பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம்.
1955 ஜூலை 17இல் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தியக் கூட்டாட்சிக்குள் தமிழர்கள் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்த்தவும், 1955 ஆகஸ்டு 1இல் நாடெங்கிலும் இந்தியத் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்ற தமது போராட்டத் திட்டத்தைப் பெரியார் அறிவித்தார்.
“இந்திய அரசாங்க தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது மிகக் கடினமான தீர்மானம் என்பதாகக் கருதக் கூடும். இது இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒழித்துக் கட்டவோ கருத்துக் கொண்டு செய்யப்பட்ட கொடி கொளுத்தும் தீர்மானம் அல்ல.”
“எங்களுக்கு – தமிழர்களுக்கு – தமிழ் நாட்டாருக்கு இந்திய அரசாங்கம் வேண்டாம்; தமிழ்நாடு – தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் – இந்திய யூனியனில் இருக்க விருப்பமில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூரண சுயேச்சை யுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். எங்கள் நாட்டைத் தனி – பூரண சுயேச்சை நாடாக ஆட்சி செய்ய எங்களுக்குச் சக்தி உண்டு; மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.”
“எங்களுடைய இந்த உணர்ச்சியையே அடி யோடு அழிக்கும்படியான தன்மையில், அன்னிய மொழியாகிய இந்தி மொழியை எங்கள் நாட்டிற்குள் அரசியலின் பெயரால் பலாத்காரமாய்ப் புகுத்தி, மொழி, கலாச்சாரம், கல்வி முதலிய துறைகளிலும், அரசியல் ஆட்சி மொழி என்கிற தன்மையிலும் புகுத்தி இருப்பதோடு, இந்தி படித்து ‘பாஸ்’ செய்தவனுக்குத்தான் உத்தியோகம் என்கிற அளவுக்கு வடவராட்சி துணிந்து விட்டதால் இந்திய ஆட்சி தமிழ்நாட்டில் கூடாது என்கிற எண்ணம் எங்களுக்கு வலுப்பட்டு விட்டது.
ஆகவே, இந்திய தேசியக் கொடியைக் கொளுத்துவது இந்தியக் கூட்டாட்சி என்பதில் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்கச் சம்மதப்படவில்லை என்கிற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதாகும்”. (விடுதலை 20.7.1955) என்று, தம் தேதசியக் கொடி எரிப்புப் போராட்ட நோக்கத்தினை விளக்கினார்.
இதன் எதிரொலியாக அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராசர் மத்திய – மாநில அரசுகள் சார்பாக இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று 30.7.55இல் பெரியாரிடம் ஓர் உறுதி மொழியைக் கொடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட பெரியார் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இந்தப் போராட்ட அறிவிப்பின் விளைவாக, இந்தித் திணிப்பு இல்லை என்ற உறுதிமொழி அறிக்கை விடச் செய்ததுடன், இரயில் நிலையப் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துகளின் பெயரை மேலே பெரியதாக எழுதச் செய்து இந்தியைக் கீழே இறங்கும்படிச் செய்தார்.
இந்தக் கொடி எரிப்புப் பற்றிக் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்திய தேசியக் கொடியை எரித்தால் அது எத்தகைய குற்றம், அதற்கு என்ன தண்டனை என்பதாகச் சட்டத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. வழக்கறிஞர்கள் எல்லாம் சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தும், சட்டத்தில் இப்பேர்ப்பட்ட முக்கிய செய்தி பற்றி எதுவுமே இல்லை. இந்நிலையில், மத்திய அமைச்சர் திரு. கோவிந்த வல்லப பந்த் அவர்கள், “கொடி கொளுத்துவது பெரிய இராஜத் துரோகக் குற்றத்திற்குச் சமமான குற்றமாகும்” என்று கூறினார். மற்ற அரசியல்வாதிகளும் இப்போராட்டத்தைத் தேச விரோத – தேசத் துரோகக் குற்றம். இதனைச் சும்மா விடக் கூடாது. நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றெல்லாம் பேசினர்; எழுதினர்.
இது குறித்து பெரியார் ‘விடுதலை’யில் ஒரு அறிக்கை வெளியிட்டார். நேருவுக்கும் காமராசருக்கு மிடையே என்ன உரையாடல் நிகழ்ந்தது என்பதை விளக்கியது அந்த அறிக்கை. அந்த அறிக்கை:
“தலைவரவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே!
