ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி
ஜஸ்டிஸ் கட்சியார் என்ன நல்ல காரியங்கள் செய்தாலும் சரி அதை எதிர்ப்பதே பார்ப்பனர்களுடையவும், காங்கிரஸ்காரர்களுடையவும், தேசீயப் பத்திரிகைகளுடையவும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியாராலும் ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவு பெற்ற இதரர்களாலும் சென்னைச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மசோதா, விபசாரத் தடை மசோதா, பொட்டுக்கட்டுத் தடை மசோதா, இனாம் குடிகள் மசோதா போன்ற நல்ல மசோதாக்களையெல்லாம் பார்ப்பனர்களும் காங்கிரஸ் வாலாக்களும் தேசீயப் பத்திரிகைகளும் கட்டுப்பாடாக எதிர்த்து வந்திருப்பதை நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சென்னைச் சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியார் செய்யும் காரியங்களினால் நாட்டுக்கு நன்மையுண்டா இல்லையா என்பதை பார்ப்பனரும், காங்கிரஸ் கும்பல்களும் தேசீயப் பத்திரிகைகளும் கவனிப்பதே இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் செய்யும் வேலைகளுக்கெல்லாம் குற்றம் கற்பித்து வகுப்புவாதிகள், தேசத்துரோகிகள், பிற்போக்காளர் என வசைமாரி பொழிவதே þ கூட்டத்தாரின் முக்கிய நோக்கம். இதை விளக்க சமீப காலத்தில் நடந்த ஒரு சம்பவம் போதுமானது.
சட்டசபைத் தேர்தல் தொகுதிகளையும், பிரதிநிதிகளை நிறுத்தும் முறைகளையும், வாக்களிக்கும் மாதிரியையும் நிர்ணயம் செய்ய பிரிட்டிஷ் சர்க்கார் நியமனம் செய்திருந்த ஹாமண்டு கமிட்டியார் சென்னை, பம்பாய், ஆமதாபாத் நீங்கலாக சென்னை பம்பாய் மாகாணங்களில் பல அங்கத்தினர் தொகுதிகளையும் குவியல் ஓட்டுமுறையையும் சிபார்சு செய்தார்கள். இது சென்னைச் சட்டசபை முடிவுக்கும், சென்னைச் சர்க்கார் யோசனைக்கும் முரணானது. சென்னை சர்க்காரும், சென்னைச் சட்ட சபையாரும், ஒரு அங்கத்தினர் தொகுதியையும் மாற்ற முடியாத ஒற்றை ஓட்டு முறையையுமே சிபார்சு செய்தார்கள். உண்மையான ஜனநாயக முறைக்கும், ஏழை அபேக்ஷகர்கள் நலத்துக்கும் ஒரு அங்கத்தினர் தொகுதியே பொருத்தமானது. மேலே கூறிய ஹாமண்டு கமிட்டி சிபார்சை உண்மையான ஜனநாயகவாதிகள் எல்லாம் கண்டித்தார்கள்.
கடைசியில் ஹாமண்டு கமிட்டி அறிக்கை சென்னை சட்டசபையில் பரிசீலனைக்கு வந்தபோது “பல மெம்பர்கள் தொகுதியின்றி ஒரு மெம்பர் தொகுதிகளே ஏற்படுத்த வேண்டுமென்றும், குவியல் ஓட்டு முறையின்றி மாற்றக் கூடாத ஒற்றை ஓட்டுமுறையே இருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தி ஜஸ்டிஸ் கட்சிப் பிரதம கொரடாவான திவான்பகதூர் அப்பாத்துரைப் பிள்ளை ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
தாமே இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகள் என்று பெருமை யடித்துக்கொள்ளும் காங்கிரஸ்கட்சியாரும், காங்கிரஸ்காரர்களின் வாலைப்பிடித்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் எனப் பகற்கனவு காணும் டாக்டர் சுப்பராயன் போன்றாரும் தோழர் அப்பாத்துரைப்பிள்ளை தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசினார்கள். கடைசியில் தீர்மானம் ஓட்டுக்கு விட்டபோது பெரும்பான்மையான ஓட்டுகளால் நிறைவேறியது.
