மனித சமூக உறவு முறை
மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும், உறவு முறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
அந்நியதிக்கு எவ்வித கொள்கையும், ஆதாரமும் இல்லாமலும் உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரே விதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும், தேசாச்சாரம், ஜாதியாச்சாரம், மதாச்சாரம், பழக்கம், வழக்கம் என்கின்ற பலவகையான மார்க்கத்தைப் பின் பற்றியே உறவு முறைகள் கையாளப்படுகின்றன; யாதொரு நியாயமும் காரணமும் சொல்லப்படாமலே பின்பற்றப்படுகின்றன. அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இம்முறைகள் சிறிதும் தவறாமல் மிகவும் ஜாக்கிரதையாய் கையாளப்பட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகியிருக்கின்றன.
ஆகவே, இவைகளையெல்லாம் பார்த்தால் உறவு முறைகள் என்பது அர்த்தமற்ற பழக்க வழக்கத்தில் கட்டுப்பட்டதாகவும், குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவுந்தான் காணப்படுகின்றனவே தவிர அவசியங்களை அறிந்து கொண்டதாகக் கருத முடியவில்லை.
உதாரணமாக, சகோதரர்கள் விஷயத்தில், ஆண் சகோதர உறவுக்கு ஒரு முறையும், பெண் சகோதர உறவுக்கு ஒரு முறையும் கையாளப்பட்டு வருகிறது. ஆண் சகோதரன் வயிற்றில் பிறந்த குழந்தைகளை தங்கள் தங்கள் குழந்தைகளாகவும், பெண் சகோதரி வயிற்றில் பிறந்த குழந்தைகளைத் தாங்கள் கலியாணம் செய்யத் தக்க பந்தத்துவம் உடையவர்களாகவும் இந்துக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்கள்.
முஸ்லீம் சமூகத்திலோ பெண் சகோதரி மகளை கலியாணம் செய்து கொள்ளுவது தகாது என்றும், சிறிய தகப்பனார், சிறிய தாயார் பெண்ணைக் கலியாணம் செய்வது தகும் என்றும் கருதப்படுகிறது.
சில சமுகங்களில் ஒரு வித ரத்தக் கலப்பும், முன் சம்பந்தமும் இல்லாதிருந்தாலும் குலங்கள் பெயரையும், கோத்திரங்கள் பெயரையும் பார்த்துக் கொண்டு அதன் பேரிலேயே கலவிக்கு கலியாணத்துக்கு முறைகள் வைத்துக் கொள்ளப்படுகின்றன.
கிருஸ்துவர்கள் சமுக உறவுமுறை என்பதும் எவ்விதக் கட்டுப் பாட்டுக்கும் உடன்படாமல் கண்மூடித்தனமாய் ஏதோ ஒரு முறையைப் பின்பற்றப்படுவதாய் இருக்கின்றது.
வேறு நாடுகளில் தன் கூடப் பிறந்த சகோதரிகளையே, அதாவது சயாம் தேசத்தில் ஆரிய மதத்தைப் பின் பற்றுகின்ற அரசர்கள் தன் கூடப்பிறந்த தங்கையையே மணந்து கொண்டு கலவி செய்கிறார்கள். பவுத்த ராமாயணத்தில், ராமனுக்குச் சீதை உடன் பிறந்த தங்கை என்றும், அக்காலத்தில் ஆரியர்களில் ஒரே தாய் தகப்பன் வயிற்றில் பிறந்த அண்ணன் தங்கைகள் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்த தென்றும், அதை அனுசரித்தே தான் இப்போது சயாம் தேசத்தில் நடந்து வருகிறதென்றும் அறியக்கிடக்கின்றது.
மலையாள தேசத்தில் சில பாகங்களிலும், திபேத்து தேசத்திலும் ஒரு பெண் பல புருஷருக்கு மனைவியாய் இருக்கும் வழக்கம் இருந்து வருகிறது. நம்நாட்டில் ஒரு புருஷன் பல ஸ்திரீகளைக் கலியாணம் செய்து கொள்ளுகிறான்.
சில ஜாதிகளில் ஒரு குடும்பத்தில் மகனுக்குக் கட்டப்பட்ட பெண் தகப்பனுக்கும், கலியாணம் செய்து கொண்டவனுடைய மற்ற சகோதரர் களுக்கும் கலவிக்குரிய ஸ்திரீயாகக் கருதப்படுகிறாள்.
