பாண்டியன் ராமசாமி அறிக்கைக் கூட்டம்

 

தலைவரவர்களே! தோழர்களே!!

எங்களுடைய ஒரு சிறு சாதாரண பத்திரிகை விளம்பர அழைப்பை மதித்து இன்று இங்கு இந்த வெயில் காலத்தில் சென்னை முதல் திருநெல்வேலி ஈறாக வெகு தூரத்தில் இருந்து இவ்வளவு பேர்கள் அதாவது 300, 400 பேர்கள் விஜயம் செய்திருப்பதற்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இது எங்களுக்கு மிகவும் பெருமையும், நம்பிக்கையும் கொடுக்கக்கூடிய காரியமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்தக் கூட்டம் பார்ப்பனரல்லாதார் அதாவது தென்னிந்திய நலவுரிமைச் சங்க (ஜஸ்டிஸ்) இயக்கத்தின் சம்மந்தமாய் அழைப்பு அனுப்பி, அவ்வியக்கத்தின் நன்மைக்கு ஏற்ற காரியங்களைச் செய்யவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதை அறிக்கையில் இருந்து நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும்.

ஆனால் அவ்வியக்கத்திற்குச் சம்மந்தப்பட்டவர்கள் அதாவது அவ்வியக்கத்தின் பேரால் பட்டம் பதவி பெற்று, ஆயிரக்கணக்கான சம்பளங்களும், லக்ஷக்கணக்கான பணங்களும், பட்டங்களும் அனுபவித்தவர் களும், அனுபவிப்பவர்களும், அதனாலேயே பிழைப்பவர்களும், பெரு வாழ்வு வாழ்பவர்களும் ஆன பெருமான்கள் யாராவது இன்று இங்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்தால் இந்த 400 பேர்களில் ஒரு 4, 5 பேர்களாவது வந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஆகவே அக்கூட்டத்தார்களுக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தினால் வரும் லாபத்தை அடைவதைத் தவிர, மற்றபடி அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கோ, அல்லது பொது ஜனங்களுக்கு பயன்படும்படிக்கு உழைப்பதற்கோ, அல்லது ஏதாவது உதவி செய்வதற்கோ எவ்வளவு கவலை இருக்கிறது என்பதை இதனால் நாம் உணர்ந்து கொண்டோம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கமானது இன்று பாமர ஜனங்களால் சரியாய் மதிக்கப்படாமல் இருப்பதற்கும், பல காரியங்களில் தோல்வியேற் படுவதற்கும் காரணம் என்ன என்பதும், அதற்குப் பொறுப்பாளிகள் யார் என்பதும் ஒருவாறு இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்குகின்றதல்லவா?

உண்மையாகவே 1930ம் வருஷம் முதல் அதாவது இப்போதைய மந்திரிசபை ஏற்பட்ட காலம் முதல் இயக்கத்துக்காக பாமர மக்களிடம் பிரசாரமே கிடையாது என்பதுடன் சரியான பத்திரிகையும் கிடையாது என்றும் சொல்லுவேன். ஆனால் அது மக்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறது என்பதை நான் மறைக்கவில்லை. அதற்காக நன்றியும் செலுத்துகிறேன்.

எந்த இயக்கம் தான் ஆகட்டும், இயக்கத்தின் பேரால் சிலர் பணமும், பதவியும், பட்டமும் சம்பாதித்துக் கொண்டு இருப்பதை மாத்திரம் பலர் பார்த்துக் கொண்டு இருக்கவும், ஒரு கூட்டத்தார் பொறாமைப்பட்டு விஷமப் பிரசாரம் செய்து கொண்டு இருக்கவும் அதற்கு எவ்வித சாமாதானமும் சொல்லி பாமர மக்களை திருப்திப் படுத்தாமலும், இயக்கத்தால் ஏற்பட்ட உண்மையான நன்மைகளை எடுத்துக் காட்டாமலும் இருந்தால் அப்படிப்பட்ட இயக்கம் எவ்வளவு நல்ல காரியம் செய்திருந்த போதிலும் நாட்டில் வாழ முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பொய்யான விவகாரமானாலும் எதிர் வியாஜ்யம் ஆடாவிட்டால் ஒரு தலைப்பக்ஷமாய் எக்ஸ்பார்டியாய்தானே தீர்மானமாகும். அது போலவே பிரசாரம் செய்யாத காரணமாகவே நமது இயக்கம் பொது ஜனங்களால் சரியானபடி மதிக்கப்படாமல் இருக்கிறது என்பதை உணர்ந்தே 2 வருஷ காலமாய் நாம் பிரசாரம், பிரசாரம் என்று தலையில் அடித்துக் கொண்டோம். அதைப் பதவியிலிருப்பவர்களும், பயனை அனுபவிப்பவர் களும், சிறிதும் லக்ஷ்யம் செய்தவர்களல்ல. இயக்கம் தங்களுடைய சொந்த சொத்தென்றும், மற்றவர்களுக்கு அதில் உரிமை இல்லை என்றும் கருதிக் கொண்டு நம்மை யெல்லாம் ஒரு தீண்டாதவர்கள் போலவே கருதி நடத்தினார்கள்.

