ஏமாந்தது யார்? சர்க்காரா? தேசாயா?
காங்கிரஸ்காரர்களுக்கு ஸ்திர புத்தியோ, சுய புத்தியோ, உறுதியான வேலைத் திட்டமோ கிடையாதென்பதற்கு புதுப்புது ருசுக்கள் பிரதி தினமும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
1933-34 வது வருஷத்திய ” இந்தியா” என்ற சர்க்கார் அறிக்கையில், “திடீர் திடீர் என்று ஹரிஜன இயக்கத்துக்குப் பணம் கேட்கப்பட்டதினால் பொதுஜனங்களிடையே வெறுப்புத் தோன்றியதென்றும், இவ்வியக்கம் கேவலம் சமூகக் குறைபாடுகளைப் போக்குவதான சீரிய நோக்கம் மாத்திரம் கொண்ட இயக்கம் என்ற விஷயத்தில் சிலர் சந்தேகித்தது நியாயமாகும் என்றும், பீகார் பூகம்ப நிவாரண நிதிக்குச் சரியான கணக்கு வெளியிடப் படவில்லை யென்றும், நிவாரண விஷயத்தில் காங்கிரஸ்காரர் சர்க்காரோடு ஒத்துழைக்கவில்லையென்றும், அரசியல் நோக்கத்துடனேயே நிவாரண வேலைகள் நடத்தப்பட்டன என்றும் கூறப்பட்டிருப்பது காந்தியாரையும் அவரது இயக்கத்தையும் காங்கிரஸ் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாதையும் அவமதிக்கக் கூடியதாயிருக்கிறதென்று காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர்களும் பெருங்கூச்சல் போட்டதைத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எனவே, சர்க்கார் அறிக்கையைக் கண்டித்து காங்கிரஸ்காரர்களின் மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்திய சட்ட சபையில் ஒரு ஒத்திவைப்பு அவசரப் பிரேரணை கொண்டுவரப் போவதாக “அவசரப் பிரேரணை நிபுணரான” தோழர் சத்தியமூர்த்தி சர்க்காருக்கு நோட்டீசும் கொடுத்தார். ஆனால் அந்த நோட்டீசைப் பார்த்து சர்க்கார் கலங்கவில்லை. சர்க்கார் அறிக்கையில் கூறியுள்ள அபிப்பிராயங்கள் சரியென ருசுப்படுத்த சர்க்காரிடம் போதுமான தஸ்தாவேஜுகள் இருந்ததினால் அவசரப் பிரேரணை கொண்டுவரும் போது ஒரு கை பார்த்துவிடலாமென்று சர்க்காரும் வரிந்து கட்டிக்கொண்டு தயாராயிருந்தார்கள். கடைசியில் அவசரப் பிரேரணை கொண்டு வரும் சமயம் வந்தபோது, தோழர் சத்தியமூர்த்தி காரணம் கூறாமலே பிரேரணையை வாபீஸ் வாங்கிக்கொண்டார். அதைப் பார்த்து அசம்பிளி மெம்பர்கள் திகைப்படைந்தார்களாம். அசம்பிளி காங்கிரஸ் மெம்பர்கள்கூட ஆச்சரியப்பட்டார்களாம். நியாய புத்தியுடைய பத்திரிகைகளும் தோழர் சத்தியமூர்த்தியைக் கண்டித்தன. உடனே நமது வீரர் சத்தியமூர்த்தி ஒரு நொண்டிச் சமாதானம் வெளியிட்டார். “இரண்டொரு காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. இப்பொழுது நிலைமை தீர்மானத்துக்கு சாதகமாக இல்லை. வரவு செலவு திட்ட மானிய விவாத காலத்தில், சாதகமான நிலைமையை உண்டுபண்ணிக் கொண்டு, ஒரு வெட்டுப் பிரேரணை மூலம் இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்புவோம். ” நான் என் அவசரப் பிரேரணையை வாப்பீஸ் வாங்கிக் கொண்டதினால் குடி முழுகிப் போக வில்லை” என்று சமாதானம் கூறி தோழர் சத்தியமூர்த்தி மழுப்பினார். அந்த மழுப்பல் சமாதானத்தைப் பலர் நம்பவில்லையாயினும் வரவு செலவு மான்ய விவாதத்தில் வெட்டுப் பிரேரணை மூலம் காங்கிரஸ்காரர் சாதிக்கப் போவதைப் பார்த்துவிடலாமென்று பொறுமையோடு காத்திருந்தனர். இம்மாதம் 9ம் தேதி அசம்பிளி காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேசாய் 193334வது வருஷ “இந்தியா” என்ற சர்க்கார் அறிக்கையைக் கண்டிக்கு முகத்தான ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, அவ்வறிக்கையில் அவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றிய விஷயங்களையும் விளக்கிக் கூறினார். தீர்மானத்துக்குச் சாதகபாதகமாகவும் பலர் பேசினார்கள்.
