அசம்பளியில் வெண்ணெய் வெட்டிகள்
“அரசியல் என்பது யோக்கியமான வழியில் வாழ்க்கை நடத்தத் தகுதியற்றவர்களின் கடைசி வயிற்றுப்பிழைப்பு மார்க்கம்” என்பதாக மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியிருப்பது யாவரும் அறிந்ததே யாகும்.
அதை நமது நாட்டு பார்ப்பன தேசீய வாதிகள், தேசாபிமானத் தலைவர்கள் என்பவர்கள் மெய்ப்பித்துக்காட்டி விட்டார்கள். வக்கீல் வேலையிலும், வியாபாரத்திலும், தாசித்தொழிலிலும் பிரவேசிக்கின்றவர்களுக்கு எப்படி நாணயம், ஒழுக்கம், சத்தியம் முதலியவைகள் வேண்டியதில்லையோ இருக்க முடியாதோ இருக்கக்கூடாதோ அது போல் நமது தேச பக்த கூட்டங்களுக்கும், தேசீயத் தலைவர்களுக்கும் நாணயமும், ஒழுக்கமும், சத்தியமும் சிறிதுகூட இல்லாமல் போய் விட்டன. இவர்களுக்கு வேண்டிய தெல்லாம் எப்படி பாமர மக்களை ஏய்ப்பது, எந்த இழிவான காரியம் செய்தாவது ஸ்தானங்களைக் கைப்பற்றுவது என்கின்ற இரண்டு காரியங்களேயாகும்.
ஆதலால் நம் தேசீயத் தலைவர்கள் இந்த இரண்டு காரியங்களிலும் முதல் நெம்பர் கெட்டிக்காரர்களாகி இன்று அரசியலில் தலை சிறந்து விளங்குகிறார்கள். இந்தக்கூட்டத்தாரின் தேசாபிமானமும், தேசீய வெற்றியுமெல்லாம் பாமரமக்கள் சரியானபடி ஏய்க்கப்பட்டார்களா, அரசியல் பதவிகள் எல்லாம் தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கு பயன்படும்படி கைப்பற்றப்பட்டனவா என்பதை லக்ஷ்யமாய்க் கொண்டனவேயாகும்.
இதை நமது வாலிபர்களும் ஏழைப் பாமர மக்களும் உணராமல் ஏமாந்து போய் இந்த ஒழுக்கங்கெட்ட, நாணயங் கெட்ட பித்தாலாட்டக் கூட்டத்தாருக்கு அடிமையாகி தங்கள் சமூக நலனைக் கெடுத்து நாசமடைந்து வருகிறார்கள்.
இம்மாதிரியான பித்தலாட்டக் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதே முக்கிய விடுதலை என்றும், மனிதனின் சுயமரியாதை என்றும் கருதி 10, 15 வருஷ காலமாகவே நாம் முயற்சித்து வருகிறோம். அம்முயற்சியைப் பார்ப்பன தேசீய வீரர்களும், தேசீயத் தலைவரும் தொடர்ந்து கட்டுப்பாடாய் குறைகூறி விஷமப் பிரசாரம் செய்து எதிர்த்து வருகிறார்கள். இவ்வெதிர்ப்புகளை அவர்களது அடிமையாய் இருந்தாலொழிய பிழைக்க முடியாது என்று கருதி இருக்கும் சில ஈனர்களும் ஆதரித்து வந்து பார்ப்பனரிடம் பாத தீர்த்தம் பெறுகிறார்கள்.
என்ன தான் குறைகூறி, எவ்வளவுதான் விஷமப் பிரசாரம் செய்து வந்தாலும் ஏதாவது ஒரு காலத்தில் உண்மை வெளிப்படாமல் போவதில்லை.
உதாரணமாக இந்திய சட்டசபை தேர்தலின் போது பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் வெற்றிபெற பார்ப்பன தேச பக்தர்களும், பார்ப்பன தேசீயத் தலைவர்களும் செய்த காரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல அரசியலைப் பற்றி மேனாட்டு அறிஞர் ஒருவர் சொன்னதற்கு மேலாகவே நடந்து காட்டினார்கள். அதனால் மக்கள் நன்றாய் ஏமாற்றப்பட்டார்கள்.
