காஞ்சீபுரம் தமிழர் மகாநாட்டுக்கு

ஈ.வெ.ரா. வேண்டுகோள்

தோழர்களே! காஞ்சீபுரத்தில் ஜுன் கடைசி வாரத்தில் 38வது தமிழர் மாகாண மகாநாடு கூடப்போவதாக அறிகிறேன். அது விஷயமாய் எனக்கு வந்த கடிதங்களையும் குறிப்பாக தோழர் வி. ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் எழுதிய கடிதத்தையும் பார்த்தேன்.

காஞ்சீபுரத்தில் 221125ந் தேதி கூட்டிய 31வது மகாநாடுதான், அதுவும் எனது தோழர் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய மகாநாடுதான் என்னை காங்கிரசை விட்டு விரட்டி சுயமரியாதை இயக்கத் தொண்டையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத் தொண்டையும் செய்யும்படி செய்தது.

எதற்கு ஆக காஞ்சீபுரம் மகாநாட்டை விட்டு வெளியேறினேனோ அந்தக் காரியம் இப்பொழுது தமிழ் மக்களால் சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது என்றாலும் முழுதும் அது கை கூடுவதில் மற்றும் அனேக கஷ்டங்கள் இருந்து வருகின்றன. எதிரிகளின் எதிர்ப்பு முயற்சி ஓய்ந்தபாடில்லை. இதை அனேகர்கள் அதாவது காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களும் உணருகிறார்கள். ஆனால் பல காரணங்களால் அவர்களும் நானும் ஒத்து வேலை செய்ய முடியாமல் இருக்கிறது.

என்னைப் போலவே பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் அக்கரை கொண்டு பட்டமோ, பதவியோ, வருவாயோ எதிர்பார்க்காமல் சுயநலமற்று உழைக்கும் பல தோழர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதை நான் மனப் பூர்வமாக உணர்ந்தும் முன் கூறியதுபோல் பல காரணங்களால் ஒத்துழைக்க முடியாமல் இருந்து வருவதை நான் உணர்கிறேன்.

ஆகவே இது விஷயமாய் எனக்குத் தோன்றுவதை நான் மகாநாடு கூட்டும் பிரமுகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

காஞ்சீபுரம் 38 வது தமிழர் மகாநாடு கூடும் சமயத்தில் 31வது மகாநாடு கூடிய சமயத்தில் செய்தது போலவே சகல கட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்பதாக ஒன்று கூட்டுங்கள் என்று கேட்டுக் கொள்வதேயாகும். அதற்கு தோழர் எஸ். முத்தைய முதலியாரையோ, சி.எஸ். ரத்தினசபாபதி முதலியாரையோ மற்றும் தங்களுக்கு பிடித்தவர்களையோ அல்லது அதற்கு ஆக ஏற்படுத்தும் வரவேற்புக் கமிட்டியார் இஷ்டப்படியோ ஒரு தலைவரை நியமித்து எல்லோருக்கும் அழைப்பு அனுப்புங்கள். அதில் கலந்து பேசி எல்லோருக்கும் திருப்திகரமான ஒரு முடிவை செய்து சகல கட்சிகளிலும் புகுத்தப்பாருங்கள். முடியாத பக்ஷம் என்ன செய்வது என்பதையும் எப்படி நாம் எல்லாம் சேர்ந்து தொண்டாற்றுவது என்பதையும் யோசிப்போம். இது அங்கீகரிக்கப்படுமானால் மேலால் எனது அபிப்பிராயங் களை விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி

குடி அரசு வேண்டுகோள் 10.05.1936

You may also like...