உலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல்காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 25 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 உதவியாக வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் இராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். இது நிறைவேற்ற முடியாத திட்டம், அரசியலுக்கான அறிவிப்பு என்று பா.ஜ.க. விமர்சனம் செய்கிறது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன், இத்திட்டம் நிறைவேற்றக் கூடியதே என்று கூறுகிறார். இத்திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பல மாதங்களாகவே பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறது என்ற தகவல்கள் இப்போது வெளி வந்திருக்கின்றன.
உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு பொருளாதார ஆய்வாளர் தாமஸ் பிக்கட்டி இத்திட்டத்தை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்குத் தாம் உதவியதாக இப்போது கூறியிருக்கிறார். ‘தி பிரிண்ட்’ இணைய தள பத்திரிகை, கடந்த புதன்கிழமை இந்த செய்தியைத் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே இத் திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. பிக்கட்டி இத்திட்டத்துக்கு தனது அழுத்தமான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்தியாவில் படித்த ஆளும் வர்க்கம் ஏழை மக்களை மிகவும் மோசமான நிலையிலேயே அழுத்தி வைத்திருக்கிறது என்றும் வேதனைப்பட்டுள்ளார்.
“இந்திய சமூகம் ஜாதிய மோதல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கும் சொத்துகளை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குமான பொருளாதாரத் திட்டங்களை நோக்கி நகர இதுவே சரியான தருணம்” என்று தாமஸ் பிக்கட்டி கூறியுள்ளார்.
பாரீஸ் பொருளாதார ஆய்வகத்தில் இப்போது பிக்கட்டி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்திட்டம் குறித்து அமெரிக்காவின் மாசூசெட்டாஸ் தொழில்நுட்ப நிர்வாகத்தின் பேராசிரியர் அபிஜித் பேனர்ஜி அவர்களுடனும்காங்கிரஸ் கலந்து ஆலோசனை நடத்தியிருக்கிறது. “இத்திட்டத்துக்கான செலவு மதிப்பீடு; திட்டத்தை அமுல்படுத்தும் செயல் முறை குறித்து நாங்கள் இருவரும் காங்கிரஸ் தலைமைக்கு ஆலோசனைகள் வழங்கினோம்” என்று தாமஸ் பிக்கட்டி கூறியுள்ளார்.
பெரியார் முழக்கம் 04042019 இதழ்