ஒரு விண்ணப்பம்
திருவண்ணாமலை கோவில் பிரவேச தடுப்பு வழக்கு அநேக வாய்தாக்கள் ஏற்பட்டு இதுவரை 500 ரூபாயுக்கு மேலாகவே சிலவாகி இருக்கின்றது. ஆனால் வாதி தரப்பு மாத்திரம் தான் முடிவாயிருக்கிறது. இனி எதிரி தரப்பில் சுமார் 2, 3 சாக்ஷிகள் போடப்பட்டிருக்கின்றது. தினம் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சாக்ஷிகள் மேல் விசாரணை ஆவதற்கில்லாமல் வளருகின்றது. ஆதலால் இனியும் குறைந்து 10 வாய்தாக்களாவது ஏற்படலாம். வக்கீல்கள் பீஸ் இல்லாமல் நமக்காகப் பேசியும் அவர்களுக்கு வழிச்சிலவும் சாக்ஷிகளுக்கு வழிச்சிலவுமாகவே மேல்கண்ட ரூபாய்கள் சிலவாகி இருக்கும் போது பாக்கி விசாரணைக்கு 500 ரூபாயாவது பிடிக்கும் என்பதில் சந்தேக மில்லை. ஆதலால் நண்பர்கள் தங்களால் கூடியதை சேர்த்து சீக்கிரம் அனுப்ப வேண்டுமாய் சிபார்சு செய்கின்றோம். ஏனெனில் இப்பேர்ப்பட்ட உண்மைச் சுயமரியாதைக்காக தொடரப்பட்டிருக்கும் வழக்கு நாட்டில் மக்கள் ஆதரவில்லையானால் மற்றபடி பின்னால் நடக்க வேண்டிய காரியங்களுக்கு எப்படி பொதுமக்களை நம்ப இடமுண்டாகும். ஆதலால் வெளிநாட்டு நண்பர்களும் உள்நாட்டு நண்பர்களும் கூடிய சீக்கிரம் இந்த தேவையை பூர்த்தி செய்து தைரியமும் ஊக்கமும் அளிப்பார்களாக.
குடி அரசு – வேண்டுகோள் – 06.11.1927