வலங்கைமான் தேசீயம்
அண்ணாமலை சர்வகலா சங்க உப அத்யக்ஷர் தோழர் வலங்கைமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரைத் தென்னாடு நன்கறியும். அரசியலில் மிதவாதி யெனக் கூறிக்கொண்டு சாதாரண காலங்களில் காங்கிரசைத் தாக்குவதும் தேர்தல் காலங்களில் காங்கிரஸ்காரரை ஆதரித்துப் பிரசாரம் செய்வதும் அவரது பிறவிக்குணம். மிதவாதியான அவர் காங்கிரஸை ஆதரிக்கக் காரணம் என்ன? காங்கிரஸ் ஆதிக்கம் பார்ப்பனர் முன்னேற்றத்துக்கு உதவிபுரியக்கூடியதாயிருப்பதினாலேயே அவர் காங்கிரஸை ஆதரித்து வருகிறார். மேலும் ஜஸ்டிஸ்கட்சி யென்றால் அவருக்குப் பெரிய வெறுப்பு. ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாதக் கட்சியாம். எனவே ஜஸ்டிஸ்கட்சி ஒழிய வேண்டுமாம். இவ்வாறு கூறும் தேசீயப் புலியான வலங்கைமான் சாஸ்திரியார் அண்ணாமலை சர்வகலா சங்கத்தில் நடத்துந் திருவிளையாடல், அவரது வகுப்புவாதத்தை நன்கு விளக்கக்கூடியதாயிருக்கிறது. அண்ணாமலை சர்வகலா சங்கத்தை பார்ப்பன மயமாக்குவதே அவரது நோக்கமாயிருந்து வருவது போல் தோற்றுகிறது. அதற்கு சமீபத்தில் அங்கு நடைபெற்ற நியமனங்களே அத்தாட்சி. மஹாமஹோபாத்தியாய குப்புசாமி சாஸ்திரியார் கௌரவ சமஸ்கிருதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம். ஆனால் அவர் செய்யும் “கௌரவ” வேலைக்காக அவருக்குப் பிரதிபலன் வழங்கப்படுமா? வழங்கப்பட்டால் எவ்வளவு என்பனபோன்ற தகவல்கள் கிடைக்கவில்லை. அப்பால் டாக்டர் அசுவத நாராயணராவ் கெமிஸ்ட்ரி புரோபஸராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம். இந்த இரண்டு உத்தியோகங் களிலும் இதற்கு முன்னிருந்தவர்கள் பார்ப்பனரல்லாதாரே! இப்பொழுது பார்ப்பனர்களைத் தேடிப்பிடித்து நியமிக்கக் காரணம் என்ன? பார்ப்பனரல்லாதார் கிடையாமல் போய்விட்டார்களா?
மூன்றாவது சாஸ்திரியாரின் அந்தரங்கக் காரியதரிசியான வி.ஆர். வீரமணி அய்யர் சரித்திரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக் கிறாராம். மேலும் அந்த உத்தியோகம் வீரமணி அய்யருக்காகவே நூதனமாக சிருஷ்டிக்கப்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. நான்காவதாக தோழர் ராமாநுஜாச்சாரியார் தத்துவ சாஸ்திரப் பேராசிரியராகவும், தோழர் பார்த்தசாரதி கெமிஸ்ட்ரி டெமான்ஸ்ட்ரேட்டராகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார்களாம்.
வகுப்புவாதத்தை வெறுக்கும் தோழர் ஸ்ரீனிவாஸ சாஸ்திரியார் தமது இனத்தாரையே அண்ணாமலை சர்வகலா சங்கத்தில் குவிப்பது பொருத்தமா யிருக்குமா? மேலும் சாஸ்திரியார் உப அத்யக்ஷரான பிறகு ஏற்பட்ட காலி ஸ்தானங்களுக்கும் புது ஸ்தானங்களுக்கும் பார்ப்பனர்களே கட்டுப்பாடாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களாம்.
ஆங்கிலப் பகுதியில் வேலை செய்யும் 8 ஆசிரியர்களில் 6 பேர் பார்ப்பனர்களாம். நூல் நிலையம் ஹாஸ்டல் குமாஸ்தாக்கள் வேலைகளும்கூட பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேஸ்திரி உத்தியோகங் களிலும் பார்ப்பனர்களே அதிகமாக இருந்து வருகிறார்கள். தமிழ் ஆராய்ச்சி இலாகாவில் வேலைசெய்யும் மூவரும் பார்ப்பனர்களாம். தொல்காப்பியப் பொருளாராய்ச்சி மூலம் பார்ப்பனர் மனப்பான்மை எத்தகையது என்பதை தமிழுலகம் அறிந்துகொண்டுவிட்டது. எனவே இந்தப் பார்ப்பனர்கள் நடத்தும் தமிழராய்ச்சியினால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏதாவது நன்மை உண்டாகுமா? ஒரு பார்ப்பனரல்லாத கோடீசுரர் வழங்கிய 40 லக்ஷ ரூபாய் நன்கொடையினால் உருப்பெற்ற ஒரு சர்வகலா சங்கம் இவ் வண்ணம் பார்ப்பன அக்கிரகாரமாக மாறி வருவதைத் தடுக்க வழியில்லையா? திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரிக்கு ஒரு லக்ஷம் ரூபாய் நன் கொடையளித்த தோழர் திரவியம் விதி யேற்படுத்தியதுபோல், ஒரு பார்ப்பனரல்லாத கோடீசுரர் கொடையால் தோன்றிய அண்ணாமலை சர்வகலா சங்கத்தில் பார்ப்பனரல்லாத ஆசிரியர்களையே நியமனம் செய்யவேண்டுமென்று ஒரு விதி ஏற்படுத்தினாற்றான் அண்ணாமலை சர்வகலா சங்கம் விருத்தியடையும்.
– குடி அரசு கட்டு�ரை 05.04.1936