காங்கிரஸ் கபட நாடக முடிவு

சென்ற வாரம் காங்கிரஸ் கூட்டம் என்பது ஏமாற்றுந் திருவிழா என்றும், அதன் நடவடிக்கைகள் கபட நாடகம் என்றும், அதற்கு முக்கிய பாத்திரங்கள் தோழர்கள் காந்தி, ராஜகோபாலாச்சாரி, ஜவஹர்லால் நேரு ஆகிய மூவர்கள் என்றும் விளக்கிவிட்டு அதன் பயன் இன்னதாகத்தான் இருக்கும் என்றும் எடுத்துக்காட்டியிருந்தோம்.

இப்பொழுது அவ்வேமாற்றுந் திருவிழா முடிவடைந்த பிறகு நாம் எழுதியது எவ்வளவு சரி என்பதும், கட்டுப்பாடாக பாமரமக்கள் எப்படி ஏய்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.

தோழர் காந்தியார் பெயரளவில் அங்கு வந்து இருந்து கொண்டு, காரிய அளவில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் இஷ்டப்படியே எல்லாக் காரியங்களும் நடைபெற, ஆயுத அளவில் தோழர் ஜவஹர்லால் உதவியாயிருந்து காரியங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் காங்கிரசில் மூன்று விஷயங்கள் முக்கிய லக்ஷிய விஷயங்களாக பிரஸ்தாபிக்கப்படும் என்றும், அவை இன்ன கதிதான் அடையும் என்றும் சென்ற வாரமே பிரஸ்தாபித்திருந்தோம்.

அதாவது,

  1. சீர்திருத்தத்தை என்ன செய்வது?
  2. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை என்ன செய்வது?
  3. மந்திரி பதவிகளை என்ன செய்வது?

மூன்று விஷயங்களிலும் தலைவர் ஜவஹர்லால் அவர்கள் மிக்க வீரமாகவும் தீரமாகவும் வாயில் மாத்திரம் பேசி இருக்கிறாரே ஒழிய காரியத்தில் அதற்கு நேர்மாறாக நடப்பதற்கே துணைபுரிந்து அந்தப்படியே காரியம் நிறைவேறுவதற்கும் ஏற்றபடி காரியக் கமிட்டியை நியமித்துக் கொண்டார்.

இதிலுள்ள தந்திரம் என்னவென்றால் ஜவஹர்லால் நேரு ஒரு சமதர்ம வீரர் என்ற பெயருக்கு பாதகமில்லாமலும், காங்கிரஸ் பணக்காரர்களுடையவும் பார்ப்பனர்களுடையவும் கையாயுதம் என்பதற்கு விரோதமில்லாமலும் நடந்து கொண்டதேயாகும்.

வகுப்பு தீர்ப்பை காங்கிரஸ் வார்த்தை அளவில் வெறுத்துத் தள்ளி விட்டு அது ஒழிவதற்கு வேலை செய்வதா இல்லையா என்பதை வழ வழ வென்றே பேசி வழ வழப்பாகவே விடப்பட்டு விட்டது.

அதைப்பற்றி எவ்வித தீர்மானமும் செய்வதற்கு தைரியமில்லாமல் கோழைத்தனமாகவும், சூழ்ச்சித்தனமாகவும் விடப்பட்டு இருக்கிறது.

ஆனால் அதைப்பற்றி தலைமை உரையில் பேசும்போது பண்டிதர் சில உண்மையை மறைக்க முடியாமல் பேசியிருப்பதற்கு பாராட்டுகிறோம். அதென்னவென்றால்,

“இப்போதைய நிலைமையில் நமது ராஜீய வாழ்வில் நடுத்தர வகுப்பினரின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் வரையில் வகுப்பு வாதத்தை ஒழித்துவிட முடியாது” என்று பேசியிருக்கிறார். அதோடு

“வகுப்பு தீர்ப்பு ஒழிய வேண்டியதுதான்; ஆனால் இப்போது வகுப்புத் தீர்ப்பு ஒழிய வேண்டுமென்று பேசி அதை ஒழிக்க முயற்சிப்பவர் களால் வகுப்புத் தீர்ப்பு ஒரு நாளும் ஒழியாது. அதற்கு பதிலாக அவர்களது முயற்சிகள் வகுப்புத் தீர்ப்பை நிரந்தரமாக இருக்கும்படிதான் செய்யும்”

“இந்த வகுப்பு பிரச்சினை ஒழிய காங்கிரஸ் செய்து வந்த முயற்சி களை நான் ஏற்றுக்கொள்ள முடியாது”

