ஜவஹர்லால்

ஜவஹர்லால் ஒரு பெரிய வீரர் என்பதும், சமதர்மவாதி என்பதும் பலருடைய அபிப்பிராயம்.

ஜவஹர்லால் எந்த முறையில் வீரர் என்பதும் எந்த முறையில் சமதர்மவாதி என்பதும் தெரிய வேண்டுமானால் பார்ப்பனர்கள் அவரை வீரரென்றும், சமதர்மவாதி என்றும் செய்யும் பிரசாரத்தைத் தவிர வேறு எவ்வித உதாரணமும் காண முடியாது என்றே சொல்லுவோம்.

சமதர்ம சம்பந்தமாய் இதற்கு முன் பேசிய பலருடைய அபிப்பிராயத்தை சிற்சில சந்தர்ப்பங்களில் கிளிப்பிள்ளை போல் பேசி விட்டது ஒன்றைத் தவிர வேறு ஒரு காரியத்திலும் அவர் சமதர்மவாதி என்று சொல்லும்படி இதுவரை நடந்து கொண்டவரல்ல.

அவருடைய சமதர்மம் நடவடிக்கை, சர்க்காரிடம் காந்தியார் தான் இனி சட்டம் மீறுவதில்லை என்றும், சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்றும் வாக்குக் கொடுத்து விடுதலையாகி வந்த “ராஜியை” ஒப்புக் கொண்ட போதே நன்றாய் விளங்கிற்று.

அதை மறுக்க அவர் ஒரு இடத்தில் அது ராஜி அல்லவென்றும், மறுதடவை சண்டைக்கு தயாராவதற்கு ஓய்வெடுத்துக் கொள்ளுவது என்றும் சொல்லி அதன் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுக்க இருந்ததை மறுபடியும் காந்தியார் தலையிட்டு அந்த வாக்குமூலத்தை மாற்றி வைக்க வேண்டி வந்தது. பிறகு அவருடைய ஞானத்தைப் பற்றியும் நாம் அதிகம் கூறவேண்டியதில்லை. தகப்பனார் எலும்பையும் மனைவியார் எலும்பையும் அவர்கள் “ஆத்மா மோக்ஷ”மடைய கங்கையில் கரைத்து கிரியை செய்தது ஒன்றே போதுமானது.

இந்தக் காரணங்களாலேயே மேல்நாட்டு சமதர்மவாதிகள் கூட்டத்திலிருந்து அவர் விலக்கப்பட்டார். இந்த வீரர் தகப்பன் பணக்காரராய் இருந்தார் என்பதற்காகவும், காந்தியாருக்கு வேண்டிய குடும்பஸ்தர் என்பதற் காகவும் இந்தியத் தேயிலையை விட அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறார்.

தமிழ்நாட்டு இளைஞர் பலருக்கு வேறு போக்கிடம் இல்லாமல் போய்விட்டதாலும், காங்கிரசுக்கு அறிவாளிகளிடத்தில் இழிவு ஏற்பட்டு விட்டதாலும், சுயமரியாதைக் கட்சி பார்ப்பனர்களுக்கு எமனாய் போய் விட்டதாலும் இளைஞர்கள் பலர் ஜவஹர்லாலுக்கு ஜே போட்டு தேச பக்தர்களாக வேண்டியதாய் விட்டது. பார்ப்பனர்களும் அவரைக் காட்டி ஏமாற்ற வேண்டியதாய் விட்டது.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் போலவே ஜவஹர்லால் அவர்களும் வாயில் எவ்வளவு சமதர்மமும் பொது உடமையும் பேசினாலும் காரியத்தில் பார்ப்பனீயத்தை விட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது பயித்தியகாரத் தனமேயாகும்.

காங்கிரசை கஷ்ட நிலைமையில் இருந்து காப்பாற்றவே இது சமயம் ஜவஹர்லாலுக்கு காங்கிரஸ் வேஷம் போட்டு மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்களே ஒழிய ஜவஹர்லாலுக்கும், அவர் வாயில் பேசும் கொள்கைக்கும், காங்கிரசுக்கும் கடுகளகாவது சம்பந்தம் இருக்கும் என்று யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.

வேலை இல்லாத் திண்டாட்டத்தின் பலனாக தேசத்தில் பத்திரிக்கைகள் தாராளமாகப் பெருகிவிட்டன.

அனேகர் பத்திரிகையின் பேரிலேயே தங்கள் ஜீவனத்தையும், வாழ்க்கையும் நிர்மாணித்துக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தாருக்கு மதம் தேசம் என்கின்ற இரண்டைத் தவிர வேறு வழியில் வாழவோ, பத்திரிக்கையை நடத்தவோ யோக்கியதை இல்லாமல் போய்விட்டது என்பதோடு, இந்த இரண்டுக்கும் பார்ப்பனர்களே வழிகாட்டிகளாக ஆகிவிட்டதால், அவர்கள் போட்ட தண்டவாளத்தின் மீதே மற்றவர்கள் பத்திரிகை அபிப்பிராயம் என்னும் ரயில் போக வேண்டியிருப்பதால் அவர்களுக்குப் பின் ஜவஹர்லால் இருந்துகொண்டு கோவிந்தாப் போடுவதைத் தவிர மற்றப்படி பத்திரிகைக்காரர்களுக்கு வேலையும் யோக்கியதையும் இல்லாமல் போய்விட்டது. ஆதலாலேயே ஜவஹர்லாலும் வீரராக விளம்பரப்படுத்தப்பட்டு விட்டார்.

ஆனால் இவர் காங்கிரசுத் தலைமை வகிக்க ஆரம்பித்த பிறகுதான் காங்கிரசிலுள்ள அபேதவாதிகளுக்கு காங்கிரசினிடம் சுத்தமாக நம்பிக்கை அற்றுப்போகும்படியான காலம் வந்து அவர்கள் காங்கிரசை விட்டே விலகும்படியான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

வடநாட்டு சமதர்ம வாதிகள் காங்கிரசிலிருந்து விலகுகின்ற காலத்தில் தென்னாட்டு சமதர்ம வாதிகள் காங்கிரசில் அதிக நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பது; சமதர்மத்தின் தன்மையை தென்னாட்டு வாலிபர்கள் உணர்ந்த யோக்கியதையை விளக்குவதாகின்றதே ஒழிய மற்றபடி வேறில்லை.

எது எப்படி இருந்தபோதிலும் தோழர் ஜவஹர்லால் காங்கிரசில் தலைமை வகிப்பதினால் காங்கிரஸ் சற்று அதிகமான விளம்பரத்துக்கு பயன்படுமே ஒழிய யோக்கியமான காரியம் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதோடு புரட்டும், பித்தலாட்டமும், சூழ்ச்சியும், அயோக்கியத்தனங்களும் இப்போதிருப் பதைவிட 1க்கு 1. ஆக பெருகும் என்பது மாத்திரம் நிச்சயமான காரியமாகும்.

உத்தியோகம் பதவி முதலியவைகளை பார்ப்பனர்கள் எப்படியாவது அடையவேண்டும் மற்ற சமூகத்தாரை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதே ஜவஹர்லால் தலைமையில் நடக்கப்போகும் காங்கிரசின் முடிவு என்பதை இப்போதே ஜோசியம் கூறிவிடுகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 22.03.1936

You may also like...