வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

காந்தியார் நினைவுநாளையொட்டி வரலாற்றில் ‘பார்ப்பனிய வன்முறைகள்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கத்தில் 24.2.2019 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். கார்த்தி இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். ‘இந்து இராஷ்டிரத்தின் இரத்த சாட்சிகள்: தபோல்கரி லிருந்து கவுரி லங்கேஷ்வர் வரை என்ற தலைப்பில் தோழர் துரை உரையாற்றினார்.

கோல்வாக்கர் கூறிய ‘இந்து இராஷ்டிரம்’ குறித்தும் பஜ்ரங்க்தள் ஆர்.எஸ்.எஸ். போன்ற ‘சங்பரிவார்’ அமைப்புகள் இரகசிய செயல் திட்டங்கள், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்னால் உள்ள மதவெறி அமைப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார். ‘இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மா.கி.எ. பிரபாகரன், இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியே இப்போதுள்ள அயோத்தி இலலை என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கினார். வால்மீகி இராமாயணம் மட்டுமல்லாது, பல்வேறு இராமாயணங்கள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு இராமயணக் கதைகள் கூறப்படுவதையும் புராணங்களை வரலாறுகளாக்கும் மோசடிகளையும் விளக்கிப் பேசினார். தொடர்ந்து விடுதலை இராசேந்திரன், “புத்தம்-சமணத்தை வீழ்த்திய பார்ப்பன வன்முறை” என்ற தலைப்பில்  உரையாற்றினார். நிறைவாக கொளத்தூர் மணி, “காந்தியார் கொலையின் பின்னணி” என்ற தலைப்பில் பேசுகையில், காந்தியார் உயிரைக் காப்பாற்றுவதில் அன்றைய காங்கிரஸ் ஆட்சியும் பட்டேலும் காட்டிய அலட்சியம், பட்டேலின் காந்தி எதிர்ப்பு ஆகியவற்றை சுட்டிக் காட்டிப் பேசினார்.  மயிலாப்பூர் மனோகர் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 14032019 இதழ்

You may also like...