ராயல் கமிஷன்
ராயல் கமிஷன் பகிஷ்காரக் கூச்சல் சுயநல அரசியல்வாதிகளிடை எவ்வளவுக் கெவ்வளவு பலமாகக் கிளம்புகின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு நாட்டிலுள்ள மக்களிடை அதன் புரட்டுகளும் வெட்ட வெளிச்சமாய்க் கொண்டு வருகின்றது.
தவிர, பகிஷ்காரத்திற்கு எதிர் பிரசாரமும் பலமாய் ஏற்பட்டு வரு கின்றது.பகிஷ்கார காரணங்களும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. எனவே கூடிய சீக்கிரத்தில் பகிஷ்கார கூச்சலுக்கு சாவுமணி அடித்துவிடும் என்பது திண்ணம்.
ராயல் கமிஷனில் இந்தியர்களை சேர்க்கவில்லை என்ற கருத்துடன் தான் ஆதியில் பகிஷ்காரம் ஆரம்பிக்கப்பட்டது. தேசத்திலிருக்கும் கட்சி பிளவுகளையும், ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைக்கும் சூழ்ச்சிகளையும் வெளியாக்கி, யாரை நியமிப்பது என்ற கேள்வி பிறந்தபின் அதற்கு பதில் சொல்ல முடியாமல், இப்போது கமிஷனை பகிஷ்கரிப்பதற்கு அது காரணம் அல்ல என்று சொல்ல முன்வந்து விட்டார்கள். ‘காங்கிரஸ்’ சுயராஜ்யக்
கட்சி முதலியவற்றிற்கு தலைவரான பண்டித மோதிலால் நேரு அவர்கள் கமிஷனில் இந்தியரை சேர்க்காதது மிகவும் நல்லதென்றே சொல்லிவிட்டார்.
ஆகவே, பகிஷ்காரத்தின் வேருக்கு சாவுமணி அடித்தாய் விட்டது. இனி தப்புத் தவறுகளைப் பற்றி நாம் அதிகக் கவலைப்பட வேண்டியதில்லை.
சுயமரியாதை
பகிஷ்காரத்திற்கு இப்போது முக்கியமாய்ச் சொல்லிக் கொள்ளப்படும் காரணமெல்லாம் இந்தியாவின் சுயமரியாதையை உத்தேசித்து பகிஷ்காரம் செய்ய வேண்டுமென்பதாகக் கூச்சலிடப்படுகின்றது. கமிஷன் நியமனத் தினால் இந்தியாவின் சுயமரியாதை இந்தக் கூட்டத்தாருக்கு எந்த விதத்தில் பாதிக்கப்பட்டு விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த ராயல் கமிஷன் நியமிக்கப்படும் என்கிற விஷயம் இன்றல்ல, நேற்றல்ல, இன்றைக்கு 8, 9 வருஷத்திற்கு முன்பாகவே நமக்கு வழங்கியதாய் சொல்லப்பட்ட சீர்திருத்த நிபந்தனையிலேயே கண்டிருக்கின்றது. அதாவது இந்த சீர்திருத்தத்தை இந்தியர்கள் நன்றாய் நடத்திக் காட்டி விட்டார்களா என்கின்ற பரிட்சை பார்க்க இனி பத்து ´ கழித்து ஒரு கமிஷன் வைத்து விசாரணை செய்யப்படும் என்கின்ற தத்துவம் கொண்ட வியாசங்கள் அதில் காணப் பட்டிருக்கின்றன. 1920- ம் வருஷத்திய சீர்திருத்தம் போதாது, அது அதிருப் தியும், ஏமாற்றமும் அளிக்கிறதாயிருக்கிறது. ஆதலால் இதை பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சொன்ன காலத்தில் அதை எதிர்த்து இந்த சீர்திருத்தமானது சுயராஜ்யத்திற்கு முதற்படியானது. இதை நடத்திக் காட்டி