பாண்டியன் ராமசாமி அறிக்கை
திருச்சியில் கூட்டம்
26-1-36ந் தேதி குடி அரசில் வெளியான பாண்டியன் ராமசாமி அறிக்கையின் படி கூட்டப்படவேண்டிய கூட்டம் மே மாதம் 3ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் கூட ஏற்பாடு செய்திருக்கும் விஷயம் முன்னமேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அக்கூட்டம் 3536ந் தேதி திருச்சியில் தோழர்கள் டி.பி. வேதாசலம், கே.எ.பி. விஸ்வநாதம் ஆகியவர்கள் முயற்சியில் தென்னூர் பழனிச்சாமி பிள்ளை பங்களாவில் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டம் ஒரு கூட்டத்தாருக்கு முக்கியமானதொரு கூட்டம் என்பதைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை. பார்ப்பனரும் பார்ப்பனக் கூலிகளும் இதை பரிகசிக்கக்கூடும். அது அவர்களது ஜாதிப்புத்தியும் இழி சுபாவமுமாகும்.
பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றத்திற்கு என்றே ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியானது இந்த 20 வருஷ காலமாக தென் இந்தியாவில் எவ்வளவோ வேலை செய்து வந்திருக்கிறது. சமூகத் துறையில் இதுவரை எந்தக் கட்சியாரும் எந்த தனிப்பட்ட பெரியாரும் எந்த அரசாங்கமும் செய்திருக்காத செய்ய நினைக்கவும் இல்லாத அளவு காரியங்களைச் செய்து ஒரு புரட்சியை உண்டாக்கி இருக்கிறது.
அதாவது இந்த பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் பயனாக பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, உத்தியோகம், அரசியல், சமூக இயல்களில் சம்மந்தம் சில சந்தர்ப்பங்களில் ஆதிக்கம் முதலாகியவைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பதோடு பார்ப்பனரல்லாத மக்கள் என்று ஒரு சமூகம் தென்னிந்தியாவில் அனாமதேயமாய், அடிமையாய், இழிஜாதியாய், மிருகங்களிலும் கேவலமாய், மிருகப் பிராயமாய் இருந்தது மாறி இன்று அவர்களும் ஒரு சக்தியுள்ள மக்களாய் சுயமரியாதையில் உணர்ச்சி உள்ளவர்களாய் இருந்து வருகிறார்கள் என்று இந்தியாவுக்கும் உலகத்துக்கும் எடுத்துக் காட்டும்படி செய்திருக்கிறது.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று ஒன்று ஏற்பட்டு இந்த 20 வருஷ காலமாய் இந்த நாட்டில் இவ்வளவு வேலை செய்திருக்கவில்லையானால் இன்று அரசாங்கத்திலோ, காங்கிரசிலோ, ஜஸ்டிஸ் கட்சியிலோ, சுயமரியாதை இயக்கத்திலோ, அல்லது ஸ்தல ஸ்தாபனங்களிலோ மற்றும் வேறுபல காரியங்களிலோ விளம்பரம் பெற்றும், பிரபலம் பெற்றும், ஆதிக்கம் பெற்றும் இருக்கும் பார்ப்பனரல்லாதார்கள் இன்றுள்ள இந்த நிலைமையில் இருந்திருக்க முடியுமா என்பதைக் கவனித்தால் அக்கட்சியின் பெருமையும் அது செய்துள்ள வேலையும் விளங்கும். உண்மையாகவே இன்று பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லையானால் இன்று தேச பக்தர்களாய் சுயமரியாதை வீரர்களாய், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களாய், சமதர்ம அபிமானிகளாய், பார்ப்பனரல்லாத சமூக பிரமுகர்களாய் பல துறைகளில், மேதாவிகளாய் இருந்து வரும் தோழர்களில் 100க்கு 90 பேர்கள் (காந்தியார் இஷ்டப்படி அவரவர் வர்ணாச்சிரமத் தொழில் பாரம்பரியமான தொழில் செய்ய வேண்டும் என்பது போல்) தாலூக்கா சேவகத்திலும் போலீசு கான்ஸ்டேபிளாயும், வாத்தியக்காரராயும், பறை அடிப்பவர்களாகவும், பாதரக்ஷை உற்பத்திக் காரராகவும் உப்பு மிளகாய் பேரீச்சம்பழம் உருண்டை தட்டம் விற்பவராகவும், தூதுவர்களாகவும், கை வண்டி, ரிக்ஷா வண்டி சாரதிகளாகவும் மற்றும் இப்படிப்பட்ட பல தொழில்காரர்களாகவும் இருந்து கொண்டு பார்ப்பானை பூஜித்து அவன் எச்சிலையை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதை ஒழிக்காமலும் சிறிதும் தளர்ச்சி இல்லாமலும் அழுத்தம் திருத்தமாய் எடுத்துரைப்போம்.
