ஒரு வெளிப்படையான ரகசியம்
அடுத்த 5-5-27 தேதியில் பம்பாயில் கூடப்போகும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒரு தீர்மானம் கொண்டு போகப் போகிறாராம். அதாவது :-
மாகாண சட்ட சபைகளில் காங்கிரஸ்காரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தில் அந்தந்த மாகாணத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்ள மாகாணச் சுதந்திரம் கொடுத்துவிட வேண்டும் என்பதே.
அந்தத் தீர்மானம் நிறைவேறியவுடன், சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் சில தீர்மானங்கள் கொண்டுவரப் போகிறாராம். அதாவது :-
மந்திரிப் பதவியை ஒப்புக் கொள்ளலாம் என்றும், இப்போதுள்ள மந்திரி சபையை கலைத்துவிடவேண்டுமென்றும், மறு மந்திரிசபை அமைப்பதில் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் முதல் மந்திரியாக வும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கல்வி, தேவஸ்தானம் மந்திரியாகவும், ஸ்ரீமான் சுப்பராயன் கலால் மந்திரியாகவும் அமைப்பது என்றும் முடிவாய் இருப்ப தாகத் தெரிகிறது. மற்ற மந்திரிகளுக்கு வேறு சில உத்தியோகங்கள் கொடுக் கும் விஷயத்தில் யோசனை செய்து கொண்டு வரப்படுகிறது. ஆனால் ஸ்ரீமான் சுப்பராயன் முதல் மந்திரி பதவியை விட இஷ்டப்படவில்லை என்றும் எந்த இலாக்காவை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுவதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.
இதிலுள்ள கஷ்டங்களை சரி செய்ய ஒரு யோசனை சொல்லும்படி ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டிருப்பதாகவும், அவர் ஸ்ரீமான் சுப்பராயனுக்குத்தான் முதல் மந்திரியும், ஸ்தல ஸ்தாபன இலாக்காவும் இருக்க வேண்டும் என்றும் சொல்லுவதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. யார் எப்படி போனாலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு கல்வி மெம்பர் ஸ்தானம் கிடைக்குமா என்று பார்ப்பனர்கள் ஆசைப்படுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
ஸ்ரீமான் சி.வி. வெங்கிடரமண அய்யங்காருக்கு சட்டசபைத் தலைவர் வேலை தீர்மானமாகிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த அபிப்பிராயங் கள் நிறைவேறினாலுங்கூட இப்போது இருப்பதை விட நிலைமைகள் ஒன்றும் மாறிவிடாது என்பதும், பார்ப்பனரல்லாதாரை பொறுத்த வரையிலும் இன்னம் கொஞ்சம் கண்விழிப்பும் அநுகூலமும் ஏற்படும் என்றே நம்புகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 24.04.1927