காங்கிரஸ்காரர் யோக்கியதை
வரப்போகும் அரசியலை நிராகரிப்பதாகக் கூறிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், சீர்திருத்த சம்பந்தமான எத்தகைய வேலையிலும் பங்கு கொள்வதில்லையென்று முடிவுசெய்திருந்தார்கள். மாகாண தொகுதி நிர்ணயக் கமிட்டிகளிலும் அவர்கள் ஸ்தானம் வகிக்கவில்லை. சென்னை மாகாணத் தொகுதி நிர்ணயக்கமிட்டியில் தோழர் ஸி.ஆர். ரெட்டியாருக்கு சென்னை சர்க்கார் வெகு கண்யமாக ஸ்தானம் வழங்கியபோது, சீர்திருத்த சம்பந்தமான வேலைகளில் பங்கு கொள்வதில்லையென்று காங்கிரஸ் தீர்மானித்திருப்பதினால் மாகாணக் கமிட்டியில் ஸ்தானம் வகிக்க முடியா தென்று காரணம் கூறி, தமக்களித்த பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டார்.
இப்பொழுது ஹாமண்டு அறிக்கை விஷயமாக காங்கிரஸ்வாலாக்கள் சர்க்காரோடு ஒத்துழைத்திருக்கிறார்கள். ஹாமண்டு அறிக்கையைப் பரிசீலனை செய்த கமிட்டியில் அசம்பிளி காங்கிரஸ் மெம்பர்கள் அங்கம் வகித்தார்கள். அந்தக் கமிட்டி அறிக்கையை அசம்பிளி ஆதரிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தவரும் காங்கிரஸ் மெம்பரான தோழர் பந்துவே. இம்மாதிரி முன்னுக்குபின் முரணாக நடந்துகொள்ளும் காங்கிரஸ்காரருக்கு எள்ளத்தனையாவது நாணயமோ யோக்கியப் பொறுப்போ இருக்க முடியுமா? என்று கேட்கிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 12.04.1936