பார்ப்பனக் கிளர்ச்சி
சென்னை மாகாணத்திலே வருஷந்தோறும் எத்தனையோ பேர் கொலைக் குற்றத்துக்கும், கொள்ளைக் குற்றத்துக்கும் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்காக எந்த சமூகமும் ஒன்றாகத் திரண்டு புரளி செய்தது கிடையாது. பெயர் பெற்ற கருங்குழிப் பிரதேசப் பார்சல் வழக்கில் தோழர் ராமநுஜய்யங்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது தென்னாட்டுப் பார்ப்பன சமூகம் ஒன்றாகத் திரண்டெழுந்தது. சென்னையில் பிரபலம் பெற்ற பார்ப்பன லாயர்கள் எல்லாம் அந்தக் கேசில் கவனம் செலுத்தலாயினர். ஹைக்கோர்ட்டு செஷன்சில் அவ்வழக்கு விசாரணை நடந்தது. மேல் ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்ய விசேஷ அனுமதி வேண்டுமாம். பிரஸ்தாப வழக்கின் போக்குக்கு விசேஷ அனுமதியளிக்கவே இடமில்லையாம். எனினும் விசேஷ அனுமதியளிக்கும் அதிகாரமுடையவர் கிளர்ச்சி செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவராயிருந்ததினால் விசேஷ அனுமதியும் கிடைத்தது. ஹைகோர்ட் புல் பெஞ்சில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹைக்கோர்ட்டு செஷன்ஸ் தீர்ப்பில் தலையிடத் தமக்கு அதிகாரமில்லையென்று புல் பெஞ்சு தீர்ப்பும் பிறந்தது. அப்பால் பிரிவி கௌன்சிலுக்கு அப்பீல் அனுமதி கோரப்பட்டது. அதற்கும் சென்னை ஹைக்கோர்ட்டார் அனுமதியளிக்கவில்லை. உடனே, பிரிவி கௌன்சிலுக்கே நேரடியாக விண்ணப்பம் செய்யப்பட்டது. பிரிவி கௌன்சிலும் கிளர்ச்சிக்காரருக்கு அனுகூலமாக முடிவு கூறவில்லை. அப்பால் சென்னை சர்க்காருக்கு எதிரிக்கு கருணை காட்டும்படி மனுச் செய்யப்பட்டது. அம்முயற்சியும் பலிக்கவில்லை. கடைசியில் வைஸ்ராய்க்கு விண்ணப்பம் செய்யப்பட்டு மரண தண்டனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கிடையில் எதிரிக்கு சிறைச் சாப்பாடு பிடிக்கவில்லையென்றும், பழ உணவு வழங்க வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்யப்பட்டு சர்க்கார் அனுமதியின் பேரில் ராமானுஜய்யங்கார் பழ உணவு உண்டு வருவதாகவே நமது ஞாபகம். எதிரி பெரிய பணக்காரருமல்ல, ஜமீன்தாருமல்ல. லக்ஷக்கணக்காகச் செலவு செய்ய சக்தியுடையவர் களுக்குத்தான் விசேஷ அனுமதி பெறவும் ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்யவும், பிரிவி கௌன்சிலில் விண்ணப்பம் செய்யவும், மாகாண கவர்னருக்கும் வைஸ்ராய்க்கும் கருணை மனு அனுப்பவும், வைஸ்ராயிடம் நேர்முகமாக வாதாட லாயர்களை அமர்த்தவும் முடியும். எனினும் எதிரி ஒரு பார்ப்பனராயிருந்ததினாலும் பார்ப்பன சமூகம் முழுதும் அவர் விஷயத்தில் அநுதாபம் காட்டியதினாலும், லக்ஷக்கணக்காக பீஸ் வாங்கும் பார்ப்பன லாயர்கள் அவருக்காக இனாமாய்ப் பேசவும் முயற்சி செய்யவும் முன் வந்ததினாலும் எந்தக் கொலைக் கேசிலும் உண்டாயிராத கிளர்ச்சியும் பரபரப்பும் தோழர் ராமாநுஜம் கேசில் உண்டாயிற்று. வைஸ்ராயிடம் விண்ணப்பம் செய்து கொண்டது மூலம் தோழர் ராமாநுஜத்தின் மரணதண்டனை ஆயுட்காலச் சிறைத்தண்டனையாக மாறியபிறகுதான் மரணதண்டனையை ரத்து செய்ய மாகாண கவர்னருக்கும் வைஸ்ராய்க்கும் அதிகாரமுண்டென்ற உண்மையை சாமானிய மக்கள் அறியலானார்கள்.
