மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும், உறவு முறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்வித கொள்கையும், ஆதாரமும் இல்லாமலும் உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரே விதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும், தேசாச்சாரம், ஜாதியாச்சாரம், மதாச்சாரம், பழக்கம், வழக்கம் என்கின்ற பலவகையான மார்க்கத்தைப் பின் பற்றியே உறவு முறைகள் கையாளப்படுகின்றன; யாதொரு நியாயமும் காரணமும் சொல்லப்படாமலே பின்பற்றப்படுகின்றன. அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இம்முறைகள் சிறிதும் தவறாமல் மிகவும் ஜாக்கிரதையாய் கையாளப்பட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகியிருக்கின்றன. ஆகவே, இவைகளையெல்லாம் பார்த்தால் உறவு முறைகள் என்பது அர்த்தமற்ற பழக்க வழக்கத்தில் கட்டுப்பட்டதாகவும், குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவுந்தான் காணப்படுகின்றனவே தவிர அவசியங்களை அறிந்து கொண்டதாகக் கருத முடியவில்லை. உதாரணமாக, சகோதரர்கள் விஷயத்தில், ஆண் சகோதர உறவுக்கு ஒரு முறையும், பெண் சகோதர உறவுக்கு ஒரு முறையும் கையாளப்பட்டு வருகிறது. ஆண் சகோதரன் வயிற்றில் பிறந்த குழந்தைகளை...