நம் நாட்டில் தாசி ஜாதி என்பவர்களிலும், மலையாளத்தில் நாயர் ஜாதி என்பவர்களிலும் குடும்ப சொத்துக்குப் பெண்களே உரிமையானவர்களாக இருக்கிறார்கள். மற்ற சமூகங்களில் குடும்ப சொத்துக்குப் பாத்தியஸ்தர்கள் ஆண்பிள்ளைகள் மட்டுந்தான் என்று கருதப்படுகின்றது.
இஸ்லாம் சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட்டு, பங்கில் வித்தியாசம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பியர்களிலும் உறவு முறை, கலியாண முறை ஆகியவைகளில் இந்தியாவைவிட பல மாறுதல்களும் பல தலை கீழ் முறைகளும் இருக்கக் காண்கின்றோம். அத்தை மக்கள், சிற்றப்பன் மக்கள் ஆகியவர்களை ஒரே மாதிரியாக (“நெவ்யூ” “நெய்ஸ்”)ப் பாவிக்கிறார்கள். அதுபோலவே சகோதரன் மக்களுக்கும், சகோதரி மக்களுக்கும் ஒரேவிதமான உறவு முறை கொண்டாடுகிறார்கள். அழைக்கும் முறையிலும் ஒரே முறை வைத்துத்தான் அழைக்கிறார்கள்.
சில தேசங்களில் பெண்கள் பாடுபட்டு சம்பாதித்து ஆண்களுக்குப் போடுகிறார்கள். அத்தேசங்களிலுள்ள ஆண்கள், இங்குள்ள பெண்களைப்போல, அலங்காரம் செய்துகொண்டு, பெண்களுடைய போகப் பொருளாய் வீட்டில் இருக்கிறார்கள்.
சில விடங்களில் விபசாரத்தனத்துக்காக பெண்களை நீக்கி வைக்கிறார்கள். வேறு சில விடங்களில் அதே போன்ற விபசாரத்தனத்துக்காக ஆண்களை நீக்கி வைக்கிறார்கள். சில விடங்களில் ஆண்கள் விபசாரத்தனத்தை குற்றமாகப் பாவிப்பதில்லை. இன்னுஞ் சில விடங்களில் பெண்கள் விபசாரத்தனமே குற்றமாகப் பாவிக்கப்படுகிறது. மற்றுஞ் சிலவிடங்களில் விபசாரத்தனம் எவ்வளவு இருந்தாலும் அதைப்பற்றிய பேச்சே யில்லாமல் இருந்து வருகிறது. சில வகுப்பார்கள் பெண்களைக் கலியாணமே செய்து கொள்வதில்லை.
சிலர் புருஷன் செத்தால் அதிகமாக அழுகிறார்கள்; ஆனால் பெண்சாதி செத்தால் அதிகமாகத் துக்கப்படுவதில்லை. வேறு சிலர் மனைவி செத்தால் அதிகமாக அழுகிறார்கள் புருஷன் செத்தால் அதிகமாகத் துக்கப்படுவதில்லை. அது போலவே சிலர் ஆண் குழந்தை செத்தால் அதிகமாக அழுகிறார்கள்; வெகு நாளைக்கு விசனப்படுகிறார்கள். ஆனால் அங்கு பெண் குழந்தைகள் மரணத்துக்கு அதிகம் கவலைப்படுவதில்லை. சில விடங்களில் பெண் குழந்தைகள் மரணத்துக்காக அடைகிற விசனமும் துக்கமும் ஆண் குழந்தைகள் சாவை முன்னிட்டு அவ்வளவாக அடைகிறதில்லை. பொதுவாய் சாவுக்காக துக்கப்படுவது என்பது பெரும்பாலும் வயது நிலைமை, இறந்தவர்களால் தங்களுக்கு ஏற்பட்ட ஏற்படும் பலாபலன் முதலியவைகளைப் பொருத்தே உண்டாவதாகயிருந்து வருகிறது.
ஆகவே கலவிக்கும், துக்கத்துக்கும், விபச்சாரத்துக்கும் சொத்துக்கும், கலியாணத்துக்கும் அகில உலக மனித சமூகம் முழுமைக்கும் பொருந்தும் படியான ஒரு முறையோ, வரையறையோ, காரண காரியங்களோ பொதுவாய் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
பழைய சரித்திரம் ஒன்றில், ஒரு தேசத்து அரச முறையில் அந்த அரசனுடைய (ராணி) பெண்சாதி இறந்துவிட்டால் உடனே அந்த அரசனின் மகள் ராணி (மனைவி)யாக ஆகிவிடுகிறாள் என்றும், அரசன் இறந்து விட்டால் உடனே மகன் ராஜ (புருஷ)னாக ஆகி விடுகிறான் என்றும், உண்மையான புருஷன் மனைவியாக ஆகிவிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
இவைகளையெல்லாம் யோசிக்கும்போது கலவி முறை என்பதும், சொத்து முறை என்பதும் பெரும்பாலும் தேசாச்சாரம், மதாச்சாரம் அல்லது ஜாதியாச்சாரம் பழக்க வழக்கம் முதலியவற்றைப் பொருத்திருக்கிறதே தவிர, வேறு நியாயமான நிர்ப்பந்தமான உலகமெங்கும் ஒரே வழி துறையான காரண காரியமான முறை கிடையவே கிடையாது என்றுதான் யூகிக்க வேண்டி யிருக்கிறது. இது விஷயத்தில் மற்ற ஜீவன்களின் இயற்கை சுபாவங்களும் எவ்வித வரையறைக்குக் கட்டுப்பட்டதாகவும் காண முடிவதில்லை.