இந்த இயக்கம் மந்திரிகளுக்கும் பதவி வேட்டைக்காரருக்கும் மாத்திரமே சொந்த மென்றும், அவர்களுக்காக மாத்திரமே இந்த இயக்கம் இருக்கிறது என்றும் நாங்கள் கருதி இருந்தால் இந்த இயக்கத்தை 10 வருஷத்திற்கு முன்பே சாகவிட்டு இருப்போம். இந்த இயக்கம் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஏழை, தீண்டாத மக்களுக்கும் விடுதலை அளிக்கவே இருக்கிறது என்று நாங்கள் உண்மையாகவே கருதுகிறபடியால் பதவியாளர்களது கொடுமையையும், துரோகத்தையும், சூழ்ச்சியையும், அலக்ஷியத்தையும், அவமதிப்பையும் லக்ஷியம் செய்யாமல் இயக்கத்துக்காக உழைக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

இயக்கப் பதவியாளர்கள் மற்றவர்களை பக்கத்தில் அணுகவிடாமலும், கீழே இறங்கி வந்து பாமர மக்களிடம் பிரசாரம் செய்யாமலும், சரியான பத்திரிகைகள் நடத்தாமலும் இருப்பதன் காரணம் இயக்கம் பரவி செல்வாக்குப் பெற்று விட்டால் வேறு யாராவது பங்குக்கு வந்துவிடுவார்களே என்கின்ற பயம் என்றுதான் நான் கருதுகிறேன்.

எப்படி இருந்தபோதிலும் நமக்கு உள்ள பொறுப்புகளை மனதார அலட்சியம் செய்து எதிரிகளுக்கு இடம் கொடுக்க நம் மனது சம்மதிக்காத தாலேயே நாமெல்லோரும் இன்று இங்கு கூடியிருக்கிறோம். இந்த 400 பேர்களிலும் தனியாக ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லக் கூடியவர்கள் 10 பேர் இருக்கலாம். (இந்த சமயத்தில் ஒருவர் 2 அல்லது 3 பேர் தான் என்றார். அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாரோ அவரும் நாங்களும் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்) ஆகவே இதிலிருந்து ஜஸ்டிஸ் கட்சியார் இக் கூட்டத்திற்கு வராவிட்டாலும் சுயமரியாதைக்காரர்கள் எல்லோரும் (ஏதோ இரண்டொருவர் தவிர) பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பற்றும் கவலையும் உள்ளவர்கள் என்பது நன்றாய் விளங்குகின்றது.

சரியானபடி பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யாததாலும் இயக்கத்துக்கு உழைத்துவரும் தொண்டர்களுக்கு சரியான வேலை கொடுக்க முடியாததாலும் அனாவசியமான அபிப்பிராய பேதங்களும், உள் கலகங்களும் நடக்க இடமேற்படுகிறதே ஒழிய, மற்றபடி பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு உழைக்க வேண்டியது சுயமரியாதைக்காரர்களுடைய வேலை அல்ல என்று யாரும் சொல்ல முடியாது.

நம் எதிரிகள் இப்போது நம்மைப் பற்றி அதிகமாகப் பழி கூறி மிக வேகமாக விஷமப் பிரசாரம் செய்யக் காரணம் சமீபத்தில் அதாவது ஒரு வருஷத்துக்குள் வரப்போகும் தேர்தல்களை உத்தேசித்தேயாகும். அதற்குள் நாம் கட்டுப்பாடாக எதிரிகள் விஷமங்களுக்கும், பொய்ப்புக்கும், பழிக்கும் சமாதானம் சொல்லாத பக்ஷம் தேர்தல்களில் பார்ப்பனரல்லாதார்கள் தோல்வி அடைந்து விடுவார்கள் என்பது உறுதியான காரியமாகும்.