அவ்வளவுதான், உடனே தேசீயப் பத்திரிகைகள் ஜஸ்டிஸ் கட்சியார் மீது வசை புராணம் பாடத் தொடங்கின. “ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல. அது பொதுஜன ஆதரவை இழந்துவிட்டது. சர்க்கார் தயவினால் ஜஸ்டிஸ் மந்திரி சபை உயிரோடு இருந்து வருகிறது. எனவே சென்னைச் சட்டசபையில் அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயமாகாது” என்றெல்லாம் தேசீயப் பத்திரிகைகள் கூறத் தொடங்கின. தேசீயத் தலைவர்கள் என்போரும் தேசீயப் பத்திரிகைகளுக்குப் பக்கப் பாட்டுப் பாடினர். “சென்னைச் சட்டசபை அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயமல்ல. பல மெம்பர் தொகுதியையும் குவியல் ஓட்டு முறையையுமே சென்னை மாகாணத்தார் ஆதரிக்கிறார்கள்” என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் சுப்பராயனும், காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் ஸி.ஆர். ரெட்டியாரும் இந்தியா மந்திரிக்குத் தந்தியனுப்பினார்கள் லிபரல்களின் சார்பாக, மூன்றே முக்கால் நாழிகை சட்ட மந்திரியாகவிருந்த தோழர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியாரும் அம்மாதிரி ஒரு தந்தியனுப்பினாராம். அவர்களை ஆதரித்து தேசீயப் பத்திரிகைகளும் வெகு நீளமான தலையங்கங்களும் எழுதின.
ஆனால் திவான்பகதூர் அப்பாத்துரைப் பிள்ளை நிறைவேற்றிய தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவை மட்டும் பெற்றதல்ல. டாக்டர் சுப்பராயனின் ஐக்கிய தேசீயக் கட்சி என்னும் அவியல் கட்சியில் ஒரு பிரபலஸ்தராயிருப்பவரும், கொஞ்ச காலம் டாக்டர் சுப்பராயனின் தோழ மந்திரியாகவிருந்து சைமன் கமிஷன் ஒத்துழைப்பை முன்னிட்டு ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தினால் தமது மந்திரி பதவியை ராஜிநாமாச் செய்து காங்கிரஸ்காரர்களுடையவும், தேசீயப் பத்திரிகைகளுடையவும், மதிப்பைப் பெற்றவருமான தோழர் எ. ரங்கநாத முதலியாரும், தோழர் அப்பாத்துரைப் பிள்ளை தீர்மானத்தை ஆதரித்திருக்கிறார். மற்றொரு ஐக்கிய தேசீயக் கட்சிப் பிரபலஸ்தரான தோழர் ஸி. பார்த்தசாரதி ஐயங்காரும் அதை ஆதரித்திருக்கிறார். இவை யாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியும், ஒரு மெம்பர் தொகுதியும் ஒற்றை ஓட்டு முறையுமே சிலாக்கியமானதென்று கூறியிருக்கிறார். உண்மை இவ்வாறானாலும் தேசீயப் பத்திரிகைகள் ஜஸ்டிஸ் கட்சியாரைத் திட்டிக்கொண்டே இருந்தன.