“வகுப்பு பிரதிநிதித்துவம் ஒழிய வேண்டுமானால் சம்மந்தப்பட்ட வகுப்புகளின் பயத்தையும் சந்தேகத்தையும் ஒழிக்க வேண்டும். மெஜாரிட்டி வகுப்பாருக்கு தாராள புத்தி வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

ஆகவே வகுப்பு வாதத்துக்கு யார் காரணஸ்தர்கள் என்பதும், வகுப்புவாதம் ஒழியாமல் இருக்கும்படி யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

மற்றும் அவர் மத்திய வகுப்பார் என்று குறிப்பிட்டிருப்பது நமது பார்ப்பன ஆதிக்கத்தையே குறிப்பிடுவதாகவும் இருந்து வருகிறது. அதாவது ராஜீய வாழ்வில் அதிக செல்வாக்கு பெற்று இருப்பவர்களையே நடுத்தர வகுப்பார் என்றும், இவர்கள் “பதவி உத்தியோகம் செல்வாக்கு ஆகியவற்றிற்காகவே உயிர் வாழ்பவர்கள்” என்றும் பேசியிருக்கிறார்.

ஆதலால் வகுப்பு வாதம் சுலபத்தில் அடங்கக்கூடியதல்ல என்பதோடு அதற்குக் காரணமும் காங்கிரசாகவே இருக்கிறது என்பதைக் காட்டிவிட்டு அது ஒழிவதற்கு எந்த உபாயமும் சொல்லாமல் ஒரு இடத்தில் அவர்களோடு ஒத்து உழைக்க வேண்டுமென்றும், மற்றொரு இடத்தில் அவர்களோடு ஒத்து உழைக்கக்கூடா தென்றும் குழப்பத்துடனும், வழ வழப்புடனும் பேசி இருக்கிறார்.

இவர் பேச்சுத்தான் இப்படி இருக்கிறது என்றாலும் அது சம்பந்தமான காங்கிரஸ் தீர்மானமும் ஏதும் இல்லாமலும் மூடு மந்திரமாக சூழ்ச்சியாக விட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்ச்சியானது முஸ்லீம்களை ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொள்ளவும் பார்ப்பனரல்லாதாரை தோற்கடிக்கவுமே பயன்படுத்தப் போகிறது.

இனி அடுத்தப்படியாக அரசியல் சீர்திருத்தத்தை என்ன செய்வது என்பது. இது விஷயத்தில் தலைவர் பேச்சு மாத்திரம் வெகு வீர சூரத்தனம் பொருந்தியது தான்.

அதாவது “சீர்திருத்தம் நமது சுயமரியாதைக்கு ஏற்றதல்ல, அது மிகவும் பிற்போக்கானது, அது அடிமை சாசனமாகும்” என்று சொல்லி இருக்கிறார். அதோடு அரசியலை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மான அளவில் காரியம் செய்திருக்கிறார். ஆனால் காரிய அளவில் அது என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்.

காரியத்தில் இது என்ன கதி அடையும் என்பது சட்டசபையைப் பற்றியும், மந்திரி சபையைப்பற்றியும் செய்யும் தீர்மானத்தில் தான் அடங்கி இருக்கிறது.

சட்டசபை பிரவேசத்தை காங்கிரஸ் ஆதரித்துவிட்டது. ஜவஹர்லால் அவர்களும் அதை ஒப்புக்கொண்டுவிட்டார். சட்ட சபைகளை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸில் தீர்மானமும் ஆகிவிட்டது.

ரயில் வண்டியில் உட்கார்ந்து கொண்டு ரயில்வண்டியை பஹிஷ்கரிப்பது போல் சீர்திருத்த சட்டப்படி ஏற்பட்ட சட்டசபையில் உட்கார்ந்துகொண்டு சட்டத்தில் கண்டபடி நடப்பதாகவும், சட்டத்துக்கு பக்தி காட்டுவதாகவும் பிரமாணம் செய்துவிட்டு சீர்திருத்தத்தை உடைக்கிறது என்றால் இது “பௌர்ணமி அன்று அமாவாசை வரும்” என்பது போல் இருக்கிறதே ஒழிய வேறில்லை.

