திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா 5 வது சுயமரியாதை மகாநாடு ஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்
தோழர்களே!
சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது.
இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு சௌகரியமில்லாதது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர் களையும் அவர்களது விஷமங்களையும் பற்றி நான் சிறிதும் லக்ஷியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலக்ஷியமாய் இருந்துவிட்டதால் இதுவரை இயக்கத்துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள்.
இயக்கம் எங்கு போய் விட்டது. அவர்களை விட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவுதான்.
இப்போதும் சொல்லுகிறேன் இயக்கத்தின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கருதியிருக்கும் எப்படிப்பட்டவர்களுக்கும் இயக்கத்தில் இடம் கிடைக்காது. அவர்கள் யாரானாலும் சரி, இயக்க வளர்ச்சியைவிட இயக்கத்தில் சுயநலம் கருதுபவர்களை கவனிப்பதே என் வேலை. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தயாராய் இருந்து கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.
எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது. மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கம் நெருக்கடியில் இருப்பதாய் இங்கு வருத்தப்பட்டவர்கள் எப்படி நெருக்கடியில் இருக்கிறது, இதனால் என்ன கெட்டுப் போய் விட்டது என்று எடுத்துக் காட்டியிருந்தால் எனக்கு அவர்கள் வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட்டு இருக்கும்.
தோழர்கள் தண்டபாணி, கண்ணப்பர், அய்யாமுத்து, ராமநாதன், தாவுத்ஷா முதலான பலர் சுயமரியாதை இயக்கம் செத்துப் போய் விட்டது என்று சொல்லிக்கொண்டுதான் சிலர் வெளியேறியும், சிலர் தாங்கள் இன்னமும் சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள்; சிலர் வருகிறார்கள். இதனால் எந்தக்கொள்கை கெட்டுவிட்டது? என்ன நடவடிக்கை நின்று விட்டது?
இந்த மகாநாடு கூட்டியது பைத்தியக்காரத்தனம் என்று மகாநாடு கூட்டிய பிரமுகர்களுக்குத் தோன்றும்படி இன்று காலை முதல் இங்கு நடவடிக்கை நடக்கிறது. இது எனக்கு முன்னமேயே தெரியும். அதனாலேயே நான் இதற்கு வரவேண்டாம் என்று கருதி கடிதம்கூட எழுதிவிட்டேன். வந்தே தீரவேண்டுமென்று தந்தியும் கடிதங்களும் வந்தன. வந்த பிறகு ஏன் வந்தேன் என்றுதான் தோன்றுகின்றது. எங்கள் பெயர்களை விளம்பரம் செய்து ஆட்களைக் கூட்டி இம்மாதிரி இயக்கம் செத்துவிட்டது என்று மாய அழுகை அழுவதே மகாநாட்டின் வேலை என்றால் இனி மகாநாடுகள் கூட்டமால் இருப்பதுகூட நலமென்றே கருதுகிறேன்.
~subhead
ஏன் மாகாண மகாநாடு கூட்டவில்லை
~shend
இந்த லக்ஷணத்தில் மாகாண மகாநாடு ஏன் கூட்டவில்லை என்று என்மீது குறை கூறப்பட்டது. மகாநாடு இந்த லக்ஷணத்தில் இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு எப்படி கூட்டமுடியும்? கூட்டுவதால் பிரயோஜனம் தான் என்ன? கூட்டாததால் என்ன கெட்டுவிடும்?
இதற்குமுன் கூட்டின 3 மகாநாடுகளும் பணக்காரர்களாலும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாலும் தான் கூட்டப்பட்டது. இந்த மகாநாடும் ஒரு பணக்காரரின் பெரிய பொருளுதவியின் மீதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களின் ஆதரவின் மீதும்தான் கூட்டப்பட்டது என்று காரியதரிசி சொன்னார். அப்படியிருக்க பணக்காரர்கள் தயவில் மகாநாடுகளைக் கூட்டி அவர்கள் நிழலில் இருந்துகொண்டு அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களையே அக்கட்சியையே வைது கொண்டிருப்பதனால் மகாநாடு எப்படிக்கூட்ட முடியும்?
நாகையில் மாகாண மகாநாட்டைக் கூட்ட தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்றுக்கொண்டார். வேண்டிய ஏற்பாடும் செய்தார். முன் பணமும் கொடுத்தார். அப்படியிருக்க சில தோழர்கள் மகாநாட்டு நிர்வாகத்தில் சம்மந்தப்பட்டவர்களே அவரைக் கேட்காமல் மகாநாட்டுப் பந்தலில் சமதர்ம மகாநாடு கூடும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்து விட்டார்கள். பிறகு பலர் அவரைக் கேட்க ஆரம்பித்த உடன் அவர் அம் முயற்சியை விட்டு விட்டதாகத் தெரிகிறது.