மேலால் சீர்திருத்தம் கேட்க வேண்டுமேயல்லாமல் பகிஷ்கரிப்பது சரியல்ல என்றும், இத்தீர்மானத்தை நிறைவேற்றியதாலேயே காங்கிரஸ் செத்துப் போய்விட்டது என்றும் சொல்லியதுடன் சீர்திருத்தத்தை நடத்த தனது சிஷ்ய கோடிகளை ஏவிவிட்டு ஆள் ஒன்றுக்கு மாதம் 5000, 6000 ரூ. வீதம் சம்பளம் வாங்கிக் கொடுத்தது இதே பெசண்டம்மையார்தான். அப்படிப்பட்ட அம்மைக்கு மறுபடியும் கமிஷன் நியமித்ததால் இப்போது திடீரென்று சுயமரியாதை ஞானம் எப்படி வந்தது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்தியாவின் சுயமரியாதைக்கு ஒரு வெள்ளைக்கார சீமாட்டி அழுவதென்றால் “ஆடு நனைகிறதென்று ஓணாய் ஓலமிட்டழுத கதை யையே ஒக்கும்” என்பதே நமது அபிப்பிராயம். அதிலும் பெசண்டம்மையார் அழுவதென்பது “ஆடு நனைகின்றதென்று சிறுத்தைப் புலி அழுவதையே ஒக்கும்” என்றும் சொல்லுவோம்.
இந்தம்மையார் இந்தியாவின் சுயமரியாதைக்காக கவலைப்படுவதின் யோக்கியதையைப் பொது மக்கள் அறிய உதாரணம் பஞ்சாப் படுகொலையை ஆதரித்து பிரசாரம் செய்தார்களே அது ஒன்றே போதும் என்றே நினைக் கிறோம். அதாவது “பஞ்சாபியர்கள் செங்கல் போட்டதற்கும் ஜனரல் டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாய் போய்விட்டது. இதுதான் அரச தர்மம்” என்று சொன்னார்கள்.
இவ்வம்மையார் சுயமரியாதை லக்ஷணம் இப்படியானால் அய்யர்மார், அய்யங்கார்மார்கள் சுயமரியாதை உணர்ச்சிக்கு ஏதாவது உதாரணம் வேண்டு மானால் அதே பஞ்சாப் அக்கிரமத்தின் போதும் அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒத்துழையாமையின் போதும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சற்று யோசித்தால் விளங்காமல் போகாது. ஒத்துழையாமைதீர்மானம் நிறைவேறி யதும் ஸ்ரீமான்கள் ‘சுதேசமித்திரன்’ ஆசிரியரும் இப்போதைய காங்கிரஸ் காரியதரிசியுமான எம்.ரங்கசாமி அய்யங்காரும் ‘இந்து’ ஆசிரியரும் தமிழ்நாட்டு தலைவராயுமிருந்த கஸ்தூரி ரங்கய்யங்காரும், பரிசுத்தத் தேசீயவான் என்று சொல்லப்படுபவரும் சுயராஜ்யக் கக்ஷி காரியதரிசியும் சட்ட சபையில் காங்கிரஸ் கக்ஷி உபதலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியுமான சத்தியமூர்த்தி அய்யரும் ராஜீனாமா கொடுத்துவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். இந்திய தேசீயத் தலைவரும், எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும் டிக்டேடர் என்று சொல்லுவதான ஏகத்தலைவருமான ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்கள் (ஒத்துழையாமை) பகிஷ்காரங்கள் என்பது சட்ட விரோதம் என்று சொன்னார்.
