பார்ப்பன நிருபர்களின் சக்தி
இந்திய சட்டசபையில், சட்டசபை நடந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் உள்ள “இந்து பத்திரிகை”க்கும் “மெயில் பத்திரிகை”க்கும் ஒரே நிருபர் இருந்து கொண்டு இரண்டு பத்திரிகைக்கும் இரண்டுவிதமான சமாச்சாரத்தை அனுப்பி வந்தாராம். ‘இந்து’ வுக்கு எழுதும்போது ஒரே கையில், ஒரே பேனாவில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றி எழுதும் போது ஸ்ரீமான் அய்யங்கார் வந்தவுடன் எல்லோரும் கரகோஷம் செய் தார்கள், அற்புதமாய் பேசினார். வெள்ளைக்காரர்கள் வாயை அடக்கி திக்கு முக்காட வைத்து விட்டார், புது புது யோசனைகள் வெகு யுக்தி யுக்தியாகப் பேசினாராம், அவரே தலைவர் பதவிக்குத் தகுந்தவர் என்று பேசிக் கொண்டார்கள் என்று எழுதுவதும், அதே கை அதே பேனாவில் “மெயி” லுக்கு எழுதும் போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் “குரங்கு” குல்லாயுடன் உள்ளே நுழையும் போது எல்லோரும் பரிகாசம் செய்து சிரித்தார்கள் என்றும் இவர்தானா சீனிவாசய்யங்கார்? கொஞ்சமாவது புத்தியில்லையே! சட்டசபை விதிகள் கூட தெரியவில்லையே, இவர் தலைமை வகித்ததற்குத் தானா காங்கிரஸ் என்று பெயர். இவரை எப்படி காங்கிரசுக்கு தலைவராக்கினார்கள். சீனிவாசய்யங்கார் இந்திய சட்டசபைக்கு வராமலிருந்தாலே அவருக்குக் கொஞ்சம் பெருமை மீதியாயிருக்கலாம் என்றும், இவர் பேசும் போதெல்லாம் சட்டசபை இவரை பரிகாசம் செய்வதே வேலை யென்றும் – எழுதுவதும், அதே கையில் அதே பேனாவில் அசோசியேட்பிரசுக்கு எழுதும்போது அதற்குத் தகுந்த மாதிரி எழுதுவதும் ஆகியவைகளை ஒருவரே செய்வ தானால் அது எவ்வளவு ஆச்சரியம்?
குடி அரசு – கட்டுரை – 08.05.1927