாகியுள்ளனர். சிறுபான்மை மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்றாலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மீது இலங்கை அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் தாக்குதலுக்கு குறி வைக்கப் பட்டவர்கள் – மதத்தின் அடிப்படையில் தான் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. உலகம் முழுதும் மத பயங்கரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று இந்த பட்டியல் விரிவடைந்து நிற்கிறது. தங்களின் ‘கடவுள்’ ஆணையை ஏற்று ‘மத அரசாட்சியை’ உருவாக்குவதற்காக மனித...