சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்
பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய- பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில்.
கேள்வி : நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டு வெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுகள், இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம்? பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா? அதை மேடையில் பட்டியலிடும் துணிவு இருக்கிறதா?
பதில் : தேசியக் குற்றப் புலனாய்வு ஆய்வு மையத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை உள் நோக்கத்துடன் எம்மிடம் கேட்கிறீர். சிறுபான்மை முஸ்லீமானவர்களை குறை சொல்லும், குற்றம் சாட்டும் உங்கள் காவி வண்ண எண்ணம் எமக்குப் புரியாமலில்லை.
கொலை, களவு, மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோர் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கு ஜாதி, மதம், கடவுள், இனம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு பயன் நோக்கிச் செயல்படுவதே நோக்கமாய் கொண்டவர்கள்.
எனினும், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு, மோடி அரசு குஜராத்தில் நடத்திய இனப் படுகொலை, ‘விஸ்கி புட்டிக்கு’ நாட்டின் இராணுவ இரகசியங்களை விற்றது, மராட்டியத்தில் பள்ளி வாசலுக்கு குண்டு வைத்து தகர்த்தது, சந்நியாசி வேடம் தரித்த பெண் நடத்திய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் முதற் கொண்டு அண்மையில் வங்கிகள் மூலம் நடத்தப்பட்ட வாராக் கடன் கொள்ளைகள், பங்கு மார்க்கெட் மல்லையா, ஹர்சத் மேத்தா வரை குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் யார் எவர் என்பதை நாடறியும். அதே நேரத்தில் எதிர் விளைவாக கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களும் இடம் பெறாமல் இல்லை. இதிலே, குற்றச் செயல்களுக்கு, பயங்கர வாதங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களைத் தண்டிக்க வேண்டுமே தவிர, இவற்றை ஒட்டுமொத்த சிறுபான்மை மக்கள் மீதும் ஏற்றிச் சுமக்க வைக்கத் துணிவது காவி காலித்தனமாகும்.
காந்தியும், தபோல்கரும், கல்புர்கியும், பன்சாரேயும், கவுரி லங்கேசும் மார்பில் துப்பாக்கிக் குண்டுகளை ஏந்தி மரணமடைந்தார்களே, இதற்கு யார் காரணம்? உங்கள் நம்பிக்கைப்படி அவர்களும் இந்துக்கள் தானே? சொந்த மதத்துக்காரனையே இரத்தப் பலி கேட்கும் நீங்கள் பிறமதத்தினர் மீது குற்றம்சாட்ட என்ன யோக்கியதை இருக்கிறது?
கேள்வி : இந்துக்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி பிரித்தாள நினைக்கும் ‘கருமர்களே’ (புரியவில்லை) பிற மத ஜாதி வேறுபாடுகளை மூடி மறைப்பது ஏன்? மேடையில் நா பேச நடுங்குவதேன்?
பதில் : பெரியார் இயக்கத்தவர் ஜாதி ஒழிப்புப் போர் வீரர்களே தவிர, ஜாதி வெறியைத் தூண்டுபவர்கள் இல்லை. அனைவரும் ஜாதி மதச் சாக்கடையில் இருந்து விடுபட்டு, இன இழிவு நீங்கி, சுயமரியாதைச் சுகவாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே பெரியாரியக்கவாதிகள் போராடுகின்றனர்.
ஆரியப் பார்ப்பன வேத மதமாகக் கருதப்படும். இந்து மதக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காகப் பல தலைமுறைகளுக்கு முன் மதம் மாறிய ‘இந்துக்களே’, சிறுபான்மை மக்கள். இதற்கு உதாரணமாக மீனாட்சிபுரம் மக்கள், தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ள, சக மனிதர்களுடன், சமமாய் நடத்தப்பட ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த நிகழ்வு அது. இந்தியாவெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்நிகழ்விற்குப் பின்னும் ஜாதிக் கொடுமைகள் நின்றபாடில்லை. இவற்றுக்கு மூல காரணமாக, மூளையாக இருந்து செயல்படும் ‘பிராமண வருணபேதம்’ ஒழிக்கப்படும் வரை இந்நிலை நீடிக்கவே செய்யும்.