ஆகவே சீர்திருத்தத்தை உடைப்பது என்பது வெளி வேஷமாகவும், பாமர மக்களை ஏய்ப்பதற்காகவும் செய்யப்பட்ட தீர்மானமே ஒழிய, காரியத்தில் அதை ஏற்று நடத்துவதே இரகசிய எண்ணமாய் இருக்கிறது. காரணம் காங்கிரசின் பேச்சைக் கேட்க பொதுஜனங்கள் இஷ்டப்படவில்லை என்பதுதான்.

ஏனெனில் காங்கிரசானது இன்று நாட்டில் ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருப்பது பற்றியும், காங்கிரசுக்கு நாட்டில் செல்வாக்கு இல்லை என்பது பற்றியும், நாட்டு மக்களிடம் செல்வாக்கு பெற காங்கிரஸ் ஒரு வேலையும் செய்யவில்லை என்பது பற்றியும் தலைவர் ஜவஹர்லால் அவர்கள் தனது பிரசங்கத்தின் முன் பகுதியில் வண்டி வண்டியாய் பேசி இருக்கிறார்.

அதாவது இன்று காங்கிரஸ் பலவீனமாய் இருப்பதற்கும் அது தோல்வி உற்று வருவதற்கும் காரணம் சொல்லிவரும் போது,

  1. காங்கிரசை மத்திய வகுப்பார் (அதாவது பார்ப்பனர் பர்.) தலைமை வைத்து நடத்துவது இருதலைக் கொள்ளியாகிவிடுகிறது.
  2. மத்திய வகுப்பார் சீர்குலைந்ததால் பொதுஜனங்களிடம் இருந்து காங்கிரஸ் பிரிந்துகொள்ள வேண்டியதாயிற்று.
  3. பொது ஜனங்கள் தேவைகள் நமது லக்ஷியமாய் இல்லாமல் மத்திய வகுப்பார் காரியமாகவே காங்கிரஸ் நிர்வாகம் நடந்து வந்தது.
  4. மத்திய வகுப்பார் தொல்லையாலேயே வகுப்புத் தொல்லைகள் ஏற்பட்டது.
  5. பொது மக்கள் உணர்ச்சியை மதிக்கும்படி நாம் காங்கிரசை திருத்திக் கொள்ளவில்லை.
  6. பொதுமக்கள் தேவைகள் காங்கிரசில் உருவான காலத்தில் காங்கிரசிலுள்ள மத்திய வகுப்பாருக்கு அது பிடிக்காமல் போய்விட்டது.
  7. பொது மக்களுக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லாத மாதிரியில் காங்கிரஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்திருக்கிறது.
  8. காங்கிரசுக்கு பின்னால் இருந்து நடத்துகிறவர்கள் மத்திய தர வகுப்பார்கள்.
  9. காங்கிரஸ் பொது ஜனங்களோடு கூடிப் பழகாமல் இருக்கிறது. ஏனென்றால் பொது ஜனங்கள் நிலையும் மத்திய வகுப்பார் நிலையும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாததாய் இருக்கிறது.
  10. காங்கிரசின் பயனாய் ஏற்பட்ட காரியங்களும் இந்த மத்திய வகுப்பாரால் அடியோடு மக்கிப்போய் விட்டது. காங்கிரஸ் வேர் ஆட்டம் கொடுத்து விட்டது.
  11. காங்கிரஸ் வெறும் கமிட்டிகளை அமைத்து ஆகாயகோட்டை கட்டி வந்தது.
  12. காங்கிரசில் பழம் பெருக்காளிகள் வந்து புகுந்து தங்கள் சுயநலங்களை கவனித்துக் கொண்டார்கள்.
  13. கட்சி பிரதிகட்சிகளும் மிக்க இழிவான காரியங்களும் நடந்து வந்தன.
  14. சமய சஞ்சீவிகளுக்கு காங்கிரஸ் ஆயுதமாக ஆகிவிட்டது.
  15. மான ஈன மில்லாதவர்களுக்கு காங்கிரசில் ஆதிக்கம் பெற இடமேற்பட்டது.

தேசத்தின் தேவைக்கேற்ப காங்கிரஸ் அமைப்பு இல்லாததால் காங்கிரசுக்கும், பொது ஜனங்களுக்கும் சம்மந்தமில்லாமல் போனதோடு காங்கிரஸ் பொதுஜனங்களுடையதாக இல்லாமல் போய்விட்டது என்றும் கடசியாக நன்றாய் விளங்கும்படி பேசியிருக்கிறார். (இந்த மத்திய வகுப்பார் என்பது பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு யார் என்பது இங்கு யோசிக்கத் தகுந்தது)

இந்த ரீமார்க்குகள் ராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி ஆகியவைகளை குறிவைத்தும் காந்தியாரின் முட்டாள்தனத்தை குறித்தும் வெளிப்படுத்தப் பட்டதாகும். இவற்றை நாம் மனமாற ஆதரிக்கிறோம்.