கடைசியாக உள்நாட்டு மந்திரி ஸர் ஹென்ரி கிரேய்க்கு விவாதத்துக்கு பதிலளிக்கையில் கூறியதாவது:
“சர்க்கார் அறிக்கையிலுள்ள விஷயங்களுக்கு தற்போதைய விளம்பர டைரக்டரோ அவருக்கு முந்திய டைரக்டர்களோ பொறுப்பாளிகளல்ல. நானே அதற்குப் பொறுப்பாளி. தங்கள் அபிப்பிராயத்தைத் தவிர வேறு அபிப்பிராயமே இருக்கக் கூடாதென்று காங்கிரஸ் கட்சியார் கருதுவது விசித்திரமாக இருக்கிறது. ஒரே விஷயத்தைப் பற்றிப் பல பேர் பல விதமாய்த்தான் அபிப்பிராயப்படுவார்கள். சர்க்கார் அறிக்கையில் எவ்வித வர்ணனையும் கிடையாது; சப்பென்றிருக்கும்படியே எழுதப்பட்டிருக்கிறது. காங்கிரசை ஆதரிக்கும் அநேகம் பத்திரிகைகள் இவ்வறிக்கையைப் பாராட்டி யிருக்கின்றன. ஜனவரி 24ந் தேதி வெளியான “டிரிப்யூன்” பத்திரிகையைப் படித்தபோது எனக்கே வெட்கம் உண்டாயிற்று. காங்கிரஸ்காரர் எவர் எழுதியிருந்தாலும் இவ்வளவு பூர்த்தியாகவும், வன்மையுடனும் எழுதியிருக்க முடியாதென்று அப்பத்திரிகை இவ்வறிக்கையைப் பற்றிக் கூறியிருக்கிறது. முன்போலவன்றி, இவ்வருஷ அறிக்கையில் இந்தியப் பத்திரிகைகளின் அபிப்பிராயங்களை நிறைய மேற்கோள் காட்டியிருப்ப தாகவும் அப்பத்திரிகை பாராட்டியிருக்கிறது.
பல அங்கத்தினர்கள் டில்லிக்கு வந்த பிறகு சர்க்காரைக் கண்டிக்க என்ன விஷயங்கள் இருக்கின்றன என்று தேடியிருக்கிறார்கள். அதன்மேல் இந்த அறிக்கை அகப்பட்டுக் கொண்டது. அதுவரை காங்கிரஸ்காரர்களுக்கு இந்த யோசனை தோன்றவில்லை. ஆதி இந்து இயக்கம் சம்பந்தப்பட்டமட்டில், அறிக்கையிலுள்ள வாசகத்தைத் தவறாக மேற்கோள் காட்டி சில பத்திரிகைகள் ஜனங்களுக்கு ஆத்திரமுண்டாக்கியிருக்கின்றன.
ஆதி இந்து இயக்கம் ஜீவகாருண்ய நோக்கங்களை யன்றி இதர நோக்கங்களையும் கொண்டதாகச் சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள் என்றே சர்க்கார் அறிக்கை கூறியிருக்கிறது. சர்க்கார் சம்பந்தபட்ட மட்டில் காந்தியின் இயக்கத்தில் சர்க்காருக்குத் துளிகூட சந்தேகம் கிடையாது. ஆனால் அறிக்கையில் சிலர் அபிப்பிராயமென்று குறிப்பிட்டதற்கு, போதிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. பத்துப் பன்னிரண்டு பத்திரிகை களிலிருந்து நறுக்கி எடுத்த அபிப்பிராயங்கள் என்னிடமிருக்கின்றன. பிறர் இப்படி அபிப்பிராயம் கூறுகிறார்கள் என்று சர்க்கார் கூறியதற்காக சர்க்காரைக் கண்டிக்கலாகாது.