பிற மதங்களுக்குச் சென்றாலும், ஏற்கனவே அங்கு உள்ள ஜாதிப் பெருமை கொண்டோரால், தாழ்த்தப்பட்ட மற்றும் இடைச்சாதி மக்கள், முன்பு இருந்த ஜாதி அமைப்பு முறையையே வைத்து, தாழ்த்தப்பட்ட கிறித்துவர் என ஒடுக்கப்படுகின்றனர். இது குறித்து மாற்று மதத் தலைவர்கள் அவ்வப்போது உரிய மாற்றங்களைச் செய்து வந்தாலும் அவை நிறைவடையவில்லை. போதுமானதாக இல்லை என்பது உண்மையே. எனவேதான், மதம் மாறுவதைக் காட்டிலும், மதம் மறுப்பதே உண்மையான சுயமரியாதைச் சுகவாழ்வைப் பெற்றத் தரும் என பெரியார் இயக்கத்தினர் பரப்புரை செய்து வருகின்றனர். இந்த முயற்சி தொடர்ந்து ஓயாது; தொடரும் – வெற்றி பெறும்!
சரி; இப்போது ஒரு கேள்வி. இந்த மதத்தில் ஜாதி இருப்பதால் தானே ஜாதிவெறி வருகிறது. அந்த இந்து மதத்தின் ஜாதியை நீங்கள் ஏன் எதிர்த்துப் பேசுவதில்லை? தலித் மக்கள் மீது பிற ஜாதியினரும் நடத்தும் அடக்குமுறைகளைக் கண்டித்து இந்துக்கள் மோதலாமா என்று ஏன் கேட்க முன் வரவில்லை? எங்கே போய் பதுங்கினீர்கள்?
கேள்வி : சிவனும் இல்லை அல்லாவும் இல்லை, ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்புப் பலகையில் எழுத தைரியம் உள்ளதா?
பதில் : பெரியார் இயக்கத்தின் பிரச்சாரமே, சுவர் எழுத்துப் பரப்புரை எனில் மிகையாகாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், எங்கள் சுவர் எழுத்து சுப்பையாவை தேடிக் கண்டுபிடித்து, கை விரலை வெட்ட வேண்டும் என மதவாதிகள் அலறும் வகையிலே அவர், மத மறுப்பு வாசகங்களை சுவர்களில் எழுதிப் போராடியவர். அவை தொகுக்கப்பட்டு உள்ளது. வாங்கிப் படித்து உண்மை அறிக.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், ஒருமுறை, ‘இந்து ஆத்திகம் என்பது உயர்வகுப்பாருக்கும், நாத்திகம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாகவும் உள்ளது’ என்று பாராட்டினார்கள். அந்த அளவிற்கு மதவாதத்தை எதிர்த்துப் போராடி வரும் இயக்கம் பெரியார் இயக்கம். ஆகையால், இந்த மத மறுப்பு, கடவுள் மறுப்பு முழக்கங்களை அறிவிப்புப் பலகையில் அல்ல; நாடு முழுவதும் தெருவுக்குத் தெரு, முச்சந்திக்கு முச்சந்தி என எழுதி வைத்துப் போராடிய இயக்கம் பெரியாரியக்கம். இதற்குரிய தைரியமும், துணிச்சலும், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் ஆற்றலும் நிறைந்தவர்களே பெரியாரியக்கத்தினர் என்பதை அறிக. இப்போதும் பெரியார் சிலைகளின் கீழே ‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’ என்ற வாசகம்தான் கம்பீரமாக நிற்கிறது; அது எல்லா மதக் கடவுள்களுக்கும் தான். புரிந்து கொள்க.
கேள்வி : ‘இந்துக்கள்’ உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ்., இன்போசிஸ் போன்ற கம்பெனிகளில் தமிழன் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை வெளியிட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து இராஜினாமா செய்ய வைக்க முடியுமா?
பதில் : அதென்ன ‘இந்துக்கள்’ நிறுவனங்கள்? பார்ப்பனர் நிறுவனங்கள் என வெளிப்படையாய் கூற வேண்டியதுதானே! எங்கள் இளைஞர்களின் திறமையைக் கண்டு, கைகூப்பித் தொழுது பணி வழங்கிக் கொண்டிருக்கிறான் அமெரிக்கன்! பார்ப்பன நிறுவனங்களை எம்மவர் புறக்கணித்தால், அடுத்த நாள் ‘அவாள்’ தட்டேந்தித் தெருவில்தான் நிற்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் வரிப் பணத்தில் தண்ணீர், மின்சாரம், நிலம், கட்டமைப்பு எனப் பலப்பல வசதிகளைப் பெற்றுக் கொண்டு உருவாகிய நிறுவனங்களில், அந்தப் பெரும்பான்மை மக்கள் வேலை செய்வதில் என்ன தவறு? எம்மவரின் திறமையே பார்ப்பன நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் காரணம் என்பதை மறந்து விடாதீர்.