இந்தப் பார்ப்பனர்கள்தாம் இப்படிக் காலிகளைக் கிளப்பி விட்டனர் என்றால் மந்திரி கோவிந்த வல்லப பந்த் அவர்கள், கொடி கொளுத்துவது பெரிய இராஜத் துரோகக் குற்றத்திற்குச் சமமான குற்றமாகும் என்று கூறுகிறாராம். அதன் பிறகுதான் கொடிகொளுத்துவோர் பட்டியலில் ஆயிரக்கணக்கில் பெயர் வந்த வண்ணமிருக் கின்றது. அன்றியும் எந்தச் சட்டப்படி, என்ன குற்றம் என்பதே இதுவரை யாருக்கும் புலப்படவில்லை!
வக்கீல்கள் எல்லாம் சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தும், இப் பேர்ப்பட்ட முக்கிய விசயத்தைப் பற்றிச் சட்டத்தில் ஒன்றுமே தென்படவில்லை. கொடியைக் கொளுத்தினால் என்ன தண்டனை விதிப்பது என்பதைப் பற்றி அரசாங்கமே இன்னமும் சட்டப்பூர்வமாக ஒன்றும் முடிவு செய்யவில்லை.
அப்படி இருக்க, தெருவில் திரியும் ஆண்டி களெல்லாம், கொடியைக் கொளுத்தினால் உயிரைக் கொடுத்துக் காப்பேன் என்று மிரட்டுகின்றனர்.
இவர்கள் மிரட்டலுக்கும், பூச்சாண்டி களுக்கும் நான் பயந்தவனா? அப்படித்தான் என் உயிர் போனாலும் நஷ்டம் என்ன என்று நினைப்பவன். நானும், இந்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வயதைப்போல் மூன்று மடங்கு வயதுடையவன். இதுவரை இருந்தது போதாமல் இன்னமும் உயிருடன் இருக்க ஆசைப்படுபவன் அல்லன், போகிற நேரத்தில் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்துவிட்டுப் போகலாம் என்பதுதான் பெரிய கவலையே தவிர, என் உயிர் போய்விடுமே என்ற கவலை இல்லை.
நானும் இப்போராட்டம் நடந்தே தீரும் – அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே அதற்காகவாவது சில வருடங்கள் சிறைவாசம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல்நிலையைப் பற்றிக்கூடக் கவனிக்காது உடல் நிலையில் பலவிதமான குறைகளி லிருந்தும் டாக்டரிடம் சரி செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன். ஏன்? சொந்தச் செலவில் ஏன் காசை வீணாக்க வேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செலவிலாவது பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆசையுடன் இருந்தேன். ஆனால், தற்சமயம் அவ்வித வாய்ப்புக்கு இடமின்றிப் போய்விட்டது.
நான் விரும்பியபடியே சர்க்கார் உறுதிமொழி கிட்டியது. என்னுடைய விருப்பப்படி சர்க்கார் எப்படிப்பட்ட வாக்குறுதி கொடுத்தால் போதும் என்றேனோ, அதன்படி வாக்குறுதி தந்துவிட்டது. இந்தி மொழி தமிழ்நாட்டார் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்ற ஒரே உறுதிமொழி கொடுத்தால் போதும் என்றேன்.
இவ்வாக்குறுதியை அடைந்த பிறகு, நான் இக்கிளர்ச்சியை நடத்துவதென்பது சரியல்ல; ஆனால், அரசாங்கமும் இதுவரை அப்படித்தான் கூறி வந்திருக்கிறது. பெரிய தலைவர்களும், மந்திரிகளும்கூட இந்தியை விரும்பாதவர்களிடத்தில் கட்டாயப்படுத்துவ தில்லை என்று கூறி வந்துள்ளார்கள். இன்றைக்கு நடைமுறையில் அப்படிக் காண வில்லை. பிரதமர் நேருவிடம் நிலைமையைத் தெளிவுபடுத்தினார் முதலமைச்சர் காமராசர்.