ஆனால் ஹாமண்டு கமிட்டி அறிக்கை இந்தியச் சட்டசபையில் விவாதத்துக்கு வந்தபோது தேசீயப் பத்திரிகைகளும், காங்கிரஸ்காரரும் டாக்டர் சுப்பராயனும் தலையைத் தொங்கப்போடும்படி நேர்ந்தது. ஹாமண்டு கமிட்டி அறிக்கையைப் பரிசீலனை செய்து முடிவு கூற இந்திய சட்ட சபையில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் மெம்பர்களாயிருந்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார் அல்ல. “பிற்போக்காளரான” ஜஸ்டிஸ் கட்சியார் மணமே இப்பொழுது இந்தியச் சட்டசபையில் இல்லையல்லவா, எனவே இந்திய சட்டசபை காங்கிரஸ் கட்சி உபதலைவர் பண்டித கோவிந்த வல்லப பந்த், காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு தலைவரும் அசெம்பளி காங்கிரஸ் கட்சித் தலைவருமான தோழர் புலாபாய் தேசாய், தோழர் சத்தியமூர்த்தி ராவ்பகதூர் எம்.ஸி. ராஜா, தொழிலாளர் தலைவர் என்.எம். ஜோஷி, தோழர்கள் நீலகண்டதாஸ், அசப் அலி, ஜின்னா, சர். கவாஸ்ஜி, ஜிஹாங்கீர் முதலியவர்களே அந்தக் கமிட்டியில் மெம்பர்களாயிருந்தார்கள்.
அவர்கள் ஹாமண்டு கமிட்டி சிபார்சுகளை பரிசீலனை செய்து
“சென்னை, பம்பாய், ஆமதாபாத் நகரங்கள் நீங்கலாக சென்னை, பம்பாய் மாகாணங்களில் பல மெம்பர்கள் தொகுதிகளை ஹாமண்டு கமிட்டியார் சிபார்சு செய்திருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது”
என்று அபிப்பிராயப்பட்டு தேசீயப் பத்திரிகைகள் சென்னை காங்கிரஸ் தலைவர்கள், டாக்டர் சுப்பராயன், வெங்கட்டராம சாஸ்திரியார் போன்றவர்கள் வாய்க்கு இரும்புப் பூட்டு போட்டுப் பூட்டி விட்டனர். அம்மட்டோ? தோழர்கள் சத்தியமூர்த்தியும், எம். ஸி. ராஜாவும் ஜஸ்டிஸ் கட்சியாரைத் தாக்குவோருக்கு சவுக்கடி கொடுக்கிற மாதிரி அந்த அறிக்கையில் ஒரு குறிப்பும் எழுதி வைத்து விட்டார்கள்.
அதாவது, “ஒரு மெம்பர் தொகுதிகள் வேண்டுமென்ற கொள்கையை நாங்கள் ஆதரிக்கிறோம், ஏழை அபேட்சகர்களுக்கு அவை அனுகூலமாக இருக்கும், வோட்டர்களுடன் நெருங்கிய சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் அது உதவி புரியும். அதனால், தெளிவான ராஜீயக் கொள்கைகளையுடைய கட்சிகள் வேலை செய்ய சௌகரியம் ஏற்படும்” என்று தோழர்கள் சத்திய மூர்த்தியும், எம்.ஸி. ராஜாவும் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறிவிட்டார்கள். இப்பொழுது பிரிட்டிஷ் சர்க்காரரும், ஜஸ்டிஸ் கட்சியார் தீர்மானத்தின் முக்கியமான பகுதியை ஒப்புக் கொண்டு விட்டதாகத் தெரிய வருகிறது.
ஹாமண்டு கமிட்டியார் சிபார்சுகளைப் பற்றி பிரிட்டிஷ் பார்லிமெண்டில் பிரிட்டிஷ் சர்க்கார் சமர்ப்பித்திருக்கும் மூன்று கவுன்சில் உத்தரவுகளின் நகல்கள் இப்பொழுது வெளியிடப்பட்டிருக்கின்றன. அவைகளின்படி சென்னை மாகாணத்தில் பிரதேச தொகுதிகள் எல்லாம் அநேகமாய் ஒரு மெம்பர் தொகுதியாகவே இருக்கும்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு புனா ஒப்பந்தப்படி பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக 6 விசேஷ இடங்களில் மட்டும் இரு அங்கத்தினர் தொகுதிகள் இருக்கும்.
