யார் பொய்யர்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் வீட்டில், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளின் தேவதாசிகளின் தீர்மானம் விஷயமாய்ப் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்துவ கன்னியா ஸ்திரிகளைப் பற்றியும் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிய பேச்சுக் களை இல்லை என்று மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். ‘தமிழ்நாடு’, பத்திரிகை அய்யர் சொன்னதாக குறிப்பிட்ட விஷயங்களை ருஜுபடுத்து வதாக பந்தயம் கூறிற்று. அய்யர் அடங்கிவிட்டார். ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளும், அய்யர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை பற்றி பேசியதும் மற்றும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் கண்ட விஷயங்களும் உண்மை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் அவர் களும் மேலொப்ப மிட்டிருக்கிறார். இந்நிலையில் ‘தமிழ்நாடு’நிருபர், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள், ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆகிய இம்மூவர்கள் சொல்வது பொய்யா அல்லது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் சொல்வது பொய்யா என்பதை உணர பொது ஜனங்கள் ஆவலாயிருப்பார்கள். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் இதற்கு முன் எத்தனையோ தடவைகளில் பொய்யர் பட்டம் வாங்கி வாங்கி தேறியிருக்கின்றார். அல்லாமலும் ‘தமிழ் நாடு’ பந்தயம் கூறின பிறகும் ஸ்ரீமதி. முத்துலட்சுமி அம்மாள் அய்யரின் யோக்கியதையை வெளிப் படுத்திய பிறகும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி “உலர்ந்த மாம்சம் திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல்” பேசாமல் இருப்பதால் அய்யர் தான் பேசிவிட்டு இப்போது இல்லை என்று சொல்லு கின்றார் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க நியாயமில்லை. இம்மாதிரி அடிக்கடி பேசிவிட்டு பேசிவிட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே வருவதைவிட கண்ணியமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தால் அது மிகுதியும் நன்மையாயிருந்திருக்கும். இப்போது பேசிய குற்ற மொன்று, அதை மறுத்து இல்லையென்று பொய் சொல்லும் குற்ற மொன்று ஆக இரண்டு குற்றத்தை சுமந்திருக்கிறார். இவர்தான் இந்திய அரசியல் கட்சியின் தலைவருள் பிரதானமானவராம். கவர்னருக்கும் சட்ட மெம்பருக்கும் மந்திரிக்கும் அந்தரங்க விசுவாசியாம்.

குடி அரசு – கட்டுரை – 20.11.1927

You may also like...

Leave a Reply