ஆகவே, பஞ்சாபில் குழந்தை குட்டிகளுடன் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களைக் கொண்ட ஒரு பெருங்கூட்டத்தில் முன்பின் எச்சரிக்கை இல்லாமல் பின்புறமாய் வந்து ஓடவிடாமல் தடுத்து மிஷின் பீரங்கி வைத்து பட்டாஸ் சுடுவது போல் சடபுட, சடபுட என்று குண்டுகளைப் பொழிந்து மக்களைக் கொன்றதும், தண்ணீர் குழாய்களையும் காந்த விளக்கு களையும் நிறுத்தி தெருவில் மக்கள் வயிற்றினால் ஊர்ந்து போகும்படி சொன்னதும், மக்களை மூக்கை நிலத்தில் தேய்த்ததும், முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தினதும், நொண்டி அடித்து நடக்கும்படி கட்டளை இட்டதும், பெண்கள் கற்பை அழித்ததும், சகோதரிகளை நிர்வாணமாக்கி மர்ம ஸ்தானத்தில் கோலை குத்தினதும் ஆகிய காரியங்களை இந்தியாவின் சுயமரியாதைக்கு பங்கம் என்று நினைக்காமலும் வேறு சிலர் அப்படி நினைத்தும் அதற்கு பரிகாரம் செய்ய ஏற்படுத்திய பகிஷ்காரங்களுக்கு கட்டுப்படாமலும்,எதிரிகளுக்கு உளவாயிருந்து கூலி வாங்கினதுமான இந்த துரோகிகள், வஞ்சகர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், அயோக்கியர்கள் இப்போது தங்களுக்கு திடீரென்று சுயமரியாதை ஞானம் வந்துவிட்டதென்று சொன்னால் கடுகளவு மூளையுள்ளவனாவது அவ்வளவு யோக்கியனாவது இவற்றை நம்ப முடியுமா என்றுதான் கேட்கின்றோம். குறிப்பாக பேசுமிடத் தில் இந்த பகிஷ்காரத்தை கிளப்பியதில் நம் நாட்டு பார்ப்பனர்கள் தங்களது வயிற்று பிழைப்பிற்காக எந்த எந்த வழியில் தங்கள் சுயமரியாதையை விற்று பிழைக்கின்றார்கள் என்பதும் தங்கள் சுயநலங்களுக்காக எந்த எந்த விதத்தில் மதத்தின் பேராலும் அரசியலின் பேராலும் எத்தனைக் கோடி மக்களின் சுயமரியாதையை கெடுத்து வாழ்கின்றார்கள் என்பதும் இந்திய நாட்டுக்கு வந்த எந்த அன்னிய ஆட்சியாவது இந்த பகிஷ்கார பார்ப்பனக் கூட்டத்தின் உள்உளவும் காட்டிக் கொடுக்கும் தன்மையும் இல்லாமல் வர முடிந்ததா என்பதும் அறியாதார்கள் யார் என்றே கேட்கின்றோம். ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டதானது எந்த விதத்திலாவது இந்தியாவின் சுயமரியாதைக்கு விரோதமானது என்று இந்த பார்ப்பனக் கூட்டத்தாராவது பெசண்டம்மை கூட்டத்தாராவது மற்றும் வேறு எந்த யோக்கியராவது உண்மையில் நினைப்பார்களானால் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய யோக்கியதை என்ன என்பதையாவது சற்று யோசித்து பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
ராயல் கமீஷன் யாரால் ஏற்படுத்தப்பட்டது? பிரிட்டிஷ் பார்லி மெண்டாரால். பிரிட்டிஷ் பார்லிமெண்டார் என்பவர்கள் யார் என்றால் நம் நாட்டை ஆளுவதற்கு ஏற்பட்ட பிரிட்டிஷ் ஜனங்களின் பிரதிநிதிகள். ஆகவே அவர்களுடைய நடவடிக்கையை நாம் ஒப்புக் கொள்ள வில்லையானால் அல்லது அவர்களது நடவடிக்கை நமக்கு சுயமரியாதைக்கு விரோத மென்பதானால் நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன? அவர்கள் ஏற்படுத்திய சட்டசபையில் அரை