தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு 2019 மார்ச் 10இல் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதியன்றே சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் அன்னையின் நூற்றாண்டு விழாவை முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளது. வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மற்றும் மகளிர் தின விழா, பெரம்பூர் பாரதி சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜி தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தேவி, ஜெயஸ்ரீ, வெண்ணிலா, சங்கவி முன்னிலை வகித்தனர். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் பறை இசை, நாடகம், கலை நிகழ்வுகளோடு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மணிமேகலை, புதிய குரல் நிறுவனர் ஓவியா, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர்.
அன்னை மணியம்மையாரின் தியாக வாழ்வு, எளிமை, பெரியாரை 95 ஆண்டுகள் வரை அவர் உடல்நலன் பேணிக் காத்த அர்ப்பணிப்பு, இராவண லீலா நடத்திய தீரம் குறித்து விரட்டுக் குழு பாடகர் சித்திரை சேனல் பாடிய எழுச்சிப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. ஆசிரியர் சிவகாமி தனது உரையில், சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்ற பெண்கள், பெண்ணுரிமை மட்டும் பேசவில்லை; பார்ப்பன எதிர்ப்பு – சமூக நீதி – பகுத்தறிவுக் கொள்கைகளையும் பேசியதை பெருமை யுடன் நினைவு கூர்ந்தார். மணிமேகலை தனது உரையில், பெரியார் தொண்டின் காரணமாகவே நாங்கள் இந்த மேடையில் நிற்கிறோம் என்று குறிப்பிட்டார். மகளிர் நாள் – உழைக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட நாள். ஆனால், இன்று வர்த்தக நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை விரிவாக்கும் நோக்கத்தோடு நுகர்வோர் கலாச்சார நாளாக மாற்றி வரும் அவலத்தை சுட்டிக் காட்டினார்.
ஓவியா தனது உரையில், மணியம்மையார் பெரியார் திருமண ஏற்பாட்டைக் கொச்சைப் படுத்துவோருக்கு பதிலளித்தார். 31 வயது பெண்
70 வயதுடைய ஒரு சமுதாயப் புரட்சித் தலைவரின் வாழ்க்கைக்குள் விரும்பி நுழைந்தது, கணவன்-மனைவி வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல; பெரியார் தனக்குப் பிறகு தனது சொத்துகள் – இயக்கம் – சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும்; சுயநலமிகள் கைகளுக்குள் போய்விடக் கூடாது என்ற கவலை யோடு நம்பிக்கைக்குரிய சட்டபூர்வ வாரிசு ஒருவரைத் தேடிய சூழலில் அந்த இடத்துக்கு அன்னை மணியம்மையார் வந்து சேர்ந்தார். பெண்ணை வாரிசாக தத்து எடுப்பதற்கு அன்றைக்கு இந்து சட்டத்தில் இடமில்லாத நிலையில் மனைவியாக சட்டப்படி பதிவு செய்வதன் வழியாகவே வாரிசாக்க முடியும் என்பதால் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டார்கள். இருவரும் சேர்ந்து எடுத்த அந்த முடிவு அது; திருமணம் அல்ல; திருமணம் என்ற ஏற்பாடு. பெரியார் தன் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கேற்ப அன்னை மணியம்மையார் வாழ்ந்து காட்டினார். பெரியார் மணியம்மையாருக்கு தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துக்களை யும் அரசுக்கும் அறக்கட்டளைக்கும்தான் வழங் கினார். தன்னுடைய உறவினர்களுக்கு வழங்கவில்லை. பெரியார் மறைவுக்குப் பிறகு இயக்கத்துக்குத் தலைமையேற்று இயக்கத்தை வழி நடத்தி 58ஆவது வயதிலேயே முடிவெய்தினார் என்று விரிவாக விளக்கினார்.
விடுதலை இராசேந்திரன் தனது சுருக்கமான உரையில், அன்னையார் கழகத் தலைமையேற்று வழி நடத்திய காலங்களில் பெரியார் திடலிலேயே தங்கி பணியாற்றி அம்மாவுடன் நேரடியாகப் பழகியதை நெகிழ்வோடு நினைவு கூர்ந்தார். கடும் அடக்குமுறை ஏவி விடப்பட்ட அவசர நிலை காலத்தை அவர் துணிவுடன் எதிர் கொண்டதை சுட்டிக் காட்டினார்.
கொளத்தூர் மணி தனது உரையில் பெரியார் இயக்கத்தில் அவரது துணைவியார் நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் போராட்டக் காலங்களில் ஈடுபட்டு அடக்குமுறைகளை எதிர் கொண்டதை சுட்டிக் காட்டினார். மணியம்மையார் அவசர நிலை காலத்திலும் சட்ட எரிப்புப் போராட்ட காலத்திலும் துணிவுடன் செயல்பட்ட நிகழ்வுகளை சுட்டிக் காட்டி, ‘அச்சம் மறந்தவராக வாழ்ந்தார்’ என்று சுட்டிக் காட்டினார்.
நூற்றாண்டு விழா மேடையில் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா நடந்தது. சிவகங்கை மாவட்டம் சங்கங்குளம் கிராமத்தைச் சார்ந்த பி. சேது-
சே. ராஜாத்தி இணையரின் மகன் சே. தினேஷ் குமாருக்கும், தேனி மாவட்டம் பெரியகுளம் கணேசன்-ஜெயா இணையரின் மகள் க. நந்தினிக்கும் மணவிழாவை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதி ஏற்பு கூறி நடத்தி வைத்தார். இது பிற்படுத்தப் பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கு இடையே நிகழும் ஜாதி மறுப்பு திருமணம் என்று கொளத்தூர் மணி அறிவித்தபோது பலத்த கரவொலி எழுந்தது.
எளிமையை வாழ்க்கையாக்கிக் கொண்ட ஜாதி ஒழிப்புப் போராளி அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மேடையில் நடந்த இந்த எளிமை – ஜாதி மறுப்பு மணவிழா, நூற்றாண்டு விழாவுக்கு பெருமையையும் சிறப்பை யும் சேர்ந்தது. அனைவருக்கும் மாட்டுக் கறியுடன் இரவு உணவு வழங்கப்பட்டது. ஏராளமான பொது மக்களும் கழகத்தினரும் விழாவில் பங்கேற்றனர்.
வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நடத்திய விழாவுக்கு உடனிருந்து பணியாற்றி அனைத்துப் பணிகளிலும் துணை நின்ற தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதிக்கு வடசென்னை மாவட்டக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவுப் பரிசும் கருப்புடையும் போர்த்தி சிறப்பு செய்தார். சங்கீதா நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.
பெரியார் முழக்கம் 14032019 இதழ்