ஆகவே இந்தக் காரணங்களால் சட்டசபையை பஹிஷ்கரிக்கவோ பதவிகளை பஹிஷ்கரிக்கவோ சில ஆசாமிகளுக்கு மாத்திரம் முடியலாமே ஒழிய பொதுஜனங்களால் முடியாது என்று நன்றாய் விளங்கி விட்டதால் பஹிஷ்காரப் பேச்சை விட்டு விட்டு மக்களை வேறு வழியில் ஏமாற்ற வேண்டியதாகிவிட்டது.

காங்கிரசைப்பற்றி நம்மாலும், சுயமரியாதைக்காரர்களாலும் இந்த 10 வருஷ காலமாய் என்ன சொல்லி வரப்பட்டதோ அதேதான் இன்று தோழர் ஜவஹர்லால் தனது தலைமை உரையில் பச்சையாக பேசி இருக்கிறார். (இவைகள் காங்கிரஸ் தேசியப் பத்திரிகைகளில் அதுவும் பார்ப்பனப் பத்திரிகையில் சிறப்பாக தினமணியில் இருந்து குறிப்பிடப்பட்டவைகளாகும்.)

என்றாலும் காங்கிரஸ் விஷயத்தில் மக்களை மதவெறி போல் தேசீய வெறியும் மானங்கெடுவது தெரியாமல் ஆடச் செய்கிறது.

மற்றும் காங்கிரஸ் சமுதாயத் துறையில் யாதொரு வேலையும் செய்யவில்லை என்றும் சமுதாயத் துறையில் தோழர் ஜவஹர்லால் தன் அபிப்பிராயம் வேறு காங்கிரஸ் அபிப்பிராயம் வேறு என்றும் குட்டாகப் பேசி விட்டுவிட்டார்.

இவ்வளவும் செய்து விட்டு பதவி ஏற்பு விஷயத்தில் ஏதாவதொரு முடிவுக்கு வரும்படி காங்கிரசை நிர்ப்பந்தப்படுத்த இஷ்டமில்லாதவராகவே தலைமைப் பதவியை நடத்தியிருக்கிறார்.

இதற்குக் காரணம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் சூழ்ச்சியும் காந்தியார் நிர்ப்பந்தமுமே யாகும்.

பதவி ஏற்பை தள்ளிவைத்து பின்னால் முடிவு செய்யலாம் என்றால் என்ன அருத்தம் என்பது நமக்கு விளங்கவில்லை. மக்களை ஏமாற்றுவதல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.

சட்டசபைக்குச் செல்லுவதற்கும் பதவி ஏற்பதற்கும் தோழர் ஜவஹர்லால் வித்தியாசம் கற்பிப்பது அவருடைய ராஜீய ஞானத்தையும், அபேதவாத ஞானத்தையும் இவ்வளவுதான் என்பதாக அளவு காட்டுகிறது என்றுதான் நினைக்கவேண்டியிருக்கிறதே தவிர வேறில்லை.

பகிஷ்காரக்காரர்கள் சட்டசபையில் போய் என்ன செய்யமுடியும் என்பதை ஜவஹர்லால் அவர்களின் தகப்பனார் தோழர் மோதிலால் நேரு அனுபவ பூர்வமாய் விளக்கிக் காட்டியிருக்கிறார். அவரது மகன் இப்போது அதற்குமேல் வியாக்கியானம் செய்யப் புறப்பட்டது தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள பேதமேயாகும். அதாவது தகப்பன் சாமி என்கின்ற தத்துவமேயாகும்.

வீணாக ஒரு காரியமுமில்லாமல் இந்த காங்கிரசானது திருவிழாப்போல் ஒரு கூட்டம் கூட்டி ஆரம்பம் முதல் கடைசி வரை தந்திரமும் சூழ்ச்சியுமே முக்கிய லக்ஷியமாகக் கொண்டு காரியங்கள் நடத்தப்பட்டிருக்கிறதல்லாமல் ஒருவரிடத்திலாவது உண்மையோ, நல்ல எண்ணமோ, உண்மையான பொதுநல நோக்கமோ இருந்ததாகச் சொல்ல முடியவில்லை.