பார்ப்பனப் பத்திரிகைகளும் வக்கீல்களும் ஒன்று சேர்ந்து குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு கிளர்ச்சி செய்ததினால் தோழர் ராமாநுஜம் வழக்கு அமிதமாக விளம்பரமுமாயிற்று. தோழர் ராமாநுஜம் விஷயமாக பார்ப்பனர் கிளர்ச்சி செய்ததையோ, அவரது மரண தண்டனை ஆயுட்கால தண்டனையாக மாறியதையோ இதர சமூகத்தார் ஆட்சேபிக்கவு மில்லை லக்ஷ்யம் செய்யவுமில்லை. ஆனால் தோழர் கோவை ரத்தினசபாபதி கவுண்டரின் சிறைவாச தண்டனையை வைஸ்ராய் ரத்து செய்ததைக் கண்டித்து பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன லாயர்களும், பார்ப்பன மாஜி நீதிபதிகளும் கிளர்ச்சி செய்வது பெரிய ஆச்சரியமாகவே இருக்கிறது. தோழர் ராமாநுஜய்யங்கார் மரண தண்டனையை ஆயுட்காலச் சிறைவாச தண்டனையாக மாற்றிய வைஸ்ராய்தான் தோழர் ரத்தினசபாபதி கவுண்டரின் சிறைத் தண்டனையை ரத்து செய்திருக்கிறார். ராமாநுஜத்துக்கு நியாயம் வழங்கிய வைஸ்ராய் கௌண்டர் விஷயத்தில் மட்டுமா நியாய ரஹிதமாக நடந்துகொள்வார்?
தோழர் கவுண்டர் தண்டனை ரத்து செய்யப்பட்டதினால் எந்தப் பார்ப்பானுக்கு அல்லது பார்ப்பனப் பத்திரிகைக்கு என்ன கேடு வந்துவிட்டது? தோழர் கௌண்டர் தண்டனை ரத்து செய்யப்பட்டதினால் இந்தியாவைக் கடல் கொண்டுவிடப்போகிறதா? பார்ப்பன லாயர்களுக்கும், பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இவ் விஷயத்தில் இவ்வளவு ஆத்திரமுண்டாகக் காரணம் என்ன? தமது கேசின் போக்கை விளக்கி தோழர் கௌவுண்டர் வைஸ்ராய்க்கு மனுச் செய்தார். மனுவைப் பரிசீலனை செய்து வைஸ்ராய் தண்டனையை ரத்து செய்தார். இவ்வளவுதான் சங்கதி. வைஸ்ராய் செய்யும் எத்தனையோ முடிபுகளில் இதுவும் ஒன்றென எண்ணி சும்மாயிராமல் பார்ப்பன லாயர்கள் பத்திரிகைகளில் பத்திபத்தியாய் எழுதுவதும், கிளர்ச்சி செய்வதும், வைஸ்ராய் மீது குற்றம் சாட்டுவதும் குறும்புத்தனமா யில்லையா? தோழர் கௌவுண்டர் தண்டனை ரத்தானது ரத்தானதுதான். ஆயிரம் பார்ப்பன லாயர்கள் கிளர்ச்சி செய்தாலும் வைஸ்ராய் தீர்ப்புக்கு மாற்றமேற்படப் போவதில்லை. இது மூலம் தென்னாட்டு மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில படிப்பினைகள் இருக்கின்றன. பார்ப்பனர்களின் ஜாதிப்பற்று பிரஸ்தாப விஷயத்தினால் நன்கு விளங்குகிறது. தோழர் கௌவுண்டர் வைஸ்ராய்க்குச் செய்து கொண்ட மனுவில் காங்கிரஸ்காரர் தூண்டுதலினால் ஒரு பார்ப்பன போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு ஜோடித்ததாயும் பார்ப்பன ஜூரிகள் பிரமோஷனுக்கு அனுகூலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தாராம். வைஸ்ராய் தீர்ப்பினால் தோழர் கௌவுண்டர் கூறிய காரணங்களை வைஸ்ராய் ஒப்புக்கொண்டு விட்டதாக ஏற்படுவதினால் இனி பார்ப்பன உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகம் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டதாம். பாருங்கள் பார்ப்பனர்களின் ஜாதிப்பற்றை! ஒரு பார்ப்பன இன்ஸ்பெக்டருக்காக இவர்கள் ஏன் இவ்வளவு பரிந்து பேச வேண்டும்? கிளர்ச்சி செய்ய வேண்டும்? கௌவுண்டர் கூறியவைகளையெல்லாம் வைஸ்ராய் நம்பினார் என்பதற்கு என்ன ஆதாரம்? தக்க காரணங்களில்லாமல் வைஸ்ராய் தண்டனையை ரத்து செய்வாரா? பருத்தி நூல்காரர் ஒப்புக் கொள்ளக்கூடிய முறையிற்றான் வைஸ்ராய் தீர்ப்புச் செய்ய வேண்டுமென்று ஏதாவது சட்டமோ சம்பிரதாயமோ இருக்கிறதா? உண்மையில் பார்ப்பனர் போடும் கூச்சல் வெகு வேடிக்கையாகவே இருக்கிறது. பார்ப்பனர் வால் பிடித்துத் திரியும் பார்ப்பனரல்லாதார் இது மூலமாவது பார்ப்பனர்களின் ஜாதிப்பற்றையும் குறும்பையும் அறிந்து கொள்வார்களா?
குடி அரசு கட்டுரை 03.05.1936