ஆகையால் எது எப்படி இருந்த போதிலும் யார் அலட்சியமாய் இருந்த போதிலும் நாம் ஒரு கட்டுப்பாடான, தொடர்ச்சியான பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஆகவே இன்று இங்கு கூடி இருக்கிறோம். இன்று செய்யும் ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் மதித்து அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

பத்திரிகை வேண்டும், பணம் வேண்டும்; தொடர்ந்து வேலை செய்ய தொண்டர்கள் வேண்டும். இவைகளுக்கு வேண்டிய மார்க்கம் செய்வதே இன்றைய வேலையாகும்.

ஆதலால் தயவு செய்து நீங்கள் எல்லோரும் இதற்கு தக்க வழி செய்ய உதவ வேண்டும் என்றும், அனாவசியமான அபிப்பிராய பேதங்களை மறந்து ஒத்து உழைக்க வேண்டும் என்றும் உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தவிர எங்களுடைய அறிக்கையில் இந்த பிரசாரத்தை நடத்துகிற ஸ்தாபனத்தில் அங்கம் பெறுகிறவர் எவ்வித உத்தியோகமும் பதவியும் உள்ளவர்களாகவும், ஆசைப்படுபவர்களாகவும் இருக்கக்கூடாது என்று எழுதியிருந்தோம்.

பல முக்கியமானவர்களும் உண்மையானவர்களுமான தோழர்கள் அந்த அபிப்பிராயம் காரியத்துக்கு கெடுதியானதென்றும், அது அனுபவ சாத்தியமானதல்ல வென்றும், அதனால் எதிரிகளுக்கு இடம் கொடுத்ததாக ஆகிவிடும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கம் சட்டமறுப்பாலோ, பஹிஷ்காரத்தாலோ காரியம் செய்வதல்ல வென்றும் சொல்வதால் நாங்கள் அதை ஒப்புக் கொண்டு எங்கள் அபிப்பிராயத்தை வலியுறுத்தாமல் விட்டு விடுகிறோம். மற்றவர்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை மனம் விட்டு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: 05.04.1936 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பாண்டியன் ராமசாமி அறிக்கைக் கூட்டத்தில் கூட்டம் ஆரம்பிக்கும் போது ஆற்றிய உரை.

தோழர்களே!

இன்றையக் கூட்டம் எதிர்பாராத வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. இக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

இக்கூட்டத்திற்கு வந்தவர்கள் எங்களுக்காகவோ, எங்கள் தாக்ஷண்ணி யத்துக்காகவோ வந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சோர்வு நிலையை உணர்ந்து நம்மைப் போலவே சரி பங்கு கவலை கொண்டு இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களால் ஆனதைச் செய்ய வேண்டும் என்கின்ற உணர்ச்சியின் மீதே வந்திருக்கிறார்கள்.

இன்றைய கூட்ட நடவடிக்கையிலும், தீர்மானங்களிலும் எவ்வித கீச்சு மூச்சு சப்தம் கூட இல்லாமல் ஒரே அபிப்பிராயமாக சகல காரியமும் நடந்ததற்குக் காரணம், எங்கள் நடவடிக்கையும் தீர்மானங்களும் சிறிது கூட ஆக்ஷேபணைக்கு இடமில்லாமல் இருந்ததாலேயே என்று நான் நினைக்க வில்லை. இன்றைய நம் இயக்கத்தின் நிலைமையானது சண்டை போட யாருக்கும் ஆசை அளிக்கவில்லை. ஏனென்றால் இயக்கத்துக்கு செல்வாக்கு தளர்ந்திருக்கிறது, ஆதலால் எவ்வித அபிப்பிராய பேதத்தையும் காட்டாது எல்லோரும் ஒத்துழைத்து பழய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற கவலையும், பொறுப்பும், பெருந்தன்மையும் கொண்ட உணர்ச்சியே யாகும்.

