பி.எட். தேர்வு: ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாபெரும் அநீதி
பட்டதாரி ஆசிரியர் பயிற்சியான ‘பி.எட்.’ வகுப்பில் சேர்வதற்கான தகுதி தமிழ்நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ‘ஆசிரியருக்கான தேர்வு’க்கான மதிப்பெண் தகுதிகளை இப்போது திடீர் என மாற்றி அமைத்திருக்கிறது. திறந்த போட்டியினருக்கு 50 சதவீதம்; பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்த முஸ்லிம்களுக்கு 45 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 43 சதவீதம்; பட்டியலினப் பிரிவு, அருந்ததியினருக்கு 40 சதவீதம் என்று மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேர்வுகளில் இந்த மதிப்பெண் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென்று அடிப்படை மதிப்பெண் தகுதியை முன்னறிவிப்பு ஏதுமின்றி விண்ணப்படிவங்களில் உயர்த்தி அறிவித்தது. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்ற திடீர் அறிவிப்பால் ஏற்கெனவே இந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர்.
கல்வித் துறை ஏன் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மீது இத்தகைய அதிரடித் தாக்குதலை நடத்துகிறது? இந்த 5 சதவீத மதிப்பெண் உயர்வுதான் அவர்களின் ஆசிரியர்களுக்கான தகுதியை நிலைநிறுத்தப் போகிறதா? நுழைவு தேர்வு வேறு வைக்கிறார்களே? சமூகநீதியின் மீது வெறுப்பு கொண்ட பார்ப்பனிய சிந்தனையில் ஊறிப் போயிருக்கும் அதிகார வர்க்கம் இப்படி ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. தமிழக கல்விஅமைச்சர் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டாரா?
பெரியார் முழக்கம் 04042019 இதழ்