தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்
கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி.
கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தோம், அரசின் அடக்குமுறைகளை சந்தித்தோம்
நடுவண் ஆட்சி தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து செயல்பட்ட பாஜக அது கற்பனைக் கனவு என்பதை புரிந்துகொண்டது. மக்கள் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக வலிமையான தலைமையை இழந்துவிட்ட சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆட்சி ஆளும்கட்சியை மிரட்டியது; கட்சியை உடைத்தது; பிறகு மீண்டும் இணைத்தது. தங்களின் அதிகார வலைக்குள் சிக்கவைத்து பொம்மலாட்டம் நடத்தியது.
மிரட்டலுக்கு அடிபணிந்து ஆளும்கட்சியும் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாஜக ஆட்சியையும் அதன் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து கைகோர்த்து நிற்கும் அஇஅதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் ஒற்றை முழக்கமாக மாறி நிற்கிறது
இந்த சூழலில் பாஜக ஆட்சியைத் தோற்கடித்து தமிழர்களின் தன்னுரிமையையும் தன்மானத்தையும் நிலைநாட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மகத்தான வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று எப்போதும் மக்களின் உரிமைகளுக்காகவே களத்தில் நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக மக்களை உரிமையோடும் உணர்வோடும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
- எதிர்காலத்தில் மாநிலங்களின் தன்னுரிமை தன்னாட்சியைக் காக்கும் கூட்டாட்சிக் கொள்கையை ஏற்கும் ஆட்சியே இந்தியாவில் உருவாக வேண்டும். அந்த திசையை நோக்கி அரசியலை முன்னகர்த்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் எப்போதும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடே இதற்கும் வழிகாட்ட வேண்டும். தமிழக கட்சிகளும் இயக்கங்களும் அதற்கான செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவி அழைக்கிறது.
- பாஜக ஆட்சி மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களை ஏதோ அன்னிய தேசத்தவர்கள் போலவும் தேச விரோதிகளாகவும் சித்தரித்து அவர்களின் நியாயமான உரிமைகளை மறுத்து இரண்டாம் தர குடிமக்களாக்கியது; பாரதீய ஜனதாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கடமை இஸ்லாமிய சமூகத்திற்கு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை தோற்கடிக்கக் கூடிய வலிமையான கூட்டணி திமுக அணியாகவே இருப்பதால் இஸ்லாமிய சகோதரர்கள் இயக்க நலனை முன்னிறுத்தாமல் சமூக நலன் கருதி திமுக அணியை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
வேறு கட்சிகளுக்கு அளிக்கும் வாக்கு மறைமுகமாக பாஜகவிற்கே பயனளிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பெரியார் முழக்கம் 28032019 இதழ்