பழய கருப்பனே கருப்பன்
சென்னையில் இருந்து டாக்டர் வரதராஜுலு நாயுடுவால் வெளியிடப் போகும் “தமிழ்நாடு” தினசரிப் பத்திரிகை வெளியாக வேண்டும், வெளியாக வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களில் யானும் ஒருவன். அதனால் நமது சமூகத்திற்கோ, நாட்டிற்கோ, பெருத்த அனுகூலம் ஒன்றும் ஏற்பட்டு விடாது என்ற முடிவு ஏற்கெனவே இருந்தாலும், சுதேசமித்திரனால் நாட்டுக்கும் நமது சமூகத்திற்கும் ஏற்படும் கெடுதியையாவது கொஞ்சம் குறைக்காதா என்று எதிர்பார்த்தோம். கடைசியாக வெளிவந்தது. வெகு ஆவலாய்ப் படித்துப் பார்த்தோம். பழய கருப்பனே கருப்பனல்லாமல் வேறு ஒரு சங்கதியையும் காணோம். மறுபடியும் பார்ப்பனர்கள் காலுக்குள் நுழையும் தந்திரங்களே நிறைந்திருப்பதும் சுதேசமித்திரன் காலில் விழுந்து அதை ஆதரித்து அதனால் தான் வாழப் பார்ப்பதும் அல்லாமல் வேறு ஒன்றையுங் கண்டு பிடிக்கமுடியவில்லை. அதோடு வழக்கம் போல் ஜஸ்டிஸ் கட்சியை வைவ தின் மூலம் பார்ப்பனர்களின் தயவைச் சம்பாதிப்பதில் கண்ணுங் கருத்துமாய் காணப்படுகிறது. உதாரணமாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம் எடுத்துக் காட்டுகிறோம். ஏனென்றால், கோயமுத்தூரில் நாயுடு கான்பரன் சிலிருந்து இந்த விஷயம் எழுதியதால் வரி வரியாய் எடுத்துக் கொண்டு விவகரிக்க எழுத நேரமில்லாமல் சுருக்கமாக எழுதுகிறோம்.
அதாவது, ஸ்ரீமான் நாயுடுகாருக்கு விளம்பரக்காரர்களால் தங்கக் கிண்ணம் இனாமாக அளிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கூட்டத்தில் ஸ்ரீமான் நாயுடுகார் பேசியதாக “தமிழ்நாடு” பத்திரிகையில் எழுதி இருக்கும் விஷயத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
“சென்ற ஒரு வருஷ காலமாக நான் இருந்தவிடம் தெரியாமல் ஒதுங்கி இருக்கிறேன்.”
“ராஜீய விஷயத்தில் எனக்கும் மற்ற தலைவர்களுக்கும் அபிப்பிராய பேதமிருந்ததால் நான் விலகி இருக்கிறேன்”.
“ராஜீய விஷயத்தில் அபிப்பிராய பேதமிருந்தால்………….. அபிப்பிராய பேத முள்ளவர்கள் சக்தி இல்லாவிட்டால் விலகி இருப்பதே நலம்”.
“ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகள் எனக்குப் பிடிக்க வில்லை. ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதில்லை”.
“திராவிடன் கொள்கைக்கும் எனது கொள்கைக்கும் அதிக வித்தியாச முண்டு”.
“சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கும் எனக்கும் ராஜீய விஷயத்தில் யாதொரு அபிப்பிராய பேதங்களும், கொள்கையில் வித்தியாசங்களும் கிடையாது. ஆனால், அவர்கள் என்னுடைய செய்திகளை வெளியிடாது அமுக்கி விடுகிறார்கள்.”
“ ஹிந்து பத்திரிக்கை மாத்திரம் என்னுடைய செய்திகளைச் சரிவர பிரசுரித்தது. மற்ற பத்திரிகைகளை விட ஹிந்து பத்திரிகைதான் அக்காலத்தில் உண்மைப் பத்திரிகையாய் இருந்தது.”
“தமிழ்நாடு ஆரம்பித்தது முதல்………………………….. ஜஸ்டிஸ் கட்சியோடு போர் புரிந்து வந்தது. ”
“சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கு போட்டியாக நான் தமிழ்நாடு பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை.”