நமது பழங்காலப் புராணங்களைப் பார்த்தால் தான் பெற்ற மகளையும், தன்னை ஈன்ற தாயையும் புணர்ந்த கதைகள் பல இருக்கின்றன. முறையற்ற விபசாரத்தன சம்பந்தமான கதைகள் எண்ணிறந்தவைகளிருக்கின்றன. குருவின் மனைவி, சகோதரன் மனைவி ஆகியவர்களை கலவி செய்வது குற்றமாகக் கருதப்படவில்லை. பிள்ளைப் பேறுக்காக வேறு புருஷருடன் செய்யுங் கலவி குற்றமாகக் கருதப்படவில்லை. சில விடங்களில் சிஷ்யைகள் குருமார்களுடன் கலவி செய்வது குற்றமாகக் கருதப்படவில்லை. சிலவிடங்களில் பிராமணர்களுடன் கலவி செய்வதைப் பிசகென்று கருதுவ தில்லை. கடவுள்கள் பக்த பெண்களிடம் கலவி செய்த கதை அனந்தம்.
பத்துப் பணத்துக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை என்றும், ஆணும் இடமும் கிடைத்தால் எந்தப் பெண்ணும் பதிவிரதையாய் இருக்க முடியாது என்றும் “தர்ம சாஸ்திரம்” கூறுகின்றன.
பெண் கதியே இப்படியானால் ஆண் கதியைப் பற்றி கூறவேண்டுமா?
ஆகவே இவ் விஷயங்களில் இன்னதுதான் சரி, இன்னது தான் தப்பு என்று குறிப்பிடுவதற்கில்லாமல் இருந்து வருகிறது. ஆனாலும் கலவிக்கான வைத்தியமுறைப்படியும், தேக தத்துவ முறைப்படியும் சில முறைகள் கற்பிக்கப்பட்டிருப்பதை குற்றமென்று சொல்ல இதுவரை எவரும் முற்பட வில்லை. ஆதலால் இதைப் பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றுஞ் சொல்லலாம்.
என்றாலும் கலவியைப்பற்றிய காரியங்களுக்கு பாவம், புண்ணியம், கடவுள் தண்டனை, மானம் என்பவைகள் பொருத்தமாகும்படியாக எவ்வித குறிப்பிட்ட ஒரே மாதிரியான முறையும் கண்டுபிடிக்க முடியாமலிருந்து வருகின்றதென்பது மேற்கண்ட விஷயங்களால் கருதவேண்டியிருக்கிறது.
இந்த உறவு முறை சம்பந்தம், கலவி சம்பந்த மாத்திரமல்லாமல் மற்றும் மனித ஒழுக்க சம்பந்தமான பல காரியங்களிலும் பாவ புண்ணியம் நிர்ணயிக்கவோ, நன்மை தின்மை நிர்ணயிக்கவோ முடியாமல், இதுபோலவே தேசத்துக்கு ஒரு முறை, மதத்துக்கு ஒரு தினுசு, வகுப்புக்கு ஒரு மார்க்கம், ஜாதிக்கு ஒருவிதம் என்பதாகத்தான் இருந்து வருகிறது.
ஆகவே இவ்விஷயங்களை எடுத்துக்காட்டி, மனிதன் எப்படி நடந்து கொள்ளுவதென்னும் கேள்விக்குப் பொது அறிவும் ஆராய்ச்சியுமுள்ள மனிதன் என்ன சொல்ல முடியும் என்று யோசிக்கும்போது “சமயோசிதம்” என்பதைத் தவிர வேறு வழிகாட்டி இருப்பதாக அறிய முடியவில்லை என்பதற்காகவே இவ்வுறவு முறை விஷயத்தை உதாரணமாக எடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று.
(இக்கட்டுரை நகர தூதனுக்கு விசேஷ கட்டுரையாக எழுதப்பட்டதாகும்)
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஏப்ரல் 1936