மற்றும் நாளையும் மகாநாடு கூட்டவேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியும் சில பணக்காரர்கள் உதவியும் வேண்டித்தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை வைவதன் மூலம் வீரராகக் கருதி இருக்கிறவர் களின் வசவுக்குக் கட்டுப்பட்டு யார் தான் மகாநாடு கூட்டுவார்கள்? வைகின்றவர்களுக்கு யார் தான் ரயில் சார்ஜ் கொடுப்பார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது குற்றம் சொல்லுவது யாருக்கும் எளிதுதான். ஆனால் இயக்கத்தில் வேறு எந்தத் தோழர் செய்கின்ற காரியத்தைவிட என் காரியம் என்ன குறைந்து போய் விட்டது என்று யோசித்துப் பாருங்கள்.
இயக்கம் என்றால் எவனோ ரயில் சார்ஜ் கொடுத்து, எவனோ விளம்பரம் செய்து, எவனோ கூட்டம் கூட்டி விட்டால் அதில் வந்து நின்று கொண்டு எல்லோரையும் பயங்காளி என்றும், கோழை என்றும், மந்திரிகள் மாய்கையில் மறைந்து விட்டவன் என்றும், சர்வாதிகாரி என்றும் ஒருவர் மற்றவரை வைதுவிட்டுப் போய் விடுவது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். என்ன குறைந்தாலும் மாதம் 200, 300 ரூபாய் இயக்கத்துக்காகச் சொந்தப் பொருப்பில் செலவு செய்கிறேன். பல தடவை 1000, 2000 மொத்தமாக செலவு செய்துவருகிறேன். மாதம் 10 பிரசங்கங்களுக்குக் குறையாமல் பெரிதும் என் சொந்தச் செலவிலேயே பல தோழர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராய் கிராமம் கிராமமாகத் திரிந்து நோயுடனும், காயலாவுடனும், டாக்டர்கள் அபிப்பிராயங்களை லக்ஷியம் செய்யாமலும் பிரசாரம் செய்கிறேன். இதற்குமேல் மற்றவர்கள் சாதிப்பதோ மற்றவர்களுக்கு உள்ள பொறுப்போ இன்னது என்று எனக்கு விளங்கவில்லை.
இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீரசொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதிலும் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்கு மேல் ஒருவன் வீரனாகவோ, மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதுமில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும். ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதுமில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையிலும் நான் இருந்து பார்த்துவிட்டுத் தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ, வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.
காங்கிரசில் உழைத்தபோது எனக்கும், என் குடும்பத்துக்கும் தகுதிக்கு மேற்பட்ட புகழ் கிடைத்தது.
அப்போது சில பதினாயிரக்கணக்கான ரூபாயில் புகழ் சம்பாதித்தேன். இப்போது பல பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவும் நஷ்டமும் அடைந்து இகழ்ச்சி அடைகிறேன்.
என்னவென்றால் 1922 வருஷத்திய சகல கட்சி மகாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப்பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்சு காந்தியாருக்கு என்னவேண்டும் என்று கேட்கும்படி ஒரு சர்வ கட்சி மகாநாட்டை பம்பாயில் கூட்டி கேட்டு வரும்படி செய்தார். அதில் சங்கரன் நாயர் தலைமை வகித்து காந்தியாரை “உமக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். அப்போது காந்தியார் எனக்கு என்னவேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக் கேட்டுப் பதில் சொல்லுகிறேன் என்று சொன்னார். அந்த இரண்டு பெண்மணிகள் யார், என் மனைவியும், என் தங்கையும்தான். இது 1922ம் வருஷம் ஜனவரி மாதம் 19ந் தேதியிலோ 20ந் தேதியிலோ ஹிந்து பத்திரிகையில் இருந்தது. இதை திருச்சி டாக்டர் ராஜன் கத்தரித்து எனக்கு அனுப்பினார். இதற்கு மேல் எனக்கு இன்னும் என்னவேண்டும்? அதனால் பயனில்லை என்று உணர்ந்தேதான் தேசத்துரோகி, மதத்துரோகி, நாஸ்திகள், கோழை, சர்க்கார் தாசன் என்கின்ற பட்டம் கிடைப்பதானாலும் நாம் செய்யும் வேலையில் மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படவேண்டுமென்று கருதி சில திட்டங்களைக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து அதில் என் இஷ்டப்படி உழைத்து வருகிறேன்.
