தர்மம் அல்லது பிச்சை
தர்மம் அதாவது ஏழைகளுக்கு பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்கு பலவித உதவிகள் செய்வது என்பது வரை அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்ப்பந்தமாக கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.
எப்படி எனில் தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்கு போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாக கற்பித்து 32 தர்மங் களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது, அறம் 32. ஒரு மனிதன் சத்திரம், படிப்பவர்களுக்கு சாப்பாடு, பக்தர்களுக்கு உணவு, பசுவுக்கு வாயுறை, கைதிகளுக்கு சாப்பாடு, இரப்பவர்களுக்கு பிச்சை, தின்பண்டம், அநாதிகளைக் காத்தல், பிள்ளைப்பேறுக்கு மருத்துவம் செய்தல், அனாதிப் பிள்ளைகளை வளர்த்தல், பிள்ளைகளுக்கு பால் வார்த்தல், அநாதிப் பிணம் சுடுதல், ஏழைகளுக்கு ஆடை கொடுத்தல், வழிப்போக்கர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்தல், வைத்தியம் செய்தல், வண்ணான் உதவல், நாவிதன் உதவல், கண்ணாடி காட்டுதல், காதோலை கொடுத்தல், கண்ணுக்கு மருந்து செய்தல், தலை முழுக்காட்ட எண்ணெய் தருதல், பெண்போகம் வேண்டுவோருக்கு போகப் பெண் உதவுதல், கஷ்டத்தில் சிக்குண்டவர்களுக்கு உதவி செய்து விடுவித்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், மடம் கட்டுதல், ரோட்டுப் போடுதல், சாலைமரம் வைத்தல், மாடு எருமை ஆகியவை தங்கள் தினவுகளை தீர்த்துக்கொள்ள சொறி கல் நடுதல், மிருகங்களைக் காத்தல், கக்கூசு கட்டல், விலை கொடுத்து உயிர் மீட்குதல், பெண்தானம் செய்தல்.
ஆகிய 32 தர்மங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை என்று சொல்லப்படுகிறது.
அதுபோலவே இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்கு பிச்சைகொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது சிலவு போக மீதி உள்ளதில் 40ல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப்படி செய்யா விட்டால் மதத்துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும் கூட கூறப்படுகிறது.
அதுபோலவே கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்கு போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப்படிக்கு தர்மங்கள் செய்யவேண்டிய அவசியங்களை வற்புறுத்தி அந்த வற்புறுத்தல்களை பகவான் சொன்னான் ஆண்டவன் சொன்னான் என்று வேதங்கள் என்பவைகளிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தர்மங்கள் எல்லாம் இருக்கிறவர்கள் அதாவது செல்வவான்கள் இல்லாதவர்களுக்கு ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் இதன் தாத்பரியமாகும்.
செல்வவான்களுக்கு செல்வம் கடவுளால் கொடுக்கப்பட்டதாகும். ஆகையால் கடவுள் கொடுத்ததை கடவுளின் சிருஷ்டியாகிய கடவுளின் பிள்ளைகளாகிய ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்பதே அந்த தாத்பரியத்தின் உள்கருத்தாகும். செல்வவான்களுக்கு கடவுள் செல்வங்களைக் கொடுத்தார் என்றால் செல்வமில்லாத ஏழை தரித்திரவான்களுக்கு செல்வமில்லாமல் செய்தது கடவுள் தான் என்பதை எந்த மதவாதியும், ஆஸ்திகனும் மறுக்க மாட்டான் என்றும், மறுக்க முடியாது என்றும் சொல்லுவேன்.
செல்வம் என்பது உலகத்தின் பொது சொத்து. அதை யார் உண்டாக்கி யிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொது சொத்தாகும். ஆனால் அந்த பொது சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப்போய் சேரவும் மற்றொருவனுக்கு சிறிது கூட இல்லாமல் தரித்திரம் பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப் படுகிறதே ஒழிய மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.
ஆன போதிலும் கடவுளே ஒருவனை செல்வவானாக ஆக்கினார் என்றும், கடவுளே ஒருவனை ஏழையாக ஆக்கினார் என்றும் வைத்துக் கொள்வதானாலும் தர்மம் பிச்சை கொடுக்கிற அதிகாரத்தை மாத்திரம் ஏன் பணக்காரனுக்கு கொடுத்து அவனுக்கு இஷ்டமிருந்தால் பிறத்தியானுக்கு பிச்சைபோட்டு மோட்சத்துக்கு போகும்படியும் அவனுக்கு இஷ்டமில்லை யானால் பிச்சை கொடுக்காமல் இருந்து நரகத்துக்கு போகும்படியும் எதற்காக கற்பிக்க வேண்டும் என்பது நமக்கு புலப்படவில்லை. அன்றியும் ஏதோ இரண்டொரு பணக்காரன் பிச்சை கொடுத்து தர்மம் செய்து மோட்சத்துக்கு போவதற்காகவும் பலர் பிச்சை கொடுக்காமல் இருந்து நரகத்திற்குப் போவதற்காகவும் எத்தனையோ கோடிக்கணக்கான பிச்சைக்காரர்களை ஏன் சிருஷ்டித்தார் என்பதும் நமக்கு விளங்கவில்லை. செல்வம் கடவுளால் உண்டாக்கப்பட்டதானால் ஏழையும் பணக்காரனும் கடவுளால் தானே உண்டாயிருக்க வேண்டும். இந்தப்படி ஒரு கடவுள் மூன்றையும் படைத்து ஏழைக்கும் பணக்காரனுக்கும் வாங்கும் கொடுக்கும் உத்தியோகம் கொடுத்து இதற்கு கணக்கு எழுதி வைத்து அவனவனுக்குத் தகுந்த மோட்ச நரகத்துக்கு அனுப்பும் வேலையில் கடவுள் ஈடுபட்டிருக்கிறார் என்றால் கடவுள் பக்தர்கள் கடவுளை பரம முட்டாளாகவும் பரிசுத்த மடையனாகவும் சிருஷ்டிக்கிறார்களா அல்லது கடவுளை பரம கருணாநிதியாகவும் பார பட்சமற்ற தந்தையாகவும் சிருஷ்டிக்கிறார்களா என்று கேட்கின்றேன்.
