ஜின்னாவின் உபதேசம்
சமூகமே முதலாவது
“முதலில் சமூக நன்மையை கவனிப்பவனாகவும், இரண்டாவதாக தேச நன்மையைக் கருதுபவனாகவும், மூன்றாவதாகவே சுயநன்மையைக் கருதுபவனாகவும் இருக்கிறவனையே தேர்தல்களில் தெரிந்தெடுங்கள்” என்று தோழர் ஜின்னா அவர்கள் டெல்லி முஸ்லீம்கள் கூட்டத்தில் உபதேசம் செய்திருக்கிறார். அதையே நாமும் சொல்லுகிறோம். மனித சமூகத்துக்குப் பிறகு தான் தேசமாகும். பித்தலாட்டக்காரர்களும், பிழைக்க வேறு வழியற்றவர்களும் தான் மனிதன் மனிதனால் நாயிலுங் கேடாக மதிக்கப்படுவதை மறந்து தேசத்தைப் பற்றி பேசுவான்.
இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்கு கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால் அவன் மனித இழிவை போக்கத்தான் முதலில் பாடுபடுவான். முடியாவிட்டால் அந்த தேசத்தையே நெருப்பு வைத்து பொசுக்கவே பாடுபடுவானே ஒழிய கேவலம் தான் சொந்தப் பிழைப்புக்கு ஆக இவைகளை மறைத்துக் கொண்டு தேச பக்த வேஷம் போடமாட்டான். இதை உணர்ந்து தான் தோழர் ஜின்னா முதலாவது சமூகம் என்றார். இதை போலி தேச பக்தர்களும் கூலி தேசியவாதிகளும் கவனிப்பார்களா? ஒரு நாளும் கவனிக்க மாட்டார்கள்.
நாம் இதைச் சொன்னால் நம்மை சர்க்கார் தாசர்கள், தேசத்துரோகிகள் என்பார்கள். இதை ஜின்னா அவர்கள் சொன்னதால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். ஏனெனில் முஸ்லீம்கள் தங்களை யாராவது குறை கூறினால் அவர்களுக்கு வாயில் புத்தி கற்பிக்க மாட்டார்கள். உடனே குனிந்து நிமிருவார்கள். ஆதலால் வாய் மூடிக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறதோடு அவர்களுக்குள் புகுந்து அவர் சமூக நலனுக்கு முதல் இடம் கொடுத்து மற்றவர்களை ஒழிக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனரல்லாத “இந்து”க்களுக்கு இது புரிவதில்லை.
குடி அரசு துணைத் தலையங்கம் 03.05.1936