நீங்கள் கூறும் ‘இந்துக்கள்’ நடத்தும் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகச் சந்தை இந்துக்களுக்கு மட்டும்தான் அய்ரோப்பிய அமெரிக்க கிறித்தவர்களிடம் வர்த்தக உறவு கொள்ள மாட்டோம் என்று அறிவிக்குமா? அப்படி அறிவிக்கச் சொல்லி விட்டு, எங்களிடம் கேள்வி கேட்க வாருங்கள்!
கேள்வி : பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் ‘பாம்பை விட்டுவிடு; பார்ப்பானைக் கொல்’ என்ற உங்களால், அந்தப் பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக் கொண்டு ஊர்வலம் வர முடியுமா?
பதில்: முட்டாள்தனமான கேள்வி இது. ‘பாம்பையும் பார்ப்பானையும்….. கொல்’ என்று பெரியாரோ அல்லது பெரியார் இயக்கத் தவைலர்களோ எங்குமே சொன்னதில்லை. இது வடநாட்டில் வழங்கி வந்த கூற்றே தவிர, நாங்கள் கூறியதில்லை. பல்லில் விசமுள்ள பாம்பை ஏன் நாங்கள் கழுத்தில் அணிந்து திரிய வேண்டும்? ஆனால் ஒன்று, ‘பாம்புக்குப் பல்லில்தான் விசம்; பார்ப்பனருக்கு உடம்பெல்லாம் விசம்’ என்பதால், அத்தகைய பார்ப்பனரையே எதிர்கொண்டு வரும் எங்களுக்கு, பல்லில் விசம் உள்ள பாம்பைக் கண்டு அச்சமேற்படாது.
பாம்பையும் கடவுளாக்கி பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி வணங்கும் மூடநம்பிக்கைகளின் புகலிடமான ஒரு மதத்திலிருந்து கொண்டு இப்படி அபத்தமான கேள்விகளைக் கேட்கக் கூடாது. சிவபெருமான் கழுத்தில் பாம்பைக் கட்டி வைத்திருப்பது உங்கள் மதம்தான். இந்தக் காட்டு மிராண்டித்தனத்தை கேள்வி கேட்பவர்கள் நாங்கள்!
கேள்வி : குங்குமம் வைத்தவரை, நெற்றியில் என்ன காயம்? இரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர், வைணவத்தைப் பரப்பிய இராமானுஜரைப் பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?
பதில் : உமது கேள்வி, கலைஞர் ‘இராமானுஜர்’ தொடர் எழுதியதைத் தட்டிக் கேட்க முடியுமா என மையம் கொண்டு நிற்கிறது. ‘மதத்தில் புரட்சி செய்த மகான்’ ஆயிற்றே இராமானுஜர்! அவரை மக்களிடம் கொண்டு செல்ல, கலைஞர் – ‘நான் மானமிகு சுயமரியாதைக்காரன்’ என அறிவித்துக் கொண்டவர், எழுதியதில் என்ன தவறு?
இந்தியாவில் தோன்றிய மூன்று மதப் பெரியார்களான ஆதி சங்கரர், மத்வர், இராமானுஜர் ஆகியோர், இந்தியத் தத்துவ ஞானங்களாக முறையே அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பனவற்றைப் போதித்துப் பரப்பினர். அத்வைதத்திற்கு மறுப்பாக இராமானுஜர், மதத்தில் புரட்சி செய்து வசிஷ்டாத்வைதத்தைப் பரப்பினார். இவர், பார்ப்பன உயர்வகுப்பார் மட்டுமே குருமார்களாகவும், பூணூல் அணிந்த பூதேவர்களாகவும் ஆக முடியும் – பிறப்பால் தான் இது நடைபெறும் என்பiதை உடைத்து, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் போதனைகள் செய்து, அவர்களை உயர்நெறியாளராக்கியவர். அக்காலகட்டத்தில் வைதிக மதத்தில் இதுவும் ஒரு கலகம்தான். இந்த வைதிக எதிர்ப்பு வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூறும் ஒரு முயற்சியே கலைஞர் எழுதிய இராமானுஜர்.
வைணவத்தில் இராமானுஜர் செய்த சீர்திருத்தத்திற்கு நேர்மாறாக வைணவப் பார்ப்பனர்கள் வர்ணாஸ்ரமத்தில் மூழ்கிக் கிடப்பதை எதிர்க்கும் திராணி உங்களுக்கு உண்டா? பதில் தேவை!
பெரியார் முழக்கம் 07032019 இதழ்