புதிய கட்சிகள் பெசன்ட் அம்மையாராட்சி
சாதாரணமாய் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி வேலைகள் மும்முரமாய் நடப்பது இயற்கை. உதாரணமாக ஒரு காலத்தில் எங்கும் பஜனைக் கூடங்கள் ஏற்படும். மற்றொரு சமயம் எங்கும் ரீடிங்ரூம் ஏற் படும். மற்றொரு காலத்தில் எங்கும் சங்கீத சபைகள் ஏற்படும். இம்மாதிரியே ஓரோர் சமயத்தில் ஓரோர் காரியம் செல்வாக்குப் பெறுவதுண்டு. அதுபோலவே நமது நாட்டில் புதுப் புது கட்சிகள் ஏற்படுவது இக்காலத்திய சம்பவமாக இருக்கின்றது.
சமீப காலத்திற்குள் அரசியலின் பெயரால் அநேக கட்சிகள் ஏற் பட்டாய்விட்டது. இனியும் பல கட்சிகள் ஏற்படும் போலவும் இருக்கிறது. அதாவது தென்இந்திய நலஉரிமைச் சங்க மாகாண மகாநாடு கோயமுத்தூரில் நடந்த பின்பு, திருப்பூர் பார்ப்பனரல்லாதார் சுயேச்சை கட்சி என்பதாக ஒரு கட்சி உண்டுபண்ணி ஸ்ரீமான் திருப்பூர் ராலிங்கம் செட்டியார் முயன்று ஒன்றும் முடியாமல் கடைசியாக ஒரு மகாநாடு கூட்டி கோயமுத்தூர் தீர்மானத்தை ஆட்சேபித்து கவர்னரையும் மந்திரிகளையும் ஆதரித்து ஒரு தீர்மானம் செய்து சர்க்காருக்கு அனுப்பி, தற்கால சாந்தியாய் ஒரு உத்தி யோகமும் பெற்று இருக்கிறார். அவரைப் பார்த்து மனம் பொறாத ஸ்ரீமான் டாக்டர் சி. நடேச முதலியார் அவர்களும் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர் களும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் என்கின்ற முறையில் கோய முத்தூர் தீர்மானத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் கட்சி என்பதாக ஒரு கட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேற்கண்ட இரு கனவான் களுமே இரட்டைத் தலைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இன்னமும் இன்ன இன்ன உத்தியோகம் கொடுப்பது என்பது சர்க்காரார் இன்னமும் தீர்மானம் செய்யவில்லை. ஏனெனில் சர்.சி.பி. அய்யர் மேல் நாட்டுக்குப் போனவர். இப்போதுதான் வந்திருக்கிறார். தவிர இனி காங்கிரசு என்பதைப் பற்றி யோசிப்போம். அதற்குள் ஏற்கனவே சுயராஜ்ஜியக் கட்சி என்பதாக ஒரு கட்சி இருந்தாலும் அதை ஆதரித்துக் கொண்டு அதற்குள் இருந்தவர் களுக்குள்ளாகவே ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் தேசீய கட்சி என்று ஒன்று ஆரம்பித்தார். அது முளைத்த மூன்று நாளிலேயே அதற்குப் பச்சை வாதம் வந்து கிணற்றில் விழுந்த கல்லுப்போல் தூங்கிக்கொண்டிருக்கிறது. பிறகு ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் சும்மா இருக்கும் கட்சி என்பதாக ஒன்று ஏற்பட்டது. எல்லா கட்சிகளைவிட அதற்குதான் தொந்தரவு அதிகம். ஏனென்றால் சும்மா இருப்பதே சுகம் என்று வாயில் சொல்ல லாமானாலும் சும்மாயிருப்பதைப் போல் கஷ்டமான வேலை உலகத்தில் வேறொன்றுமேயில்லை. ஏனெனில் ஐம்பொறிகளுக்கும் உணர்ச்சியிருக்கும் வரை எந்த ஜீவனும் சும்மாயிருக்க முடியாது. இது தவிர சுயராஜ்யக் கட்சியில் ஒரு குட்டிக் கட்சி ஸ்ரீமான் எஸ். முத்தையா முதலியாரை தலைவராகக் கொண்டு அதாவது பார்ப்பனர்களை நீக்கி காங்கிரஸ் தேசீயக் கட்சி என்பதாக எட்டு பேர் சேர்ந்து ஒரு கட்சி இந்த வாரத்தில் ஒரு ஏற்பாடாயிருக்கின்றது. இது நாளடைவில் வழுக்கும் போல் தெரிகிறது. ஏனெனில் சுயராஜ்ய கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் ஒவ்வொருவராய் பார்ப் பனர்களின் சூழ்ச்சி இன்னது என்பதாக அறிந்து விலக்கு கின்றார்களாதலால் அப்படி விலகுகின்றவர்களுக்கு இது சமயம் தேசீயப் போர்வையுடன் ஒரு கட்சி வேண்டுமானால் இதுதான் தயாராய் இருக்கின்றது.
