வருணாசிரம மகாநாடு
காங்கிரசின்போது காங்கிரசுப் பந்தலில் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு நடக்கப்போவதாய் பல பத்திரிகைகளில் தெரிய வருகின்றது. வருணாசிரம மகாநாடு என்பது என்ன என்று நாம் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது குறிப்பிடுவோம். என்னவெனில் உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் 6 வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதாவது:- 1. பிராமணன் 2. க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் 5. பஞ்சமன் 6. மிலேச்சன் என்பதாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதில் பிராமணன் உயர்ந்தவன் குருவாயிருக்கத்தக்கவன், க்ஷத்திரியன் அதைவிடத் தாழ்ந்தவன் அரசனாயிருக்கத்தக்கவன், வைசியன் அதைவிடத் தாழ்ந்தவன் வியாபாரியாய் இருக்கத்தகுந்தவன், சூத்திரன் அதைவிடத் தாழ்ந்தவன் மேல்கண்ட மூவருக்கும் அடிமையாய் இருக்க வேண்டியதோடு சிறப்பாக பிராமணர்களுக்கு அடிமையாகவும் இருப்பதுடன் சூத்திரனது பெண்களும் பொருள்களும் பிராமணர்களுக்கே உரியது என்றும், கொடுக்காவிட்டால் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும், அவர் படிக்கவும் கடவுளை நெருங்கி வணங்கவும் உரிமையற்றவன் என்கின்றதுமான கொள் கையை கொண்டது. ஆதிதிராவிடர், ஆதிசூத்திரர், அவர்ணஸ்தர் நாம் சூத்திரர்...