காங்கிரஸ் தலைவர் யோக்கியதை
தோழர் சி. ஆர். ரெட்டி ஜஸ்டிஸ் கட்சியால் விளம்பரம் பெற்றவர்; அதில் தனக்கு உத்தியோகமோ பதவியோ கிடைக்கவில்லை என்று அக் கட்சிக்கு தொல்லை கொடுத்தவர். பிறகு ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு (ஆந்திரா யூனிவர்சிட்டி வைஸ் சேன்ஸ்லர்) உத்தியோகம் கொடுத்தவுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தவர். அந்த உத்தியோகத்துக்கு காலாவதி ஆகப்போவதை அறிந்து, மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில் உத்தியோகம் கிடைக்காது என்கின்ற சந்தேகத்தின் மீது அதை தேசாபிமானம் காரணமாக ராஜினாமா கொடுத்து விட்டதாக விளம்பரம் செய்து கொண்டவர்.
காங்கிரஸ் உத்தியோகம் ஏற்கப்போகின்றது என்பதையும், காங்கிரசு எலக்ஷனில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் உணர்ந்த பிறகு காங்கிரசில் சேர்ந்துகொண்டதாக வேஷம் போட்டுக்கொண்டவர். பிறகு உத்தியோகம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்த உடன் முன் தேசாபிமானத்தின் காரணமாக ராஜினாமாச் செய்து உதறித்தள்ளி விட்டு விட்டுப்போன உத்தியோகத்தை இப்போது மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சி உதவியினாலேயே பெற்றுக்கொண்டு காங்கிரசைவிட்டு விட்டவர்.
ஆகவே காங்கிரஸ் பக்தியும் உத்தியோகங்களை ராஜினாமா செய்யும் தேசபத்தியும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை இதிலிருந்தே உணர்ந்துகொள்ளலாம்.
இப்படிப்பட்ட தேச பக்தியையும் காங்கிரஸ் தலைவர்களையும் வெள்ளைக்கார அரசாங்கம் மதிக்கவில்லை என்றால் அது அரசாங்கத்தின் ஆணவமா அல்லது தேசாபிமானத்தின் அயோக்கியத்தனமா என்பதை வாசகர்களே யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறோம்.
குடி அரசு செய்தி விளக்கம் 05.04.1936