இது தவிர மந்திரி கக்ஷி என்று ஒன்று கொள்கையில்லாதது என்கின்ற அர்த்தத்தில் ஒரு கக்ஷி உண்டு. ஒவ்வொரு மந்திரிக்கும் தனித்தனியாய் ஒரு கக்ஷியும் அதற்கு 2, 3 பின்பற்றுபவர்களும் உண்டு. மந்திரி உத்தியோகம் சாகும்போது இந்தக் கக்ஷியும் அழுவாரற்று தானாகவே செத்துப்போகும். இது தவிர மிதவாதக் கக்ஷி என்று ஒன்றுண்டு. இது தனியாக சாஸ்திரி, சர்மா, அய்யர் என்கின்ற இரண்டு மூன்றுவித பட்டப்பெயரையேகொண்டது.இந்த கூட்டத்தார் தான் நமது சர்க்காரை நடத்திக் கொடுக்கவேண்டிய பொறுப்புடன் அடுப்புக் கல்லைப் போல் சர்க்காரைத் தாங்குவதற்கென்றே பிறந்தவர்க ளென்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
போதாதக் குறைக்கு அம்மையார் பெசண்டம்மையார் இந்த வாரத்தில் நமது நாட்டில் “லோககுரு” கிருஷ்ணமூர்த்தியுடனும் லட்சக்கணக் கான ரூபாயுடனும் அடிவைத்திருக்கின்றார்கள். இந்தம்மாளைப் பிடித்துக் கொண்டுகரையேறலாமென்று வெகுபேர் நாக்கில் தண்ணீர் சொட்டிக் கொண்டு காத்திருக்கின்றார்கள். இந்த அம்மையாரும் காங்கிரசுக்கு யோக்கியதை கெட்டுப் போயிருக்கின்ற இக்காலத்தில் சுலபத்தில் தான் ஆதிக்கம் பெற்று விடலாம் என்று ஆசைப்படுவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. “அம்மையாருக்கும்” “லோக குருவுக்கும்” இனி புது புது சிஷ்யர் கள் சேருவார்கள். “மகாத்மாக்களுடன்” அடிக்கடி பேசுவார்கள். சர்.சி.பி. அய்யருக்கு இனி அபார யோக்கியதைகள் வளரும். ஏனெனில் அம்மையார் சீமையிலிருந்து பெரிய பெரிய வெள்ளைக்காரரிடம் கோஷன் பிரபுவுக்கு சிபார்சுக் கடிதம் வாங்கி வந்திருக்கலாம். அதில் சர்.சி.பி. அய்யருக்குத்தான் இரட்டை பங்கு கிடைக்கும். ஆதலால் இனி அம்மையார் ஒரு பெரிய கக்ஷியாக புறப்படப்படக்கூடும். சுயராஜ்யக் கக்ஷியும் அம்மையார் கக்ஷியுடன் இரண்டர கலந்தாலும் கலந்து விடும். ஏனெனில் சுயராஜ்ய கக்ஷி இப்போது வடிகட்டி ஆய்விட்டதால் அம்மையார் கக்ஷிக்கு வேண்டிய ஆட்களே மீதி தங்கி நிற்கின்றது. ஒரு காலத்தில் அய்யர் கூட்டத்தோடு மாத்திரம் இருந்து கொண்டு ஆதிக்கம் பெற்ற அம்மையாருக்கு இப்போது அய்யங்கார் கூட்டமும் சேர்ந்து ஒரு மந்திரி உத்தியோகமும் தனது சிஷ்ய ருக்கு இருந்து, சட்ட மெம்பர் உத்தியோகமும் அவரது ‘மகன்’ என்பவருக்கு இருக்கும் போது அம்மைக்கு என்னதான் நடக்காது. பருத்திச்செடி புடவையாய் காய்த்தது என்பது போல் ஆகிவிடும் அல்லவா? அதற்கு ஆதாரமாகவே நாளது 7 ² நடைபெறும் அம்மையார் வரவேற்புக்கு சுயராஜ்யக் கக்ஷிக்கு ஜீவ நாடியாகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரே பேசப் போகிறாராம்.
