தமிழ்ப் பெரியார் மறைந்தார்
பண்டிதர் தோழர் கா. நமச்சிவாய முதலியார் பிரிவினால் தமிழகத்தாருக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தில் நாமும் மனமாரப் பங்கு கொள்ளுகிறோம். பிறந்தாரெல்லாம் இறப்பது இயற்கையாயினும் நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் செய்வோர் பிரிவு நாட்டு மக்கள் உள்ளத்தைப் பெரிதும் துக்கத்தில் ஆழ்த்தச் செய்யும். தற்காலத்துத் தமிழர் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் மிகச் சிலரே. எனவே, கண்மூடும் வரை தமிழர் நலத்துக்காக அல்லும் பகலும் உழைத்துள்ள ஒரு பெரியார் பிரிவை யார்தான் தாங்கவல்லார்? தமிழ் மொழிக்கு தோழர் முதலியார் செய்த தொண்டு மலையினும் பெரியது; கடலினும் அகன்றது. தமிழ் உரைநடைக்கு முதன் முதல் அடிகோலிய ஆறுமுக நாவலருக்குப் பிறகு நூற்றுக்கணக்கான வசன நூல்கள் இயற்றி தமிழ் செம்மையுறச் செய்த பெருமை காலஞ்சென்ற முதலியாருக்கே சொந்தம். வட மொழிச் சொற்களை அறவே வெறுக்கும் தமிழபிமானியல்ல அவர். இன்றியமையாவிடத்து வடமொழிகளை ஆளுவதே அவரது போக்காயிருந்தது. அவரது நடை எளிதாயும், இனிதாயும், தெளிவாயும் விளங்குகிறது. அவர் எழுதிய நூல்கள் தமிழிலக்கியத்துக்கு அழகு செய்யும் அணிகலன் என்பதற்கும் சந்தேகமே இல்லை. தமிழ் மொழிக்கு இவ்வண்ணம் அரிய சேவை செய்த தோழர் முதலியார் பெயர் அழியாதிருக்கும்படி ஏதேனும் ஒரு ஞாபகச் சின்னம் நிறுவ தமிழகத்தார் முன்வரவேண்டுவது தமிழ் வளர்ச்சிக்கு ஞாபகக் குறிப்பிடுவதாகும். முதலியார் பிரிவால் வாடும் மக்களுக்கும், சுற்றத்தாருக்கும் நமது ஆழ்ந்த அநுதாபம் உரியதாகுக!
குடி அரசு இரங்கற் செய்தி 22.03.1936