பீகார் பூகம்ப கஷ்ட நிவாரண நிதி சம்பந்தப்பட்ட மட்டில் ஸ்தல உத்தியோகஸ்தர்களைப் பண்டித ஜவஹர்லால் குறை கூறினார். அதை மேற்படி மாகாணத்தைச் சேர்ந்த சர். சுல்த்தான் அகமது, தோழர் சச்சிதாநந்த சின்ஹா முதலிய பிரமுகர்கள் மறுத்து, ஸ்தல அதிகாரிகளை பாராட்டி ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டார்கள். பூகம்பம் ஏற்பட்டவுடனே ஆரம்ப காலத்தில் சர்க்காரும் காங்கிரஸ்காரரும் ஒத்துழைத்தார்கள். பின்னர் வீடு கட்டுவது, மண்ணை அகற்றுவது ஆகிய முக்கிய இனங்களுக்குக் காங்கிரஸ் நிதியைச் செலவழிக்க முடியாதென்று காங்கிரஸ்காரர்கள் சொல்லி விட்டார்கள். ஆயினும் சர்க்காரின் வீடு கட்டும் திட்டத்துக்கு தங்கள் நிதியிலிருந்து 10 லக்ஷம் ரூபாய் அளிக்கலாமென்று பாபு ராஜேந்திர பிரசாத் கூறினார். ஆனால் காங்கிரஸ் பூகம்பக் கமிட்டி அவரது யோசனையை நிராகரித்து விட்டது.
எனவே காங்கிரசும், சர்க்காரும் ஒத்துழைக்கவில்லை, அவ்வருஷத்தில் செலவழியாமலே காங்கிரஸ் நிதியில் பாதி மீதியிருந்தது பத்திரிகைகள், முக்கியமான பீகார் பத்திரிகைகள், காங்கிரஸ் நிதியைப்பற்றித் தகவல் கிடைக்காததைப் பற்றிக் கண்டித்து எழுதி யிருக்கின்றன. சர்க்கார் அறிக்கையைத் தயார் செய்தவர் கூறியது நியாயம் என்பதற்கு மேற்படி பத்திரிகைகளின் அபிப்பிராயங்களை நான் மேற்கோள்களாகக் காட்ட முடியும். காங்கிரஸ் அறிக்கை மிகத் தாமதித்தே வெளிவந்தது. எனவே சர்க்கார் அறிக்கையில் எவ்வித கெட்ட எண்ணத்தோடும் காங்கிரஸ் பீகார் பூகம்ப நிதியைப்பற்றி அபிப்பிராயம் எழுதவில்லை. நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு தமக்குத் தோன்றிய அபிப்பிராயங்களையே சர்க்கார் அறிக்கையைத் தயாரித்தவர் எழுதியிருக்கிறார்”.
தோழர் புலாபாய் தேசாய்க்கு மேற்கூறியவாறு பதிலளித்த உள்நாட்டு மந்திரி ஹென்றி கிரேய்க்கு தயக்கமின்றியும் அச்சமின்றியும் பேசியிருப்பதைத் தோழர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சர்க்கார் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தவறு என்று கூறவே யில்லை. அவை சரியென்று ருசுப்படுத்தத் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாயும், மார்தட்டிக் கூறியிருக்கிறார். அதே மூச்சில் காந்தியார் இயக்கத்தால் சர்க்காருக்கு துளிகூட சந்தேகமில்லை யென்று அவர் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ்காரருக்குச் சாதகமாகவுள்ளது அந்த ஒரு வாக்கியமே. அது மரியாதைக் குறியான ஒரு சம்பிரதாயப் பேச்சேயன்றி வேறல்ல. காந்தியாரை மிகக் கடுமையாகக் கண்டிப்பவர்களுங்கூட அவரது அந்தரங்க சுத்தியைப்பற்றி சந்தேகப்படுவதில்லை. எனவே காந்தியியக்கத்தைப் பற்றி சர்க்காருக்கு சந்தேகமில்லை யென்று கூறியதினால் சர். ஹென்றி கிரேய்க்கு பணிந்து விட்டாரென்று கூறமுடியாது. சர்க்கார் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தப்பு என்று அவர் ஒப்புக்கொண்டாரா என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். தப்பு என்று ஒப்புக் கொள்வதற்கு பதிலாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தம்மிடம் தக்க ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் சவால் விடுத்தமாதிரி கூறியிருக்கிறார்.
ஸர். ஹென்றி கிரேய்க்கின் இந்த ஆண்மையான பேச்சுக்குத் தோழர் தேசாய் பதிலளித்திருப்பதையும் தமது கண்டனத் தீர்மானத்தை வற்புறுத்தாததையும் கடைசியில் அது தோற்கடிக்கப்பட்டதையும் பார்க்கும் போது காங்கிரஸ்காரரின் பேடித்தன்மையே நன்கு விளங்குகிறது.
