ஞானசூரியன்
ஸ்ரீலஸ்ரீ சிவாநந்த சரஸ்வதி ஸ்வாமிகளால் எழுதப்பட்டு ஸ்ரீமான் கானாடுகாத்தான் வயிசு ஷண்முகம் செட்டியார் அவர்களால் பொது நன்மையை உத்தேசித்து அச்சிடப்பட்ட “ஞானசூரியன்” என்னும் புத்தகம் நமது பார்வைக்கு வந்தது. அப்புத்தகம் தமிழ்நாட்டு மக்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டியவைகளில் ஒன்று என்றே சொல்லுவோம்.
இதைப் படித்து பார்த்தால் வேதம் என்று சொல்லுவதில் உள்ள ஆபாசங்கள் வெளியாவதுடன் வேதத்தை ஏன் ஒரு வகுப்பார் தவிர மற்ற வர்கள் படிக்கக் கூடாதென்று ஆதியிலிருந்தே பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். ஸ்ரீலஸ்ரீ சுவாமி அவர்கள் இதில் பெரும்பாகம் வேதத்தில் உள்ள சுலோகங்களையும் மற்றும் வேதத்தை ஆதாரமாய் கொண்ட சமஸ்கிருத நீதிநூல்கள் என்பவைகளில் உள்ள சுலோகங்களையும் எடுத்து எழுதி அதற்கு அர்த்தம் எழுதியிருப்பதுடன் ஆரியர்களான பார்ப்பனர்களின் அநாகரிகத்தையும் அவர்களது காட்டு மிராண்டித்தனத்தையும் சுயநலத்தையும் நன்றாய் விளக்கி இருக்கின்றார். இதை ஒரு தடவை வாசித்துப் பார்த்தவன் நேருக்கு நேராக விமானம் வந்து தன்னை கூட்டோடு மோட்ச லோகத்திற்கு அழைத்துக்கொண்டு போவதா னாலும், தான் இந்து என்றோ வேதத்தையும் ஸ்மிருதிகளையும் நம்புபவன் என்றோ சொல்லிக் கொள்ள ஒரு கடுகளவும் சம்மதிக்க மாட்டான். எனவே உண்மையான தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இப்புஸ்தகத்தை ஒரு தடவை படித்துப் பார்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம். விலை ரூ1. கிடைக்குமிடம்:-ஸ்ரீமான் வயிசு ஷண்முகம் செட்டியார், கானாடுகாத்தான், ( ராமநாதபுரம் ஜில்லா )
குடி அரசு – மதிப்புரை – 13.11.1927