கூட்டுத் தொகுதிகள் குவியல் ஓட்டு முறையே கையாளப்படும்.
எந்த எந்த தொழிற் சங்கங்கள் ஓட்டுச் செய்யலாம் என்பதை அறிவிக்க கவர்னருக்கு பிரத்தியேக அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் இரண்டு வருஷங்களாவது வேலை செய்துள்ள தொழிற் சங்கங்கள் தான் பிரதிநிதித்துவத்துக்கு லாயக்கானவை. அத்தகைய சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பட்டம் பெற்று 7 வருஷங்களான கலாசாலைப் பட்டதாரிகளும் செனட் அங்கத்தினர்களும் சர்வ கலாசாலைத் தொகுதிகளில் ஓட்டர்களாயிருப்பார்கள்.
ஆகவே ஜஸ்டிஸ் கட்சியாரின் முக்கியமான சிபார்சு பிரிட்டிஷ் சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. பார்லிமெண்டும் ஒப்புக்கொள்வது நிச்சயம். இந்த வெற்றிக்காக ஜஸ்டிஸ் கடைசியாரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.
சென்னை சர்க்கார் வகுத்திருக்கும் திட்டப்படி சென்னை மாகாணத்தில் 76 ஒரு மெம்பர் தொகுதிகளும், 35 இரு மெம்பர் தொகுதிகளும் இருக்கும்.
ஒரு மெம்பர்கள் ஒற்றை ஓட்டு முறை ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. இரு மெம்பர் தொகுதிகளில் குவியல் ஓட்டு முறையே இருந்து வருமென்று தெரிகிறது. இரு மெம்பர் தொகுதிகளிலே ஒடுக்கப்பட்டவர் களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதினால் ஒடுக்கப் பட்டவர்களின் உண்மையான பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெறுவது வெகு கஷ்டமே. இதற்கு, புனா ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்த ஒடுக்கப்பட்டவர் களின் தலைவர்களைத்தான் ஒடுக்கப்பட்டவர்கள் குறைகூற வேண்டும்.
பொதுவாக பிரிட்டிஷ் சர்க்கார் செய்திருக்கும் சிபார்சு திருப்திகர மானதென்றே சொல்லவேண்டும்.
இந்த நிலைமையிலாவது தேசீயப் பத்திரிகைகளுக்கும், தேசீயத் தலைவர்களுக்கும் நற்புத்தி உதயமாகியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை யென்றே தெரிகிறது. சென்னை சர்க்காரும், சென்னைச் சட்டசபையும், இந்தியச் சட்டசபையும், இந்திய சர்க்காரும், பிரிட்டிஷ் சர்க்காரும் ஒரு மெம்பர் தொகுதியையும் ஒற்றை ஓட்டு முறையையும் ஒப்புக்கொண்டு விட்டதினால், அவைகளை எதிர்த்தவர்கள் யோக்கியப் பொறுப்புடையார் களாயிருக்கும் பக்ஷத்தில் தாம் செய்த தவறை உணர்ந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு பச்சாதாபப்பட வேண்டியதே நியாயம். ஆனால் தேசீயப் பத்திரிகைகளோ இப்பொழுதும் ஊளையிட்டுக்கொண்டே இருக்கின்றன. டாக்டர் சுப்பராயன் கூட “என்ன செய்வது? என்னாலானவரைப் போராடினேன். வெற்றி கிடைக்கவில்லை. எனினும் இப்பொழுதும் நான் பல மெம்பர்கள் தொகுதியையும் குவியல் ஓட்டு முறையையுமே நான் ஆதரிக்கிறேன்” என்று கூறிக்கொண்டு இருக்கிறாராம். வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு மருந்தேது? எனவே டாக்டர் சுப்பராயனையும் அவரது சகாக்களையும் அவர்கள் போக்கில் விட வேண்டியதுதான்.
குடி அரசு துணைத் தலையங்கம் 29.03.1936