இனியும் சாகும்வரை அந்தப்படியே உழைத்து வரத்தான் செய்வேன்.
~subhead
நான் பயந்துவிட்டது
~shend
நான் இப்போது சர்க்காருக்கு பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடமைப் பிரசாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்கவேண்டுமாய்க் கோருகிறேன்.
நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஒரு அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமை கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது.
அப்படி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம்கூட மறைந்து போயிருக்கும். இந்தப் பிரசாரம்கூட செய்ய முடியாமல் போயிருக்கும். எனக்கு இந்த 2, 3 வருஷத்தில் எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டது? தோழர் ஜீவானந்தம் எழுதிய வியாசத்தைப் பத்திரிகையில் போட்டதற்காக 2000 ரூபாய் ஜாமீன் கொடுத்தேன். கல்வியைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக நானும் என் தங்கையும் சிறைப்பட்டோம். அபராதமும் கோர்ட் செலவுமாக ரூபாய் 2000க்கு மேல் செலவாகி விட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களின் மற்றொரு மொழி பெயர்ப்புக்காக என் தமையனாரும் சிறைப்பட்டார். அதற்கும் ரூ.1000 வரை செலவு ஏற்பட்டது. பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கப்பத்திரிகை மற்றொன்றுக்கும் ஜாமீன் கேட்கப்பட்டு நின்றுவிட்டது. இதைப்பார்த்த பல தோழர்கள் ஓடி விட்டதுடன் துரோகம் செய்யவும் ஆரம்பித்தார்கள்.
இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்திரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப்பாருங்கள். இதுதான் எனது உண்மை.
ஜெயிலில் எனக்கு என்ன கஷ்டம்? எ. கிளாசில் போட்டார்கள். இனியும் போடுவார்கள். 6 மாதமாவது ஜெயிலுக்குப் போனால்தான் என் உடம்பு இனியும் 2 வருஷத்திற்கு உழைக்க சௌகரியம் கொடுக்கும். நிற்க,
இயக்கத்திற்காக ஆரம்பமுதல் இந்த நிமிடம்வரை யாரிடத்திலாவது கால் அணா வசூல் செய்திருக்கிறேனா? அல்லது இயக்கத் தொண்டர்களுக்கு என் சக்தியனுசாரம் அவ்வப்போது உதவாமல் இருந்திருக்கிறேனா? என் குடும்பநிலை எவ்வளவு கஷ்ட நஷ்டத்திற்கும், கேட்டிற்கும் ஆளாகிவிட்டது உங்களுக்குத் தெரியாதா? ஆனாலும் எனது எஸ்டேட்டும் வருவாய்களும் எப்படி நாசமானாலும் அவற்றை லக்ஷியம் செய்யாமல் இயக்கத்திற்கு என்னால் கூடியதைச் செய்யாமல் இருந்ததே இல்லை. பார்ப்பனர் தொல்லையால், அரசாங்க தொல்லையால் எனது குடும்ப வருவாய் 100க்கு 25 வீதமாய் விட்டது. இப்படி எல்லாம் ஆனது ஒருபுறமிக்க,
~subhead
யாரை நம்புவது?
~shend
இன்று எந்தத் தோழர்களை நம்பி நான் துணிந்து ஜெயிலுக்குப் போக முடியும்? ஒரு வருஷம் ஐரோப்பா கண்டத்திற்குப் போய் இருந்தேன். இயக்க நிர்வாக சபை அழிந்துவிட்டது. சென்ற வருஷம் 6 மாதம் ஜெயிலுக்குப் போனேன். மகாநாடு கூட்ட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு பிரசாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவுடமை என்று சொன்னவுடன் பணக்காரர்கள் பறந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் புத்திசாலித்தனமாய் காரியம் நடத்தாவிட்டால் இயக்கம் நடக்குமா? கடவுள் மதம் ஜாதி ஆகியவைகளால் மக்கள் அனுபவிக்கும் கொடுமையும் இழிவும் ஒழியவேண்டாமா? ஏதோ இரண்டொரு ஆட்கள் அதுவும் சுயநல விஷயமாய் அபிப்பிராயபேதம் கொண்ட ஆட்களின் விஷமப் பிரசாரத்துக்கு பயந்து கொண்டு நான் வீரனாய் விட்டால் இயக்கம் போகும் கதி என்ன? எப்படியோ போகட்டும் நம் கடமையை செய்வோம் என்பதை எல்லா சமயத்திலும் முட்டாள் தனமாய் நான் பின்பற்றுபவனல்ல ஆகின்ற அளவுக்கு காரியம் ஆகவேண்டும் என்று கருதுகிறேன். இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவர்கள் இஷ்டப்படி நடக்க வழியில்லாமல் இல்லை.