என்பதாக எழுதியிருக்கிறது. ³ பிரசங்கத்தைப் பற்றி வரி வரியாக எடுத்துக் கொண்டு விவரிக்கலாமானாலும் அவசரத்தில் இரண்டை மாத்திரம் எடுத்தெழுதி விவரிக்கிறோம். தலையங்கத்தைப் பற்றியும் அதிலுள்ள நோக்கத்தைப் பற்றியும் பிறகு எழுதலாம். “சுதேசமித்திரன்” ராஜீய விஷய மும் அதன் கொள்கைகளும் என்ன என்பதைப் பற்றி இதுவரைத் “தமிழ் நாடு” பத்திரிகை என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தது ? அதுதானா இப் போது தமிழ்நாடு பத்திரிகையின் கொள்கை? அப்படியானால் “தமிழ்நாடு” தினசரி எதற்கு? நாட்டிற்கு ஒரு உபத்திரவம் போதாதா? அதே கொள்கை யைப் பார்ப்பனரல்லாத பத்திரிகையும் பிரசாரம் செய்ய வேண்டுமா? “சுதேசமித்திரன்” செய்யும் உபத்திரவத்திற்காவது ஜனங்கள் ஏமாறா திருக்கவும் கெடாமல் இருக்கவும் கொஞ்சம் காரணம் உண்டு. என்ன வென்றால், அது பார்ப்பனப் பத்திரிகை என்று சொல்லி விடலாம். அதே கெடுதியை பார்ப்பனரல்லாதார் பத்திரிகை என்று பேர் வைத்துக் கொண்டு “சுதேசமித்திரன்” கொள்கையை நடத்தி வந்தால் தேசத்திற்கும் சமூகத்திற்கும் எவ்வளவு கெடுதி ஏற்படும் என்பதை பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கட்டும். டாக்டர் நாயுடுகாரு தன் சங்கதியைப் பிரசுரிக்காத காரணத்தால் மாத்திரம் சுதேசமித்திரன் நடவடிக்கை நாயுடுகாருக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன அருத்தம்? இவர் நடவடிக்கையை விளம்பரப்படுத்திக் கொண்டு வந்துவிட்டால் “மித்திரன்” யோக்கியன் என்றுதானே கருதுகின்றார். என்று ஏற்படுகிறதா? இல்லையா? ஆகவே “தமிழ்நாடு” பத்திரிகை நாயுடு காரின் விளம்பரத்திற்கு மாத்திரம் வேண்டி ஏற்பட்டு விட்டதே தவிர, புதிதாய் எந்தக் கொள்கையையும் பரப்ப அல்ல வென்பதும் விளங்கவில்லையா? இந்த ஒரு காரியத்திற்காக எத்தனை பேர் அந்த பத்திரிகை நடத்தப் பணம் கொடுப்பது? எத்தனை பேர் அதை பணம் கொடுத்து வாங்குவது? என்பதை யோசித்துப் பாருங்கள்.
தவிர, ஜஸ்டிஸ் கக்ஷியும், திராவிடன் பத்திரிகையும் இவருக்கு என்ன கெடுதி செய்தது?
ஜஸ்டிஸ் கக்ஷி கொள்கையை விட சுயராஜ்யக் கக்ஷி கொள்கையும், “நாயுடுகாரின் தேசீயக் கக்ஷி” கொள்கையும் என்ன விசேஷமானது
அநியாயமாய் நாயுடுகார் ஒருவரின் சவுகரியத்திற்காக ஒரு பெரிய சமூக முன்னேற்றக் கக்ஷியை பலிகொடுப்பானேன்? அல்லது நாயுடுகார் சொன்ன எந்தக் கொள்கையை ஜஸ்டிஸ் கக்ஷி ஏற்றுக் கொள்ள மறுத்தது? அனாவசியமாய் ஜஸ்டிஸ் கக்ஷியை வைவதால் பார்ப்பனர்கள் மதிப்பார்கள் என்கிற காரணத்திற்காக முன்பின் யோசிக்காமலும் பகுத்தறிவை உபயோகிக் காமலும் வைதுவிடுவது தானா தேசீய வீரர்கள் என்பவர்களின் கொள்கை?
சுதேசமித்திரனைப் பற்றியும், அதன் ராஜீய விஷயங்களைப் பற்றியும், அதன் இதர கொள்கைகளைப் பற்றியும், ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றியும், அதன் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், டாக்டர் நாயுடுகாரு இதற்கு முன் பத்திரிகையிலும் பிரசங்கத்திலும் எழுதியும் சொல்லியும் வந்ததெல்லாம் உலகத்தை விட்டு மறைந்து விட்டதா? பார்ப்பன ரல்லாதார் கக்ஷியை வையாமல் அதற்குக் கெடுதி செய்யாமல் நாயுடுகாரு தனக்காக என்ன செய்து கொண்டாலும் எந்தப் பார்ப்பனப் பத்திரிகையைப் புகழ்ந்தாலும், எந்தப் பார்ப்பனர் இடம் மன்னிப்பு கேட்டாலும், எவனைக் கெஞ்சி, எவன் காலுக்குள் நுழைந்தாலும் நமக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. இதை பல தடவைகள் சொல்லியும், எழுதியும் இருக்கிறோம். ஆகையால் நாம் நமது கடமையைச் செய்யாமலிருக்க முடியவில்லை. இதை எழுதுவதற்கு நமக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நமது சொந்த கஷ்டத்திற்கு பயந்து கொண்டு சும்மா இருப்பது பயங்காளித்தனமாகுமென்று கருதியே இதை வருத்தத்துடன் எழுதுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.04.1927