காங்கிரசுக்காரர்கள் பிரதிநிதிகளாவார்களா?
ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் ஜனங்களுக்குத் தெரிந்தவர்களாகவும், ஜனங்களிடம் உண்மையைச் சொல்லி ஓட்டுக் கேட்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் நமது காங்கிரஸ்காரர்கள் எலக்ஷனில் “வெற்றி” பெற்றார்கள் என்றாலும் ஜனங்களுக்குத் தெரிந்தவர்களா? ஜனங்களிடம் உண்மை பேசி ஓட்டுப் பெற்றவர்களா? என்பது கவனிக்கத்தக்கதாகும்.
காங்கிரசுக்காரர்கள் கொள்கை இன்னது என்று அநேக மக்களுக்குத் தெரியவே தெரியாது. உண்மையிலேயே காங்கிரசுக்கும் இன்னதுதான் எலக்ஷன் கொள்கை என்பதாக ஒன்று இல்லவே இல்லை.
- காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்பதை காந்திக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதாக கேட்பது.
- ஜெயிலுக்கு (யாரோ) போனவர்கள் ஆதலால் (யாருக்கோ) ஓட்டுப் போடுங்கள் என்பது.
- பொய்யையும் அன்னியர் மீது அநியாயப் பழிகளையும் கூறி ஓட்டுக் கேட்பது.
- மூட நம்பிக்கையான மதப்பிரசாரம் செய்து அதை அரசியலுடன் பொருத்தி ஓட்டுக் கேட்பது.
- பெண்களைத் தனிமையில் அனுப்பி முக்கியஸ்தர்களை வசப்படுத்துவது.
- அபேக்ஷகர்கள் யார்? அவர்கள் யோக்கியதை என்ன? முன்பின் நடத்தை என்ன? என்பதை மூடிவைத்து ஓட்டு வாங்குவது.
- தங்கள் அதிகாரத்திற்குச் சம்மந்தமில்லாத காரியங்களைச் செய்வதாகச் சொல்லி ஆசை காட்டி ஏமாற்றி ஓட்டு வாங்குவது.
இதுபோல் அனேகப் பித்தலாட்டங்களால் ஓட்டுப்பெற்றவர்கள் உண்மையான பிரதிநிதிகளாவார்களா? என்று கேட்பதோடு, யோக்கியமான அரசாங்கத்தார் இவர்களைப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளலாமா? என்றும் கேட்க வேண்டியிருக்கிறது.
காங்கிரஸ்காரர்கள் நடந்துகொண்டதாகவும் பேசியதாகவும் நாம் சொல்லும் மேல்கண்ட 7, 8 காரியங்களுக்கும் நம் வார்த்தைகளையே நம்பும்படி நாம் சர்க்காரைக் கேட்கவில்லை. அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டுமானால் எலக்ஷன் பிரசாரத்தில் காங்கிரஸ்காரர்கள் பேசியதையும் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளையும் போலீஸ் ரகசிய இலாகா குறிப்புகளையும் இ.ஐ.ஈ. சுருக்கெழுத்துக்காரர் எடுத்த பிரசங்கங்களையும், அக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் யோக்கியதையும் காங்கிரஸ் மெம்பர்களைக் கமிட்டியில் வைத்தே அலசிப் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளும் படி வேண்டுகிறோம்.
ஆதலால் ஸ்தல ஸ்தாபனம் என்னும் பேரால் உபயோகமற்றச் “சுதந்தரத்தை”க் கொடுத்துவிட்டு அதையும் யோக்கியதையும் பிரதிநிதித்துவமும் அற்ற ஆட்கள் வந்து நடத்தும்படி செய்துவிட்டு இந்திய மக்களை வேடிக்கை பார்ப்பதானது. மிகமிக அதர்மமான காரியம் என்று நம் அரசாங்கத்தாருக்கு எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஏன் என்றால் ஏழைகள் வரிப்பணம் பதறப் பதற கொள்ளை போகின்றது, நாசமாகின்றது என்பதால் தான்.
குடி அரசு கட்டுரை 03.05.1936