நேரு அவர்கள் கூட காமராசரிடம் அப்படித் தான் கூறினாராம். நாங்கள் எத்தனையோ முறை இந்தியைக் கட்டாயப் படுத்துவதில்லை என்று கூறியுள்ளோமே என்றாராம். முதலில் காமராசரைக் கண்ட வுடனேயே நேரு புன்முறுவல் கொண்டு கிண்டல் செய்தாராம். நாயக்கரும், தாங்களும் கட்டிப் புரளுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். அவ்விதமிருக்க, உங்கள் ஆட்சியிலேயே நாயக்கர் ஏதேதோ செய்யப் போகிறாராமே? என்று கேட்டாராம்.அதற்கு முதன் மந்திரி அவர்கள் எல்லாம் உங்களால் வருவதுதான் என்றாராம். என்ன என்று கேட்டவுடன், இந்தியைக் கட்டாயப்படுத்து வதில்லை என்று பேசிவிட்டு, நடைமுறையில் கட்டாயப் படுத்தப்படுவதைப் பார்த்து ஆத்திரம் பொறுக்காமல் இதுபோன்ற கிளர்ச்சி எல்லாம் செய்கிறார்கள் என்றாராம். பிறகுதான், நம்மிடமா குற்றம் உள்ளது? அப்படி யானால் உடனே சென்று இனி கட்டாயப்படுத்தக் கூடாது என்பதாக அறிக்கை வெளியிடுங்கள் என்றாராம். அதன்படி தான் காமராசர் அவர்களும் அறிக்கை வெளியிடும்படியாகியது.
அந்த அறிக்கையை வெளியிடுமுன் ஒரு சிலர் என்னிடம் கொண்டு வந்து காட்டி, இப்படி வெளியிட்டால் போதுமா என்று என் சம்மதம் கேட்டனர். நானும் அதைப் பார்த்து, ஒரு சில திருத்தங்களைச் சொல்லி, அதன்படி இருந்தால் போது மென்றேன். அப்படியே திருத்தங்கள் செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.
நானும், வெளியிட்ட எனது அறிக்கையை அவர்களிடம் காட்டவும், அவர்களும் போராட்டத்தை விட்டு விட்டதாகவே வெளியிடச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வளவு ஏமாந்தனவனல்லன்! எனவே, நான் தங்கள் அறிக்கையை நடைமுறையில் பார்க்க வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை; ஆனால், அதுவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்பதாகக் கூறி, அதன்படியே போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக இன்றைய அறிக்கையில் வெளியிட்டுள்ளேன்.
இவ்வுண்மைகளை நம் நாட்டுப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்கின்றன. காமராசர் எச்சரிக்கை என்றும், நாயக்கரின் போராட்டம் வாபஸ் என்றும் எழுதுகின்றன. நாட்டின் நலனுக்கென்று உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற அறிவாளிகளைக் கொண்ட பத்திரிகைகள் ஒன்றாவது கிடையாது. எல்லாம் பார்ப்பான் நலனுக்கே – பார்ப்பானுடைய ஆதரவிலேயே – பார்ப்பனர்களாலேயே நடத்தப்படுவதால் பித்தலாட்டமும், பொய்யும், புளுகும், லம்பா டித்தனமுமாகவே நடந்து கொள்கின்றன.
இதனால் நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழியின்றி போய்விடு கின்றது. இப்பத்திரிகைகள் அத்தனையும், நம் நாட்டை வடநாட்டவர்களுக்குக் காட்டிக் கொடுப்பவை களாகத்தாம் உள்ளன”- என்று பெரியார் அறிக்கை விடுத்தார்.
‘விடுதலை’ 3.8.1955
கொடி எரிப்புப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக எதிர்த்தார்கள். குமரன் காப்பாற்றிய கொடி அல்லவா என்று கேட்டார்கள். குமரன் பிடித்தது காங்கிரஸ் கொடி; தேசியக் கொடி அல்ல; தேசியக் கொடியே அப்போது உருவாகவில்லை என்று பெரியார் பதிலளித்தார்.
“கொடியைப் பற்றிப் பிரமாதப்படுத்தியதும், அதை எரித்தால் உலகத்தையே சுட்டெரித்து விடுவதாக வீரப்பிரதாபம் பேசுவதும் வெறும் வீண் பேச்சே தவிர மற்றபடி கொடியை எரித்தால் இவர்களால் என்ன செய்துவிட முடியும்? செய்வதற்கு இவர்கள் கையில் என்ன சரக்கு இருக்கிறது? அரசியல் சட்டத்திலாகட்டும், கிரிமினல் பீனல் கோடிலா கட்டும், கொடிக்கு என்ன மரியாதை இருக்கிறது? அதை எரிப்பதற்கு என்ன தண்டனை இருக்கிறது? அதைச் சொல்லாமல் சும்மா, வீரப்பிரதாபம் பேசுவதில் பயன் என்ன?” என்று கேட்கிறார் பெரியார். (திருச்சியில் 8.10.1955இல் சொற்பொழிவின் ஒரு பகுதி. விடுதலை: 12.10.1955) பெரியாரின் இந்தக் கொடி எரிப்புப் போராட்டம் நாடு முழுவதும் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பெரியார் முழக்கம் 14032019 இதழ்