ஓட்டுப் போட்டு விட்டு வீடு திரும்புவதற்கு முன் வெள்ளைக்கார அரசாங்கம் ஆகாயக் கப்பலில் ஓடிவிடும் என்றும், அரிசியும் பருப்பும் அன்றாடம் தபாலில் விலையில்லாமல் வீடு வந்து சேரும் என்றும் தங்கள் அனுபவிக்கும் பூமிகளுக்கு சர்க்கார் வரியே செலுத்த வேண்டியதில்லை என்றும் கருதினார்கள். ஆனால் எலக்ஷன் நடந்து இன்றைக்கு ஒன்றரை வருஷ காலமாச்சுது. என்ன பலன் ஏற்பட்டது? ஒரு வளைந்த குண்டூசிக்காவது பயன்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பதோடு அதை சிந்தித்துப் பார்க்கக்கூட நம் பாமர மக்களுக்கு புத்தியில்லையே என்று விசனப்பட வேண்டி இருக்கிறது.
மக்களின் ஒழுக்கத்தையும் புத்தியையும் கெடுக்க தேவதாசிகளும் கள்ளுக்கடைகளும் எப்படி இருக்கின்றனவோ அதுபோலவே நமது நாட்டின் மக்களின் ஒழுக்கத்தையும், புத்தியையும் மற்றொரு விதத்தில் கெடுக்க காங்கிரசும் தேசீய பத்திரிகைகளும் இருந்து வருகின்றன என்று சொல்ல வேண்டி இருக்கிறது. ஆதலால் இந்த ஸ்தாபனங்களுக்கும் அவைகளை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கும் அழிவு காலம் ஏற்பட்டு நாணயமாயும், யோக்கியமாயும் நடைபெறும்படியான ஸ்தாபனங்களும் பத்திரிகைகளும் ஏற்பட்டாலொழிய மனித சமூகம் ஒரு நாளும் உருப்படப் போவதில்லை என்பது உறுதியாகும்.
அசம்பளி தேர்தலில் வெற்றி பெற்ற தோழர்கள் அசம்பளிக்கு சென்ற ஒவ்வொரு நிமிஷமும் தங்களை விளம்பரஞ் செய்துகொண்டார்கள். அவற்றிற்கு பார்ப்பனப் பத்திரிகைகள் அளவுக்கு மேற்பட்ட விளம்பரங்கள் கொடுத்தன.
1926, 27ல் இக்கூட்டத்தார் சுயராஜ்ஜியக் கட்சியின் பேரால் அசம்பளியில் இருந்து கொண்டு செய்த தடபுடலுக்கு சமமாக, ஆகத்தக்க அளவு செலவு செய்து பார்த்தார்கள். “சர்க்காருக்கு தோல்வி மேல் தோல்வி, காங்கிரசுக்கு வெற்றி மேல் வெற்றி” என்று பறை முழக்கினார்கள். “அரசாங்க மெம்பர்களின் வாய்கள் அடைக்கும்படியாக வீர கர்ஜ்ஜனை செய்தார்கள்.” “3 நாள், 4 நாள் தொடர்ந்து பேசினார்கள்”, “அரசாங்க மெம்பர்கள் தலை குனிந்தார்கள்”, “சத்தியமூர்த்தியின் வீரகர்ஜ்ஜனை, புலாபாயின் மேதாவித்தனம், அவினாசிலிங்கத்தின் ஆணித்தரமான கேள்விகள்” என்றெல்லாம் கொட்டை எழுத்தில் போட்டார்கள். முடிவில் என்ன ஆயிற்று என்பதே அறிவாளிகள் யோசிக்கத்தக்க விஷயமாகும்.
நாடகத்தில் ராஜவேஷக்காரனும், மந்திரி வேஷக்காரனும், சேவுக வேஷக்காரனும் பேசும் சவடால்கள் போலவே முடிந்ததே தவிர வேறு என்னவாவது ஆயிற்று என்று யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.
இந்திய சட்டசபைக்கு இந்த வாய்ப்பேச்சு வீணர்கள் சென்றதின் பயனாக, நடந்திருக்க வேண்டிய காரியங்கள் பல நல்ல காரியங்கள் நடக்க முடியாமல் போயின. சமூக சீர்திருத்த சம்பந்தமான சட்டங்கள் ஏதும் கொண்டு வரவோ, செய்யவோ முடியாமல் போயிற்று. இது பார்ப்பனர்களுக்கும், காந்தியாருக்கும் ஒரு வெற்றி என்று அவர்கள் மகிழலாம்.
