சுயமரியாதைப் பிரசாரத்தின் வெற்றிக்குறி
பார்ப்பனரல்லாதாராகிய தமிழ் மக்கள் தென்னாட்டில் சுயமரியாதைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்ததும், அதற்கு நாட்டில் சிறிது செல்வாக்கு ஆரம்பித்தாலும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனப் பிரசாரம் மிகுதியும் பலமாய் செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னால் எங்காவது மடாதிபதிகளும், லோக குருக்களும், சங்கராச்சாரிகளும், பண்டிதர் களும், சாஸ்திரிகளும், பாகவதர்களும், சஞ்சாரம் என்கின்ற பெயராலும் காலnக்ஷபமென்கின்ற பெயராலும் இந்துமதம் என்கின்ற பெயராலும் வருணாசிரமம் என்கின்ற பெயராலும், ஆரிய தர்மம் என்கின்ற பெயராலும் இந்து தர்மம் என்கின்ற பெயராலும், புராணப் பிரசங்கம் என்கின்ற பெயராலும், வேதம், ஸ்மிருதி ஆகமம் என்கின்ற பெயராலும், ரிஷிகள் பெயராலும், மகாத்மாக்கள் பெயராலும் பலவிதசூழ்ச்சி பிரசாரமும் மற்றும் பல பேர்வழிகளின் பெயரால் பார்ப்பனப் பத்திரிகைகளிலும் அவர்கள் தயவால் வாழும் பத்திரிகைகளிலும் அவர்களது கூலிப்பத்திரிகைகளிலும் பிரசுரிப்ப தின் மூலமாகவும் பிரசாரம் செய்து வந்தார்கள். சுயமரியாதைப் பிரசாரத்தின் பலமானது இவைகளையெல்லாம் தாண்டிச்செல்லும்படியான நிலைமைக்கு வந்து பாமர மக்களையும் பகுத்தறிவில்லாத மூடநம்பிக்கைக்காரரையும் தட்டி எழுப்பத்தக்க...