ஏழையை சிருஷ்டிப்பானேன் பணக்காரனை சிருஷ்டிப்பானேன்? ஏழையை பணக்காரனிடம் போய் கெஞ்சும்படி செய்வானேன்? பணக்காரன் தனக்கு இஷ்டமிருந்தால் கொடுப்பதும் இஷ்டமில்லாவிட்டால் கொடுக்காமல் ஆளைவிட்டு கழுத்தைப்பிடித்து தள்ளச் சொல்லுவதும் ஏன்? என்பவைகளை யோசித்துப்பார்த்தால் முதலில் இந்த தத்துவம் உண்மையாய் இருக்குமா என்பதே பெரிய சந்தேகமாய் இருப்பதோடு பரிசுத்த ஆஸ்திகத் தன்மையுடன் கடவுளை சிருஷ்டித்துப் பிரசாரம் செய்கின்ற மக்கள் எவ்வளவு முட்டாள் களாய் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடைமலையாகும்.
கடவுள் பார்த்து ஒரு உத்திரவில் அல்லது ஒரு சங்கல்பத்தில் எல்லாப் பொருளும் எல்லா மக்களுக்கும் பொதுவாய் இருக்கத்தக்கது என்று செய்துவிட முடியாதா? என்று கேட்பதோடு எல்லா ஜீவன்களையும் தானே சிருஷ்டித்து தானே நடத்துகிறவனாய் இருக்கிறபடியால் ஒன்றை ஒன்று துன்புறுத்தவோ ஒன்றை ஒன்று கொன்று தின்னவோ கூடாது என்று நிர்ணயித்து விட முடியாதா என்று கேட்கின்றேன். உண்மையாகவே ஒரு யோக்கியமான கடவுள் இருந்தால் இதை செய்திருக்க மாட்டாரா என்றும் கேட்கின்றேன்.
இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார் களானால் ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்து விட்டாரே, இவர் கடவுளுக்கும் பெரியவரா? என்று கேட்கிறேன்.
ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர் களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையை காப்பாற்ற ஏற்படுத்தப் பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.
ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான் இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழை மக்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.
பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜனசமூகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும் இழிவுமாகும் என்பதோடு ஒரு கடவுள் இருந்தால் அக் கடவுளுக்கு மிகுந்த அவமானமும் அயோக்கியத்தனமான காரியமுமாகும்.
இந்தக் கருத்தை வைத்தே திருவள்ளுவரும் “பிச்சை எடுத்து வாழ வேண்டிய மனிதனை கடவுள் சிருஷ்டித்து இருப்பானேயானால் அக்கடவுள் இல்லை யென்றுதான் அருத்தம், அவன் இருந்தாலும் ஒழிய வேண்டியதே அவசியம்” என்று சொல்லியிருக்கிறார்.
திருவள்ளுவர் நூலில் முன்னுக்குப்பின் முரண்கள் பல இருந்தாலும், அவர் ஒரு தனிஉடமைக்காரரேயானாலும் இந்த ஒரு விஷயத்தில் தைரியமாய்ச் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் இதற்கு முரணாக மற்றொரு இடத்திலும் சொல்லி இருக்கிறார். அதாவது “தர்மம் செய்தவனையும் பாவியையும் பார்க்க வேண்டுமானால் பல்லக்கில் போகிறவனையும் பல்லக்கு சுமப்பவனையும் பார்” என்று சொல்லியிருக்கிறார். ஆகவே இதிலிருந்து தர்மம் செய்ததி னாலேயே பல்லக்கில் போகும்படியான செல்வவானாகப் பிறந்தான் என்றும், தர்மம் செய்யாததினாலேயே பல்லக்குத் தூக்கும் தரித்திரனாகப் பிறந்தானென்றும் சொல்லுகிறார்.
அப்படியானால் ஏழை பணக்காரத்தன்மையை திருவள்ளுவர் ஆதரிக்கிறார் என்பதாக ஒரு புறத்தில் விளங்குகிறது. இந்த முரணும் மயக்கமும் ஏற்பட்டதற்குக் காரணம் இவருக்கு கடவுள் தன்மையில் ஆத்மார்த்ததில் இருந்த நம்பிக்கையேயாகும். கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப்பின் முரணாகவும், தனி உடமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவ னாகவும் இருந்துதான் தீருவான்.
எது எப்படி இருந்த போதிலும் உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால் பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்டவிரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே ஏற்றுக்கொண்டு அதற்கு பணம் வேண்டுமானால் பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிருஸ்து சொன்ன கணக்குப்படியோ முகம்மது நபி சொன்ன கணக்குப்படியோ சர்க்கார் வசூலித்து அதற்கு ஒரு இலாக்கா வைத்து வினியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழில்சாலைகள் வைத்து அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலை வாங்கிக்கொண்டு வினியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்த தொழில்சாலை வைக்கிறார்களோ அந்த மாதிரி தொழில்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.
இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும் பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம்.
ஆகவே தர்மம் செய்வது அக்கிரமம் என்றும், ஜன சமூகத்துக்கு தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு ஆட்சி என்றும் சொல்லுகிறேன்.
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஏப்ரல் 1936