கிராமப் புனருத்தாரணப் புரட்டு
இப்பொழுது காங்கிரஸ்காரர்களும் சிறப்பாக காந்தியார், ஜவகர்லால் பண்டிதர் முதலியவர்களும் புதிய மார்க்கம் ஒன்று கண்டுபிடித்து இருக் கிறார்கள். தீண்டாமை, மதுவிலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, கதர் ஆகிய காரியங்கள் சுயராஜ்ஜியத்துக்கு மார்க்கம் என்று சொன்னவைகள் இப்பொழுது மக்களின் பகுத்தறிவு என்னும் சண்டமாருதத்தில் சிக்கி சின்னா பின்னப்பட்டுப் போயிற்று. இனி இவைகளின் பேரால் மக்களை ஏய்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. புதிய வழி அதாவது தீண்டாதவர்கள் முன்னேற்றம் என்பதும் ஒரு 20, 30 லக்ஷம் ரூபாய் சம்பாதிக்க முடிந்ததே ஒழிய மற்றபடி அது தீண்டாதவர்கள் இந்து மதம் விட்டு வேறு மதம் புகவேண்டியதுதான் மார்க்கம் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது பார்ப்பனர்களுக்கு சமதர்ம வீரர் என்னும் பண்டித ஜவஹர்லால் நிழலில் வாழவேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் இல்லாமல் போய்விட்டது என்றாலும் புதிய முறையில் மக்களை ஏமாற்ற கிராமப் புனருத்தாரணம் என்கின்ற ஒரு புரட்டைக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அப்புரட்டை வெளியாக்க எழுதிய ஒரு வியாசம் அளவுக்குமேல் பெரியதாக ஆகி விட்டதால் அதை மே மாத பகுத்தறிவில் சுமார் 40 பக்கமாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆகவே மே மாத பகுத்தறிவை 10 பாரங்களாகப் பிரசுரித்திருக்கிறோம். ஆகையால் குடி அரசு சந்தாதாரர்கள் அபிமானிகள் ஒவ்வொருவரும் மே மாத பகுத்தறிவு பத்திரிகை ஒன்று வாங்கி வாசிக்க விரும்புகிறோம். அது ஒரு பெரிய ஆராய்ச்சி வியாசமாகும்.
ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டியதுமாகும்.
குடி அரசு வேண்டுகோள் 26.04.1936