இதற்கு என்ன ஆதாரம் என்று யாராவது கேட்பார்களேயானால் அதற்கு ஒரே ஒரு பதில்தான் சொல்லுவோம்.
அதாவது முதலிலே சொல்லப்பட்ட ஆட்கள் அல்லது இவர்களுக்கு (ஞாபகத்துக்கு வராத வரையில்) முன் உள்ள இவர்களது பல தலைமுறை முன்னோர்கள் என்ன காரணத்தால் என்ன தொழிலில் எப்படி வாழ்ந்து வந்தார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் என்பதேயாகும்.
அப்படிப்பட்ட நிலையும் நிர்ப்பந்தமும் உள்ள மக்களின் சமூகத்துக்கு என்று ஏற்பட்ட இயக்கம் இந்த 20 வருட காலமாய் தனது வேலையை கூடிய வரையில் தைரியமாக செய்து வந்திருக்கிறது என்பதை நாம் முதலில் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
அப்படிப்பட்ட இயக்கம் இன்று சிறிது தளர்ச்சி அடைந்திருக்கிறது. சிறிது செல்வாக்கும் குறைந்து வருகிறது. பொது ஜனங்களிடத்தில் ஒரு அளவுக்கு அசூயையும் வெறுப்பையும் கூட பெற்று வருகிறது. இருந்தாலும் இவை யெல்லாம் எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் ஏற்படுவது இயற்கையேயாகும். அதிலும் ஒரு புரட்சிகரமான மக்களின் சுயநலத்துக்கு ஏற்பட்ட கொள்கைகளுக்கு விரோதமான இயக்கத்துக்கு எதிர்ப்பும் தொல்லையும் தளர்ச்சியும் ஏற்படுவது ஒரு நாளும் அதிசயமாகாது.
ஏனெனில் எப்படிப்பட்ட இயக்கமும் மக்களால் தான் நடத்தப்பட வேண்டியதாகும், மக்கள் யோக்கியதை சராசரி பெரும்பாலும் எப்படிப்பட்டது என்பது நாம் அறியாததல்ல.
தனி உடைமை உலகில் தனிப்பட்ட மக்கள் தங்கள் சுயநலத்துக்கு தனிப்பட்ட உணர்ச்சியாலேயே போட்டியோடு வாழும் முறை கொண்ட உலகில் கொள்கை, ஒழுக்கம், நீதி, நன்றி ஆகிய காரியங்களை எதிர்பார்ப்பது நெருப்பு குளிர்ந்திருக்க வில்லையே என்று விசனப்படும் முட்டாள் தனத்துக்கே ஒப்பானதாகும்.
ஆகவே இதுவரையிலாவது இந்த இயக்கம் எப்படி இந்த 20 வருஷமாய் வாழ்ந்து வந்தது என்றுதான் ஆச்சரியப்பட வேண்டுமே யொழிய இந்த 20வது வருஷத்தில் ஏன் இப்போது மாத்திரம் தளர்ச்சி அடைந்து விட்டது செல்வாக்கு குறைய நேரிட்டு விட்டது என்று யாரும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.
ஆதலால் இப்போது அவ்வியக்கத்தில் பிரதான்யம் சம்பாதித்துக் கொண்ட சிலரின் துரோகத்தால் அலட்சியத்தால் நன்றி கெட்ட தனத்தால் அவ்வியக்கம் தளர்வுற்றதானால் மற்ற மக்கள் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டு குறை கூறிக் கொண்டு இருப்பது என்றால் அது துரோகம் செய்த மக்களின் இழி செய்கையை விட மோசமான செய்கை இழிவான செய்கை என்றே சொல்லுவோம்.
மேலே சொன்ன பிரமுகர்களான துரோகக்காரர்கள் துரோகம் செய்தாலும் அவ்வியக்கத்தில் இருந்து கொண்டே இருக்கிற அளவுக்காவது அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவ்வியக்கத்தினாலேயே மனிதன் என்று மற்ற மக்களின் ஞாபகத்துக்கு வரவேண்டியவனாகி பின்பு அவ்வியக்கத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி வெளியில் இருந்து கொண்டு வையும் பார்ப்பனரல்லாதார்கள் அதைவிட மோச மானவர்களாகவும் இழி பிறவிக்காரர்களாகவும் தான் மதிக்கப்பட வேண்டியவர்களாவார்கள். இப்படிப்பட்ட ஜனங்களில் அதாவது இன்று ஜஸ்டிஸ் கட்சியை குறைகூறும் மக்களில் 100க்கு 99 பேர்களுடைய தனிப்பட்ட யோக்கியதையும் நாணயமும் அவர்களது “ஜாதகமும்” “முன் பின் ஜன்மமும்” நாம் அறியாததல்ல.