மற்றும் இக்கூட்டம் எனக்கு மற்றொரு தைரியத்தையும் கொடுத்தது. அதாவது சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் வேலை செய்த தோழர்கள் மனம் வேறுபட்டு விட்டார்கள் என்றும், அதனால் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு விட்டதென்றும், இயக்கத் தோழர்களை லக்ஷியம் செய்யாமல் நான் என்னிஷ்டப்படி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் தோழர்களுக்கு என்னிடம் வெறுப்பு ஏற்பட்டு விட்டதென்றும், இதனால் சு.ம. இயக்கம் ஆடிப்போய் விட்டதென்றும் சிலர் பேசிக்கொண்டதும் எதிரிகளின் பத்திரிகைகள் இதை ஆயுதமாகக் கொண்டு விஷமப் பிரசாரம் செய்ததும் என் தகவலுக்கு வந்தது. அதைப்பற்றி நான் சிறிது யோசனை செய்ததும் உண்டு. அதாவது நான் ஏதாவது தப்பான வழியில் செல்கிறேனோ என்று தயங்கினேன். இன்றைய கூட்டத்தையும், இங்குள்ளவர்களது ஒருமனப்பட்ட அபிப்பிராயத்தையும், அவர்களது பொறுப்பையும், கவலையையும் பார்க்கும் போது நாம் செய்தது சரியென்றும், தொடர்ந்து ஊக்கத்துடனும் உறுதியுடனும் வேலை செய்ய வேண்டும் என்றும் எனக்குப் படுகிறது.

ஏனெனில் இன்றைய கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான தோழர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறவர்கள் எல்லாம் எங்கள் அறிக்கையை ஆதரிக்கிறார்கள் என்றே ஏற்படுகிறது. ஆகையால் இனி நம் எதிரிகள் சுயமரியாதைக்காரர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்று விஷமப் பிரசாரம் செய்ய முடியாது.

கமிட்டியில் முக்கியமாக பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரமுகர்களையே நாம் தெரிந்தெடுத்திருக்கிறோம். அவர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமென்றே நம்புகிறோம். கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கு இருக்கிற பொறுப்பை நாம் எந்தக் காரணம் கொண்டும் விட்டுவிட முடியாது.

ஒரு வாரத்துக்குள்ளாகவே நானும் தோழர்கள் பாண்டியனும், சி.டி.நாயகமும், வி.வி.ராமசாமியும் சுற்றுப் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆங்காங்குள்ளவர்கள் கூடிய ஆதரவு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

~subhead

பத்திரிக்கை

~shend

நமக்கு தமிழில் ஒரு தினசரி அவசியம். ஒரு வருஷத்துக்கு ஆவது நடத்தி ஆக வேண்டும். சர்க்காருக்கு மறுபடியும் எழுதினேன். கோயமுத்தூர் கலக்டர் இப்போது கடைசியாக 2000 ரூபாய் ஜாமீன் கேட்டிருக்கிறார். முன்னாலும் குடிஅரசுக்கு ஜாமீன் கட்டி இருக்கிறேன். கூடிய வரை பார்த்து விட்டுக் கட்டியாவது நடத்த வேண்டி இருக்கிறது.

40, 50 ஊர்களுக்கு 100100 பத்திரிகை வீதம் 4, 5 ஆயிரம் பத்திரிகை அனுப்ப வசதி இருக்கிறது. ஆனால் பார்சல் செலவை ஏற்றுக் கொள்ள ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் வேண்டும். வருஷத்துக்கு ஒரு ஊருக்கு 75 ரூபாய்க்கு மேலாகாது. இதற்கு ஆள் கிடைத்தால் மற்ற செலவுகள் வேறு வழிகளில் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால் பத்திரிகை விஷயம் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்றோ நான் முயற்சிக்காமலிருக்கிறேன் என்றோ யாரும் கருதக் கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

பட்டுக்கோட்டையில் அடுத்த மாதம் தொண்டர்கள் மகாநாடு நடக்கப்போகிறது. தொண்டர்கள் யாவரும் அவசியம் அங்குவரவேண்டும். மற்ற வேலைகளை அங்கு ஏற்பாடு செய்யலாம் என்று கருதுகிறேன்.

கடைசியாக நீங்கள் இன்று இத்தனை பேர்கள் வந்து ஒரு நல்ல முடிவுக்கு வர உதவியளித்ததற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: 05.04.1936 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பாண்டியன் ராமசாமி அறிக்கைக் கூட்டத்தில் கூட்டம் முடிவடையும் போது ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 10.05.1936

You may also like...