கடசியில் விளம்பர விஷயம். அதாவது அபேதவாதமும் பேசப் பட்டுவிட்டது. ஆனால் தீர்மானங்களில் அந்த வாசனைக்கே இடமில்லாமல் போய்விட்டது.

இதனால் பாமர மக்கள் “காங்கிரசுக்கு ஜவஹர்லால் வந்து விட்டார். அபேதவாதம் பேசப்பட்டு விட்டது” என்கின்ற பைத்தியக்காரத்தனமான பிதற்றலோடு ஏமாந்து விடுவார்கள் என்பது நிச்சயம்.

அபேதவாதத்தைப்பற்றி பேசும்போதும்,

“இந்திய சுதந்திரத்துக்கு ஆக நான் பாடுபடுவதன் காரணம் அந்நியர் நம்மை அடக்கி ஆளுவதை நான் சகிக்க முடியாமலிருப்பதுதான்”

என்றும் சொல்லிவிட்டு “தேசத்தில் சமுதாய மாறுதலும் பொருளாதார மாற்றமும் ஏற்பட தேச சுதந்திரம் வேண்டும் என்றும், காங்கிரஸ் ஒரு அபேதவாத ஸ்தாபனம் ஆகவேண்டும்” என்றும் பேசி இருக்கிறார்.

இம் மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது என்பது ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

மற்றும் பேசும்போது “இத்தேசத்தில் அபேதவாத எண்ணம் வளர வேண்டுமென்று நான் கூறுகிறேன். ஆயினும் காங்கிரசில் அதை பலவந்தமாகத் திணிக்க நான் ஆசைப்படவில்லை” என்கிறார்.

“சுதந்திரப் போருக்கு இடையூறாக (அபேதவாதத்தை) திணிக்க விரும்பவில்லை” என்கிறார். ஆகவே அபேதவாதம் வேறு, சுதந்திரப் போர் வேறு என்பது அவர் கருத்தென்று விளங்குகின்றது.

கடசியாக அபேதவாதத்துக்காக இப்போது ஒன்றும் செய்ய முடியா தென்றும், அந்த எண்ணத்தை மக்களுக்குள் புகட்டி வைத்தால் உலகப் புரட்சியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஒப்புக் கொள்ளுகிறார்.

ஆகவே இந்தக் காங்கிரசினால் ஏதோ பெரியதொரு காரியம் ஏற்படப்போகிறது, காங்கிரசுக்கு புதிய ஜீவன் ஏற்படப் போகின்றது என்று நினைத்தவர்கள் இதற்கு மேல் ஏமாற்றமடைய முடியாது என்பதற்கு இணங்க பொஸ்ஸ்ஸ்ஸென்று போய்விட்டது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

இனி தோழர் ஜவஹர்லால் அவர்கள் தனது வேலை நடப்பதற்கு காரியக் கமிட்டிக்கு அங்கத்தினர்களை நியமித்திருக்கும் பான்மையோ

“பயித்தியம் தெளிந்துவிட்டது உலக்கை எடுத்துக் கொடு கோவணம் கட்டிக் கொள்ளுகிறேன்” என்ற மாதிரி பழைய வருணாச்சிரம உருவாரங் களையே நியமித்துக் கொண்டார். இது தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் சொல்லுகிற மாதிரி காந்தி கூட்டத்தாரே ஆதிக்கம் வகிக்கும்படி ஆகிவிட்டது.

இது “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாப்பாள்” என்பது போல் காங்கிரசானது முன்னிருக்கும் மோசமான நிலைமையை விட மோசமாக ஆளாகிவிட்டது என்று சொல்லுவதற்கு ஏற்றதானதோடு மற்றும் பாமர மக்களை ஏய்க்க அதிக சவுகரியம் பெற்றுவிட்டது என்பதல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

இந்த நாடகத்தால் நமது வாலிபர்கள் பலர் “நான் கெட்டுப்போகிறேன் பந்தயம் போடுகிறாயா?” என்கின்ற மாதிரியாக கெட்டு பயனற்றுப் போவதுடன் தங்கள் சமூகத்துக்கும் பொதுவாக தாழ்த்தப்பட்ட பிற்பட்ட வகுப்பு மக்களுக்கும் துரோகிகளாகப் போகிறார்கள் என்பதையும் இப்போதே ஜோசியம் கூறுகிறோம்.

மற்ற விஷயம் பின்னால் விளக்குவோம்.

குடி அரசு தலையங்கம் 19.04.1936

 

You may also like...