கூட்டணிகளின் கடந்தகால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை!
- 5 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு பூஜ்யத்துக்கும் குறைவான மதிப்பெண்தான் போடுவேன் என்றார், ‘பெரிய அய்யா’ மருத்துவர் இராமதாஸ். இப்போது மீண்டும் மோடி பிரதமராக வந்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்கிறார்.
- எடப்பாடி ஆட்சியும் ஜெயலலிதா ஆட்சியும் ஊழலில் திளைத்த ஆட்சி என்று கூறி ஊழல் பட்டியல் தயாரித்து, ஆளுநரிடம் கொடுத்தது ‘பெரிய அய்யா’வின் பா.ம.க. கட்சி. இப்போது குரலை மாற்றிக் கொண்டு 5 ஆண்டுகாலமாக நல்லாட்சி தந்து வருகிறது அ.இ.அ.தி.மு.க. என்கிறார்.
- ‘இதய தெய்வம்’ என்று ‘மூச்சுக்கு மூச்சு’ ஜெயலலிதாவின் ‘நாமத்தை’ உச்சரிக்கும் ‘அம்மாவின் விசுவாசிகள்’ ஜெயலலிதா என்ற ஊழல் குற்றவாளிக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று வழக்குத் தொடுத்த பா.ம.க.வுடன் கைகோர்த்துக் கொண்டு ஓட்டுக் கேட்கிறார்கள். ‘இதய தெய்வம்’ இனி திரும்பி வந்து கேட்காது என்பது நன்றாகத் தெரியும்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டுமா? அல்லது மோடியே பிரதமராக தொடர வேண்டுமா? என்பதைத் தனக்கு தரப்படும் தொகுதிகளை வைத்து தான் முடிவு செய்வேன் என்று ‘சந்தர்ப்பவாத நாடகம்’ நடத்தியது. தே.மு.தி.க., அதன் பிரச்சார பீரங்கிகள் மக்களை மடையர்களாக நினைத்துக் கொண்டு பா.ஜ.க.வுக்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் ஓட்டு கேட்கிறார்கள்.
இதைச் சுட்டிக் காட்டினால், ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைக்கவில்லையா? அவசர நிலை காலத்தில் காங்கிரசை எதிர்த்த தி.மு.க. இப்போது கூட்டணி வைக்கவில்லையா என்று எதிர்வாதம் செய்கிறார்கள்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் துரோகம் செய்தது உண்மை. அந்த துரோகம் செய்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் பா.ம.க.வின் ‘சின்னஅய்யா’ அன்புமணி, கடைசி வரை அமைச்சராக ஒட்டிக் கொண்டிருந்ததும் உண்மை; துரோகத்துக்கு தி.மு.க. துணை நின்றதும் உண்மை. இதையெல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் முன் வைத்து பா.ஜ.க., காங்கிரஸ் என்ற இரண்டு தேசிய கட்சிகளையும் புறக்கணித்து தனித்து தேர்தல் களம் கண்டார் ஜெயலலிதா! 37 நாடாளுமன்ற தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற்றது. மக்கள் தங்கள் தீர்ப்பை இந்த துரோகங்களுக்கு வழங்கி முடித்து விட்டார்கள்.
இப்போது 5 ஆண்டுகால மோடியின் ஆட்சிக்கு மக்களிடம் தீர்ப்பு கேட்கவே இந்தத் தேர்தல். ஜெயலலிதாவும் அவரைத் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்த ‘சரணாகதி’ எடப்பாடி ஆட்சியின் செயல்பாடு களுக்கு மக்கள் தீர்ப்பைக் கேட்பதுதான் இந்த தேர்தல் களம்!
இந்த அடிப்படை உண்மைகளை புறந்தள்ளி விட்டு 1947இல் சுதந்திரம் கிடைத்தபோது காங்கிரஸ் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றியதா? 96இல் யாருடன் கூட்டணி? 88இல் எவருடன் கூட்டணி? அது சந்தர்ப்பவாதமல்லவா என்றெல்லாம் பேசுவது மக்கள் காதில் பூ சுற்றும் வேலை.
10 ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சுவலி வந்தபோது அதற்கான சிகிச்சை தேவைப்பட்டது. பிறகு வயிற்று வலி வந்தபோது அதற்கான சிகிச்சையைத் தானே செய்ய வேண்டும்?
அன்றைக்கு நெஞ்சுவலிக்கு சிகிச்சை என்று ‘கார்டியாலஜி’ மருத்துவரை சந்திக்க ஓடி, அவரது ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்தவர்கள் இன்று வயிற்றுவலி டாக்டரைப் பார்த்து, அவரது ஆலோசனை கேட்கலாமோ? நெஞ்சு வலிக்குப் பார்த்த அதே டாக்டரை வயிற்றுவலிக்குப் பார்க்காதது, சந்தர்ப்ப வாதமல்லவா? என்று கேட்பது சுத்த அபத்தம்!
இப்படித்தான் இப்போது பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க.வுக்காக வாதாடி வரும் ‘அறிவுக் கொழுந்துகளும்’ கேள்விகளைக் கேட்கின்றன.
மக்கள், எந்தக் கருத்தில் நியாயம் இருக்கிறது என்பதை நடைமுறையோடு பொருத்தி எடை போடத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளட்டும்!
பெரியார் முழக்கம் 28032019 இதழ்