தேசத்தின் அருமையான நேரமும், ஏழை மக்களின் ரத்தம் சிந்தி சம்பாதித்த பணமும் வெறும் நாசமாயின. 150 மெம்பர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20ரூபாய் என்றால் தினம் 3000 ரூபாய் தினப்படி ஆய்விட்டது. இவர்கள் ரயில் சார்ஜ் விஷயத்தில் 30 ஆயிரம் ரூபாய் போல் செலவு ஆகிவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளமே இந்த 2, 3 மாதங்களுக்கும் லக்ஷக்கணக்கில் ஆகி இருக்கும். விளம்பரங்களுக்கு ஆகவும், கட்சி துவேஷத்துக்காகவும் விஷமத்தனத்துக்காகவும் கேட்கப்படும் அனாவசிய மானதும், கிருத்துருவமானதுமான கேள்விகளுக்குப்பதில் சேகரிப்பதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவாகும். இவ்வளவும் போதாமல் கட்சி பிரதி கட்சி காரணமாய் சர்க்காருக்கு ஆள் பிடிப்பதற்காக பல உத்தியோகங்கள் பதவிகள் உற்பத்தி செய்வதிலும், வேறு விதமான அனுகூலம் செய்வதிலும் எவ்வளவோ செலவுகளும், அசௌகரியங்களும், அனுபவிக்க வேண்டி வரும். இவ்வளவு செய்தும் ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்கின்றோம்.
தோழர் புலாபாய் தேசாய் நல்ல கெட்டிக்கார வக்கீல் ஆனார், சத்திய மூர்த்தியார் பெயர் பெற்ற வாயாடி ஆனார், சில பச்சகானாக்கள் துப்பட்டிக்கு கொம்பு முளைத்ததுபோல் விளம்பரம் பெற்றார்கள்.
ஆனால் இவர்கள் அரசாங்க மெம்பர்களால் எவ்வளவு முட்டாள்கள் என்றும், தேசநலத்துக்கு விரோதமாய் வந்து விளம்பரத்துக்கு ஆக தேச நேரத்தையும் பணத்தையும் பாழாக்கினார்கள் என்றும் பட்ட வர்த்தனமாக வெளியாக்கப்பட்டு விட்டார்கள்.
இவை ஒருபுறமிருக்க, முக்கியமாக இக்கூட்டத்தார் இந்திய சட்ட சபைக்குச்செல்ல ஓட்டு வாங்கும்போது பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றினார்களா? அல்லது அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்ததையாவது ஞாபகப்படுத்திப் பார்த்தார்களா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம். வாக்குறுதிகளாவன:
- புதிய சீர்திருத்தத்தை உடைத்து உருவில்லாமல் ஆக்கி விடுகிறோம்.
- ஒரு புதிய தேசீய சபையை கூட்டச்செய்து அதன்மூலம் இந்நாட்டு தேவைகளை நிர்ணயித்து அதை அமுலுக்குக் கொண்டுவருவது.
- அடக்குமுறைச் சட்டங்களை ஒழித்து விடுகிறோம் என்று சொன்னார்கள்.
இந்த காரியங்களில் எதையாவது செய்ய முடிந்ததா, செய்ய முயற்சித்தார்களா என்பதே முக்கிய கேள்வியாகும்.
முதலாவது காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கு போதிய பலமில்லாததால் வேறு இரண்டு மூன்று கூட்டத்தாருக்கு தாங்கள் நிபந்தனை இல்லாத அடிமைகள் ஆக வேண்டியவர்களானார்கள்.
அதாவது, வருணாச்சிரம மாளவியா கூட்டத்தாருக்கும் “வகுப்புவாத” ஜின்னா கூட்டத்தாருக்கும், முதலாளித்துவ மோடி கூட்டத்தாருக்கும் அடிமைகளாக வேண்டியவர்களானார்கள்.