இப்போதும் நம் கொள்கைகளில் சமதர்மமோ, பொதுவுடமைத் தத்துவமோ இல்லை என்று சொல்ல முடியாது. சமதர்மத்துக்கும் பொதுவுடமைக்கும் தோழர் ஜீவானந்தமும் அவர்களது தோழர்களும்தான் பாஷ்யக்காரர்கள் என்பதை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது.
ரஷ்யப் பொதுவுடமை எனக்கு நேரிலும் தெரியும். அப்படிப் பட்டவர்கள் ஏகாதிபத்தியத்துடனும், பணக்கார ஆட்சியுடனும் ராஜி செய்து கொண்டு கூடுமான அளவுதான் சமதர்மம் நடத்துகிறார்களே தவிர யாரோ ஒருவர் கோழை என்று சொல்வாரே என்று பயந்து கொள்ளவில்லை.
இவைகளையெல்லாம் உத்தேசித்தே சுயமரியாதை இயக்கத் திட்டம் இவ்வளவுதான் என்பதாக ஒரு வருஷத்துக்கு முன்பு (10335ல்) வெளிப் படுத்திவிட்டேன். அதன் பிறகே தாராளமாய் வேலை செய்ய முடிகிறது.
~subhead
இதையும் தடுத்தால்
~shend
நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்டவிரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்க மில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல்கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன், வீரப்பட்டமும் பெறுவேன். சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் “புகழை”யும் “வீரப்”பட்டத்தையும் தியாகம் செய்து விட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன். அறிவுள்ளவர்கள் சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
இந்த அரசாங்கத்தை “ஐ தீடிடூடூ ட்ஞுணஞீ ணிணூ ஞுணஞீ” என்று சொன்ன காந்தியார் கூற்று என்ன ஆயிற்று?
“நாங்கள் 35 கோடி பேர்களும் நாய்களோ, ஈனப் பன்றிகளோ” என்று சொன்ன தேசாபிமானிகள், தேசிய வீரர்கள் கதி என்ன ஆயிற்று?
ஆட்டிடையன் ஆடுகளை பட்டிக்குள் விரட்டுவது போல் இன்று காந்தியாரே “தேசிய வீரர்களை” சட்டசபைக்குள் போய் ராஜ பக்தியாயும், ராஜ விஸ்வாசமாயும், ராஜ சந்ததிகளுக்கும் ராஜாங்க சட்டங்களுக்கும் பக்தி விஸ்வாசமாய் இருப்பதாயும் சத்தியம் செய்து “மானங்கெட்டு, மரியாதை கெட்டு” திரியும்படி இப்போது விரட்டி அடிக்கவில்லையா?
அவ்வளவு கேவல நிலைக்கு நாம் இன்னும் போகவில்லை.
நமக்கு பார்ப்பான், பணக்காரன், அரசாங்கம் ஆகிய 3 எதிரிகள் உண்டு. மூன்று பேரையும் ஒரே காலத்தில் ஒழிக்கச் சட்டம் குறுக்கிடுமானால் முறையாக ஒவ்வொன்றாக ஒழிப்போம். இதற்காக நம்முடைய சுயநல வீரப்பிரதாபத்தில் கடுகளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? இதை உத்தேசித்தே என் தமையனாரை அரசாங்கத்தினிடம் ராஜத்துவேஷம் பரப்புவதில்லை என்று சொல்லி வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு விடுதலை அடையும்படி சொன்னேன். சர்க்காரின் நிலைமையையும் அவர்களது நடத்தையையும் சக்தியையும் யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். சர்க்கார் சக்தி லேசானதல்ல. உலகத்திலேயே சக்தியும், தந்திரமும் பொருந்திய சர்க்கார் பிரிட்டிஷ் சர்க்காராகும். மேடையில் கூப்பாடு போட நம்மை அனுமதித்து விட்டதாலேயே நாம் பெரியவர்கள் சர்க்கார் சின்னவர் என்று எண்ணிவிடக்கூடாது. எதிரியின் பலம் அறியாமல் வீரம் பேசுவது பொறுப்பை உணராததாகும். எப்பொழுது எதற்காக சர்க்காரோடு போராடுவோம் என்பது எனக்குத் தெரியும்.