காஞ்சீபுரம், திருநெல்வேலி முதலிய மகாநாடுகளில் அம்மை யாரைப்பற்றி ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் பேசிய பேச்சுக்களும் எழுதிய எழுத்துக்களும் கல்லின் மேல் எழுத்துக்கு நேராய் விளங்குவது யாவருக்கும் தெரியும். ஆனால் அப்பொழுது ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை விலைக்கு வாங்கி அம்மையார் மீது ஏவிவிட்ட ஆள்களேதான் இப்போதும் அம்மை யாரைப் புகழ அனுப்பி இருக்கின்றார்கள். ஆகவே இவ்வளவு செல்வமும் பாக்கியமும் யோகமும் பொருந்திய அம்மையார் இந்த செல்வாக்குடன் தென்னிந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்யப் போகிறார்களாம்.
இதன் பலன் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தாகவே முடியும். ஆனாலும் நாம் அதைப்பற்றி சிறிதும் கவலைப் படவில்லை. ஏனெனில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை பெறத்தக்க அளவு இன்னமும் போதிய உணர்ச்சி பெறவில்லை. அல்லாமலும் அதற்குத் தகுந்த தியாகமும் செய்யவில்லை. ஆதலால் அதற்குத் தகுந்த விலை கொடுக்காமல் எந்தப் பண்டமும் கிடைக்காது என்பது உலகமறிந்த விஷயம்.
இதை எழுதி முடித்த பின்பு நாம் நினைத்தது போலவே அம்மை யாரால் விஷம் கக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது பார்ப்பன ஆதிக்கத் திற்கு மத விஷயத்தில் பிரசாரம் செய்ய ஒரு மகாத்மா கிடைத்தது போல் இப்போது அரசியலிலும் பிரசாரம் செய்ய அம்மையாராகிய “லோகநாயகி” கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். என்னவென்றால் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்று சொல்லித்தான் பிரசாரம் செய்யப் போகிறார்களாம். அதற்கு காரணம் பார்ப்பனர்கள் சொல்வது போலவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வந்த பின்புதான் இந்தியாவில் கலகம் அதிக மாய் இருக்கின்றதாம். அய்யோ பாவம் இது எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த காரியமாயிருக்க வேண்டும்.
வருணாசிரமமும் பிறப்பில் குணம் வருவதும் இல்லாவிட்டால் ஸ்ரீமான் காந்தி அவர்களிடத்தில் பார்ப்பனருக்கு யாதொரு வேலையுமில்லை. அவரை மகாத்மா என்று கூப்பிடவுமாட்டார்கள். அப்படி ஒருவர் இருக் கின்றார் என்று கூட உலகத்திற்கு தெரியாமல் செய்துவிடுவார்கள். அது போலவே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டாமென்று சொன்னால் ஒழிய அம்மையாரிடத்தில் பார்ப்பனர்களுக்கு யாதொரு சிநேகமும் இல்லை. அம்மையாருக்கும் நமது நாட்டில் யோக்கியதையும் இருக்காது. பூரண கும்பங்களும் லோகநாயகி பட்டமும் இருக்காது. உள்ளதையும் மூன்று நாளில் கவிழ்த்து விடுவார்கள். இந்த விஷயமும் அம்மையாருக்கு நன்றாய் தெரிந்தே தான் வரும்போதே இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஐய்யங்கார் கூட்டத்தையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டார். ஆனால் மகாத்மா என்பவர்களின் உபதேசத்திற்கே ஏமாறாத தமிழ் மக்கள் அம்மையார் சங்கதி நன்றாய் அறிந்த பின்பும் ஏமாந்து போவார்கள் என்று சுலபமாய் சொல்லிவிட முடியாது. ஆனாலும் அம்மையார் இடத்தில் இருக்கும் பணமும் உத்யோகமும் அளிக்கக்கூடிய செல்வாக்கும் யாரைத் தான் சுவாதீனம் செய்ய முடியாது என்று யோசிக்கும்போது சற்று பயமாய்த் தான் இருக்கின்றது.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 06.11.1927