ஆகையால் இப்படிப்பட்ட இரண்டு கூட்டத்தின் துரோகத்தையும், நன்றி கெட்ட தனத்தையும், தொல்லையையும் சமாளித்து அந்த அதாவது பார்ப்பனரல்லாத இயக்கத்தை தற்காலம் உள்ள நிலையிலிருந்து தப்புவிக்கச் செய்து காப்பாற்றி அது முன் ஜனங்களுக்கு செய்து வந்த நன்மையை மறுபடியும் செய்யும்படியாகச் செய்வதற்கே மேற்குறிப்பிட்ட 3536ந் தேதி கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இவற்றை எழுதுகிறோம்.
இந்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் உள்ள சம்மந்தத்தையும், சம்மந்தமும் தொடர்பும் இருக்க வேண்டிய அவசியத்தையும் இதற்கு முன் பல தடவை நாம் விளக்கி இருக்கிறோம். ஒன்றையொன்று நேசிக்காவிட்டாலும் ஒன்றில்லாமல் ஒன்று வாழ்வது கஷ்டம் என்றும், அதாவது அவற்றின் கொள்கைகள் நிறைவேறப் பெறுவது அசாத்தியம் என்றும் தெரிவித்து வந்திருக்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியில் பலர் சுயமரியாதைக் கட்சியை வெறுக்கலாம், தூற்றலாம். ஆனால் இவர்களின் யோக்கியதை, நாணயம் அவர்களது பார்ப்பனரல்லதார் உணர்ச்சி நன்றியறியும் தன்மை லட்சியம் முதலியவை நாமும் பொது ஜனங்களும் நன்றாய் அறியாததல்ல.
அதுபோலவே சுயமரியாதைக்காரர்களிலும் சிலர் ஜஸ்டிஸ் கட்சியை வெறுக்கவும் சிலர் தூற்றவும் செய்யலாம். அதிலிருப்பது தங்களுடைய சுயமரியாதைக்கு கேடு என்றுகூட சொல்லலாம். அவர்களுடைய அப்படிப்பட்டவர்களுடைய யோக்கியம், லக்ஷியம், நாணயம், வாழ்க்கையின் முன்பின் நிலை, பொறுப்பு, நன்றி அறியும் தன்மை, நடத்தையில் உள்ள கொள்கை முதலிய வெகு சங்கதிகளும் நமக்கும் பொது மக்களில் பலருக்கும் தெரியாததுமல்ல.
இந்த இரு கூட்டங்களின் வாழ்வுக்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தோன்றவில்லை. இது இழிவு படுத்தப்பட்ட கொடுமைபடுத்தப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நன்மைக்கு ஆகவே அவர்களின் மனிதத் தன்மைக்காகவே தோன்றி இரவும் பகலும் அதற்காக உழைத்து வரும் மக்களாலும், இயக்கங்களின் பேரால் எவ்வித சுயநலமும் வாழ்க்கை மார்க்கமும் தேடாத மக்களாலும் துவக்கப்பட்டு அதற்கு ஆகவே உயிர் வாழ்ந்து அதற்கு ஆகவே ஜீவனையும் வாழ்க்கையையும் தத்தம் செய்யும் ஆட்களின் முயற்சியாலேயே வாழ்ந்து வருகிறது.
ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும் ஒன்று சேரக் கூடாது என்று சொல்லியும், அவற்றை தனித்தனியே குற்றம் கூறியும் பிரசாரம் செய்தும் வரும் மக்கள் இரண்டு கூட்டத்திலும் இருப்பதானாலும் பொதுவாக பார்ப்பனரல்லாத அதாவது சமூகத்திலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்கு ஆக உழைக்க வேண்டும் என்கின்றவர்களும் தங்கள் ஓய்வு நேரங்களிலாவது குஷாலுக்கு ஆக இந்த வார்த்தை பேச வேண்டும் என்று கருதுகிறவர்களும் மற்றும் தாங்கள் சுகபோகங்களுக்கு இப்படிப்பட்ட இயக்கங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாவது நினைக்கிறவர்களும் ஆகிய எல்லோரும் இந்த சமயத்தில் சற்று கவலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் மிகவும் வணக்கமாய் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
இயக்கத்தில் முக்கியமாய் உழைக்க வேண்டியவர்களும் அதன் பொறுப்பை வகிக்கவேண்டியவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி 25136ந் தேதி அறிக்கையில் தோழர்கள் பாண்டியனும் ராமசாமியும் விளக்கி இருக்கிறார்கள். ஆதலால் குறிப்பிட்ட மே மாதம் 3ந் தேதி ஞாயிற்றுக் கிழமையன்றைக்கு தென்னாட்டில் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிற பார்ப்பனரல்லாதார் இயக்கத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் அன்பும் கவலையும் கொண்ட மக்கள் பலர் திருச்சிக்கு வந்து நம் முன்னணி வேலையையும் பிரசார முறையையும் விளக்கி வகுத்து தொடர்ச்சியாய் காரியம் செய்ய உதவி அளிக்கவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். கண்ணியமாய் அபிப்பிராய பேதமுள்ள தோழர்களை நாம் சிறிதும் குறைகூற முன்வரவில்லை என்றாலும் அவர்களுடைய கண்ணியமான தொல்லையில் இருந்து இவ்வியக்கங்கள் பாதுகாக்கப்படவேண்டிய முயற்சியை நாம் எடுத்துக் கொள்ளலாமல் இருக்க முடியாது என்பதை தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
கடசியாக நம் அதாவது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு நாம் ஒன்று தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகின்றோம். வாலிபப் பருவம் அபாயகரமான பருவம். சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய வஸ்துப்போல் மிக பத்திரமாய் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். அப் பருவத்தை பொறுப்பற்ற, பயனற்ற, சுயநல, நிலையற்ற, தற்கால விளம்பர காரியங்களுக்கு அடிமைப் படுத்தி விடாமலும் பின்னால் சலிப்பும் துக்கமும் படவேண்டிய காரியங்களுக்குப் பந்தகப்படுத்தி விடாமலும் நன்றாய் ஆய்ந்து ஓய்ந்து பார்த்து அவசியமானதும் நிலையானதும், காரியத்தில் செய்யவும் பயனளிக்கவும் கூடியதுமான காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டுகிறோம்.
புதிய சீர்சிருத்தம் என்பது வெறும் உத்தியோகமயமும் பதவி மயமுமேயாகும். இந்நிலையில் பார்ப்பனரல்லாத ஏழை மக்கள் தொழிலாளி மக்கள் முதலியவர்களிடமிருந்து அரசியல் பேரால் கோடிக்கணக்காய் பொருள் பறித்து நாட்டுக்கு சமூகத்துக்கு யாதொரு பயனும் இல்லாத புல்லுருவி போலும் சமூகத்தை அழிக்கும் க்ஷயரோகக் கிருமி போலும் வாழ்ந்து வரும் பார்ப்பன சமூகமும் அவர்களது கால்களை அலம்பிக் குடித்து உயிர் வாழும் அவர்களது அடிமைகளும் அனுபவிக்கவும் வாழவும் விட்டு விட்டு அதைப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வது போன்ற இழி நிலையும் சுயமரியாதை அற்ற தன்மையும் உலகில் வேறு இல்லை என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
பார்ப்பனரல்லாதாரின் ஒவ்வொரு குடும்பத்திலும் இன்று 2,3,4 பிள்ளைகள் படிக்கின்றன. வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி, வாழ்கையைச் சுருக்கி பிள்ளைகள் படிப்பிக்கப்படுகின்றன. எல்லாம் ஒரே ஒரு அதாவது அது சரியாய் இருந்தாலும் தப்பாய் இருந்தாலும் உத்தியோகம் என்னும் ஒரே ஒரு காரியத்தை உத்தேசித்தே (100க்கு 90 பிள்ளைகள்) படிப்பிக்கப்படுகின்றன.
இன்று இப்படிப்பட்ட குடும்பக்காரர்கள் தேசாபிமானம் சமதர்ம வீரம் என்னும் பேர்களால் அவற்றின் போதையால் பார்ப்பனர்களே சீர்திருத்தத்தில் உள்ள உத்தியோகம் பதவி, அதிகாரம் ஆகிய எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்த இடம் கொடுத்து விட்டால் பிறகு இக்குழந்தைகள், இக் குடும்பங்கள் இவர்களது பின் சந்ததிகள் ஆகியவைகளின் யோக்கியதை என்ன ஆவது என்பதையும் இச் சமூகம் மறுபடியும் தலையெடுக்க எத்தனை காலம் ஆகும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
ஆகையால் ஒவ்வொரு முக்கிய பட்டணங்களில் ஸ்தலங்களில் உள்ள முக்கிய கவலை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் திருச்சி கூட்டத்திற்கு வர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம்.
இக் கூட்டம் நடைபெறுவதற்கு திருச்சி தோழர்கள் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர்களும், டி.பி.வேதாசலம் அவர்களும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொண்டு அவற்றிற்கு ஆன உதவி செய்து வருவதை நாம் மனமாரப் பாராட்டுவதோடு நமது நன்றி அறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 26.04.1936