இதனால் சீர்திருத்தத்தை உடைக்கவோ, வேறு ஒரு பொது பிரதிநிதித்துவக் கூட்டம் கூட்டவோ யோக்கியம் இல்லாமல் போய் விட்டதுடன், அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க இவர்களுக்கு வாயளப்பைவிட வேறு காரியம் செய்ய முடியாது என்பதும் வெளிப்பட வேண்டியதாயிற்று.
ஆகவே ஒரு அளவு தந்திரத்தாலும், தங்கள் கொள்கைக்கு விரோதமாக சில விட்டுக்கொடுக்கும் இழி தொழிலாலும் தாங்கள் இருப்பதாய்க் காட்டிக்கொண்டதைத் தவிர வேறு ஒரு காரியமும் செய்ய முடியாமல் போய்விட்டது.
சென்னை சட்டசபையில் உள்ள ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களையும், மந்திரிகளையும் என்னவெல்லாம் குறைகூறினார்களோ அக்குறைகளுக் கெல்லாம் இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் ஆளானதோடு, காங்கிரஸ் மெம்பர்கள் ஜனப்பிரதிநிதிகள் அல்ல என்பதை கல்லின் மேல் எழுத்துப் போல் எழுதும்படியாக நடந்து கொண்டுவிட்டார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சுமார் 50, 60 தீர்மானங்கள் வரை காங்கிரஸ்காரர்களால் நிறைவேற்றப் பட்டவைகளில் ஒன்றாவது சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்படாமல், அநேகமாய் எல்லாம் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டன என்றால், காங்கிரசுக்காரர்கள் ஜனப்பிரதிநிதிகளாய் இருக்கத் தகுதி உடையவர்களா, அல்லது சுயமரியாதையுடையவர்களா என்று கேட்கின்றோம்.
சர். ஷண்முகத்தை “தோற்கடித்த வீரர்” தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியார் இன்று எங்கே இருக்கிறார்? அவரது மேல் விலாசம் என்ன? என்பது பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டிய நிலைமையில் மறைந்து விட்டார். அவர் ஏழைப்பாட்டாளி மக்களுக்கு செய்த மகத்தான துரோகத்தைப் பற்றி ஒரு காங்கிரசுக்காரரோ, அல்லது ஒரு தேசீயப் பத்திரிகையோ வாயைக் கூடத் திறக்காமல் சாமி வெங்கடாசலத்தினிடம் பங்கு பெற்றுக் கொண்டன என்றால் “தேசீய வாழ்க்கை என்பது யோக்கியமாய்ப் பிழைக்க முடியாத அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம்” என்பதை பச்சையாக ருஜுப்படுத்தி விட்டார்கள் என்றுதானே கருத வேண்டியிருக்கிறது.
ஆகவே இந்த ஒன்றரை வருஷ இந்திய சட்டசபை வேலை பொது மக்களின் பல லக்ஷ ரூபாய் பாழாகி, தொழிலாள ஏழை மக்களுக்குத் துரோகம் செய்து சில போலிகளும் போக்கில்லாதவர்களும் விளம்பரம் பெற்றார்கள் என்பதோடு முடிவடைந்துவிட்டது.
இதற்குப் பெரும்பாலும் காந்தியாரே பொறுப்பாளியாவார், காந்தி பெயரையும், காந்தியார் கும்பிடையும் காட்டியே இப்போலிகள் ஓட்டு வாங்கினார்கள்.
காந்தியாரின் தோல், வரவர காண்டாமிருகத்தின் தோலுக்கு ஒப்பாய் விட்டதால் அவருக்கும் இதைப்பற்றி யெல்லாம் லட்சியம் இல்லாமல் மகாத்மா பட்டத்தை மாத்திரம் காப்பாற்ற வேண்டியவராய் விட்டார்.
ஆகவே இனியாவது பொதுமக்களுக்கும் ஏழைப்பாட்டாளி மக்களுக்கும் புத்தி வந்து தேர்தல் காலங்களில் வயிற்றுப் பிழைப்பு வியாபார தேசீயத் தலைவர்களையும் தேசீய பத்திரிகைகளையும் நம்பி மோசம் போகாமல் புத்தியாயும், மானமாயும் நடந்து கொள்ளமாட்டார்களா என்கின்ற ஆசையில் இதை எழுதுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 03.05.1936