“தாங்கள் அறியாமலே சர்க்கார் அநீதி புரிந்திருக்கலாமென்றும் யாரோ சிலர் அபிப்பிராயம் வேறு விதமாயிருந்ததென்று குறிப்பிடுவதே அறிக்கையைத் தயாரித்தவர் நோக்கமென்றும் உள்நாட்டு மந்திரி உணர்ந்திருப்பதை அவர் பேச்சின் தொனியால் காண்கிறேன். காந்தியாரைப் பற்றி உள்நாட்டு மந்திரி நல்ல அபிப்பிராயம் தெரிவித்து விட்டதால் எனது கண்டனப் பிரேரணையை வற்புறுத்துவது அவ்வளவு அவசியமில்லையென நான் கருதுகிறேன்” என்று தேசாய் பல்டியடித்துவிட்டது மிகவும் நாணயமற்ற செயல் என்றும் கூறவும் வேண்டுமா? தோழர் தேசாய் என்ன மழுப்பினாலும் சரி, அவரது பேச்சு அவருடைய பலவீனத்தையே காட்டுகிறது. அவருடைய சமாதானம் ஒரு காங்கிரஸ் அரையணா தினசரிக்குக்கூடப் பிடிக்கவில்லை. உண்மையில் தோழர் தேசாய் பல்டியடிக்க தக்க காரணம் இல்லாமலுமில்லை. சர்க்கார் அறிக்கையிலுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மை என ருசுப்படுத்தும் தஸ்தாவேஜிகளை அசம்பிளியில் படித்துக்காட்டி காங்கிரஸ்காரர்களின் வாயை அடைக்கத் தேவையான முஸ்தீபுகளுடன் உள்நாட்டு மந்திரி ஸர். ஹென்றி கிரேய்க்கு அசம்பிளிக்கு வந்தார். காங்கிரஸ்காரர் மானங்கெடப் போவது அந்தப் புண்ணியவான் ஜின்னாவுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் சாந்தமாக, காந்தியைப்பற்றி சர்க்காருக்கு சந்தேகம் இல்லையென்று கூறி சமாளித்துவிட வேண்டுமென்று தோழர் ஜின்னா உள்நாட்டு மந்திரியைக் கேட்டுக் கொண்டாராம். தோழர் ஜின்னா சுயேச்சைக்கட்சித் தலைவர். அசம்பிளி வெற்றியும் தோல்வியும் அவரது கட்சி ஆதரவையே பொறுத்திருக்கிறது. அவரது உதவியை நாட வேண்டிய சந்தர்ப்பங்களும் சர்க்காருக்கு அடிக்கடி உண்டாகும். அரசியல் ஒரு மாதிரி சொக்கட்டானாட்டந்தானே. எனவே உள்நாட்டு மந்திரியும், மசியவேண்டியதாயிற்று. தோழர் தேசாய்க்கு பதிலளிக்கையில் முக்கியமான விஷயங்களை மறைக்கவில்லையாயினும் பேச்சின் காரத்தைச் சொற்பம் குறைத்துக்கொண்டார். தமது பேச்சுக்கு ஆதாரமான தஸ்தாவேஜிகளையும் அசம்பிளியில் பகிரங்கமாகப் படித்துக்காட்டவில்லை. எனவே சாது தேசாய் மூக்கறுபடாமல் தப்பித்துக்கொண்டார். தமது கண்டனத் தீர்மானத்தைத் தோழர் தேசாய் வற்புறுத்தாததற்கு இதுவே காரணம். தம் கட்சி நியாயமானதாயிருந்தால் தோழர் தேசாய் சும்மா இருந்திருப்பாரா? கையால் ஆகாததனாலேயே வெகு யோக்கியர் போல் நடந்து கொண்டார். கடைசியில் சர்க்காரை ஆட்டிவைக்கப் புறப்பட்ட தேசாய் தலையைத் தொங்கப்போட வேண்டியதாயிற்று. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் தோழர் சத்தியமூர்த்தி வாய்திறக்காமல் இருந்தது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. இவ்விஷயத்தில் தோழர் தேசாய் நடந்து கொண்ட முறை காங்கிரஸ் பத்திரிகைகளுக்கே பிடிக்கவில்லை யென்றால் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்தை நாம் விளக்கிக் கூறவேண்டுமா?
குடி அரசு துணைத் தலையங்கம் 15.03.1936