காங்கிரசுக்காரர்கள் தொல்லையின் மீது சர்க்கார் கண்ணோட்டம் இருந்தபோது நம்முடைய பொதுவுடமைப் பிரசாரத்தை அவர்கள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் தங்களுடைய சட்ட மறுப்பையும், மறியலையும், எதிர்ப்பையும் விட்டுவிட்டு ராஜவிஸ்வாசப் பிரமாண சரணாகதிக்கு வந்த பின்பு நம்மீது கண் வைத்தார்கள்.
2, 3 கோடி ரூபாய் செலவு செய்து பல லக்ஷம் பேரை ஜெயிலுக்கு அனுப்பி புத்தி பெற்ற காந்தியாரையும் காங்கிரசையும் பார்த்தாவது நாம் புத்திசாலித்தனமாய் 4, 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாங்கள் எங்கள் குடும்பம் மாத்திரம் கெட்டு ஜெயிலுக்குப் போனதிலும் திருத்திக்கொள்ள முடியாவிட்டால் நாம் பைத்தியக்காரராகி விட மாட்டோமா? நம் தோழர் களின் யோக்கியதை யாருடையது எனக்குத் தெரியாது?
இயக்கத்தால் மனிதரானவர்களே தான் இன்று இயக்கத்தை செத்துப் போய் விட்டது என்கிறார்கள்.
~subhead
ஜஸ்டிஸ் கட்சி
~shend
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் நமது யோக்கியதை போய்விட்டது என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் அவர்களது யோக்கியதை எப்படியிருந்திருக்கும்? அவர்களுக்கு மேடை ஏது? என்று யோசித்துப் பார்க்கட்டும்.
ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் நம் அபிப்பிராயம் தெரிவிக்க இன்று இந்த மேடை கிடைத்திருக்குமா?
பார்ப்பான் பின்னால் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தே மாதர கோஷமும், காந்திக்கு ஜே கோஷமும் போட்டால் ஒழிய பலருக்கு சாப்பாட்டிற்கு ஆவது வழி கிடைத்திருக்குமா? நம்மிடம் வீரம் பேசிக் கொண்டு நம்மைக் கோழைகள் என்று சொல்லிக்கொண்டு போனவர்களின் வாழ்க்கை இன்று எப்படி நடக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சியார் யாரிடம் பணம் வாங்கினார்கள்? யாரை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்? யார் நிழலில் அவர்கள் வாழ்கிறார்கள்? எந்த கொள்கையை விட்டுக்கொடுத்தார்கள்? அவரவர்கள் பணம் செலவு செய்து எலக்ஷனில் ஜெயிக்கிறார்கள், உத்தியோகம் அனுபவிக்கிறார்கள். மற்றப்படி அக்கட்சியின் கொள்கைகளை ஆட்சேபிக்கும் வீரர்கள் என் எதிரில் வரட்டும் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் சு.ம. இயக்கம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்து விட்டாலும் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதியும் இருக்காது. அதன் தலைவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை.
அன்றியும் அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களின் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கியதைக்கும் இளைத்தவர்கள் அல்ல.
ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்துவருகிறார்கள். நமது திட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார்கள். மாமிசம் சாப்பிடுவதானால் எலும்பைக் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல் நமது சமதர்மமும், பொதுவுடமையும் போலி புலி வேஷம்போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது.
சர்க்கார் உத்திரவு மீறுவதே சமதர்மமாகி விடாது. உத்திரவு மீறினவர்களின் கதியை நாம் பார்த்துவிட்டோம்.
ஆரம்பத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்று சு.ம. இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அநுகூலமாகவே ஏழை பணக்காரத்தன்மை கூடாதென்றோம். அதைத்தான் நாம் சமதர்மம், பொதுவுடமை என்றோம். சர்க்கார் பொதுவுடமை கூடாதென்றால் விட்டு விட்டு மேல் ஜாதி கீழ் ஜாதி கூடாதென்கின்ற வேலை செய்வதில் என்ன தடை இருக்கிறது.
மற்றும் மூடப்பழக்க வழக்கம் ஒழித்தல், மதத் தொல்லை ஒழித்தல் முதலிய காரியம் செய்வதற்கு மார்க்கமில்லாமல் போகவில்லை.
ஆதலால் எனது நிலை இன்னது என்பதை ஒருவாறு விளக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.
குறிப்பு: திருத்துறைப்பூண்டியில் 21, 22.03.1936 ஆகிய நாட்களில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட 5 ஆவது சுயமரியாதை மாநாட்டில் 21.03.1936 இல் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு சொற்பொழிவு 29.03.1936