க்ஷணம் உட்கார்ந்திருக்கலாமா? அவர்கள் ஏற்படுத்திய உத்தியோகத்தில் அரை வினாடி இருக்கலாமா? அதற்காக அவர்கள் கொடுக்கும் காசில் ஒரு சின்ன காசு பெறலாமா? அவர்களின் இம்மாதிரியான நமது சுயமரியாதைக்கு விரோதமான ஆட்சியை நடத்த நாம் அடிமையாப் பதிவு செய்து கொள்ளலாமா? அவர்கள் ஏற்படுத்திய கோர்ட்களில் அந்த கூட்டத்தாரால் ஏற்படுத்திய அதிகாரிகளிடத்தில் போய் நின்று கொண்டு, கடவுளே! பிரபுவே! கன்னியவான்களே! என்று கும்பிடு போட்டுக் கெஞ்சும் வக்கீல் உத்தியோகத்தில் ஒரு இமைநேரமாவது இருக்கலாமா? ஆகவே இது போன்றவைகளை யோசித்துப் பார்த்தால் இப்போது பகிஷ்காரத்தை ஒரு வாயில் பேசிக் கொண்டு மற்றொரு வாயில் மேற்படி காரியங்களை செய்து கொண்டு இருக்கும் கூட்டத்தார் யோக்கியர் கள் என்று யாராவது நம்ப முடியுமா? என்றும் அப்படி நம்புகிறவர்களும் அவர்களை பின்பற்றுகின்றவர்களும் அறிவாளிகளாகவும் யோக்கியர்களாக வும் இருக்கக் கூடுமா? என்றும் கேட்கின்றோம்.
பார்ப்பனர்களின் சுயமரியாதை, யோக்கியம், நாணயம் ஆகிய இவைகளின் தத்துவம், கௌகத்தி காங்கிரஸ் தீர்மானத்திற்கு கொடுத்த மதிப் பையும், பார்ப்பனரல்லாதார் சிலர் காங்கிரசில் சேர எண்ணி வந்தவர்களை நடத்திய மாதிரியையும், சென்னை முனிசிபல் தலைவர் தேர்தலையும் கவனித்த களிமண் உருண்டைக்கும் விளங்காமல் போகாது.
சென்னையில், உண்மையை தைரியமாய் எடுத்துச்சொல்லவோ பகுத்தறிவுடன் நடந்து கொள்ளவோ பார்ப்பனரல்லாத பத்திரிகைக் கூடப் பயப்படுகின்றன. ஆனபோதிலும் இது விஷயத்தில் ‘சைபுல்இஸ்லாமும்’, ‘நவசக்தியும்’ தைரியமாய் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருப்பதற்கு நாம் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். ‘சைபுல் இஸ்லாம்’ எழுதி இருப்பதை வேறு இடத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம். நவசக்தி எழுதுவதாவது:-
“பஹிஷ்காரம் பஹிஷ்காரம் என்று கூச்சலிடுவது சூழ்ச்சியின் பாற் பட்டதாகும். முன்னே உருக்கொண்ட பல கமிஷன்களில் இந்தியர் சிலர் அங்கம் பெற்றதின் பயன் என்னவாயிற்று?”
“பஹிஷ்காரம் என்னும் சொல்லைக் கேட்டு சகோதரர்கள் ஏமாற லாகாது என்று எச்சரிக்கை வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கின்றது. ‘நவசக்தி’ எழுதி இருக்கும் முழு விவரமும் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.
எனவே, நம் நாட்டிடை இது சமயம் தோன்றியிருக்கும் பஹிஷ்கார இயக்கமானது பார்ப்பனர்களின் மற்றொரு சூழ்ச்சி என்பதையும் இதில் கலப்பது மக்களுக்கும் குறிப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் தற்கொலை யாயிருக்கும் என்பதையும் தெரிவிப்பதுடன் பார்ப்பனரல்லாதாரிலும் சிலர் பார்ப்பனர் ஓலமிடும் பகிஷ்காரத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமான முத்துரங்கங்கள், கந்தசாமிகள், வரதராஜுலுகள் போன்றார்களை நம்பி குழியில் விழுந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 27.11.1927